Thursday, July 3, 2014

ஒர்ரே... அறை(ரை)....

மாலை மணி நான்கு. எனினும் வெய்யிலின் உக்கிரம் தனிந்த பாடில்லை.

தூக்கமும் வரவில்லை; வேறு வேலையும் இல்லை!  என்ன செய்வது என விழித்துக் கொண்டிருந்த போது, வீட்டில் காய்கள் இல்லை என மனைவி காலையில் சொன்னது நினைவுக்கு வரவே, வெய்யிலானாலும் பரவாயில்லை என, வெளியே  புறப்பட்டார் ராமமூர்த்தி.  “இந்த மொட்ட வெயிலில் போகாங்காட்டி என்ன? வெய்யத்தாழ போலாமே? என்ற மனைவியின் ஆட்சேபனையை உதாசீனப்படுத்தி விட்டு, வெளியே வந்ததற்குப் பின் தான் புரிந்தது, வெய்யில் கடுமை.

இருட்டி விட்டால், ராம்மூர்த்திக்கு  டூ வீலர் ஓட்டுவதில் சிரமம்.  எதிரில் வரும் வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சம் கண்களைக்  கூசுவதால், இரவில் வெளியே செல்வதை தவிர்த்து விடுவார். காட்ராக்ட் ஆபரேஷன் செய்யனும்! முப்பத்தைந்தாயிரம் ஆகும் என்பதால் தள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார். 

"வயசாவுதுல்ல... சீக்கரமே செஞ்சுக்குங்க" என்கிறாள்
மனைவி.

வெளிச்சம் இருக்கும் போதே, முன்னெச்சரிக்கையாக வெளியே போய் வாங்கிவந்துவிடலாம் என புறப்பட்டது தப்பாகிவிட்டது, அத்தனை வெய்யில்.

இப்பொழுது ஊருக்கு ஊர் இருக்கும், ஒருபழமுதிர் நிலையத்திற்குள் நுழைந்தார்.  நல்ல வேளை ஏ.ஸியை ஆஃப் செய்திருக்க வில்லை.

கடையில் அவ்வளவாக  கூட்டம் இல்லை. அவரவர்கள் மௌனமாக பழங்களயும், காய்களையும் பொறுக்கிக் கொண்டிருந்தனர். ஏன் ‘மால்களில் மட்டும், மக்கள் சப்தமின்றி ஷாப்பிங் செய்கின்றனர்? சாலையோரக் கடைகளில் இறைச்சலாக கத்தும் மக்கள், இங்கு ஏன் நிசப்தமாகி விடுகின்றனர்? ஏதேனும் புரொடோகோல் மெய்ன்டயின் செய்கிறார்களாஒரு கணவன், கத்தரிக்காய் எடுக்கட்டுமா என்பதைக் கூட ரகசியம் போல, மனைவியிடம் கிசுகிசுவெனத்தான் கேட்டான்.

ராமமூர்த்தி, கடையில் வடக்குப் பக்கம் குவித்துவைத்து, பச்சை விளக்கு எரியவிட்டிருக்கும் கீரைகள் செக்ஷனுக்கு போனார். ஒரு கீரைக் கட்டை எடுத்துப் பார்த்ததும் இது வெந்தயக் கீரையா, இல்லை பருப்புக் கீரையா என சந்தேகம் வந்துவிட்டது. யாரைக் கேட்கலாம்? கடைச் சிப்பந்திகள் யாரையும் அருகில் காணோம். பக்கத்திலிருக்கும் மாதுவைக் கேட்கத் தயக்கமாயிருந்தது.  இலை கொஞ்சம் பெரிசாய் இருக்கிறது. அனேகமாய் பருப்புக் கீரையாகத்தான் இருக்கும் என யோசனை செய்து கொண்டிருக்கும் பொழுது, முதுகில்பொளேஏஏஏர்..என பலமாக ஓங்கி ஒரு அடி, ‘இடி போல  விழுந்தது. நிலை குலைந்துபோய் கீழே விழப்போனார் ராமமூர்த்தி.

விழுந்த அடியினால், ராமமூர்த்தி கூடையில் பொறுக்கி வைத்திருந்த சாத்துக்குடிப் பழங்கள் மூலைகொன்றாக சிதறி ஓடியதையோ, ஓடிவந்த மேனேஜர், கேவலாமக பார்ப்பதையோ, அடியின் அதிர்ச்சி தாங்காமல், ராமமூர்த்தியின்  கண்களில் நீர் வடிவதையோ, சற்றும் கண்டுகொள்ளாத அந்த அடிகொடுத்த ஆசாமி, ‘எலேய்... நீ ராமமூர்த்தி தானே...? எப்படிடா இருக்கே..?’ என பெருங்குரலில் கிடுகிடுத்தார்.

சுதாகரித்துக் கொண்டு நிமிர்ந்து தன்னை அறைந்த ஆசாமியைப் பார்த்தார் ராம்மூர்த்தி.  ‘ஏய்.... ராகவன் தானேடா நீ..?  ஐயோ... உன்னைப் பார்த்து முப்பது வருஷமாவுது இருக்கும்டா..!ராகவனைக் கட்டிக் கொண்டார் ராமமூர்த்தி.

அந்த கிழவர்கள் கொஞ்சம் அளவளாவிக் கொண்டிருக்கட்டும்! என்ன பேசப்போகிறார்கள்? இத்தனை வருஷம் நீ எங்கிருந்தாய்?  ரிடயர் ஆகி எவ்வளவு வருஷம் ஆகிறத்து?  எத்தனை பேர,பேத்திகள்? மருமகள் இன்னமும், உன்னை வீட்டைவிட்டு துரத்தி விடவில்லையா? மகனுக்கு சொத்தையெல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டாயா என்பது போன்ற சம்பிரதாயாமான புலம்பல்களாகத்தான் இருக்கும். நாம ஒரு ஐந்து நிமிஷம் அவர்களதுஃப்ளேஷ் பேக்கதைக்குள் சென்று வருவோம்! அவர்கள் பேசிக் கொண்டது போல, அவர்கள் சந்தித்து முப்பது வருஷத்திற்கு மேல்தான் இருக்கும்.

ஆனால் அவர்கள், “கடைசியாக சண்டை போட்டுக் கொண்டுதான் பிரிந்து சென்றார்கள்என்பதுதான்  சுவாரஸ்யமான விஷயம்! இப்போதுசெல்லமாகமுதுகில் ஓங்கி அறைந்த ராகவன், பிரிந்து சென்ற அன்று, நிஜமாகவே அறைய வந்தவர்தான்.

அனேகமாக 1981 ஆக இருக்கனும். விஷயம் ஒன்றும் பெரிசில்லை! அல்பத்திலும் அல்பமான் சங்கதி.  அவர்கள் குடியிருந்த நகரில், ஒரு நன்பர், தனது மகனுக்கு திருமண அழைப்பிதழை,  நகரவாசிகள் அனைவருக்கும் வைத்தார். திருமணம் ஆண்டிமடத்திற்குப் பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம். திருமண நாள், வார நடுநாள்-அனைவரும் போக முடியாது என்பதால், யாரேனும் ஓரிருவர் கல்யாணத்திற்கு சென்று வருவது என்றும், வசூலான மொய்ப்பணத்தை, திருமணத்திற்கு செல்பவர்களிடமே கொடுத்தனுப்பவது என்றும், வழிச் செலவினைபொது நிதியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் எனவும் தீர்மாணமாயிற்று.

சரி.. யார் போவது என்ற பேச்சு வந்தபோது, அனைவரும் கழன்று கொண்டனர். கடைசியாக அகப்பட்டவர் ராகவன். அப்பொழுது, ராகவன் தான், ரொட்டேஷன் படி, குடியிருப்போர் சங்கத்தின் செயலர். எனவே தப்பிக்க இயலவில்லை. முனகிக் கொண்டே, சரி..சரி.. நானே போகிறேன். பயணப்படியை கொடுத்துவிடுங்க என்று வாங்கிக் கொண்டுதான், பஸ் ஏறினார்.  

மனிதர் ஆண்டிமடம் போய்ச்சேர்வதற்கே, இரவு ஏழு மணி ஆகிவிட்டி ருக்கிறது. அங்கிருந்து ஒரு டவுன் பஸ்ஸைப் பிடித்து, திருமணம் நடக்கும் கிராமத்திற்குப் போய் கல்யாண சத்திரத்தைகண்டு பிடித்திருக்கிறார்’.

சத்திரத்திற்கு முன்னால், ஒரு டூரிங் டாக்கீஸ். என்ன படமோ தெரியவில்லை! டாக்கீஸினுள்ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது...ன்னு, ஜேஸுதாஸ் விடாமல் வினவிக் கொண்டிருந்தார். அதற்கு பாடகி, ஏதோ ஒரு பதிலைச் சொல்லிவிட்டாலும் கூட ஜேசுதாஸ் விடாமல்ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி.... என சண்டித்தனம் செய்து கொண்டிருந்தார். 

டாக்கீஸ் வாசலில் ஒரு ட்ரேட்மார்க் பரோட்டா கடை. மைதாவை துவைத்து, உலர்த்தி, விரித்து வட்டமிட்டு நிமிஷமாக பரோட்டா செய்து கொண்டிருந்தார், மாஸ்டர். தட்டில் நிரப்பும் பரோட்டாக்கள் யாவும், கண நேரத்தில் வினியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. என்ன, இந்த ஊரில் எல்லோரும் ராத்திரிக்கு பரோட்டாதான், அதுவும் இந்தக் கடையில்தான் தின்னுவார்களா? கூட்டம் அம்முகிறது!

  “ஒன்னு வச்சா மூணு, ரெண்டு வச்சா ஆறு, மூணு வச்சா ஒம்பதுஎன கத்தியவண்ணம், ‘கட கட கட வென ஒரு சக்கரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தான் ஒருவன். அவனைச் சுற்றிலும் இருபது பேர். அதிர்ஷ்டம் இருப்போருக்கு, பத்து பைசா வச்சுட்டு முப்பது பைசா கிடைக்கலாம்!

காடா திரி போட்ட மண்ணெண்ணை விளக்கில் பழைய துணிகளை ஏலம் விட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். தா பார்... ராஜா போட்ட சட்டை.. ராஜா தேசிங்கு போட்ட சட்டை.. ஆருக்கு வேணும் இந்த அதிர்ஷட சட்டை..  ! இந்த சட்டய போட்டியானா வாணிஸ்ரீ மாதிரி பொண்ணு ஆம்புடும். வெல என்னன்னு கேக்குறியா? இந்தா, அப்படியே புடி ஆயிரம் ரூபாய்.. ஆயிரம் ரூபாய்.. ஒரு நீல நிற முழுக்கை சட்டையை நலுங்காமல் பிரித்துக் காட்டிக் கொண்டிருந்தார்.  வேணாவா? ஆயிரம் ரூவா இல்லியா? இந்தா புடி.. பத்து ரூவா.. பத்து ரூவாய்... ஐந்து ரூவாய்...ஒரு ரூவாய்... ஒருவர் அந்த நீல சட்டையை எட்டணா கொடுத்து வாங்கிக் கொண்டார்.

பகலெல்லாம் பாம்பு கீரி சண்டை காட்டி, ரத்தம் கக்கி சாவாய் என காசு போடாதவர்களுக்கு சாபமிட்ட ஒரு பாம்பாட்டி குடும்பம் மரத்தடியிலியேகருவாட்டு குழம்புசெய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த்து.

வேடிக்கை பார்த்த்து போதும் என, சத்திரம் நோக்கி செல்ல ஆரம்பித்தார் ராகவன். சீரியல் விளக்கு அனாவசியத்திற்கு மரத்தில் எல்லாம் தொங்கிக் கொண்டிருந்தது. ஓரிரண்டுவாழ்த்த வயதில்லாத”  பேனர்கள் நெளித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தன. சத்திரத்தில் ஆள் அரவமே காணோம். கொண்டு வந்திருந்த, பத்திரிக்கையை பிரித்து, மணமகன் பெயரை, ‘டிஜிடல் பேனரோஒப்பிட்டுப்  பார்த்துக் கொண்டார். சரியாய்த்தானே இருக்கிறது!  என்ன இது, ஒருவர் கூடவா இருக்க மாட்டார்கள்? எல்லோருமா  பெண் அழைபிற்கு சென்று விட்டனர்? மண்டபத்தின் கதவுகள்கூட சாத்தப் பட்டிருந்தன.

மெல்ல, கதவைத் திறந்து பார்த்தார். ஆடிட்டோரியம் முழுவதும்மல்லாக்கொட்டை’ (நிலக் கடலை) காயவைத்திருந்தனர். ஓரமாக பிளாஸ்டிக் சேர்கள், அபாயகரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேடையில், திருமணத்தை வாழ்த்தி விடலைகள் போட்டிருந்த போஸ்டர்கள் காய்ந்து கொண்டிருந்தன.

தப்பான இடத்திற்கு வந்துவிட்டோமோ? பக்கத்தில் வேறு எதாவது ஒரு சத்திரம் இருக்குமோ? யாரைக் கேட்கலாம்?  சிந்தித்தவாறு சத்திரத்தை ஒரு பிரதட்சணம் வந்துவிட்டார். எவரையும் காணோம்.

ஒரு ‘கை’,  ‘மல்லாட்டைஎடுத்து வைத்துக் கொண்டு, படியில் உட்கார்ந்து விட்டார் ராகவன். கொஞ்ச நேரத்தில் ஒரு ஆள் வந்தார். வேட்டியை தலைப்பாகையாக சுற்றிக் கொண்டு, கோவண கோலத்துடன்.

ஆரு நீங்க..என்னா வோனும் ?“

மேனேஜர் இருக்காங்களா..?’

இன்னா மேனேஜர்...இன்னா கேக்கோணும்?”

இல்ல... இந்த சத்திரத்தை பாத்துக்கறதுக்கு பொறுப்பா ஒருத்தர் இருப்பாரில்லை. மேனேஜர்னு ஒருத்தரு. அவரைத்தான் பாக்கனும்..

நாந்தான் அது... சொல்லு... வயக்காட்டுக்கு போயிட்டு வர்ரேன்.. தேதி புக் பண்ணனுமா?”

நீங்களா...? சரி.. சரி...' 

மணமகன், அவரது அப்பா பெயர் எல்லாவற்றையும் சொல்லி, 'அந்த கல்யாணம், இங்கே இன்னிக்கு நடக்குதாமே.. அப்படியா?'

ஆமாம்.. அவுங்க வூட்டு கல்யாணம் இங்கதான்  நடக்குது...

ஆங்.... அப்ப ஒருத்தரையும் காணோம்?”

தலையில் சுற்றியிருந்த வேட்டியை, உதறி இருப்பில் சுற்றிக் கொண்டார், ‘மேனேஜர்’..

பத்திரிக்கை வச்சுத்தானே, வந்தீங்க...?”

பத்திரிக்கை வைக்காம, யார் வருவாங்க? நானு அவரு குடியிருக்கும் கடலூரிலிருந்து வருகிறேன். இதோ பாருங்க கல்யாண பத்திரிக....

அதெல்லாம் நீயே வச்சுக்க... கண்ணாலம் என்னிக்குன்னு போட்டிருக்கு அதுல..?’

ஏன்? நாளை காலை ஒன்பது மணிக்கு..!

படிச்ச ஆளுதானே? நாளைக்கு கல்யாணம்னு சொல்ற... இன்னிக்கு ஏன் வந்த..?’

அதிர்ச்சியானார் ராகவன்.

ஏன் மாப்பிள்ளை அழைப்பு  / பெண் அழைப்பு ஏதாவது  நடக்கணுமே?”

அதெல்லாம் இருக்கு.. ஆனா, அது இங்க இல்ல...

என்னாது.. இங்க இல்லியா?  வேற எங்க நடக்கும்?”

கோயில்ல.. பொண்னை இட்டாந்து  கோயில்ல பூசை  முடிச்சுட்டு, அவுங்க வூட்டுக்கு கூட்டிகிட்டு போயிடுவாங்க.. பையனுக்கும் அப்படித்தான்..

அப்ப சத்திரத்துக்கு வரவே மாட்டாங்களா?”

நானு தமிழ்ல தான பேசறேன்... இன்னா உனக்கு பிரியலை? பொண்ணு /மாப்புள அழைக்கறதெல்லாம் இங்க இல்லை...

பையன் வீடு எங்க இருக்கு? எப்போ சத்திரத்திற்கு வருவாங்க..?”

அது கெடக்கு ரெண்டு மைல்.. நீயெல்லாம் போவ முடியாது.  பொண்ணு வூடு, மாப்புள வூடு எல்லாம் காலைல எட்டு மணிக்கு வருவாங்க..

ஒரு உதவி  செய்யறீங்களா..?”

இன்னா?’

எங்க ஊர்ல வசூலான மொய்ப்பணம் இந்த கவர்ல இருக்கு.. காலைல பையனோட அப்பாகிட்ட இதைக் கொடுத்துடனும்.. மறக்காம செய்வீங்களா?  நான் இப்ப ஊருக்கு திரும்பிக் போயிடறேன்..!

மொய்க்காசு தானே? அந்த பீரோவுல, சாமி படத்தாண்ட வச்சுடு.. காலில கொடுத்தூடரன்... அது சரி.. எப்புடி ஊருக்கு திரும்பிப் போவ...  காரு-கீரு கொண்டாந்திருக்கியா..?”

காரா..? டவுன் பஸ்ஸில் ஆண்டிமடம் போயி, அங்கிருந்து எங்க ஊருக்கு போயிடுவேன்...

கெக்..கெக்..கெக்என்றார் மேனேஜர்.  “வெவரம் இல்லாத ஆளா இருக்கியே? டவுனுக்கு போர கடேசி பஸ்ராசேஸ்வரிஎட்டு மணிகு பூடுது.. இனிமே காலேல தான் பஸ்ஸு.

என்ன? பஸ் இல்லியா?

‘ஐயையோ.. இது என்ன சிக்கல்?

 ‘ராத்திரி எங்க படுப்பது..?

‘ஒரே துணியுடன் வந்திருக்கிறேன்.‘

‘எங்கே சாப்புடறது?”

நடந்து போனால், ஆண்டிமடத்திற்கு எவ்வளவு நேரமாவும்? 

‘ஆண்டிமட்த்திலிருந்து கடலூருக்கு கடைசி பஸ் எத்தனை மணிக்கு?”

வரிசையாக வினாக்களைத் தொடுத்தார்.

நீயெல்லாம் நடந்து போவ முடியாது.. வழியில, சுடுகாட்டுல, பொணம் எரியுது...பக்கத்து ஊரு பொணம்.. பயந்துக்குவே,  பேசாம ரூம்புல படுத்துக்க.. காலேல கல்யாணத்த கண்டுகினு, அப்ப்பால ஊருக்கு போவலாம்..

ராமமூர்த்திக்கு ஆப்ஷன் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.


‘ரூம்ல ஃபேன் இருக்கா?


‘ம்ம்ம்.. இருக்கு.. போட்டுக்க...


‘இங்கே சாப்பிட எதாவது கிடைக்குமா?

‘தா... அந்த டூரிங் டாக்கீஸாண்ட பரோட்டா போடுவாங்க, போய்த் தின்னுட்டு வா...

‘எனக்கு அதெல்லாம் பிடிக்காது

‘ஆங்... பரோட்டா பிடிக்காதா? கோழிகுழம்பு ஊத்துவாங்க.. நல்லா இருக்கும்! போய்த் தின்னுட்டு வா...

‘இல்ல... நான் சைவம்.. சாப்பிட மாட்டேன்..

‘இதென்ன ரோதனை..? குருமா வேணாம்னா சட்னி ஊத்தி தின்னேன் ...

‘அய்ய... ஏன் டவுனுகாரவுங்க கூட வம்படிக்கிற... அவுருதான் புடிக்காதுன்றாங்கள்ள....என்றாள் அவருடன் வந்திருந்த அவரது மனைவி!

‘இட்லி துன்னுவியா.. மொளவாப் பொடிதான்.. எங்க வூட்ல சேஞ்சு கொண்டாரேன்.. என்றாள் ராகவனைப் பார்த்து.

‘கோழிக்கு இது பரவாயில்லை.. உங்களுக்கு சிரம்ம் இல்லையென்றால் கொடுங்கள் என்றார்.

சுடச்சுட இட்லி வந்தது. நிஜமாகவே சுவையாக இருந்தது. உண்டுவிட்டு ‘மேனேஜர் அறையில் படுத்துக் கொண்டார். 

‘இரவு முழுதும், மல்லாக்கொட்டையை ‘வரட்..வரட்..அள்ளும் சப்தமும், மனிதர்கள் இறைச்சலும், அவரது  தூக்கத்தை விரட்டிக் கொண்டிருந்தன. எதிர்த்த டாக்கீஸில், இரண்டாம் ஆட்டத்தில் மறுபடியும் ஜேசுதாஸ் ‘ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா, ஏனடி.. ‘ என கேள்வி கேட்க வந்து விட்டார்.

விதவிதமான் பூச்சிக் கடிகள், கொசு, உடல் மேலேயே  ஓடும் எலி, கொர்க்.. கொர்க் என சப்தம் மட்டும் போடும் ஃபேன்... மேனேஜரின் குறட்டை.... ராகவனுக்கு அந்த இரவு சிவராத்திரியாக கழிந்தது. மேனேஜர் எந்த கவலையும் இன்றி, மட்டையாகி விட்டிருந்தார்.



காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, கல்யாண டிபனுக்கு காத்திருந்து ஏமாந்துவிட்டு, அந்த பரோட்டா கடையிலேயே இட்லி சாப்பிட்டுவிட்டு வந்தார். 

ஒருவழியாக பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் எட்டு மணிக்கு வந்து சேர்ந்தனர். ஒன்பது மணிக்கு திருமணம். மனமக்களை வாழ்த்திவிட்டு, மொய்ப் பணத்தை, பையனின் அப்பாவிடம் கொடுத்தார். அவர், அதை வாங்கி ‘அண்டர்வேருக்குள் தினித்துக்  கொண்டார். 

இரவு அவர் பட்ட அவஸ்தைக் கதையை அவர் சற்றும் கண்டுகொள்ளாமல் இருந்தது வேறு எரிச்சலாக இருந்தது. சாப்பாடு பன்னிரண்டு மணிக்கு என்றனர். சலிப்புற்ற ராகவன், ‘நான் ஆண்டிமடத்தில் சாப்பிட்டுக் கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டு, பையனின் அப்பா  கொடுத்த ‘கலர்-சோடாவை குடித்து விட்டு ஊருக்கு வந்து சேர்ந்தார்.


கடலூர் வந்த ராகவன், சாயங்காலம், கல்யாண கதையை சற்று ‘எக்ஸாகரேட் செய்து அனைவரிடமும் விவரித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் எவரும் அவர் பட்ட இம்ஸைக்கு அனுதாபம் காட்டாமல், நகைத்துக் கொண்டிருந்தனர். எரிச்சலின் உச்ச கட்டத்திற்கு சென்றுவிட்டார் ராம்மூர்த்தி.

‘நான் ஒருத்தன் உங்களுக்காக,  நேற்று முழுவதும் அவஸ்தைப் பட்டிருக்கிறேன்.. அது உங்களுக்கு ஹாஸ்யமாய் இருக்கிறதா..? கத்தினார் ராகவன்.

‘ஓய்... இதையெல்லாம் என்ஜாய் செய்யணுங்காணும்.. இதெல்லாம் ஜாலி அனுபவம் என்றார் ஒருவர்

‘அந்த மேனேஜர் சம்சாரம் போட்ட இட்லிக்காகவே போயிருப்பீர்   என்றார் ஒருவர்.

'கொஞ்சம் மல்லாட்டை அள்ளிக் கொண்டாறது தானே?' என்றார் மற்றொருவர்.

ராமமூர்த்தி தன வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம். 

‘ஒரு நாள், உம்ம பொண்டாட்டிகிட்டேயிருந்து எஸ்கேப் ஆனீருல்ல... எங்களுக்கு நீர்தான்  நன்றி சொல்லனும்’ என்றார். இதைக் கேட்டதும் சடாரன ராம்மூர்த்தியை அறைய வந்துவிட்டார் ராகவன்.


‘அட.. ஒரு சின்ன விஷயத்தை இப்படியா பெரிசு பண்ணுவாங்க...’ 

ஒருவழியாக, இருவரையும் பிரித்துவிட்டனர் நண்பர்கள் .

அன்று நடந்த ரகளைக்குப் பின் இருவரும் பேசிக் கொள்வதில்லை. ராகவன் மாற்றலில் சென்னைக்கு சென்றுவிட்டார். தொடர்பு அற்றுவிட்டது.

முப்பத்தைந்து  வருஷத்திற்கு அப்புறம் இப்பொழுதுதான் சந்திக்கிறார்கள்.
அந்த சண்டையை, இருவரும் சற்று வெட்கத்துடனும்-சங்கோஜத்துடனும் அசைபோட்டுக் கொண்டனர்.


‘அது சரி.. எங்க இந்தப் பக்கம்.. என்றார் ராமமூர்த்தி.

‘இந்த ஊரில ஒரு சொந்தக்காரங்க கல்யணம்.. அதுக்குத்தான் வந்தேன்.  வரிசைத் தட்டுல வக்கறதுக்கு பழங்கள் வேணும்னாங்க.. சும்மாத்தான இருக்கேன். நான் போய் வாங்கிட்டு வர்ரேன்னுட்டு இங்க வந்தேன். உன்னை இங்க சந்திப்பேன்னு எதிர்பாக்கல.. என்றார் ராகவன்.

‘விட்ட இடத்திலிருந்து, மறுபடியும் கல்யாணத்தில்தான் சந்திக்கிறோமா.?என்றார் ராம்மூர்தி. சிரித்துக் கொண்டனர் இருவரும்.

வீட்டிற்கு வந்ததும், மனைவியிடம் ராகவனை சந்தித்ததைப் பற்றிச் சொன்னார், ராம்மூர்த்தி.

‘உங்களை அடிக்க வந்தாரே.. அவுரா?

‘அவனேதான்.. இப்ப மாறிட்டான். வயசாயிடுச்சில்ல... ரொம்ப தன்மையா இருக்கான்

‘ஒரே ஒரு நாள் ராத்திரி சரியாத் தூங்காத்துக்கு, சண்டைக்கு வந்த மனுஷன் தானே அவுரு?

‘ஏய்... அதெல்லாம் முப்பது வருஷத்துக்கு முன்னாலே.. மனுஷன் மாறவே மாட்டானா என்ன?

‘சரி..சரி.. வீட்டிற்கு வரச்சொல்றதுதானே?

‘ம்ம்ம் சொன்னேன்.. சத்திரத்துல நல்ல ரூம் இருக்காம். அங்கேயே தங்கிக்கரானாம். டைம் இருந்தா கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் வர்ரேன்னான்.

‘சரி, வந்தா பாத்துக்குவோம்.. அநேகமா வரமாட்டாரு..

இரவு பதினொறு மணியிருக்கும். டோர் பெல் சப்தம்..

இந்த நேரத்தில் யாராக இருக்கும்? யோசித்தவண்ணம் மெல்ல கதவைத் திறந்தார் ராம்மூர்த்தி.

வெளியே ராகவன்.

‘வா.. வா.. ‘

‘அங்கே சத்திரத்தில் ரூம் நல்லாவே இல்லைடா... ஏ.ஸி ஓடவே இல்லை .. கொசுக்கடி, மனுஷங்க, ஓயாம  ஒரே சப்தம் போட்டுக்கிட்டுருக்காங்க, தூக்கமே பிடிக்கல  .. அதான் உன் வீட்ல தங்கிக்கலாம்னு வந்துட்டேன் என்றார் ராகவன்.

"வயசானப்புரமும் கூட,  நீ மாறவே இல்லடா.." என்று சொல்ல நினைத்து,  வாயை மூடிக்கொண்டார் ராமமூர்த்தி.

No comments:

Post a Comment