Saturday, May 23, 2015

வயநாடு

சுல்தான் பத்தேரி - எடக்கல் குகைகள் 

சில நாட்கள் கோடை வெய்யிலிலிருந்து, தப்பிக்க நினைத்து, மலை நாட்டு பிரதேசங்களுக்கு சென்று வரலாம் என திட்டமிட்ட பொழுதே, ஊட்டியும் கொடைக்கானலும் இல்லை என தீர்மாணித்துவிட்டேன். சலித்த இடங்கள் எனபது மாத்திரம் காரணமல்ல, அம்மும் கூட்டமும் அவ்விடங்களை விட்டு விலகிட வைத்தது. கடவுளின் நாடான, கேரள வயனாட்டிற்கு செல்வது என முடிவு செய்தாகிவிட்டது.

வயனாடு என்பது ஒரு குறிப்பிட்ட ஊர் என பாமரத்தனமாக நினைத்திருந்தேன். இல்லை; வயனாடு என்பது ஒரு மாவட்டம். அதன் தலைநகர் ‘கல்பேட்டா’. பார்க்க வேண்டிய இடங்கள் பலவும் மாவட்டம் முழுவதும் விரவிக்கிடக்கிறது. வயனாட்டில் எங்கு தங்கலாம்? பல இடங்களுக்கும் செல்லக்கூடிய இடமாகவும், கொஞ்சம் சீதோஷ்னம் குளிர்ச்சியாக இருக்கும் இடமாகவும் அலசியதில், தேறியது ‘சுல்தான் பத்தேரி’.

ஒரு காலத்தில் ‘கணபதி வட்டம்’ என அழைக்கப் பட்ட ஊர் ‘சுல்தான் பத்தேரி’. அங்கே இருந்த கணபதி கோவிலின் சிறப்பு காரணமாக, கணபதி வட்டம் என அழைக்கப்பட்டது.





திப்பு சுல்தான், இந்த ஊரைக் கைப்பற்றி, அங்கே இருந்த ஒரு ‘ஜெயின் கோவிலை’ தனதாக்கிக் கொண்ட்தோடு, அக்கோயிலை தனது ஆயுதக் கிடங்காகவும் மாற்றிக் கொண்டாராம். பல ஊர்களைப் போல இந்த ஊரும், பெயர் மாற்றம் கண்டு, ‘சுல்தான் பேட்டரி’ என அழைக்கப்பட்டது. (பேட்டரி என்றால் ஆயுதக் கிடங்காம்) பின்னர் மருவி ‘சுல்தான் பத்தேரி’ . அந்த கணபதி கோவில் தற்போது புணரமைக்கப் பட்டு, வழிபாடும் நடந்து வருகிறது. படத்தில் இருப்பது ஜெயின் கோவில்.. கணபதி கோவில் அல்ல..படம் எடுக்க அனுமதி இல்லை..


ஜெயின் கோவிலின் தற்போதைய தோற்றம் மேலே ! ASI கட்டுப்பாட்டின் கீழ் தற்போது உள்ளது. திறந்திருக்கும் நேரம் காலை 9 முதல் மாலை 5 வரை.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எடக்கல் குகை.

ஊரெங்கும், மிகவும் ரம்மியமான, இதமான, சில்லென்ற சீதோஷ்ணம். எந்தெ நேரமும், காதில் காதல் மொழி பேசும் வாடைக் காற்று. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைத்தொடர்கள். மலைகளின் முகடுகள் தோறும் முத்தமிட்டபடி காதல் கொள்ளும் மேகக் கூட்டங்கள். மலைமுகடுகளின் காதல் களியாட்டத்தை வேடிக்கை பார்க்க, பெருங்கூட்டமாய் படை யெடுத்துவரும் மிஸ்ட்.  அவ்வப்போது பொழியும் சாரல்..

சுல்தான் பத்தேரியிலிருந்து, பன்னிரண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது எடக்கல் குகை. எடக்கல் மலையின் மேலேறித்தான் குகையினைக் காண வேண்டும். இந்த இடம் என்று இல்லை; வயனாட்டில் எந்த சுற்றுலாத்தலம் செல்ல வேண்டியிருந்தாலும் ‘Trekking’ (மலையேற்றம்)   செய்துதான் ஆகணும்.

கொஞ்சம் ஸ்டீப்பான, குறுகலான படிக்கட்டுகள். வயதானவர்கள் தவிர்க்கலாம். வழியெங்கும் அற்புதமான காட்சிகள். ஒரு கிலோமீட்டர் டிரெக்கிங் செய்யனும். குகை நன்றாக உள்ளது. 2400 வருடங்கள் பழமையானது.

குகையின் கீழ்ப்பாகத்தில் சித்திர எழுத்துக்களும், மேற்பகுதியில் பிரமி, தமிழ் எழுத்துக்களும் உள்ளன. பறவை, விலங்குகள் வேட்டையாடப்படும் கல்வெட்டுக்களும் இருந்தன. விஜயவாடா ‘போர கேவ்ஸ்’ போல பிரமிக்க வைக்கவில்லை யென்றாலும், மனித கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாலும், செல்லும் வழியின் அழகாலும் மனதை கவரும் இடம்.

மாலை 3.50க்கு மேல் அனுமதி இல்லை. ஃபோட்டேவுக்கு தனி டிக்கட். நுழைவுக் கட்டணம் உண்டு.

எடக்கல் மலை - தூரத்திலிருந்து...

மலையின் அடிவாரம்

வந்தாச்சு....

அடிவாரம் வரை பஸ் / வாகனம்  போகாது.. முக்கால் கிலோமீட்டர் நடக்கனும்.

மலை ஏறுங்கோ.....

இன்னும் முடியலை... நடங்க....

மேலே வந்தாச்சு....

குகையின் உள்ளே உள்ள  பிளவுப் பாறை...

குகையின் உள்ளே...

குகையின் வாசலில்...

மேலிருந்து....

(வயனாட்டின் சுற்றுலா பற்றி இன்னும் சில பகுதிகள் வெளியாகும்)

1 comment: