Thursday, October 6, 2011

ஏன் தெலுங்கானா-?

தனித் தெலுங்கானா மாநிலம் கோரி, போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன.

இந்த போராட்டம் தற்போது திரு. சந்திரசேகர ராவினால் நடத்தப் பட்டுக் கொண்டிருந்தாலும், இக் கோரிக்கையின் பின்னால் வலுவான சரித்திர காரணங்கள் இருக்கின்றன.

தற்போதைய ஆந்திரா என்பது, தெலுங்கானா, ராயலசீமா,  கடற்கரை ஆந்திரா என்ற மூன்று பகுதிகளை உள்ள டக்கியது. 

இந்த மூன்று பகுதிகளில், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால், “தெலுங்கானாஎன்று அழைக்கப்படும் பிரதேசம், எப்போதும் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததில்லை.

‘ராயலசீமா, ‘கடற்கரை ஆந்திரா பகுதிகள் மட்டுமே பிரிட்டிஷாரின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டு, “மெட்ராஸ் பிரசிடென்ஸி என்று அழைக்கப்பட்ட “சென்னை ராஜதானி” மாநிலத்தில் இணைக்கப் பட்டிருந்தன. (இந்த சென்னை ராஜதானியில் தமிழகமும் உண்டு)

தெலுங்கானா பகுதி,  ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. இந்தியா 1947-ல்,  விடுதலை அடைந்த பொழுது ஹைதராபாத் நிஜாம், இந்தியாவுடன் இணைய விரும்பவில்லை. பாகிஸ்தானுடனும் இணைய விரும்ப வில்லை. மாறாக தனியான நாடாகவே இருக்க விரும்பினார். இன்னும் சொல்லப் போனால், இந்தியப் பகுதியிலிருந்து ஒரு பாதுகாப்பான வழியினைக் கூட கோரினார்.  ஆனால் இந்த சமஸ்த்தானத்து மக்கள், இந்தியாவுடன் இணைவதையே விரும்பினர்.

இந்தியாவுடன் இணைய மறுத்து, சண்டித்தனம் செய்த, இந்த ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானத்தை, இந்திய ராணுவம்,  “ஆபரேஷன் போலோ மூலம் இந்தியாவுடன் இணைத்தது.  இது நடந்தது செப்டம்பர் 17, 1948 –ல். (இது போன்று பல இடங்கள் 1947-ல் இந்தியாவுடன் இணைக்கப் படவில்லை! கோவா, நமது அண்டைப் பகுதி புதுவை-ஆகியன உதாரணங்கள. அத்தகைய பகுதிகள் யாவும் நமது இராணுவத்தாலேயே கைப்பற்றபபட்டது) 

அப்போது தெலுங்கு பேசும்  மாவட்டங்களில், 9 தெலுங்கானாவிலும்,  12 சென்னை பிரெசிடென்ஸியிலும் இருந்தன. அதேபோல தெலுங்கு பேசும் ‘ஏனாம் பகுதி பிரெஞ்சு ஆதிக்கதில் இருந்த்து.

இந்தியாவுடன் தெலுங்கானா பகுதி (நிஜாம் ஆண்ட பகுதி)
இணைக்கப் பட்ட பொழுது, தெலுங்கானவுக்கு தனி மானில அந்தஸ்த்து அளிக்கப்படும் என அனைவராலும் உறுதி அளிக்கப் பட்டது. இதே போல "தனிமாநில" வாக்குறுதி பஞ்சாபிற்கும் வழங்கப்பட்டு, நெடிய போராட்டத் திற்குப் பின் தனி மாநிலமாக மாற்றப்பட்டது.(ஒருவர் 70 நாட்கள் உண்ணாவிரதமிருந்து இறந்தார்)  அவை பஞ்சாப்-ஹரியானா.  இப்பொழுதும், இரண்டு மாநிலத் திற்கும் பொதுவான  தலைநகர் சண்டிகர். 
ஆனால் தெலுங்கானா மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப் படவே இல்லை.


பஞ்சாபில் பெரும்பகுதி ‘சீக்கியர்கள் இருந்ததாலும்(மொழி வேறு-வேறு), அவர்கள் விடாமல் போராடியதாலும் இது சாத்தியமாயிற்று.  


ஆனால் தெலுங்கானாவில் அப்படி ஒரு நிலைமை இல்லை. ஆந்திரம்-தெலுங்கான இருபகுதியினரும் தெலுங்கு பேசுபவர்களே!  மேலும், டிசம்பர், 1953 ல், மாநில சீரமைப்பு கமிஷன், தனித் “தெலுங்கானா மாநிலம் தேவையில்லை என தீர்மாணித்தது. ஏனெனில் அப்போது ‘மொழிவாரி மாநிலம் தான் ஆதாரமான விஷயமாக இருந்த்து. ஆனால் திரு. ஜவஹர்லால் நேரு உட்பட,  பல அகில இந்திய தலைவர்களும், ஒன்றுபட்ட அந்திராவிற்கு மன மொப்பி ஆதரவளிக்கவில்லை.
அச்சமயத்தில், தெலுங்கானா,  பொருளாதார ரீதியாஆந்திராவைவிட, பின் தங்கியிருந்தது. தெலுங்கானா பகுதி மக்கள், கல்வித்துறையில் முன்னேறியுள்ள ஆந்திரா பகுதியனர்,    (பிரிட்டனின் ஆளுகையின் கீழ் இருந்த்தால்) தங்களது வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்வார்களோ என அஞ்சினர் 


மேலும் விவசாயத்துறையில், கிருஷ்ணா-கோதாவரி நதிகளின் பலனை, ஆந்திரர்கள் மட்டுமே எடுத்துக் கொண்டுவிடுவார்களோ என பயந்தனர்.

(வாரங்கல், அடிலாபாத், கம்மம், மகபூப் நகர், நலகொண்டா, ரங்காரெட்டி மாவட்டம், கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், ஐதராபாத் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது தெலுங்கானா)


அதனால், மானில சீரமைப்பு கமிஷன், ஒரு தனி மாநிலமாக 'தெலுங்கானா இருக்கலாம் என்றும் (1961 பொதுத் தேர்தலுக்குப் பின்), தெலுங்கான மாநில சட்ட சபையில் பெரும்பகுதி உறுப்பி னர்கள் ஒன்று பட்ட ஆந்திராவே தேவை என தீர்மாணமியற்றி்னால் அத்தகைய ஒன்று பட்ட ஆந்திராவை உருவாக்கலாம் என்ற கருத்தினை முன் வைத்த்து.
அபோதைய ஆந்திர முதல்வர் திரு. ராமகிருஷ்ன ராவ் அவர்கள், பெரும்பான்மையான  தெலுங்கான பகுதி மக்கள், இணைப்பிற்கு ஆதரவாக இல்லையென்றும், ஆனால் தாம் இணைப்பினையே ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். 


மேலும் நவம்பர்-25, 1955 அன்று தெலுங்கான பகுதி மக்களின் அனைத்து உரிமைகளும்  ‘பாதுகாக்கப்படும் என்று மாநில சட்ட சபையில் தீர்மாணம் நிறைவேற்றினார்.


அத்தீர்மானத்தின் படி, தெலுங்கான பகுதி சிறப்பு கவனம் கொள்ளும் பகுதியாகவும், அப்பகுதியின் ‘வளர்ச்சிக்கு தனிக் கவனம் கொள்ளப்படும் எனவும், அவர்களக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஒதுக்கீடு மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் தீர்மாணிக்கப்பட்டது. 


அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை, ஆந்திர காங்கிரஸ் ‘தாஜா செய்து,  ஒன்று பட்ட ஆந்திராவிற்கு பிப்ரவரி-20, 1956 அன்று, தெலுங்கானா தலைவர்களுக்கும், ஆந்திர தலைவர்கள் ஒப்பந்தம் போட்டனர்.  இந்த ஒப்பந்த்த்தின் அடிப்படையில், ஒன்று 
பட்ட ஆந்திரா நவம்பர்-1, 1956-ல் சட்ட பூர்வமக அமைக்கப் பட்டது. 
ஆனால் நிலைமை முழுவதும் சரியாக வில்லை. ஒப்பந்தம் தலைவர்களுக்குள் ஏற்பட்ட்தே ஒழிய கனிசமான மக்கள் ‘தனித் 
தெலுங்கானா கனவை மறக்கவில்லை.  தாங்கள் ‘வஞ்சிக்ப்பட்ட தாகவே உணர்ந்தனர். 


இதன் காரணமாக, டிசம்பர் 1968-ல், தற்போதும் போராட்டத்தில் 
‘துடிப்பாக இருக்கும், ஹைதராபாத்- உஸ்மானியா பல்கலைக் கழக மானவர்கள், வேலை வாய்ப்புகளில் தெலுங்கானா பகுதி மக்கள் ஏமாற்றப்படுவதாக ஒரு பேரணியினை நடத்தினர்.  ஆசிரியர்களும் இந்த பேரணிக்கு ஆதரவளித்தனர்.  போராட்டம், பிற தெலுங்கானா 
பகுதிகளுக்கும் பரவியது. 


1972 வரை நீடித்த இப்போராட்ட்த்தினை, காங்கிரஸ், ‘தன் வழியில் தீர்வு கண்ட்து!  அதாவது போராட்ட்த்தில் ‘தீவீரமாய் இருந்த “தெலுங்கான பிரஜா சமிதிகட்சியினை காங்கிரஸ் தன்னுடன் ‘இணைத்துக் கொண்ட்து.

1973-ல் தெலுங்கான பகுதிக்கு அளிக்கப் பட்டிருந்த சலுகைகளை (mulki rules) எதிர்த்து, ஆந்திர பகுதிகளில் ‘ஜெய் ஆந்திரா போராட்டம் துவங்கியது.  இதனால் இந்திய அரசு,  தெலுங்கானா தலைவர்களுடன் போட்டிருந்த 'ஜெண்டில்மேன்' அக்ரிமென்டினை தளர்த்தியது.  அதற்கு பதிலாக ஆறு பாயின்ட்கள்  ஃபார்முலாவினை முன் வைத்த்து 
(http://en.wikipedia.org/wiki/Telangana_movement#Six-Point_Formula_of_1973)
இதன் பின் நடந்தவை யாவும் ‘அரசியல் சித்து விளையாட்டுக்களே!.  பதவியினைப் பிடிப்பதற்காக, எப்படி வேண்டுமானலும் பேசி,  மக்களின்-மாணவர்களின், உணர்ச்சிகளை தூண்டிவிட்டு-ஓட்டு வேட்டையாடி காசு பார்க்கும் நமது அரசியல் வாதிகள், இந்த உணர்ச்சிகரமான பிரச்சினையினை விட்டு வைப்பார்களா என்ன?


பி.ஜே.பி உட்பட, பலர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் (1990) தனி தெலுங்கானாவை பெற்றுத்தருவாதாக முழங்கினர்.


இன்னிலையில், திரு. சந்திரசேகர ராவ் அவர்கள்,  2001-ல் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி  (TRS) என்னும் கட்சியினை, ஹைதராபாத்தினை தலை நகராகக் கொண்டு, தனி தெலுங்கான மாநிலம் என்ற ஒரே ஒரு திட்டதின் அடிப்படையில்  நிறுவினார். (அவருக்கு மட்டும் முதல்வர் ஆசை வரக்கூடாதா?)

2004-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் “தனித் தெலுங்கானா வழங்குவதாக வாக்குறுதி அளித்து TRS உடன் தேர்தல் கூட்டணி அமைத்து வெற்றி கண்டது.  மாநிலத்திலும், மத்தியிலும்(கூட்டணி) காங்கிரஸே வென்றது! மத்திய கூட்டணி அரசில் கூட,  TRS  பங்கேற்றது!
2008-ல் தெலுங்கானா கோரிக்கையை நிறைவேற்றித தராத காங்கி ரஸை கண்டித்து TRS  கூட்டணை அரசிலிருந்து வெளியேறியது.
TRS மட்டுமல்ல, தெலுகு தேசம், காங்கிரஸ், பி.ஜே.பி, சிரஞ்சீவியினுடைய பிரஜா ராஜ்யம் என பலரும் தெலுங்கானாவை ஆதரித்தனர்.
2009-ல் திரு. சந்திரசேகர ராவ், தனித்தெலுங்கான கோரி ‘சாகும் வரை உண்ணாவிரதத்தினை துவக்கினார். மானவர்கள் (குறிப்பாக உஸ்மானியா பல்கலைகழகம்), அரசு ஊழியர்கள என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். 2009-டிசம்பரில் நடைபெற்ற அனைத்துகட்சி கூட்டம் ‘தனித் தெலுங்கானா தேவை என ஒருமனதாக்க் கூறியது.
இந்த சமயத்தில் தான் காட்சிக்கு வந்தார் நமது ‘கதாநாயகன் திருவாளர் ப.சிதம்பரம் அவர்கள்.  டிசம்பர் ஒன்பதாம் தேதி தனித்தெலுங்கானா அமைப்பதற்கான பணிகளை பிராசஸ் செய்வதாகவும், மாநில அதற்கான தீர்மாணத்தினை கொணர ஆவண செய்வதாகவும் வாக்களித்தார்.  KCR-ம் 11  நாட்கள் நட்த்திய உண்ணாவிரதத்தை முடித்தார். தெலுங்கான மக்கள் “வெற்றி, வெற்றி என முழங்கினார்.
ஆனால், உடனே ஆரம்பித்தது இன்னொரு பிரச்சினை!  தெலுங்கானாவை பிரிக்க்க் கூடாது; ஒன்று பட்ட ஆந்திரமே வேண்டும் எனக் கோரி, கடற்கரை ஆந்திரா, ராயலசீமா மக்கள் வீதிக்கு வந்தனர்.
மத்திய அரசுக்கு பல்ட்டி அடிக்க எவரேனும் கற்றுக் கொடுக்க வெண்டுமா என்ன?  அனைத்து கட்சிகளுக்கிடையே “ஒரு மித்த கருத்து ஏற்படாதவரை தெலுங்கானா பிரச்சினையின் பேரில் ஏதும் செய்ய மாட்டோம் என அறிவித்தனர்.
உடனே, தெலுங்கான பகுதியில், அனைத்துக் கட்சிகளின் சார்பாக கூட்டி நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்பட்டு பேரணிகளும், ஸ்டிரைக்குகளும், உண்ணா விரதங்களும்  ஆரம்பித்தன.
“எப்போதுதான் தெலுங்கான அமைக்கப்படும் என மத்திய அரசின் சட்டையைப் பிடித்து கேட்டனர்.
உடனே மத்திய அரசு, பிரச்சினைகளுக்கு, 31/12/2010 க்குள், தீர்வு சொல்லச் சொல்லி, “ஸ்ரீகிருஷ்னாகமிட்டி ஒன்றைப் போட்டது. இந்த கமிட்டி ஆறு வகையான தீர்வுகளை சொல்லியது. ஆறு வகையான தீர்வுகளில் ஒன்றான ‘தனித் தெலுங்கானாவை சிக்கென  பிடித்துக் கொண்டார் சந்திரசேகர ராவ். ஹைதராபாத்தினை தலை நகராகக் கொண்டு தெலுங்கானவை  அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடியை உண்டாக்கினார்.
இந்த ஸ்ரீ கிருஷ்னா கமிட்டி, தனது ரிப்போர்டில், ‘எட்டாவது அத்தியாயம் ரகசியமானது என்று சொல்லி, மத்திய அரசுக்கு அளித்தது.  ஆனால், மார்ச்-23, 2011 அன்று  நீதிபதி நரசிம்ம ரெட்டி அவர்கள், இந்த எட்டாவது அத்தியாயத்தினை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். 
இந்த எட்டாவது அத்தியாயம் என்பது “எப்படியெல்லாம் தனித் தெலுங்கானாவுக்கு எதிராக, மீடியாக்கள் மூலம்  மக்கள் அபிப்ராயத்தை ஒருவாக்குவது?, “தெலுங்கானா அரசியல் கட்சிகளை எவ்வாறு சமாளிப்பது?,  எவ்விதமான  "சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் முறையினை கடைபிடிப்பது?என மத்திய அரசுக்கு ஆலோசனை நல்கியது. 

நீதிபதி நரசிம்ம ரெட்டி அவர்கள், ‘ஸ்ரீ கிருஷ்னா கமிட்டிதனக்கு அளிக்கப்பட்ட ரெஃப்ரன்ஸை தாண்டி செயல்பட்டுள்ளது எனவும் (The Committee travelled beyond the terms of reference in its endeavour to persuade the Union of India not to accede to the demand for Telangana"), இந்த கமிட்டியின் உபதேசங்கள் ஜன நாயக நடைமுறைக்கு விடுத்த எச்சரிக்கை (The maneuver suggested by the Committee in its secret supplementary note poses an open challenge, if not threat, to the very system of democracy.) எனவும் தீர்ப்பளித்தார்.

அதன்பின்:

17/02/2011:  16-நாட்கள் ஒத்தழையாமை இயக்கம் துவக்கம்; 8 பில்லியன் நஷ்டம்.

2/11 & 3/11:  மானில சட்ட சபை புறக்கனிப்பு.  பார்லிமென்ட் ஒத்திவைப்பு.
மார்ச்-2011: ஹைதராபாத்தில் லட்சக் கணக்கில் மக்கள் பேரணி. வன்முறை வெறியாட்டம்.

ஜூலை 2011: தெலுங்கான பகுதியைச் சார்ந்த 118 MLA ளில், 100 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். 17 M.P க்களில் 13 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.

செப்டம்பர் 13 முதல்: வேலை நிறுத்தம்,ரயில்கள் மறிப்பு, பயணிகள் பரிதவிப்பு, அரசு ஊழியர்கள்  வேலை புறக்கனிப்பு, நிலக்கரி சுரங்கங்களில் வேலை நிறுத்தம்.  தமிழகம் உட்பட பல தென் மாநிலங்களில் மின் தடை. தெலுங்கான பகுதியில்  நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்தது. வெளி மாநில பேருந்துகள் தெலுங்கானாவிற்குள் நுழைய தடை என அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது.

இந்த சூழ் நிலையில்தான் நமது நிதி மந்திரி ‘திரு பிரனாப்குமார் முகர்ஜிஅவர்கள், இந்த விஷயம் ‘உணர்ச்சிகரமானது என்றும், கடந்த 50 ஆண்டுகளாக இருந்துவரும் பிரச்சினை என்றும், இதற்கு ‘குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்வு காண்பது கடினம் என்றும், தனித் தெலுங்கானாவை ஏற்றுக் கொண்டால், இது போன்ற கோரிக்கைகள் நாடெங்கும் முளைக்கும் என்றும்(தனித் தென் தமிழ் நாடு?), இது குறித்து, மேலும் விவாதங்கள் தேவை எனவும் ‘புதிதாகக் கண்டுபிடித்து திருவாய மலர்ந்துள்ளார்.

இது போதாதென்று, சட்டம் ஒழுங்கெல்லாம் கட்டுக்குள் இருப்ப தாகவும்(?) கூறி வைத்தார்.

இது போதாதா? பிரனாப்பின் இந்த அறிக்கை, ஏற்கனவே கள் குடித்திருக்கும் TRS- க்கு தேளும் கொட்டியது போலாயிற்று. விஜய சாந்தி, காங்கிரஸை ‘ஹுசைனி சாகர் ஏரிக்குள் போட்டு மூழ்கடிப்பேன் என்கிறார்.


கமிட்டி போட்டு, இழுத்து அடிப்பதும், முடிவே எடுக்காமல் ஆண்டுக் கணக்கில்-பிரச்சினையை தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பதும் , எதிரிகளை “அரசியல் ரீதியாக “ வளைத்துப் போடுவது காங்கிரஸுக்கு கைவந்த கலை.  இப்போது என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

இப்பகுதி பற்றி எரிகிறது! மோகன்சிங் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை?  இப்படி ஒரு அரசாங்கம்!

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதே?


தென் மாநிலங்களில் கடுமையான மின் வெட்டு நிலவுகிறதே?


சுரங்கப் பணிகள் முடங்கிக் கிடக்கிறதே?


ஆந்திர பகுதியைத்தாண்டி வடக்கே ரயிலில் எப்படி செல்வது?

அரசு ஊழியர்கள் எங்கனம் ‘நிர்வாகத்தினை ஸ்தம்பிக்க வைக்க உரிமை பெற்றவர்களாகிறார்கள்-அதுவும் ஒரு கட்சி-அரசியல் பிரச்சினைக்காக?

இப்படியே போனால் ‘தெலுங்கானா காவல் துறையும் ஸ்டிரைக்கில்  ஈடுபட்டால் என்னவாகும்?

அரசியல் வாதிகள் பிரச்சினகளுக்கு ஒருபோதும் தீர்வு காண ஏன் மறுக்கிறார்கள்?

-என்றெல்லாம் கவலைப் படுகிறீர்களா? 

இது தான் இந்தியா.  நமக்கு வாய்த்த அரசும், அரசியல் கட்சிகளும் இப்படிப் பட்டவைதான்.

இவர்களை வழிக்கு கொண்டுவர வேண்டு மென்றால் அதற்கு என்ன செய்யலாம். யோசியுங்கள். 

ஒருவேளை, நாம் இம்மாதிரியான அரசாங்கங்களுக்குத்தான் தகுதியானவர்களோ என்னவோ?


5 comments:

  1. Well explained sir!
    thank you!
    please add the Facebook widget to your blog so that it would be easy for us to comment!

    ReplyDelete
  2. தெலுங்கானா பத்தின விளக்கமான பதிவுக்கு ரொம்ப நன்றி சார்!! எந்தவிதமான உணர்ச்சி கொப்பளிப்பும் இல்லாம அழகா செய்தி மாதிரி வந்த விதம் தனி அழகு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. மிக்க நன்றி நன்பரே..தங்களது பின்னூட்டம் மிகவும் உற்சாகம் அளிக்கிறது!

    ReplyDelete
  4. தனி "தென்தமிழ்நாடு" நல்ல நக்கல். மு.க முடியாமல் இருக்கின்றார். இல்லையெனில் தென்தமிழ்நாட்டின் முதல்வராகியிருப்பார் அண்ணண் அஞ்சா நெஞ்சன்

    ReplyDelete