Thursday, March 31, 2016

தட்டு நிறைய சொத்தைப் பாக்கு!


குறைந்தபட்சம் 1967 முதல், தேர்தல்களைக் கண்டுவரும் ஒரு சாமான்யன் என்ற வகையில் இந்த தேர்தல் வித்தியாசமாகத் தெரிகிறது.  கடந்த ஒவ்வொரு தேர்தலிலும் ‘இன்னார்’ வேண்டும் அல்லது ‘இன்னார்’ வேண்டாம் என்பதைத் தீர்மாணிப்பதே, தேர்தலின் மைய புள்ளியாக இருந்தது.  பத்திரிகைகளின் மாய்மால ஆரூடங்களையும் மீறி, மக்கள் தங்களது தேர்வை  தெளிவாகப் புரிந்தே வைத்திருந்தார்கள்.  மக்களின் நோக்கமும் ‘அமர்த்துவது’ அல்லது ‘நீக்குவது’  என்ற இரண்டில் ஏதோ ஒன்றாக இருந்தது.

இந்தத் தேர்தலில் தான், கட்சிகள் அனைத்தும், தங்களின் சாயம் வெளுத்துப் போய், பரிதாபமாகத் தெரிகின்றன.  இந்தத் தேர்தல் போல, கட்சிகள் யாவும் Expose ஆகிநிற்கும் ஒரு சந்தர்ப்பம் நிகழ்ந்ததேயில்லை.

தேர்வு 1.     உயர் நிலை அதிகாரிகள், அரசியல் வாதிகள், மத்திய அமைச்சர்கள் என எவருமே நெருங்க முடியாத, அணுகமுடியாத, விவாதிக்க முடியாத ஒரு தலைமை. அவரைத்தவிர வேறு எவரும் முடிவெடுக்க முடியாத, இயலாத பொம்மை மந்திரிசபை.  கூனிக்குறுகி நிற்பதைக்கூட பெருமையாக கொள்ளும் வினோதம். இந்த போலி அடிமைத்தனங்களுக்கும், துதி பாடல்களுக்கும் பின்னால், கொள்ளையைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?  ஓய்வெடுத்தாலும், பணிக்கு ஒரிரு நாள் வந்தாலும் அது ‘செய்தி’ யாகும் விசித்திரம் வேறு எந்த மானிலத்தில் நிகழும்? எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு ‘மோன நிலை’ யில் உலவும் விந்தை நிலைகுறித்து மக்களுக்குச் விளக்கமளிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச உறுத்தல் கூட இல்லாத ஒரு கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளித்து என்ன காணப் போகிறோம்?

தேர்வு 2:   தமிழ்நாட்டையே, குடும்பச் சொத்தாகப் பாவித்து, கூறுபோட்டுக் கொண்ட தலைமை(களை) நம்புவதற்கு நிரடல் ஏற்படுகிறது. ஊழல்குறித்துப் பேச எவருக்கும் தகுதியில்லை என்றாலும், அதை கலாச்சாரமாகவே ஆரம்பித்துவைத்த கட்சி இது என்பதை எவரும் மறக்கவில்லை.  இமாலய ஊழல்களை மக்கள் மன்னிக்கவும் தயாரில்லை. அராஜகம், அதீத ஊழல், குடும்ப / வாரிசு அரசியல், இனவாதம்-மொழிவாதம் பேசி மக்களை பின்னுக்கு இழுத்துச் சென்றது என பல கறைகள் இக்கட்சிக்குப் பின்னால் இருக்கிறது. அரசிற்குப் புறம்பாக, பல அதிகார மையங்களை ஏற்படுத்திக்கொண்டு,  அரசாங்கத்தை சீரழித்தது மன்னிக்கக் கூடியதா என்ன?

தேர்வு 3.   பி.ஜே.பியும், காங்கிரஸும் போட்டியிலேயே இல்லை.  எனக்கும் கொஞ்சம் ‘மிக்ஸர் கொடுங்கள்’ என கெஞ்சும் அவல நிலையில் இருக்கும் கட்சிகள் இவை. தத்துவமுரண் எப்படியிருந்தாலும், தன்னை ஒரு மாற்றாகக் காட்டிக்கொள்ளும், முன்னிறுத்தும் நிலையில் தமிழக பாரதீய ஜனதா இல்லை. மத்திய அரசின் அதிகாரத்தில் இருந்தும், மோடி போன்ற பிரபலமான தலைவர் இருந்தும் அதை எந்த அளவு பயன்படுத்திக் கொண்டது என்ற கேள்விக்கு, அக்கட்சியிடம் பதில் இல்லை.  தலைவர்களை மட்டுமே கொண்ட காங்கிரஸைப் பற்றி பேச எதுவுமே இல்லை. காமராஜூக்குப் பின் இக்கட்சி என்றைக்குமே தன்னை ஒரு நேர்மறையான எதிர்க்கட்சியாக நடந்துகொண்டதேயில்லை.

தேர்வு 4.  மேடைப் பேச்சுக்களும், பேப்பரில் அறிவிக்கும் கொள்கைகளும் ஏற்புடையதாக இருப்பினும் ஜாதிக்கட்சி என்ற தோற்றத்தை அழிக்கவியலாத கட்சி இது.  இந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்தினால், சமூக அமைதிக்கு பங்கம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் ஓரத்தில் இருந்துகொண்டே இருப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

தேர்வு 5.    மீதம் இருக்கும் கட்சிகளான இடது சாரிகள், இந்தத் தேர்தலில் ஏற்றுக் கொண்டிருக்கும் ‘தலைமை’ நகைப்புக்குறியதாகிவிட்டது. இந்தக்கூட்டணித் தலைவரின்  உளறல்களை விட்டுவிட்டாலும்கூட, இந்த மனிதர் என்ன செய்யப்போகிறார் என்று, இட்துசாரிகள் இவரைத்  தலையில் தூக்கிவைத்துக் கொண்டிருக்கின்றனர்? சீதாராம் யெச்சூரி, மிகவும் மெனக்கட்டு விளக்கமளித்துக் கொண்டிருந்தாலும், மாற்று எனக் கொள்ள இயலாத ஒரு கட்சியை ஆலிங்கனம் செய்துகொண்டிருப்பது ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  இதன் தலைவர் ஒருவர், ‘நீங்கள் மகேந்திரனுக்கு 10,000 வாக்குகள் கூட அளிக்கவில்லையே?’ என்ற கேள்விக்கும் மக்களிடம் பதில் இல்லை.

எனவேதான், இம்முறைபோல, குழப்பம் மிகுந்த ஒரு தேர்தலை தமிழகம் சந்தித்ததில்லை என்கிறேன்.

இப்படிச் சீர்தூக்கிப் பார்த்துக்கொள்வது, மிகவும் ‘நடுநிலையாக’ இருக்கிறோம்  அல்லது ‘கையறு நிலையில்’ இருக்கிறோம் என  ஏமாற்ற / ஏமாற்றிக்கொள்ள வேண்டுமானால் ஏதுவாக இருக்கலாம். ஆனால், ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளதே? தட்டு நிறைய பாக்கு இருந்தாலும், அனைத்தும் சொத்தைப் பாக்குகளாக இருக்கின்றன. இருப்பதிலேயே, மிகவும் புழுத்துப்போகாத பாக்கைத் தேர்ந்தெடுத்துப் போட்டுக்கொள்ளவேண்டிய சூழ்னிலை.


யார் வந்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது எனத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கு வாய்க்கவில்லை. ஆயினும் எது சாத்தியப்படும், எது நிதர்சனம் எனக் கண்டுபிடிக்கும் சந்தர்ப்பம்  கையில் தானே இருக்கிறது? 

எந்தப் பாக்கு சுமாரான பாக்கு?

5 comments:

 1. பல ராமன்கள் .உண்மையில் பலராமன் யார் என்பதை அறிய நானும் காத்திருக்கிறேன் பலராமன் ஜி :)

  ReplyDelete
 2. வெற்று இலைக்கு போடும் பாக்கு, சுடாத சூரியனுக்கு போடும் சுண்ணாம்பும் ,உளறுவாயனுக்கு சிவந்த கண்கள் போலத்தான்

  ReplyDelete
 3. தமிழக மக்கள் மிகவும் கூர்மையானவர்கள். யார் வேண்டும் என்பதை விட யார் வேண்டாமென தீர்மானிப்பதில் மிகவும் கெட்டிக்காரர்கள்.
  கவலைப் படாதீர்கள்.இந்த த் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க்ப் போகும் 18 லிருந்து 25 வயதுள்ள, 18 சதவீதம் பேர் இத்தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார்கள். சரியானத் தேர்வினை செய்வர்.கவலை வேண்டாம்

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. நல்ல அலசல். பார்ப்போம்.
  மக்கள் மாக்கள் ஆகிப்போனால் கஷ்டம்தான்.
  அரசு

  ReplyDelete