Tuesday, May 26, 2015

மடிகரா – தலைக்காவேரி

வயனாட்டிலிருந்து, கர்னாடக, ‘கூர்க்’ பகுதிக்கு எளிதாகச் செல்லமுடியும். எனவே அங்கே  ஒரு நாள் சுற்றுலா செல்ல தீர்மானித்து, முதலில் ‘தலைக்காவிரி’ க்கு சென்றேன்.

நான் இந்த இடத்திற்கு வந்து, 20 வருடங்களாவது இருக்கும். முன்பு மிகச் சாதாரணமாக இருந்த இடத்தை, எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறார்கள்? மிகப்பெரிய வரவேற்பு வளைவு, கிரானைட் கற்களால் வழுவழுவென அகலமான படிக்கட்டுகள், சுற்றிலும் நிறைந்திருக்கும் கண்கொள்ளா இயற்கைக் காட்சிகளை, பயணிகள் காண்பதற்கு ஏற்ற அமைப்புகள். மேலே நேர்த்தியான கோயில்கள். வாகனங்களை நிறுத்த வசதியான இடங்கள். முக்கியமான விஷயம், இடத்தினை வெகு சுத்தமாக பராமரிக்கிறார்கள்.

காவிரி நதியின் உற்பத்தி இடம் இது. நமது கலாச்சாரத்தில், நதிகளை பெண் தெய்வங்களாக வழிபடுவது வழக்கம். இங்கும் “காவிரி அம்மனுக்கு” கோயில் உண்டு. இயற்கை என்னவோ தனது வளங்களை பாகுபாடின்றி, அனைவருக்கும் வாரி இறைத்திருக்கிறது. மனிதன் தான் இது என்னுடையது என உரிமை கொண்டாடி, அடுத்தவனின் மண்டையை உடைத்து, ரத்தம் வடிவதை கொண்டாடுகிறான். இந்த காவிரிக்காக எத்துனை சண்டை? ராஜாக்கள் காலம் முதல்  இந்த நதிக்காக எத்துனை போர்கள்?

உன் இடத்தில் நெல் விளைவிக்க முடிகிறதா? செய்துகொள். என் இடத்தில் என்ன விளைவிக்க முடியுமோ அதை நான்  செய்து கொள்கிறேன். இருவரும் பகிர்ந்து கொண்டு நலமே வாழ்வோம் என ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்?

எல்லா தண்ணீரும் எனக்கே என மல்லுக்கு நிற்பது அசிங்கம், இயற்கையின் தன்மைக்கு செய்யும் துரோகம் என புரியவே புரியாதா?

ஒரு சமயம் ஒரு கேரள கம்யூனிஸ்ட் தோழரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் வினவினேன்; உங்களுக்கு தேவையான எல்லாமே தமிழகத்திலிருந்துதான் வரவேண்டும். பீஃப், அரிசி, காய்கறி, சிமெண்ட், கோழி, முட்டை என எல்லாமே!. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் (முல்லை பெரியார்) தரமாட்டேன் எனப் பிடிவாதம் பிடிக்கிறீர்களே... உங்கள் தண்ணீரில் நாங்கள் அரிசி விளைவிக்காவிடில், சோற்றுக்கு என்ன செய்வீர்கள்? இது கூட உங்களுக்கு புரியவில்லையா? எங்களுக்கு தண்ணீர் தரமறுத்தால், நட்டம் உங்களுக்குத்தானே?” என்றேன்.

‘மானிலக் கட்சி’ என்றாலும் பரவாயில்லை; ‘தேசீய’ கட்சி என்ற பெயரை வைத்துக் கொண்டு ஒவ்வொரு மானிலத்துக்கும் ஒரு நிலை எப்படி எடுக்கிறீர்கள்? உங்களது தமிழக கம்யூனிஸ்ட் கட்சிக்கிளை, தண்ணீர் வேண்டும் என்று சொல்லும். கேரள கம்யூனிஸ்ட் கட்சிக்கிளை தரமாட்டோம் என்று சொல்லும்! இப்படி முரண்பட்ட நிலை எடுப்பது உங்களுக்கு வெட்கமாகவோ, உறுத்தலாகவோ இல்லையா?” என வினவினேன்.

‘நாங்க மட்டுமா சார் அப்படிச் சொல்றோம்? பி.ஜே.பி, காங்கிரஸ் உட்பட எல்லா தேசிய கட்சிகளும் அப்படித்தானே, சுயனலமாக நடந்து கொள்கிறார்கள்? நீங்க சொல்றபடி யோசிக்க எங்களுக்கும் தெரியும் சார். அப்படி செஞ்சா, எங்களுக்கு இங்கே ஓட்டு கிடைக்காது.. பிராந்திய உணர்வுகள்தான் எங்களுக்கு முக்கியம். 

இது தப்புதான் சார்.. ஆனால் மொழிவாரி மானிலங்கள் அமைந்து விட்டதால், யாரும் எதுவும் செய்ய முடியாது...” என்றார். 

அதுவும் சரிதான்...   பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிட்டால் அரசியல்வாதிகள் சம்பாதிப்பது எப்படி? ஒட்டு வாங்குவது எப்படி?  அரசியல்வாதிகள்  சௌகரியமாக வாழ, மக்களிடையே ஜாதி, மத, இன, மொழி வெறிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டேயிருப்பார்கள். நாமும் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டே இருப்போம்..

வின்வெளிக்குச் சென்ற ராகேஷ் ஷர்மா, “மேலேயிருந்து உலகைப் பார்க்கிறீகளே, எப்படி தெரிகிறது?” என்ற கேள்விக்கு,  செவியில் அறையும் பதிலொன்றைச்  சொன்னார்:    “என்னால் நாடுகளுக்கிடையே எந்த எல்லையையும் பார்க்க முடியவில்லை”    ..ம்ம்ம்ம்ம்ம்..


சரி.. அதைவிடுங்கள்.. நாம வந்தது, ஊர் சுற்றிப் பார்க்க.. சுப்ரீப் கோர்ட் சொன்னாலே கேட்கமாட்டேன் என்பவர்கள் நாம சொல்லியா கேட்கப் போகிறார்கள்? சில தலைக் காவேரி படங்களைப் பார்ப்போம்..



துரத்திலிருந்து ...

வரவேற்பு வளைவு..

பக்கத்து மலை...

மேலே உள்ள கோயில்கள் 

'கர்நாடக  காவிரித்தாய்...'


அகத்திய லிங்கம்.
(தமிழகத்தை தாண்டிப்போனால் சிவபெருமான் மீசையை முறுக்கிக்கொண்டுதான் இருக்கிறார்)



No comments:

Post a Comment