Saturday, October 1, 2011

இல்லம்




"சுத்த நன்றி கெட்ட ஜென்மங்கள் சார்..  இவனுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்.. எப்படியெல்லாம் வளர்த்தேன்...இந்த பயலுக்கு எவ்வளவு செலவு செஞ்சிருப்பேன்... எல்லாத்தையும் க்ஷண நேரத்தில் மறந்துட்டு, பொண்டாட்டி பேச்சை கேட்டுக்கிட்டு ஆடறான் சார்...ஒரு வேளை சோத்துக்காக நான் பிச்சைக்காரனைவிட கேவலமாக அவமானப் பட வேணுமா?  இப்படியெல்லாம் அசிங்கப் படவா ஒரு மகனைப் பெத்தேன்? நான் நல்லா இருக்கும் போது எத்தினி பேருக்கு என்ன வெல்லாம் செஞ்சேன்?"    


சாம்புவிற்கு துக்கம் தாள முடியவில்லை.  


"சரி சாம்பு....   அங்கே ஒத்துப் பட்டு வரலேன்னு தானே இங்கே வந்துட்ட..  . அப்புறம் என்ன? எல்லாத்தையும் காலையில பேசிக்கலாம்... இந்த ஹோம்ல ராத்திரி பத்து மணிக்கு அப்புறம் லைட் எரியக்கூடாது... பேசாம  படு.. "


அந்த நேரம் செக்ரடரி வந்துவிட்டார்.


" சாம்பு சார்.. இந்த மாதிரி 10 மணிக்கு அப்புறம் லைட் எரிய விடக்கூடாது.. இந்த ஹோமுக்கு நீங்க புதுசு இல்லியா? ரூல்ஸ் தெரிஞ்சுக்குங்க.."


லைட்டை அனைத்துவிட்டு படுத்து விட்டார்.. சாம்பு.   கொஞ்ச நேரம்... அவரிடமிருந்து விசும்பல் வந்துகொண்டிருந்தது.  


எனக்கு தூக்கம் வர இன்னும் கொஞ்ச நேரம் பிடிக்கும்.  அதற்குள் இந்த சாம்புவின் கதையை உங்களுக்கு சொல்லி விடுகிறேன்.   நான் இருப்பது ஒரு முதியோர் இல்லத்தில்.  ரெண்டு வருஷமா நான் இங்கேதான் இருக்கேன்.  முதியோர் இல்லம் என்றால்..அனாதை விடுதி போல எல்லாம் ஃப்ரி இல்லை.  தலைக்கு, மாசம் எட்டாயிரம் ரூபாய் ஃபீஸ். 


 தங்குமிடம்..சாப்பாடு எல்லாத்துக்கும் சேத்துத்தான். லைப்ரரி இருக்கிறது. வாக்கிங் போக கொஞ்சம்  இடம் உண்டு. ஸ்பான்ஸர் புன்னியத்தில் அப்பப்போ ஹெல்த் செக்கப் நடக்கும்.  இங்கே ஒரு நூறு பேர் இருக்கோம்.  சிலர் தம்பதி சகிதமாக தங்கியிருக் கின்றனர்.  


ஒருத்தருத்தர் கதையை கேட்கனுமே!  எல்லாரும், எதாவது ஒரு சோகத்தை முதுகில் சுமந்துகொண்டுதான் இருக்கின்றனர்.  பெரும்பகுதி குடுப்பத்தினரால் புறக்கணிக்பட்டோர்.  


எனக்கு ஒரே மகள்.  ஒரு பேரன், ஒரு பேத்தி.  மனைவி போய்ச் சேர்ந்து விட்டாள். அவள் போனப்புறம் உலகத்தில் நான் மட்டும் தனித்து விடப் பட்டவன் போல் உணர்ந்தேன்.  நமது இந்(து)திய தர்மப்படி, பெண்ணைப் பெற்றவன், இரண்டாந்தரப் பிரஜையல்லவா? மகள் வீட்டில் உரிமையுடன் தங்கமுடி யாதல்லவா? எனவே வரும் பென்ஷனை இந்த ஹோமில் கொடுத்துவிட்டு இங்கே இருக்கிறேன்.  எப்போதாவது மகள் வந்து பார்த்து விட்டுப் போவாள்.


நான் முன்பு சொன்ன சாம்பு, பத்து நாளைக்கு ஒருதடவை, என்னைப் பார்க்க இங்கு வருவான்.  அவனுக்கு ஒரே பையன்.  கல்யானம் செய்துவைத்து விட்டான். இரண்டு  பேரன்கள் இங்கு வரும்போதெல்லாம் என்னைப் பற்றி விசாரிப்பதை விட, அவன் தன்னைப் பற்றி புலம்புவது தான் அதிகம். மகனும், மருமகளும் அவனைப் படுத்துகிறார்களாம்"


"வீட்டுக்கு வீடு வாசப்படி...இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது" என சும்மா 'உம்..' கொட்டி, கேட்டுக்கொண்டிருப்பதோடு சரி.


சென்ற வாரம் விஷயம் முற்றிவிட்டது போலும்.. என்ன தகறாறு என்று தெரியவில்லை.  


"நானும் இந்த ஹோமில் சேந்துக்கிறேண்டா... வீடா அது... நரகம்டா..  என்ன கெடுபிடி பண்றாள் மருமவ... டி.வி போடாதே.. ரேடியோ வக்காதே... உள்ளே படுக்காதே..வெளியே போகாதே. ஐயையோ ..  நின்னா குத்தம். நடந்தா குத்தம்.இவ காலைல செஞ்சு வச்ச சோத்தை, நாய் மாதரி ராத்திரி வரைக்கும் வச்சிருந்து திங்கனும்"    


"படுபாவி, நேத்து என்னிய வீட்ல வச்சு கதவை பூட்டி சாவியை எடுத்துகிட்டுப் போய்ட்டாடா... நான் வெளியே வரலாம்னு பாக்கும் போதுதான் வீட்டை பூட்டிகொண்டு சென்ற விஷயமே தெரியும்!    இனிமே மனுஷன் இருப்பானாடா அந்த வீட்ல.. போதும்.. போதும் நான் பட்டது.  எனக்கும் பென்ஷன் வருது.. அந்தப் பணத்தில் இங்கேயே தங்கிக்கிறேன். நீ கொஞ்சம் சொல்லுடா"


நான் சொல்றது என்ன? இந்த ஹோம்ல,யார் காசு கொடுத்தாலும் சேத்துக்குவான். அதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சி முடிவிடுத்தியா? இங்கே வந்துட்டு அப்புறம் உம்மகன் வீட்டுக்கு போனால், உங்க ரெண்டு பேர் மனசும் ஒட்டாது.  ஒருதடவைக்கு ரெண்டுதடவையா..."


"வாயை மூடுடா...செத்தாலும் சாவேனே தவிற அந்த வாசப்படியை மிதிக்க மாட்டேன்."


செக்ரடரி கிட்டே சொன்னேன்.  சாம்புவே அங்கே - இங்கே ஒடினான்.  பாங்குக்கு போணாண். பணம் பிரட்டினான்.  இண்று மாலை நாலு டிரஸ்ஸோடு, இங்கு  வந்து சேர்ந்துவிட்டான்.


இங்கு ஒரு ரூமில் இரண்டு பேர் தங்கனும்.  இவன் என்னோட ஃப்ரண்டு என்பதாலே, இந்த ரூமில் தங்கியிருந்தவரை வேறு இடத்துக்கு அனுப்பிவிட்டு, என்ரூமில் சேர்த்துக் கொண்டேன்.


வந்தபின் அவன் புலம்பியது தான், இந்த கதையின் ஆரம்பத்தில் நீங்கள் படித்தது.


சாம்புவின் பையன் 'குமரேஷை' சின்ன வயதிலிருந்தே எனக்குத் தெரியும்.  நல்ல பையன் தான்.  எப்படி இப்படி மாறினான், அப்பாவை "கொடுமைப் படுத்டும்"  அளவிற்கு! அதுவும் அவருக்கும் தன்னைவிட்டால், வேறு 
போக்கிடம் இல்லை என்று தெரிந்து கொண்டும்!  


ஒருவேளை டி.வி சீரியலில் வருவது போல 'மருகள்' கொடுமைக்காரியா?   
எதுவானல் என்ன? வந்தது வந்தாகிவிட்டது.  


ஒரு வாரத்தில் சாம்பு புதிய சூழ் நிலைக்கு சுலபமாக பழகி விட்டான்.  இந்த ஹோமின் சட்ட-திட்டங்களும், நிபந்தனைகளும் அவனை பாதித்ததாக தெரியவில்லை. மகிழ்ச்சி யாகவே காணப்பட்டான்.


ஒரு நாள் செக்ரடரி என்னை கூப்பிட்டு அனுப்பினார்.  போனால் அவர் ரூமில்..சாம்புவின் பையன் 'குமரேஷும்' அவன் மனைவி சாந்தியும்.  


 'சட்... என்ன ஆள்  இவன்?  தகப்பனை துரத்திவிட்டு..இப்ப எதுக்கு வருகிறான்' சிந்தனையுடன் அவர்களை வினாக்குறியுடன் பார்த்தேன்.


"நமஸ்காரம் அங்கிள். அப்பா சொல்லாம கொள்ளாம இங்கே வந்துட்டார்.  போன வாரம் ராமேஸ்வரம் போய்ட்டு வர்ரேன்னு சொல்லிட்டு கிளம்பிப் போனார்.  தனியா போக வேண்டாம்னு சொல்ல-சொல்ல கேட்காம.   ராமேஸ்வரத்தில் எங்க சொந்தக் காரகவுங்க இருக்காங்க.. போன் பன்னிக் கேட்டதில் அங்கே போய்ச் சேரலன்னதும் பயந்துட்டோம்.  எங்கேன்னு தேட?  என்னன்னு நினைக்க?  ஒரு வாரமா ஆளாளுக்கு தேடிகிட்டிருக்கோம்.  ரயில்வே போலிஸில் கம்ப்ளைண்ட் கூட கொடுத் 
துட்டோம். 


இன்னிக்கு என் ஃப்ரண்ட் 'சியாமளன்'  சொன்னான். 'உன் அப்பாவைப் போல-அந்த ஜாடையில் ஒருத்தர் இந்த ஹோமில் இருக்கார்' ன்னு. உடனே இங்கு ஓடி வந்தோம். இங்கே வந்திருப்பார் என தோனவே இல்லை."


எனக்கு கோபம் பீரிட, "என்னடா குமரேஷ் ... நாடகமாடுறியா...இல்ல அப்பன் இருக்கானா செத்துட்டானான்னு பாக்கவந்தீங்களா? வீட்ல இருக்கும் வரை அந்தாளைப் பாடாய்ப் படுத்தி எடுத்துவிட்டு, வெளியே தெரிஞ்சப்புறம்..அப்பனை தொரத்தி விட்டுட்டான்ற பேருக்கு பயந்துகிட்டு இங்கே வந்தியா? உன்னைப் பெத்ததுக்கு அவன் அனுபவிச்சது போதும். போய்ச் சேருங்க.. டி.வி பாக்கக்கூடாது.. ரேடியோ கிடையாது..ஒழுங்கா சோறு கிடையாது. இந்த லட்சனத்தில் வயசான ஆளை உள்ளே வச்சு பூட்டிடுப் போயிடரீங்க.. மனுசங்களா நீங்க?"


"ஐயோ..அங்கிள்.. அப்பா சொன்னதை அப்படியே நம்பிட்டீங்களா? என்னை எத்தனை நாளா உங்களுக்குத் தெரியும்?.  அப்படியெல்லாம் செய்வேனா? 


"அவருக்கு காது சரியா கேக்கலை. வாங்கிக்கொடுத்த மிஷினையும் காதில மாட்டிக்க மாட்டார்.  சாயங்கால்ம் குழந்தைகள் படிக்கிற நேரம்.. அந்த நேரத்தில் டி.வி யை பெருசா அலற விடுகிறார்.  சத்தத்தை கம்மியாக்கச் சொன்னால் கோச்சுகிறார். பகல் முழுசும் டி.வி பாக்கிறதுதானே?   சொன்னால் கோவம் வருது அவருக்கு.  வீட்டை தொறந்து போட்டுட்டு அவர் பாட்டுக்கு வெளியே போயிடரார். அதும் மணிக்கணக்கில். காலம் கெட்டுக் கிடக்கும் இந்த நாட்களில் இப்படியெல்லாம் செய்யலாமா?  அவருக்கத் தனே அபத்து? எத்தனை தடவ இத சொல்றது?  புரிஞ்சுக்கவே மாட்டேங்கறார்.


பூட்டிட்டு சாவியை எடுத்துக்கிட்டெல்லாம் போவல.  அவருகிட்டதான் கொடுத்துட்டுப் போவோம். 


"சாந்தி" யை அப்பா, ஒரு மனுஷியாகவே மதிக்க மாட்டாரு.  அவளும் காலையில் போனால் ராத்திரி ஆகிறது வீட்டுக்கு வர்ரதுக்கு.  வேளா வேளைக்கு சுடச்சுட சோறு எப்படி வரும்?  நாங்க சாப்படுவதைப் போலத்தான், அவருக்கு போட்டுட்டு, மத்தியானத்துக்கு 'ஹாட்பேக்' கில் போட்டு வைச்சுட்டுத்தான் போவோம்." இவருக்கு இல்லாம வஞ்சனை யாவா சாப்பிடறோம்?


அது இருக்கட்டும். "இவர் ரிடயர்டு வாத்தியார்தானே? ஒரு நாளாவது பசங்களுக்கு ஏதாவது பாடம் சொல்லிக்கொடுத்திருக்காரா கேளுங்கள்.  அதுகூட வேண்டாம்.  எப்ப பாத்தாலும் பசங்களை திட்டிக்கிட்டே இருப்பார்.  அதும் கெட்ட-கெட்ட வார்த்தைகளில். எங்ககிட்டதான் கோவம்.  பசங்க கூட ஏன் அவரு மல்லுக்கு நிக்கனும்"


"இதல்லாம் நீங்க கேட்டதுனால சொல்றேன், அங்கிள்.தப்பா எடுத்துக்காதீங்க.   அப்பா எதுக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டார்.  என்னை எதுவேணா சொல்லட்டும்.  சாந்தியை கண்டபடி கேக்க இவருக்கு உரிமையிருக்கா அங்கிள்?  தொட்டதுக்கெல்லாம் ஈகோ வந்துடும்.  இதெல்லாம் தினப்படி சண்டை.. விடுங்கள் அங்கிள். இதையெல்லாம் நாங்க பெரிசா எடுத்துக்கல. 


இப்போதுகூட அவரை சமாதானப்படுத்தி திரும்ப வீட்டுக்கு அழைத்துப் போகத்தான் வந்திருக்கோம். நீங்க அவருடைய சினேகிதர் தானே? சொல்லி வீட்டிற்கு வரச்சொல்லுங்கள். "


"இது என்ன புதுகதையா இருக்கு? சாம்புவை எட்டிப் பார்த்தேன்.  அவர் வேறு ஒரு வயதானவரை கையைப்பபிடித்து ரூமிற்கு அழைத்துப் போய்க்கொண்டிருந்தார்."


யார்மேல் தவறு? யோசித்தேன். 


இரண்டுபேருமே தனித்தனியாக நல்ல மனிதர்கள் தான்.
இது தலைமுறை இடைவெளி.  இங்கே பலருக்கும் உதவும் சாம்பு, அதே கனிவை, பாசத்தை தனது குடும்பத்திலும் காண்பித்திருந்தாலோ அல்லது குமரேஷும் அவன் மனைவியும் இவருக்கு புரியும் படியாக எடுத்துச் சொல்லியிருந்தாலோ இந்த பிரச்சினை வந்தே இருக்காது.  நிபந்தனையோடு கூடிய பாசம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? 


பாச இழைகளை கண்டறிய முடியவில்லை இவர்களா.   


ஆனால் இவற்றை புரிந்துகொள்ளும் பக்குவமும், பொறுமையும், சகிப்பும் இந்த கணத்தில் இவர்களால், இந்த மன நிலையில் சாத்தியமா?


'வேண்டாம் குமரேஷ்.. நீ உன் அப்பாவையும், அப்பா உங்களையும் புரிந்து கொள்வதற்கும், நெருங்கி வரவும் இன்னும் கொஞ்சம் நாள் பிடிக்கும். அல்லது புரிந்து கொள்ளாமலேயே போகலாம். ஒரே இடத்தில் இருந்து கொண்டு சண்டையிட்டுக் கொள்வதைவிட அவர் இங்கே இருப்பது இருவருக்குமே நல்லது. காலம் தானாக மாறும் வரை பொறுத்திருப்பொம்.அதுவரை அவர் இங்கேயே இருக்கட்டும். இப் 
போதைக்கு நீ உன் வீட்டிற்கு போ.

No comments:

Post a Comment