Monday, October 16, 2017

துபாய்க்கு ஒரு பயணம்.

 தனது ஏழ்மையையும், மெச்சிக்கொள்ளும்படியில்லாத கலாச்சாரப்பிண்ணனியையும், கல்வியின்மையையும் ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிட்டு,  நாற்பதே ஆண்டுகளில் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த நாடு எதுவெனில், அது  UAE யின் அங்கமான துபை.

பனி மூடும் மலைமுகடுகள் இல்லை; நீர் வீழ்ச்சிகள் இல்லை; காடுகள் இல்லை; மக்கள் வளம் இல்லை; புராதணக் கட்டிடங்கள் இல்லை; தொழிற்சாலைகள் இல்லை. எனினும் உலக சுற்றுலாத் தலங்களில் தலையாய இடங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது இன் நாடு.

மக்கள் தொகையில் 80 சதமானவர்கள் வெளி நாட்டினர்.  யாருக்கும் வருமாண வரி இல்லை; அன் நாட்டு குடிகளுக்கு கல்வி இலவசம். மருத்துவ வசதி இலவசம்.  பெட்ரோலியம் உபயத்தில் துபை செழித்துக் கிடக்கிறது. ஒரு காலத்தில் எண்ணைய் வற்றிவிடக்கூடும் என்பதை உத்தேசித்து, சுற்றுலாவை முக்கியத் தொழிலாகமாற்றியுள்ளார் அந் நாட்டு மன்னர்.

இங்கே மக்களாட்சி இல்லை. சர்வ அதிகாரமும்ம ன்னரிடத்தும்,  அவர் குடும்பத்தினரிடமும் தான். ஆனால், உலகில் என்னென்ன சௌகரியங்கள் கிடைக்கிறதோ, அத்தனையும் தன் நாட்டு மக்கள் துய்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர். அவரது கணவுதான் துபை.

குற்றங்கள் மிகக் குறைவு. அரசு இயந்திரத்திடம் ஊழல் இல்லை;  நாட்டின் முன்னேற்றம், மக்களின் நலன் இவைகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது அரசாங்கம்.  அரச குடும்பமாகவே இருந்தாலும், மக்களோடு மக்களாக, சாலை விதிகளையும் சிக்னல்களையும் மதித்து விதி மீறாமல் செல்கின்றனர். பல உயர் அரசாங்க அதிகாரிகள் கார்களையும், அரச குடும்பக் கார்களையும் சாலையில் பார்த்தேன். சைரன், பந்தோபஸ்து, கெடுபிடி ஏதும் காணோம். வரிசையில் காத்திருந்து சிக்னல் கிடைத்ததும் தான் கார் நகர்கிறது.

ஒழுங்கு என்றால் அப்படி ஒரு ஒழுங்கு! கிலோ மீட்டர் கணக்கில் வாகனங்கள்  காத்துக் கிடந்தாலும் ஒரு ஹாரண் சப்தம் இல்லை. லேன் மாறி புகுவோர் இல்லை. ஒரு வாகனத்திற்கும் மற்றொரு வாகனத்திற்கும் ஐந்து அடி இடைவெளி விட்டு நிற்கின்றனர். 

ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே, அது போல, அப்படியே ரோட்டில் உணவைக் கொட்டி சாப்பிடும் அளவிற்கு, சாலைகள் யாவும் படு சுத்தம். ஒரு குப்பையைக் காணோம். அழுக்கான கார்களை வெளியில் எடுத்து வந்தால் அபராதம்;  அது யாராக இருந்தாலும்.

இப்படி ஒரு யோக்கியமான, நாட்டை மட்டுமே – அதன் மக்களை மட்டுமே கருதும் ஒரு யதேச்சியதிகாரி இந்தியாவிற்கு வாய்த்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை தடை செய்ய இயலவில்லை.

கடுமையான சட்ட திட்டங்கள். சட்டங்களை அவற்றை இயற்றியவர்களும், அவற்றை அமுல் படுத்துபவர்களும், பொது மக்களும் மீறுவதில்லை. சட்டத்தின் ஓட்டைகளைத் தேடுபவர்கள் இல்லை! விளைவு?  A disciplined  Nation. Growth is assured.  திறப்புவிழாவின் தேதியை நிர்ணயித்துவிட்டுத்தான், திட்டத்தையே  துவங்குகிறார்கள்.  துல்லியமாக நிறைவேற்று கிறார்கள். நிறைவேற்று பவர்களுக்கு எந்த விதமான் இடையூறுகளும் செய்வதில்லை.  இங்கே பண்ருட்டியில் ஒரு ரயில்வே மேம்பாலத்தைப் போடுகிறார்கள்..போடுகிறார்கள்... போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இன்னும் எத்தனை வருடங்களாகுமோ தெரியவில்லை. இத்தகைய நிர்வாகத்தைக் காண ஏக்கமாக இருக்கிறது.

சாலைகளில் மெர்ஸிடஸ்களும், லெம்போர்கினிகளும் உலா வருகின்றன. சர்வ சாதாரணமாக 12 லேன் கொண்ட சாலைகள். அத்தனையையும் மீறி துபையின்  நெருக்கடியான போக்கு வரத்து பிரசித்தம்.  பக்கத்து ஷார்ஜாவிற்குச் செல்லும் சாலையில் கண்ணிற்கெட்டிய தூரம் வரை கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாரத்தின் முதல் நாள் திங்கள் அல்ல.. ஞாயிறு. வியாழன் வெள்ளி விடுமுறை.  எனவே வியாழன் அன்று மாலையில் சாலைகள் மூச்சு முட்டுகின்றன. நம் ஊர் பல்ஸர்களை டெலிவரி பாய்கள் பயன்படுத்து கிறார்கள். டாட்டாவின் பஸ்கள் இருக்கின்றன. தொழிலாளர்களை பணியிடங்களுக்கு அழைத்துச் செல்ல.

மதியம் இரண்டு மணிக்கு துபை சர்வதேச விமான   நிலையத்தை அடைந்த பொழுது, சுள்ளென வெயில் வரவேற்றது. விமாண நிலையம் பெரிதெனப் கேள்விப்பட்டிருக்கிறேன். எவ்வளவு பெரிது என்பதை நேரில் பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. Arrival இடத்திலிருந்து, இமிக்ரேஷன் கவுண்டர்களுக்குச் செல்ல மெட்ரோ ரயில் விட்டிருக்கிறார்கள்.  அதன் நீள அகல பரிமாணங்களை யூகித்துக் கொள்ளுங்கள்.

இமிக்ரேஷன் கவுண்டர்களில், திருப்பதி கூண்டுகளில் அம்முவது போலக் கூட்டம். ஆனாலும் சட் சட்டென தற்காலிக கவுண்டர்கள் திறக்கப்பட்டு பதினைந்து நிமிடங்களுக்குள் அத்துணை ஆயிரம்பேருக்கும் க்ளியரன்ஸ் கிடைத்துவிடுகிறது. ‘காமா சோமாவென’ செக்கிங் செய்வதில்லை;  முழுமையாக, என்ன கொண்டுவருகிறார்கள் என்பதில் உஷாராக இருக்கின்றனர். எல்லாம் எலக்ட்ரானிக் உபயம். போதை மருந்துகள் இருந்தால் கம்பி எண்ணுவது உத்திரவாதம். தடை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பதை கூகுள் செய்து, கவனமாகச் செல்வது உசிதம்.

உடைகள் விஷயத்தில் கவனம் அவசியம். ஷார்ட்ஸ் போடுவது அநாகரீகம். பிகினி சமாசாரங்களை உள்ளூரிலேயே விட்டுவிட்டு வரவேண்டும். கணவன் மணைவியாகவே இருந்தாலும், பொது இடங்களில் நாகரீகம் காப்பது அவசியம். கைகோர்ப்பது, அணைத்துக் கொளவது, நெருக்கமாக இருப்பது இவற்றிற்குத் தடா!  அதே போல பொது இடங்களில் புகை, மது போன்றவற்றிகும் தடை.  இடது கையால் பொருட்களை வாங்குவதோ-கொடுப்பதோ கௌரவமான செயல் அல்ல.

எனக்கு தூக்கம் வராது. ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்துகள் துணையோடுதான் உறக்கம். எனது துரதிர்ஷ்டம் xenox தடை செய்யப்பட்ட மருந்து. எனவே இங்கே புறப்படும் பொழுதே ப்ரிஸ்கிரிப்ஷனோடு மருந்து வாங்கிக் கொண்டு சென்றுவிட்டதால்  பிழைத்தேன்.

துபையிலும், அபுதாபியிலும் சில நாட்கள் கழிக்க உத்தேசித்திருந்தேன். அந்த நாட்கள் முழுவதும் பிரமிப்பு மயம். மனிதனின் கற்பனை எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ, அந்த அளவிற்கு ப்ரமாண்டமாய்,  சாத்தியப்பட்ட வடிவங்களில் எல்லாம், வாணுயர் கட்டிடங்கள்.  புகழ்பெற்ற துபை மால், உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கலிஃபா’ டவர், பணி உறையும் விளையாட்டு அரங்கம், மாலின் நடுவே பிரமாண்டமாய் ஒரு அக்கோரியம், கடலைத் தூர்த்து, ஈச்ச மரவடிவில் வடிக்கப்பட்ட செயற்கைத் தீவுகள்; துபையை இரண்டாகப் பிரிக்கும் க்ரீக் (அதில் கணிசமான தூரம் Man made),  இரவு நேரங்களில் க்ரீக் (Back water river) ஊடே மிதந்து செல்லும் வண்ணமிகு சிறுகப்பல்கள் என களிக்க ஏராளமான அம்சம். க்ரீக் படகுகளில் பயணம் செய்து கொண்டே, துபையின் இரவு நேர அழகையும்-சுவை மிகு உணவையும் ருசிக்கலாம். ஆர்கிடெக்டில் ஆர்வமுள்ளொருக்கு துபை ஒரு சொர்க்கம். புர்ஜ் கலிஃபாவின் 124 மாடிவரை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறார்கள். 124 மாடிகளும் அறுபதே நொடிகளில் சென்றடைகிறது லிஃப்ட். அங்கிருந்து துபையைப் பார்ப்பது ஒரு visual delight.

துபை ஒரு Shopping Paradise. உலகில் என்னவெல்லாம் உற்பத்தி செய்யப்படுகிறதோ அவை யாவும் இங்கே கிடைக்கும். மத்தியமர் நெருங்கக்கூட இயலாத உயர்குடிகளுக்கான மால்கள், சாதாரணர்களுக்கான எதையெடுத்தாலும் 10 to 20 திராம்கள் போன்ற கடைகளும் இருக்கின்றன.  19 இந்திய ரூபாய் கொடுத்தால் ஒரு திராம் -  Arab Emirate Dirham -கிடைக்கும். பல இடங்களில் இந்திய ரூபாய்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

துபையின் நகைக் கடைகள் உலகப் பிரச்சித்தமானவை.  நம் ஊர் கல்யாண், மலபார் நகைக் கடைகள் கூட இருக்கின்றன. கிராமிற்கு நாணூறு ரூபாயாவது விலை குறைவு.  நகைகளாக-சாதாரணமாக அணிந்துவரும் அளவிற்கு வாங்கி வரலாம். கிலோ கணக்கில் சூடிக்கொண்டு வந்தால், இமிக்ரேஷனில் மாட்டுவது உத்திரவாதம். எலக்ட்ரானிக் பொருட்கள் சகாயம்.  

ஐ-ஃபோன் 8, ரூபாய் 52,000 தான். உள்ளுர் சந்தையை சீனப் பொருட்கள் ஆக்கிரமிக்கின்றன.

உள்ளூர் மக்களுக்கு லைசென்ஸ் பேரில்தான் மது விற்கப்படும். ஆனால் ஹோட்டல்களில் ஏராளமான ‘பார்கள்’ இருக்கின்றன. அந்தந்த நாட்டு கலாச்சாரதிற்கு ஏற்ற கேளிக்கைகள் இருக்கின்றன. ஆபாசம் இல்லை.  பெண்கள் காரோட்டுகிறார்கள். சமயத்தின் பேரால் சட்டத்தில்  பாகுபாடு இல்லை.

சுற்றுலாப் பயணிகளில் கணிசமானோர் இந்தியர்களாக இருப்பதால், சைவ உணவுகள் கிடைக்கின்றன. அபுதாபியில் ‘சரவண பவன்’ கிளை கூட இருக்கிறது.  

நமது ஆங்கில அறிவு பல சமயங்களில் கைகொடுக்க மறுக்கிறது. காரணம் அவர்களது  உச்சரிப்பு. பணியாளர்களில் பலர் சீனர்கள் போலவோ, கொரியர்கள் போலவோ இருக்கின்றனர்.  நான் வாங்கிய போர்டிங் பாஸில், கேட் நெம்பர் இல்லை. கேட் நெம்பருக்கான இடத்தில் ஒரு * தான் இருந்தது.  போர்டிங் கேட்கள் எங்கே ஒளித்து வைக்கப்பட்டுள்ளன என வினவினால், ப்ராம்டாக பதில் சொல்கின்றனர். நமக்குத்தான் உச்சரிப்பு காரணமாக விளங்கவில்லை. ஒரு இளம் மங்கையிடம் விசாரித்ததில்           ‘நவ் கேத்? நவ் ப்தாப்ள..கேத் மெத்ராவ்!’  என பதில் சொன்னார். பேய் முழி விழிக்க வேண்டியிருந்தது.  நல்ல வேளையாக அருகே ஒரு பஞ்சாபி இருந்ததால், ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னார். அதாவது, ‘No Gate number? No problem! Catch a metro!’ அவர்களுக்கு ‘ட்’ வராது! எல்லாம் ‘த’ தான்.

கீழ்மட்ட தொழிலாளர்களில் பெரும்பாலோர் இந்தியர்,பாகிஸ்தானியர், பாங்ளா, இலங்கை தேசத்தவர். கொளுத்தும் வெயிலில் வானுயர் கட்டிடங்களில் கயிற்றில் தொங்கிக் கொண்டும், கண்ணாடிகளைத் துடைப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. வாட்டியடுக்கும் கடுமையான சீதோஷ்ண நிலையில்  தோட்ட வேலை, கட்டிட வேலை போன்றவற்றைச் செய்பவர்கள் பலரும் மேலே சொன்ன நாட்டினர்களே!  நன்கு படித்திருந்து நல்ல வேலையில் அமர்ந்தால் துபை சொர்க்கம் தான். கீழ் மட்ட வேலைகள் என்றால் சந்தேகமன்றி நரகமே!

இங்கே மழை என்பது அரிதானது. ஆண்டிற்கு 10 செ.மீ பெய்தாலே அதிகம். வறட்சி;உஷ்ணம். ஆனால் கடல் நீரைச் சுத்தம் செய்து (desalinisation) நகரெங்கும் வினியோகிக்கிறார்கள். அனைத்துக் கழுவு நீரும் முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்டு, அதன் மூலம் நகரின் சோலைகளும் மரங்களும், சொட்டு நீர்ப் பாசன முறையில் பராமரிக்கப் படுகின்றன.  மரங்களும் செடிகளும் வளர்வதற்கு ஏற மண் இல்லையாதலால்,  அவைகள் கூட இறக்குமதி செய்யப் படுகின்றன. எப்படி இருந்த நாடு, எவ்விதம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதை, அங்கே இருக்கும் துபை மியூசியத்தைக் கண்டாலே விளங்கும்.

எனக்கு வாய்த்த டூர் கெய்டு ஒரு தஞ்சாவூர்க்காரர்.  தமிழர். மாலிக் என்று பெயர். ப்ரொஃபெஷனல். எதைச் சொல்லவேண்டும். எப்படிச் சொல்ல வேண்டும்.. எதைச் சொல்லக் கூடாது என்பதில் வித்தகர்.

பெரிதாக மேலும் ஒரு விமாண நிலையம், ப்ரமாண்டமான கட்டிடங்கள், ஜெயண்ட் வீல், துறைமுகப் பணிகள் என இன்னமும் பல ப்ராஜக்டுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் துபை செல்லும் பொழுது பல மாற்றங்களைக் கொண்டிருக்கும், விந்தை நாடு. 

திட்டமிடலில் துபையில் நேர்ந்த இடையூறுகளைக் கவணத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு இன்னும் பெரிதாக, இன்னும் ஐம்பது வருட வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது அபுதாபி. அபுதாபியில் மிகப்பெரிய மசூதி இருக்கிறது. அனைவரும் செல்லலாம். சில உடைக் கட்டுப்பாடுகளோடு. பளிங்கினால் இழைத்து வைத்திருக்கிறார்கள்.

இப்படியும் ஒரு திட்டமிடல் இருக்க முடியுமா என்பதற்காகவும், ஷாப்பிங் அனுபவத்திற்காகவும்,  மனித முயற்சியினால் ஒரு பாலையை சோலையாக மாற்றவது எங்கனம் சாத்தியமாயிற்று என்பதற்காகவும், இந்த நாட்டைப் பார்த்து வரலாம்.

                        Click here for Some Photos


குறிப்பு:

1.    ஓரளவு ஆங்கில ஞானமும், அந்த நாட்டைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் இருந்தால், பேக்கேஜ் டூராக இல்லாமல், தனியாகச் செல்வது நல்லது.
2.    வெளி நாட்டு நாட்டு  நாணயமாற்றலை விமாண நிலையத்தில் செய்ய வேண்டாம். கூடுதல் செலவு.
3.    பட்ஜட் ஹோட்டல்கள் நிறைய இருக்கின்றன. கூகுளில் தேடிப் பார்த்தால் கிடைக்கும்.
4.    விமாணப் பயணத்தைத் திட்டமிடும் பொழுது, காலைப் பொழுதில் சென்றடையும் வண்ணம் திட்டமிடுதல் நல்லது.  புறப்படும் பொழுது இரவில் புறப்படல் நலம்.
5.    ஏதேனும் வாங்க மறந்துவிட்டால், ட்யூட்டி ஃப்ரீ ஷாப்கள் துபை விமான நிலையத்தில் வரிசை கட்டி நிற்கின்றன. அங்கே வாங்கிக் கொள்ளலாம்.

5 comments:

 1. Very nice write up and outstanding views gathered from your Dubai trip

  Thank you very much for being my guest
  Hope to see you again

  God bless you

  ReplyDelete
 2. Excellent writing. I feel As such I have visited Dubai again. One thing to add is cost inside air port is yennai velai.

  ReplyDelete
 3. Your Dubai visit write up is very excellent. It gives me a pleasure as such I have visited once again.

  ReplyDelete