Saturday, October 1, 2011

பணம்

எப்படியும் நீ வந்துடுவேன்னு தெரியும். அதான் இந்த பஸ் ஸ்டாண்ட் பக்கம் உலாத்திக் கிட்டிருக்கேன்.  இப்பக்கூட இல்லேன்னா அப்புறம் எப்படி?


உன்னைப் பாத்து எவ்ளோ நாளாச்சு? எம்மேல உனக்கு என்னப்பா அப்படி கோவம்? நானும் நீ வருவே..வருவேன்னு ரொம்ப நாளா காத்துக் கிட்டி டுக்கேன்... இப்பத்தான்உனக்கு நேரம் ஒழிஞ்சுது.  என்ன பண்ணுவே பாவம்.!


ஒரு 10 பத்து வருஷம் இருக்குமா உன்னைப் பாத்து?  லேசா தொப்பை போட்டிருக்கே..இருந்தாலும் பரவாயில்லை. . உனக்கு நல்லாத்தான் இருக்கு.  உன் பொண்டாட்டி - புள்ளைங்க நல்லாயிருக்காங்களா?..  ஓ.. அவளையும் அழைச்சுக்கிட்டுத்தான் வந்திருக்கியா?  வயசாயிடுச் சில்லியா? அதான் கண்ணு சரியா தெரியலை.  புள்ளைங்களை அழைச்சிக் கிட்டு வந்து, இந்த கிழவன் கண்ணுல கொஞ்சம் காட்டியிருக் கலாம்.  பரவாயில்லை, ஏதாவது பரீட்சையா இருக்கும்.. நீ செஞ்சா ஏதாவது காரணம் இருக்கும்.


உனக்கு எம்மேல கோவமாத்தன் இருக்கும். நான் எவ்வளவோ சொன்னேன்.. பாழாப்போன கிழவிதான் கேக்கல...  விடாம தொன தொனத்தாள்.. லெட்டர் போடு. லெட்டர் போடுன்னு. நாம எவ்ளவோ செஞ்சிருகோம்.. இது கூட செய்ய மாட்டானான்னு சொன்னாள்..


எனக்கு புத்தி இருந்திருக்கனும்.. அவ பேச்சக் கேட்டுகிட்டு, உனக்கு கடுதாசி போட்டுட்டேன். அந்த கடுதாசிய பாத்து உனக்கு கோவமோ என்னவோ?


இந்த காலத்தில பெத்த பையனே, அப்பனுக்கு ஒன்னும் செய்ய மாட்டேங்கறான்.. உங்கிட்ட போய் இந்த புத்திகெட்ட பொம்பள எதிர்பாத்தா...  வெவரம் கெட்டவ.. விட்டுத் தள்ளு..


எல்லாம் இப்பத்தான் நடந்தாப்பல இருக்கு.. உன்னோட அம்மா,  சாவும் போது உன்னப் புடிச்சி எங்கையில் கொடுத்தா.. கஞ்சியோ கூழோ.. நீ குடிக்கிறதை இவனுக்கும் ஊத்துன்னுட்டு போய்ச் சேந்தா...  அப்ப உனக்கு என்ன, மிஞ்சி மிஞ்சிப் போனா நாலு வயசிருக்குமா?..  இத்தனைக்கும் உன் ஆத்தா எனக்கு கிட்டத்தில இருக்கும் சொந்தம் இல்லை.. என்னோட அப்பா வழியில தூரத்து சொந்தம்.   நானே சோத்துக்கு அல்லாடுற ஆளு..  உன் ஆத்தா என்னை அண்டி வந்தவ..  சரி போன்னு நானும் உன்னோட ஆத்தாவுக்கு வாக்கு கொடுத்துட்டேன்.  


எனக்கு புள்ளை குட்டி ஒன்னும் இல்லே...  கொளந்தைங்க இல்லாங்காட்டி என்ன கெட்டு போச்சு.. நாம என்ன இந்திரா காந்தியா?  நாமபுள்ளிங்க,  நாட்டை ஆள முடியாம போச்சேன்னு வெசனப்பட? எம்மாரியே, எம்புள்ளிங்களும் சோத்துக்கு அல்லாட வேணா முண்ணு, ஆண்டவன் எனக்கு புள்ள வரம் தரல.


எம் பொண்டாட்டி தான் உனக்கு அம்மாவ இருந்து வளத்தா..  சொந்த புள்ள தான் சோறு போடுமா.. இதும் ஏம்புள்ளதான்னு வளத்தா...


இந்த ஊர் பள்ளிக்கோடத்திலதான் உன்னை சேத்தோம்.  நீ எங்கள மாதிரி இல்லாம, நல்லா படிச்சே..  எனக்கு என்ன தெரியும்?  வத்தியார் சொன்னார்.  நீ புத்திசாலி பையனாம்.  நல்லா வருவான்னு சொன்னார்.  எங்களால முடிஞ்சதை செஞ்சோம்..  அங்க இங்க கடன வாங்கி படிக்க வச்சோம்.   ஊர்ல இன்னமும் நல்ல மனுஷங்க இருக்காங்கள்ள..  அவிங்களும் ஒதவி செஞ்சாங்க..    என்னவோ பல பேர் புன்ணியத்துல நீயும் நல்லா படிச்சே..  என்னவோ இஞ்சினியர் படிப்பாமே.. எங்களுக்குப் புரியல..  நீ என்னவோ சொன்னே..  நீ நல்லா இருடா ராசான்னுதான் எங்களால சொல்ல முடிஞ்சுது.  


அதுவரிக்கும் நீ ரொம்ம நல்ல பையனாத்தான் இருந்தே..  ஒங்களையெல்லம் பட்டணத்துக்கு அழச்சிக்கிட்டு போயிடறேன்.. ஒழைச்சது போதும்.  நீ இனிமே எங்கூட  வந்துடுன்னு சொன்னே..


உனக்கு வேலை கெடச்சு வெள்ளையும் சொள்ளையும் உன்னப் பாக்கயில எப்படி இருந்திச்சு தெரியுமா எங்களுக்கு?  ஊரெல்லாம் சொல்லி சொல்லி மாஞ்சு போனோம்.  எம்பையன் இனிமே கூலிக்கெல்லாம் போவேணாம்ன்னு சொல்லிட்டான்.. பட்டணம் போவப்போறோம்னு சொல்லிக்கிட்டு,  பேத்தனமா திரிஞ்சோம்.


அப்பத்தான் அந்த பொண்ணை, அதான் உன் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு வந்தே!  இவளைத்தான் கட்டிக்கப்போட்றேன்னு சொன்னே!  என்னா சொல்றதுன்னே தெரில..
என்னத்த சொல்றது?  புடிச்சிருந்தா கட்டிக்கோன்னு சொன்னோம்.  


அந்த பொன்ணுக்குதான் எங்கள கண்டா பிடிக்கல..  பட்டணுத்து பொண்ணு.. இந்த குடிச வூட்டுக்குள்ளாற கூட வரல...


"என்னடா சொல்லுது" ன்னு கேட்டப்ப கூட, நீ அப்ப ஒன்னும் சொல்லல..  அவ போனாவுட்டுத்தான் சொன்னே!


"அப்பா.. அவளுக்கு இந்த இடம், நீங்க, இந்த குடிசை, எதுமே  புடிக்கலையாம். என்ன கட்டிக்கிட்டு இங்கல்லாம் வரமாட்டாளாம்னனு"  சொன்னே..


அவ பாட்டுக்கு விர்ர்ன்னு புறப்பட்டு போய்ட்டா... நீ அவ பின்னாடியே ஓடுனே.. அதுக்கப்புறம் நீ ஒரு மூணு தடவை வந்திருப்பியா?  


ஊர்க்காரவுங்க சொல்லித்தான் தெரிஞ்சுது.. நீ அந்த பொண்ண கட்டிக் கிட்டியாம்.


இந்த கெழவிதான் சொல்லி சொல்லி ஆத்துப் போனா..  ஒனக்கு கல்யாணம் கட்டி பாக்கனும், புள்ளிங்களை வளக்கனும்னு சொல்லிக் கிட்டிருந்தா..  கிரகம் இப்படி ஆயிப்போச்சு.


கொஞ்ச நாள் பித்து புடிச்சாப்புல இருந்திச்சு...  ஆமா.. புள்ளயும் பொறக்காம, நீயும் எங்கிட்ட வளரலன்னா என்ன பண்ணுவோம்? அத மாதரின்னு நெனச்சுக்குவோம்னு வுட்டுட்டேன்.


நாங்க லெட்டர் போட்டாக்கூட பதில் போட மாட்டே..  செத்தேனா, இருக்கானான்னு, ஒரு தடவ கூட எட்டி பாக்கல பாத்தியா நீ?  ஒனக்கு ரெண்டு கொளந்தைங்க பொறந்துச் சாமே?  கண்ணுல காட்டினியா?.


இரு.. இரு.. உம் பொண்டாட்டி என்னவோ சொல்றா பாரு!. அந்த ஹோட்டலைக் காட்டி சாப்டுட்டு, வூட்டுக்கு போவலாங்கறா.. பாரு, கேளு...


என்னது?  சாப்டுட்டு போனா நல்லா இருக்காதுங்கிறியா?


உடனே அவ கோச்சுக்கறா பாரு.. சாப்டுட்டு வந்தா என்ன கெட்டுப் போச்சு?  உன்னை யாரு கேக்கப் போறாங்க? பாவம் அவளுக்கு பசி தாங்காதோ என்னவோ?  ரெண்டு பேரும் உள்ள போறீங்களா?   போய் சாப்ட்டுட்டு  வாங்க.. நான் வெளியே இருக்கேன்.


அதுகுள்ள டிபன் ஆச்சா?  இந்த கடயில டிபன் சுமாராத்தான் இருக்கும்.  அவசரத்து பரவாயில்ல.  வா.. வூட்டுக்கு போவலாம்.


ஆங்... நம்ம கதையை  எங்க வுட்டேன்?   நீ கடுதாசு கூட போடறதில்ல.. அதுல தானே வுட்டேன்?


இவதான் ஒரு கூறு கெட்டவ..  நான் நேரா உன்னோட வூட்டுக்கு போறேன்னு கிளம்பினா.   நான் சொன்னா கூட கேக்கல..  பட்டணத்துல யாரப் பாத்தாளோ எப்படி கண்டுபுடிச்சாளே தெரில.  உன்னோட வூட்டை புடிச்சுட்டா.   ஆனா,   இங்கல்லாம் நீ ஏன் வந்தே, மானம் போவுதுன்னு திட்டிவுட்டுட்டீங்களாமே?  இவளுக்கு வேணும்.. மனுசாளுக்கு ரோசம் வேணாம்?  அதுவரிக்கும் பரவாயில்ல.. நீ குடுத்த ஆயிரம் ரூவாய உம்மூஞ்சிலே வுட்டுக் கடாசிட்டு வந்திருக்கா..    வாங்கி கிட்டு வராம போனாளே?


அதுக்கப்புரம்  ஆச்சு.. ரொம்ப வருசம்.  கெழவிதான் அப்பப்ப பொலம்புவா.  அடச்சீ.. கம்முனு கெடன்னு மெரட்டுவேன்.


ஆனா.  எத்தினி நாளைக்கு தான் இந்த ஒடம்பு வேல செய்யும்?  பத்து நாளக்கு முன்னாடி இந்த கிழவனுக்கு நெஞ்சு வலி வந்திருச்சு.. கொஞ்சம் பெருங்காயத்த போட்டு, மோரக் குடிச்சா சரியாப் பூடும்.  இந்த கிழவி சும்மா இருக்க மாட்டாம டாக்டருகிட்ட இட்டுகினு போனா.


என்னவோ நெஞ்சுல ஆபரேஷன் பன்னனுமா.  அடப்பு இருக்காம்.  ஒரு லட்ச ரூவாக்கு மேலா செலவாகுமாம்.    சொன்னாரு டாக்டரு.


அம்மாடி.. லச்ச ரூவாய்க்கு எங்க போறது?  அடிபோடின்னு வூட்டுக்கு வந்துட்டேன். லச்ச ரூவா செலவழிச்சு, உசிரோடு இருந்து என்னத்த  கிழிக்கப் போறேன்?


இந்த கிழவிதான் தொன தொனத்தாள்.. புள்ளக்கு ஒரு கடுதாசு போடுன்னு..  நான் முன்ன சொன்ன மாதிரி புத்தி கெட்டு போயி ஒனக்கு லெட்டர் போட்டுட்டேன்.. அப்ப கூட நான் உங்கிட்ட காசு கேக்கல..  ஒடம்பு சொகமில்லேன்னுதான் எழுதினேன்.


நீ பதிலும் போடல.. வந்தும் பாக்கல..


அப்புறம் யாரோ சொல்லி இப்ப வந்திருக்கே. விஷயம் கேள்விப்பட்டு வந்திருக்கே!    எப்படியும் நீ வந்து டுவேன்னு தெரியும். அதான் இந்த பஸ் ஸ்டாண்ட் பக்கம் உலாத்திக் கிட்டிருக்கேன்.  இப்பக்கூட இல்லேன்னா அப்புறம் எப்படி?




வா.  வா.. வூடு வந்துடுச்சு.   என்னிய வூட்டு முன்னால தான் கெடத்தி வச்சுருக்காங்க..


அட..  மால கூட வாங்கிட்டு வந்திருக்கியா?  நான் பாக்கலியே?  போடு.. என் ஒடம்பு மேலேயே போடு...


டிபன் கூட சாப்டாச்சு...  இன்னும் ஒரு மணி நேரத்தில என்னிய எடுத்துடுவாங்க..  அதுவரிக்கும் இருந்துட்டு, பொறவு போவலாம்.. என்ன இருக்கியா?











No comments:

Post a Comment