Thursday, October 26, 2017

பாலித் தீவுக்கு ஒரு பயணம்.

என்னவோ, பார்க்க நினைத்திருந்த இடங்களனைத்தையும்,  உடலில் சற்றே தெம்பிருக்கும் பொழுதே, பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுவிட்டதால்,  பார்க்க விழையும் இடங்களின் “கால நிலையும், என் பர்ஸும்”, ஒத்துவரும் பட்சத்தில் கிளம்பிவிடுகிறேன். வாழ்வது ஒருமுறை; வாழ்ந்துதான் பார்த்துவிடுவது ! இனி மீதி இருப்பது நாட்களோ மாதங்களோ... இறைவனே அறிவான். எனவே இலங்கை, துபை வரிசையில் அடுத்து பார்க்க விழைந்த இடம் ‘பாலி தீவுகள்’.

காலை, சென்னையிலிருந்து புறப்பட்டு, கோலாலம்பூர் சென்று, அங்கிருந்து பாலி. இடையில் ஒரு மணி நேரம் ப்ரேக். பாலியை அடைந்த பொழுது இரவு ஆகிவிட்டது. பாலி நேரம் இந்திய நேரத்திற்கு இரண்டரை  மணி முன்னால்.

இந்தோனேஷியாவின் 33 மாகாணங்களில் ஒன்று பாலி.  இஸ்லாமிய தேசமானாலும் இந்தத்தீவில் மட்டும்  இந்துக்களே அதிகம். பாலித்தீவுகள் முழுவதும் ஏதோ ஒரு வகையில் ராமாயணத்துடனோ, மகாபாரதத்துடனோ சம்பந்தப் பட்டுள்ளது போலத் தோன்றும். வாயு (பாயு), அக்னி, சீதா, பீமா, ராவணா,வாலி, ஹனுமன் போன்ற பெயர்கள் சர்வ சாதாரணம்.  ராமாயணா மால், கிருஷ்ணா மால், க்ரஹா அபார்ட்மென்ட்ஸ், சீதா தேவி ஷாப் போன்ற பெயர்களைப் பல இடங்களில் பார்க்கலாம்.  பல உள்ளூர் சொற்களின் மூலம் சமஸ்க்ருதமாக இருக்கிறது. கருடாஅவர்களின் ஏர்லைன்ஸ் பெயர். சுற்றுலா பேருந்துகள் பெயர் ‘பரிவசிஷ்டா’. பீமனுக்கும் அவரது புதல்வன் கடோத்கஜனுக்கும் கூட, பெரிய அளவில் சிலைகள் இருக்கின்றன.  பாலியின் தலை நகர் ‘தென்பஸார்’. பாலித்தீவு என்பது ‘வாலித் தீவு என்பதன்’ மரூ என்றார் ஒருவர். அவர்களுக்கு ‘வா’ வராது; ‘பா’ தான். வாலி-பாலி, வாயு-பாயு. நகரின் நடுவே ராமருக்கு ஒரு பிரமாண்டமான சிலை வைத்திருக்கிறார்கள்; கொள்ளை அழகு.

ஊர் முழுவதும் கோயில்கள். சிவா-விஷ்ணு-ப்ரம்மா கோயில்கள் பிரசித்தம்.  ஆனால் சுற்றுலாப் பயணிகளை ஒரு எல்லை வரைக்கும்தான் அனுமதிக்கிறார்கள்.  சன்னிதானத்திற்குள் வழிபாடு செய்பவர்கள்தான் செல்ல முடிகிறது. உள்ளூர் மக்கள் பாரம்பரிய வெள்ளுடை அணிந்து, மலர்களைக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.  அவர்கள் தங்களது கலாச்சாரத்திற்கு அவ்வளவு மதிப்பளிக்கிறார்கள். வீடோ, கடையோ, அபார்ட்மெண்ட்களோ எதுவாயினும் முன்னால் ஒரு மூன்றடுக்கு துளசி மாடம் போல ஒன்று அமைத்திருக்கிறார்கள்.  மேலே நாற்காலி போல ஒரு அமைப்பு. கல்லிலோ சிமெண்டிலோ அவரவர் வசதிக்கு ஏற்றாற் போல கட்டிக்கொள்கிறார்கள்.  இதில் விதி விலக்கே இல்லை. அதை ‘ப்ரைவேட் டெம்பிள்’ என்கின்றனர்.  தவறாமல் பூக்களையும் நீரையிம் கொண்டு பூஜை செய்கிறார்கள். 

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் 

மறந்தறியேன்

நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் 

னாவில் மறந்தறியேன்

உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு 

சூலை தவிர்த்தருளாய்

அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை 

அம்மானே ...என்ற தேவாரம் தான் நினைவிற்கு வந்தது.பாலியின் பரோங் டான்ஸ் (இராமாயணா டான்ஸ்) 

பிரசித்தம்.

பாலித்தீவுகள் சுற்றுலா என்பது, டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பர்சேஸ் பண்ணுவது போல.  அவரவர்களுகு அவரவர்களின் விருப்பப்படி அனைத்தும் கிடைக்கும்.

வாட்டர் ஸ்போர்ட்ஸ் வேண்டுமா? அனைத்தும் உண்டு; ஸ்கூபா டைவ், ஸ்னார்கலிங், பாரா டைவிங், ஸ்கீயிங்க், விதவிதமான போட் சவாரிகள் என பல வகைகள்.  எனக்கு மிக விருப்பமான ஸ்கூபா டைவிங்கும், பாரா செய்லிங்கும் செய்தேன். ஸ்கூபா செல்லும் போது என் உண்மையான வயதைச் சொல்லாமல், 58 என சொல்லிவைத்தேன். உண்மையைச் சொன்னதால், அந்தமானில் ‘கிழவர்களுக்கு ஸ்கூபா கிடையாது’ என மறுத்து விட்டனர். கெஞ்சிக் கூத்தாடி செல்லும்படியாகி விட்டது.  இங்கே அப்படி நிகழக்கூடாது என்பதால் ஒரு சிறு பொய். ஒரு மணி நேரம் கடலுக்கடியில் வண்ணமிகு மீன்கள், தாவரங்கள் என கண்டுவிட்டு மேலே வந்த்தும், என் உண்மையான வயதைச் சொல்ல, ‘ நோ ப்ராப்ளம்.. யூ டன் வெல்.. என்ஜாய்’ என்றனர். இதற்குப் பரிசாக அரை மணி நேரம் இலவசமாக ‘ஸ்னார்கலிங்’ கிடைத்தது.

அடுத்து, கோயில்களா? பஞ்சமேயில்லை. ஏகப்பட்ட கோயில்கள். ‘ஜெகன்னாத் கோயில்’ உட்பட வெள்ளமென இருக்கின்றன. திருமூர்த்தி கோயில் ஒன்று இருக்கிறது... அங்கே ஓரிடத்தில் இயற்கை நீரூற்று வருகிறது. அதை குளம்போல சேகரித்து, ‘ஆவுடை’ அமைப்பில் ஆறு இடங்களில் விழுமாறு செய்திருக்கிறார்கள். அங்கே பக்திப் பரவசத்துடன் வரிசையில் நின்று ‘தீர்த்த  நீராடுகிறார்கள்’.  பெரும்பாலான கோயில்களுக்குச் செல்ல அவர்களது பாரம்பர்ய உடை அவசியம். கோயிலின் வெளியே இலவசமாக அவற்றை வழங்குகிறார்கள்.  (திரும்ப வரும்பொழுது கொடுத்து விடவேண்டும்) .  கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் கோயில்கள் அழகோ அழகு. அவற்றை மிதக்கும் கோயில்கள் என்கிறார்கள். ஹை டைட் வரும்பொழுது செல்ல இயலாது. லோ டைடின் பொழுது உள்ளே செல்லலாம்.

டனா ரோட் (மிதக்கும் கோயில்கள்), உலுவட்டு கோயில், பெரட்டான், தீர்த்த டெம்பிள்,குனுங்காவி கோயில், தாமன் அயுன் கோயில், புரா தமன் சரஸ்வதி கோயில், லெம்புயாங்க் டெம்பிள், பெஸாகி (வைஸாகி) கோயில் ஆகியன தவிர்க்கக் கூடாதவை. முக்கியமாக உலுவட்டு கோயிலை மாலையில் காணவேண்டும். மூன்று பக்கமும் கடல் சூழ அழகின் உச்சமாய் இருக்கிறது. சூரிய அஸ்தமனத்தைக் காண ஏகக் கூட்டம். கடலிலிருந்து, அதன் கரையிலேயே 200 அடி உயரத்தில் இருக்கிறது உலுவட்டு. இயற்கை வரைந்து வைத்த ஓவியம் இந்த இடம்.  இந்தத் தீவில் அழகைத் தேடி ஓட வேண்டியதே இல்லை; கண்களை மட்டும் திறந்தால் போதுக்; காணுமிடமெல்லாம் அழகு வழிந்தோடுகிறது.

‘பர்சேஸ் மேனியாக்களுக்கு’ என ஏகப்பட்ட கடைகள். கைவினைக் கடைகள் ஏராளம். எல்லா இடங்களிலும் மரவேலைச் சிற்பங்கள் கிடைக்கின்றன. ஹேண்ட் மேட் சோப்புகள், ஊதுபத்திகள், சிறு பைகள், வாசனைத் திரவியங்கள், உடைகள், மஸாஜ் ஆயில்கள் என பலதும். மரத்தில் ‘பாட்டில் ஓபனர்கள்’ செய்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள். எப்படித்தான் ‘அந்த டிசைனில்’ செய்ய வேண்டும் எனத் தோன்றியதோ?  

என்ன.... மால்களைத் தவிர மற்ற இடங்களில் அவர்கள் இஷ்டத்திற்கு விலை சொல்லுவார்கள். என்னைப் போன்ற கேட்டதைக்  கொடுத்துவிடும் பசுக்கள் வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தென்பஸாரில், ஒரு சிறு கைப்பை வாங்கினேன். ஒரு லட்சம் ரூபாய் சொன்னார்கள். (இந்திய ஒரு ரூபாய்க்கு 200 இந்தோனேஷிய ரூபாய் கிடைக்கும்). மிகவும் சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்து ‘ஐம்பதாயிரம் தருவியா?’ என்றேன். அந்தப் பெண்மணி உடனே தந்து விட்டாள். என் சாமர்த்தியத்தை நானே மெச்ச நினைத்த வேளையில், மற்றொரு பயணி வெறும் பத்தாயிரம் கொடுத்து வாங்கிச் சென்றார். அடப் போங்கப்பா... நீங்களும் உங்க பர்சேஸும் என நினைத்துக்கொண்டேன். அதே போல கருடன் மரச்சிலையை இந்திய மதிப்பில் ஐனூறு ரூபாய்க்கு பேரம் பேசி முடித்தபின், மற்றொருவர் அதே சிலையை நூறு ரூபாய்க்கு வாங்கிச் சென்றார். நல்லவேளையாக   நான் தனியன். இல்லாவிடில் என் சாமர்த்தியத்திற்கு முதுகில் நாலு அடி விழுந்திருக்கும். 

சிறு நீர் கழிக்க டாய்லெட் கட்டணம் மூவாயிரம் ரூபாய். மூன்று நாட்களானாலும் பரவாயில்லை; இந்தியாவிற்கே வந்துவிடலாம் எனத் தோன்றும்.

இயற்கைக் காட்சிப் பிரியர்களா? அவையும் திகட்ட திகட்ட கிடைக்கும். எரிமலைகள், ஏரிகள், மலைகள், நீர் வீழ்ச்சிகள், அழகிய கடற்கரைகள் என ஏகமாய்.  மலைச் சரிவுகளில் நெல் வயல்கள் அமைத்து பாசணம் செய்கிறார்கள். அவற்றை   Paddy Terrace என அழைகிறார்கள்.  நெல் வயல்களை வேடிக்கை பார்ப்பது நமக்கு புதிதாக இருந்தாலும், மேலை நாட்டவர்கள் கும்பல் கும்பலாய் வயல்களை பார்க்கின்றனர். அவர்களையெல்லாம், தஞ்சைக்கு அழைத்து வந்து காண்பிக்க வேண்டும் எனத் தோன்றியது.  அதே போல குரங்குக் காடுகள் என ஒரு இடம் வைத்து டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றியிருக்கின்றனர்.  அது குரங்குகள் பார்க் என்றுதான் அழைக்க வேண்டும். கருங்குரங்குகள். வாலியின் வம்ஸாவளிகளென கூறுகின்றனர். 
ஒரு அழகிய மலைச் சரிவில், எரிமலையையும் அதனடியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய ஏரியையும், சம வெளியையும் கண்டுகளித்துக் கொண்டே உணவருந்துமாறு பல  இடங்கள் இருக்கின்றன.  இவற்றை மேலை நாட்டினர் அனுபவிக்கும் விதமே அலாதி. அவர்கள் அனுபவிப்பதை  நாம் காண்பதே சுற்றுலா போல இருந்தது . உணவு விடுதியின் ஓரத்தில், மலைச் சரிவைப் பார்த்த வண்ணமாய், கையில் ஒரு பீர் கேனுடன், சிற்றுடைகளில் காதலியையோ மனைவியையோ  அணைத்துக் கொண்டு, கையில் வைத்திருக்கும் டெலஸ்கோப்பில் எரிமலையை கண்டுகொண்டு,  தட்டு நிறைய உணவு வகைகளை நிரப்பிக் கொண்டு மணிக்கணக்கில் உட்கார்ந்து அனுபவிக்கின்றனர். தே பார்ன்  டு என்ஜாய்.

இதுதவிர, கேளிக்கைப் பிரியர்களா? அவற்றிற்கும் பஞ்சமில்லை. ‘அனைத்து’ வகையான கேளிக்கைகளும் உண்டு. இரவு விடுதிகள் அனைத்தும் வெகு நேரம் வரை  திறந்திருக்கின்றன. பியர்களும் அசைவ உணவுகளும் வழியும். கூடவே இசைக் கலைஞர்கள் பாடிக் கொண்டே இருக்கின்றனர்.  இசையும், நடனமும், முடிவேயில்லாத உணவுவகைகளும், மதுவும் வழிந்தோடும் இரவுகள்.  

சைவர்கள் எங்கேயாவது தந்தூரி ரொட்டியாவது கிடைக்கிறதா என அலைய வேண்டும்.  அசைவர்களுக்கு காணுமிடமெல்லாம் நாவில் நீரூறும். எங்கே பார்த்தாலும் மஸாஜ் சென்டர்கள். தாய் மஸாஜ், ஸ்டோன் மஸாஜ், லெக் மஸாஜ் என விதவிதமாய்.. சார்ஜைக் கேட்டால் தலை சுற்றும்.

இங்கே ஒரு காஃபி ப்ராஸஸிங் இடத்திற்குச் சென்றேன். எல்லாம் இந்தியாவிலேயே பார்த்ததுதான்.  ஆனால் இங்கே, ‘லுவாக் காஃபி’ என்று ஒன்று கொடுத்தார்கள். இதில் என்ன ஸ்பெஷாலிடி என வினவினால், காஃபி பழங்களை தேவாங்கு போல இருக்கும் ஒரு விலங்கு (ஏஷியன் பாம் சிவெட்) அப்படியே விழுங்குமாம். விழுங்கிவிட்டு காஃபிக் கொட்டைகளை மட்டும் அதன் மலத்தோடு புழுக்கை போடுமாம். அவற்றை சேகரித்து சுத்தம் செய்து, பின் வறுத்து காபிப் பொடி தயாரிப்பார்களாம். உவ்வேக்........ போங்கப்பா எனக்கு லியோ காஃபியே போதும்.


இங்கே விவரித்த்து கொஞ்சமே... இன்னும் காணவேண்டியது ஏராளம். நேரமும் காசும் உள்ளவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்போன்ற சொர்க்கம் பாலி. சில படங்கள் மட்டும் கீழே!4 comments:

  1. Super Mr.Balaraman. Neenga mundhindel. I plan to visit during December end or January. 2018.

    ReplyDelete
  2. மொத்தம் எவ்வளவு செலவாச்சு? எந்த டூரிஸ்ட் கம்பெனி? கட்டுப்படி ஆகும்னா போய்ட்டு வரலாமேன்னு ஒரு நப்பாசை.

    ReplyDelete
  3. enjoyed your writing... one help.. you had written about kashmir tour.. please tell me which tour operator you engaged for your tour.. planning to go in may.. i have accommodation..(club mahindra - house boat).. only for sight seeing i need

    ReplyDelete