Friday, May 29, 2015

மறு பக்கம்

நீங்கள் எனது சமீபத்திய  பயனக்கட்டுரைகளைப் படித்திருக்கக் கூடும். வயநாட்டில் இருந்த நாட்களில், லோக்கலில் ஒரே டாக்ஸி டிரைவரை (கிரீஷ் என்பவரை) அமர்த்திக் கொண்டதால் நெருக்கமாகிவிட்டார்.  

“உங்க ஊர் பரவாயில்லை.. எப்போதும் அருமையான க்ளைமேட். நல்ல காய்கறிகள். விலைவாசியும் கடுமையாக இல்லை.. கொடுத்து வைத்தவரையா நீர்... “

கொஞ்சம் வேதனையாகப் பார்த்தார். 

“என்ன ஆச்சு கிரீஷ்?”

எங்களுக்கு, மற்றொரு பக்கம் இருக்கிறது சார்... இந்த பச்சைகளைப் பார்த்து ஏமாந்து விட்டீர்கள். கேரளாவில் இந்தப் பகுதியில் ‘கேன்சர்’ வியாதி அதிகம்.. பேப்பரில் படித்ததில்லையா? கோழிக்கோடு மருத்துவ மணையில் போய்ப்பாருங்கள்.. எத்தனை பேருக்கு இந்த வியாதி எனப் புரியும்...

“ஏன் இப்படி?”

இங்கே டீத்தோட்டங்கள் அதிகம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வலிமைமிகுந்த பூச்சி கொல்லி மருந்து தெளித்தாக வேண்டும். டீ இலை களைப் பறிப்பதும் 15 நாட்களுக்கு ஒருமுறைதான். எல்லா இலைகளிலும், விஷமாக, பூச்சி மருந்து படிந்திருக்கும். இப்பூச்சி கொல்லி மருந் து,  மழையிலோ, ஸ்ப்ரிங்களரினாலோ கரையாது. பிசுக்கென பிடித்திருக்கும். இந்த பூச்சு மருந்து தெளிக்கும் போது, தொழிலாளர்கள் மாஸ்க் அணிவதில்லை... விபரமறிய ஜனங்கள். காற்றில் பூச்சி மருந்து கலந்தே இருக்கும்... புற்று நோய் வராமல் என்ன செய்யும்?

நீங்கள் சாப்பிடும் ஸ்ட்ராங்கான ‘டீ’ த்தூள் என்னவென்று தெரியுமா? அந்த பூச்சிமருந்து தெளித்த டீ இலைகளைத்தான்.

‘கழுவ மாட்டீர்கள்?”

‘இல்லை... கழுவினாலும் போகாது...”

அது மட்டுமல்ல சார்... இங்கே விளையும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், காரட், கீரை, உருளை ஆகியவற்றிற்கும் வலிமையான பூச்சி மருந்து தெளிக்கிறோம். கோஸுக்கு வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும். அப்படி தெளிக்கா விடில், விவசாயிக்கு ஒருகிலோ கோஸ் தேராது.. எல்லாம் பூச்சி அரித்து விடும்.

என் வீட்டில், உரம் பூச்சி மருந்து போடாமல் கொஞ்சம் கோஸ் வளர்க்கிறோம். சைஸ் என்ன தெரியுமா? ஒரு சின்ன ரப்பர் பந்து அளவுதான் இருக்கும். மீதி எல்லாம் பூச்சி தின்றுவிடும். நீங்கள் கடையில் வாங்கும் கோஸ்கள் இரண்டுகிலோவாவது இருக்காது?

இதே முறையில்தான், மற்ற எல்லா காய்கறிகளும் இரசாயணத்தில் ஜீவிக்கின்றன. விவசாயிக்கு போட்ட முதல் தேற வேண்டுமானால், பூச்சிமருந்தும், இரசாயண உரமும் போட்டே ஆகனும். இவையெல்லாம் எங்கே போகின்றன? நம் வயிற்றிற்குள்தான். அவை தன் வேலை யை  நோயாக  காட்டுகின்றன.

நீங்கள் எல்லாம் உடலுக்கு நல்லது என வாங்கி விழுங்கி வைக்கிறீர்களே, நேந்திரம் பழம், செவ்வாழை போன்றவை! அவைகளுக்கு நாங்கள் அள்ளி வைக்கும் இரசாயணங்களையும், பூச்சி மருந்துகளையும் பார்த்தால் என்ன சொல்வீர்கள்? அப்படி இரசாயணங்களை கொட்டாவிட்டால், ஒன்றும் விளையாது. அந்த ரசாயணங்களைத்தான் நீங்கள் தின்கிறீர்கள். நாங்களும் தின்கிறோம். வியாதி வராமல், ஆரோக்கியமா வரும்?

‘ஆர்கானிக்’ பழம் என சிலவற்றைச் சொல்கிறார்களே?

மையமாக சிரித்து வைத்தார்... என்ன பொருள் என விளங்கவில்லை.

‘சார்... அந்த காலத்திலேயும் பூச்சி இருந்ததுதான்.. ஆனால், பூச்சியை சாப்பிட வண்டுகளும், தவளைகளும், சில சிகப்பு எறுப்புகளும் வரும். இதனால் பூச்சி கட்டுக்குள் இருந்தது. 

இந்த வண்டுகளையும் தவளைகளையும் சாப்பிட பாம்பு இருக்கும். ஒரு பேலன்ஸ் இருந்தது. ஆனால், இப்போ நாம்ப, கடுமையான விஷங்களைத் தெளித்து, பூச்சிகளை மட்டுமா ஒழித்தோம்? அதைச் சாப்பிடும், தவளை,வண்டு, பிற பறவைகள் என எல்லாவற்றையும் கொன்றுவிட்டோமே? இதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம் சார்.. புலி வாலைப் பிடித்த கதைதான். மண் மலடாக்கி வெகு வருடங்களாகிவிட்டன சார். 

கிரீஷ் கேஷுவலாகச் சொல்லிவிட்டார். அவரது போச்சின் தாக்கம் என்னைவிட்டு நீங்கவில்லை. 

“நம்மாழ்வார்கள்” கிராமத்திற்கு ஒன்றாக அவதாரம் எடுத்து வந்தால் சாத்தியமாகுமா?

சில குறிப்புகளைத் தரலாம் என நினைகிறேன். இரசாயணங்கள் கலந்த காய்-கனிகளை தவிர்க்க இயலும் எனத் தோன்றவில்லை. ஆனாலும், எல்லா காய்கறிகளையும் கல்லுப்பு-மஞ்சள் தூள்’ கலந்த நீரில் அரை மணி நேரம் வைத்திருந்து பின் பலமுறை கழுவி சாப்பிடுங்கள்.

இயல்பான அளவிற்கு மேலான சைசில் விளையும் காய்-கனிகள் பக்கம் போகாதீர்கள். ஒரு பப்பாளி, பூசணி சைசில் இருந்தால் விலகுங்கள். விதையில்லாத பழங்கள் வேண்டாம். விதையில்லா  பப்பாளி, விதையில்லா திராட்சை போன்றவை. 





இரண்டு அடிக்கு இருக்கும் நேந்திரம் பழம் வேண்டாம். பூவன் போதும். ஒரு முழம் இருக்கும் பாகற்காய், சட்டி போல இருக்கும் கத்தரி, வெகு நீளமான வெண்டை எல்லாமே அபாயம் போல் இருக்கிறது. வெள்ளரியைக்கூட, கழுவி , பின்  தோல் சீவிச் சாப்பிடுவது நல்லது. கூடுமானவரை கோஸ், காலிஃப்ளவர், குடை மிளகாய் பக்கம் போகாமல் இருங்கள். இவற்றில் பூச்சி கொல்லிகளின் தாக்கம் அதிகம். பிறகென்ன செய்வது? கூடுமானவரை முயற்சிக்கலாம் அவ்வளவே!

மெழுகு தோய்த்த ஆப்பிளில்தான் சத்து என்றில்லை.. நம் ஊர் நெல்லிக்காயிலும், கொய்யாவிலும், பூவனிலும் நிகரான சத்து உண்டு. 

தேங்காய் கூடாது, நெய் கூடாது என்பது பொய்ப்பிரச்சாரம். உணவில் பயமின்றிச் சேர்த்துக் கொள்ளலாம். 

பாலின் குணம் வேறு-மோரின் குணம் வேறு-நெய்யின் குணம் வேறு. ஆயுர்வேதாவில் பல மருந்துகள் நெய்யின் அடிப்படையில் ஆனவை.

வெள்ளைச் சர்க்கரை மகா கெடுதி தான். ஆனால் அதற்கு மாற்றாக இருக்கும் வெல்லத்தில் சேர்க்கும் இரசாயணங்களுக்கு ஏதேனும் ‘செக்’ உண்டா? அந்த காலத்தில், வெல்லத்தை உடைத்து வாயில் போட்டால், பாகு போல இருக்கும், இப்போ வாயில் போட்டால் நாக்கு உரிந்துவிடும் போலிருக்கிறது!  அவ்வளவு ரசாயணம்.

ஆர்கானிக் என்ற பெயரைச் சொன்னால் விற்றுவிடுகிறது என்பதால் அதிலும் கலப்படம் வரும் அபாயம் இருக்கிறது. வியாபாரிகளுக்கு வேண்டியது பணம் தானே? எச்சரிக்கை..

1 comment: