Monday, August 1, 2016

“பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா?”“There is a hidden message in every waterfall.

  It says, if you are flexible, falling will not hurt you!” 

                                             ― Mehmet Murat ildan

வாழ்வில், உற்சாகம் தொற்றிக்கொள்ள ஒரு சில வார்த்தைகளே போதுமானதாக இருக்கிறது.  வற்றிப்போகவும் அப்படியே!

“குற்றாலம் போகலாமா?” 

இந்த வினா, சட்டென இளமையையும் மீட்டெடுத்து, துள்ளலையும் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. பணி ஓய்வுபெற்ற, என் வயதொத்த பலர் ஒன்று கூடி, வருடமொரு முறை குற்றாலம் சென்றுவருவதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறோம். வாடிக்கை மறந்திடலாமா? இந்த வருடமும் அவ்வாறே!

பல வருடங்களாகத் தொடரும் பயணம். நடுவில் வந்தோர் பலர். விலகியோர் சிலர். வாழ்க்கையைவிட்டே அகன்றவர் சிலர். எனினும் மறைந்தவர்களின் நினைவுகளைச் சிலிர்த்து நினைத்துக் கொண்டு, பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆயிரம்? லட்சம்? கோடி? எத்துனை ஆண்டுகளாக குற்றால அருவிகள் பொழிந்து கொண்டிருக்கின்றன? எத்தனை மகான்களையும், சித்தர்களையும், அரசர்களையும், ஆண்டிகளையும் பார்த்திருக்கிறது? யாரறிவர்? 

ஆனவங்களையும் அகங்காரங் களையும் ஒரே சிதறலில் வீழ்த்திவிட்டு, ஆர்பரிக்கும் மௌனத்தோடு புன்னகைக்கும் குற்றாலத்தைக் கண்டுதான்,  “ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்; ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்” என்று ஒரு புலவர் பாடினார் போலும்.

‘ஹோ..’ என்ற அருவியின் இறைச்சல் காதுகளுக்கு இன்ப ரீங்காரம்.  கருத்த மத  யாணைகள் போல மதமதப்புடன் அலட்சியமாக அமர்ந்திருக்கும் குன்றுகளுக் கிடையே, சீறிப்பாயும் நீர். திகட்டாத இன்பம்! மாறா இளமை! இயற்கையென்னும் இளைய கன்னியின் உச்சம் தொட்ட அழகை உறையவைத்து, வண்ணமயமாய் தீட்டிவைத்துக் கொண்டுள்ளது குற்றாலம்.  வயது, பால், இன வேறுபாடின்றி அனைவரும் குழந்தைகளாய் மாறி குதூகலிக்க அருவிகளைப்போல மற்றொன்று இல்லை.


மதிய நேரம். மெயின் அருவியில் திளைத்தெழுந்த பொழுது உணராத வெயில், வெளியே வந்ததும் சுட்டெரித்தது. பழைய குற்றாலத்தில் அவ்வளவாக நீரில்லை. தகித்தெடுத்தது. சற்றே ஏமாற்றத்துடன் ரூமிற்குத் திரும்பினோம். மாலை நெருங்கிற்று. தென்மேற்கில் மேகம் திரண்டெழுந்தது. மேற்கு மலைகளை, தன் கருத்த உடலால் போர்த்திற்று!  மலைகளும் காடுகளும் திரையிட்டுக் கொண்டன. அருவிகளும் கூட குதூகலித்து கூடுதல் சப்தமிட்டன. நிமிடங்களில் ஊரெங்கும் சாரல் வீசிற்று.  ‘சில்லென்ற’ காற்று வீச,  இறகுகளால் வருடுவது போல உடலெங்கும்  மழைப் பூக்கள் சொரிந்தன.  “இதற்காகத்தானே இங்கு வந்தாய்? இந்தா பெற்றுக் கொள்... வேண்டுமளவு பெற்றுக் கொள்...” என  சாரலும் காற்றும் இதமாகச் சூழ்ந்து கொண்டன! 


அறுசுவை உணவு அளவின்றி பரிமாறப்படும் பொழுது, அறையில் பட்டினி கிடக்க பைத்தியமா எங்களுக்கு? ஓட்டமாக ஓடினோம் ஐந்தருவிக்கு!  ஆஹா.. பிறவிப் பயனை அடைந்தோம். அருவியில் கூட்டமில்லை. ஐந்து கிளைகளிலும் நீர் ஆர்பரித்துக் கொண்டிருந்தது.   சூரியனின் பிரகாசத்தைப் பார்த்து வியந்து, அதனைப் அப்படியே பறிக்க முயன்றானாம் ஹனுமன். அதுபோல ஐந்து அருவிகளையும் அப்படியே விழுங்கவிட ஆசைகொண்டது மனது.  ஆனந்தக் குளியல். ஏகாந்தக் குளியல். திளைத்துக் கொண்டிருக்கும் பொழுதே.. நீர் இன்னமும் வேகமாக பெருக்கெடுத்தது. உற்சாகமும் தான். சுற்றிலும் நீர்த்துளிகள். அருவியின் சிதறலா ? சாரலின் தீவீரமா?  பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, நீர் பழுப்பு நிறமாயிற்று. ஐந்து கிளைகளும் ஒரே கிளைகளாக மாறிவிட்டதோ  என அஞ்சுமளவிற்கு நீர். ஆனந்தம்.. பரமானந்தம். அவ்வளவுதான், போதும் கிளம்புங்க.. நீர் அபாய அளவை அடைந்துவிட்டது  என காவல்துறை எச்சரிக்க, போதும் போதும் என்னும் அளவு நீராடிவிட்டு, புது மனைவியைப் பிரியும் மனோபாவத்தோடு விலகினோம்.


குற்றாலத்தின் அருகில் இருக்கும் மற்றொரு சொர்க்கம். பாலருவி.  வித்தியாசமான அருவி. மலையின் உச்சியிலிருந்து, தடுக்கி தடுக்கி பூஞ்சிதறலாய் கீழே இருக்கும் ஒரு தேக்கத்தில் விழும் அருவி. அருவியை அடைய நீந்தித்தான் செல்ல வேண்டும். (ஒரு கயிறும் கட்டியிருக்கிறார்கள்) சடசட வென ஓங்கியடிக்கும் வேகம் இல்லை. மஹா உயரத்திலிருந்து விழுவதால், தேக்கம் முழுவதுமே பூஞ்சிதறல்களாய் நீர். நீந்திச் சென்று அருவியில் நனைந்து,  நீரின்  ஓட்டத்தினால் வெளியே தள்ளப்பட்டு, பின் மீண்டும் ஓரமாய் நீந்திச் சென்று, மீண்டும் விலக்கப் பட்டு... என்னே ஒரு அனுபவம்.

நண்பர்களுடன் அறைகளுக்குத் திரும்பினோம். அதில் ஒரு நன்பர்; விபுலானந்தன்  என்று பெயர். சாதாரணமாக காணவியலாத பெயர். (மயில்வாகணன் என்ற இயற்பெயர் கொண்ட ஒரு யாழ்ப்பாணத்து முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்)

நன்பரேயாயினும் 'நல்ல பாடகர்' என்பது அறியாத ஒன்று. பல பழைய பாடல்களைப் பாடினார். நாங்கள் விரும்பிக் கேட்டது "  பாவாடை தாவணியில் பார்த்த உருவமா..” என்ற கண்ணதாசன் இயற்றிய, நிச்சயதாம்பூலம் திரைப்படப் பாடல்.

உண்மைதானே...? பார்த்துக் கொண்டிருக்கும் நாம் தான் உடைமாறி, உருவம் மாறி, திசை மாறி, சிந்தனை மாறி சிதறிப் போனோம். ஆனால் குற்றாலத்து நங்கை,  என்றும் இளமையாய், “பாவாடைத் தாவணியில் பார்த்த அதே ரூபத்தில்” மோகம் பொங்க,  காதல் தளும்ப,  கிரங்கடிக்கும் அழகோடு, மயக்கும் சிரிப்போடு  நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறாள்.

அப்பாடலில் ஒரு பத்தி வரும்...

தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா? 
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா?
முத்தமிழே! முக்கனியே! மோகவண்ணமே! 
முப்பொழுதும் எப்பொழுதும் எனது சொந்தமே 

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா 
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா 

எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும், 
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்,
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும், 
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன் !!


கடைசி பத்தியில் யாரை நினைத்தேன் எனச் சொல்லவும் வேண்டுமா?

1 comment:

  1. அருமை, அற்புதம், ஆனந்தம் எல்லாம் ஒருங்கு சேர்ந்த அனுபவம்.

    ReplyDelete