Saturday, October 1, 2011

காலை ஒடிப்பேன்.


வாடகை வீட்டில் குடியிருந்திருப்பீர்கள்தானே? 


குடித்தனக்காரர்களாக இருப்பதற்கு சில வித்தைகளை கற்று வைத்திருக்க வேண்டும். அதுவும் ஒண்டுக் குடித்தனக்காரராக இருக்கும் பட்சத்தில், அவருக்கு மேலும் சில சாதுர்யங்கள் தேவைப்படும். ஏனெனில், வீட்டு சொந்தக்காரருடனான உறவுகள் எப்போதும் அபத்திரமானவை.  ஒரே சமயத்தில் மிகவும் வேண்டப்பட்ட நபராகவும், வெறுக்கத்தக்க மனிதராகவும் இருக்கும், விசித்திரர் யாரெனில், சந்தேகமற  வீட்டு சொந்தக்காரர்தான் (இனி வீ.சொ). 


 எப்போது பாச மழை பொழிவார்- எப்போது பாய்வார் என்பதெல்லாம் அன்றைய ராசி பலனைப் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும். 


அது என்ன துர்பாக்கியமோ தெரியவில்லை, குடித்தனக்காரர்களுக்கு சௌகரியமாய் இருக்கும் அனைத்து விஷயங்களும், வீ.சொ விற்கு எரிச்சலூட்டுவதாகவே இருக்கின்றன.குடித்தனக்காரர்களுக்கு அலுப்பான விஷயங்கள் யாவும் வீ.சொ விற்கு அனுகூலமாக இருக்கின்றன.


"சார்.. ஆபீஸுக்கு போகும்போது அப்படியே அந்த கார்பண்டரை, நான் வரச்சொன்னதா சொல்லிடறீங்களா" வில்  ஆரம்பித்து, முனிசிபாலிட்டியில் "பர்த் சர்ட்டிபிகேட் வாங்கித்தருகிறீர்களா"  வரை, அனைத்து வேலைகளையும் ஓசியில் வாங்கிவிடுவதில் சமர்த்தர் வீ.சொ. 


வீட்டுக்கு வந்த புதிதில்,  நாம் ஒன்றும் சாமானியன் இல்லை, எல்லா இடத்திலும் எனக்கு ஆட்கள் இருக்கிறது என ஒரு "பந்தாவுக்காக" குடித்தனக்காரர் சொல்லி வைத்ததை நன்றாக பயன்படுத்திக் கொள்ளும் வித்தகர். தமது வேலைகளுக்காக  அல்லல் படாத, சொகுசு ஆட்கள் கூட, இந்த வீ.சொ விற்காக வீதியில் இறங்கித்தான் ஆக வேண்டும்.


வீட்டு ஒயரிங் கோளாறுகளை சரி செய்து கொடுத்தது, மிக்ஸி, கிரைண்டரை ரிப்பேர் செய்து கொடுத்தது என யாவற்றையும் வீ.சொ ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் ஏதுமில்லை. அது வாடகைக்காரரின் கடமை.


வீ.சொ விற்கு முதலில் கோபமூட்டும் விஷயம், இரவு பத்து மணிக்கு மேல் வந்து கதவைத்தட்டுவது. மனுஷன் விழித்துக் கொண்டாலும் 15 நிமிஷமாவது வெளியே நிறுத்தி வைத்துப் பார்ப்பதில் பரம குஷி. 


முனிசிபல் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, அவரோ, அவர் வீட்டு மகாராணியோ வரும்போது,  அவர்கள் குடத்திற்கு வழிவிட்டுவிடவேண்டும். 


இதைவிட பேராபத்து ஒன்று உள்ளது.  குடித்தனக்காரர் கையில் காசு இருந்தாலும், பஞ்சப்பாட்டு பாடுவது உசிதம். இல்லையெனில் வீ.சொ கடன் கேட்டுவிடும் அபாயங்களை எதிர் கொள்ள வேண்டும். தப்பித் தவறிக் கொடுத்து விட்டாலோ, திரும்ப வாங்குவதென்பது, தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைப்பிடிப்பது போல, நடவாத காரியம். நாம் என்னதான் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாலும், வருடத்திற்கொரு முறை  "அடுத்த மாசத்திலிருந்து வாடகை நூறு ரூபாய் அதிகம் கொடுத்து விடுங் கள்" என்ற கண்டத்திலிருந்து தப்ப முடியாது. 


எனது சொந்தக்காரர் ஒருவர், இம்மாதிரியான இக்கட்டு வீட்டில், இரண்டு வருடங்கள் குடியிருந்துவிட்டு நைந்து போய், ஊருக்கு வெளியே 50 க்கு 30 பிளாட் ஒன்றினை வாங்கிவிட்டார். அந்த ஏரியா ஏற்கனவே நன்கு டெவலப் ஆன ஏரியா. தண்ணீர், போக்குவரத்து என அனைத்து வசதிகளும் உண்டு. நன்பருக்கு, ஒண்டிக் குடித்தனத்தில் பட்ட அவஸ்த்தைகள் யாவும், கணவிலும் வந்து பயமுறுத்த, ஒரு பெரிய வீடாக கட்டிவிட வேண்டும் எனத் தீர்மானித்தார்.  


பிரச்சினை அங்கேதான் ஆரம்பித்தது.  பிளாட் முழுசும் வழிய,வழிய வீடுகட்ட வரைபடம் போட்டார். பஞ்சாயத்து என்பதால், பிளான் அப்ரூவல் என்பதெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டப்படாத விஷயங்கள். இவரது பிளாட்டின் மூன்று பக்கமும் ஏற்கனவே வீடுகள் எழும்பிவிட்டன.


ஒரு நல்ல நாளில், மனை முகூர்த்தமும் ஆயிற்று.  மாமனார் மற்றும் வீட்டு நகைகள் உதவ வீடும் வேகமாக வளர்ந்தது.   ஆரம்பத்தில் எல்லாம் சுபமே.  இவரது வடக்கு பக்க வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஒட்டி இவர் தாய்ச் சுவர் எழுப்பி விட்டார். (வீடு பெரிசா வேணுமில்லையா?)  கடக்கால் போட்டு, ரூஃப் ஒட்டும் வரை, ஒன்றும் சொல்லாத அந்த வடக்கு பக்க வீட்டுக்காரர், ஆட்சேபம் எழுப்பினார். இப்படி ஒட்டி-ஒட்டி வீட்டைக் கட்டினால் எங்களுக்கு காத்து எப்படி வரும்? நீங்கள் தள்ளி கட்ட வேண்டியது தானே என சண்டைக்கு வந்தார்.   இதற்கு தீர்வு சொல்லாமல், எதுவும் கட்டக் கூடாதென ஆர்ப்பரித்தார். 


பிறகென்ன? நகர் பெரியவர்கள், அவரது ஆபீஸ் நன்பர்கள் எல்லோரும் சேர்ந்து பஞ்சாயத்து செய்து வைத்தனர். அங்கிருந்து ஒரு உடைந்த செங்கல்,துளி சிமெண்ட் கூட இந்தப் பக்கம் வரக்கூடாதென நிபந்தனை விதித்தார், வடக்கு வீட்டுக் காரர். 


இவரும் சரியென்று அந்த பக்கம் போகாமலேயே வீட்டு வேலைகளில் பெரும்பகுதி முடித்தார்.  ஆனால் வடக்கு  பக்கம் பூச வேண்டுமே? தாய்ச் சுவராயிற்றே?  இவரும் என்னென்னவோ கெஞ்சிப் பார்த்துவிட்டார். ம்ம்ம்.. ஒன்றும் மசியவில்லை.  நான் அந்த வடக்கு வீட்டுக்காரரிடம், அந்தப் பக்க சுவரை பூசிக்கொள்வதற்காக உங்களுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் வாங்கித்தரட்டுமாவெனக் கேட்டும் பார்த்துவிட்டேன்.  "நான் பாக்காத காசையா நீ பாத்துட்டே" என கேட்டு அதற்கும் சண்டைக்கு வந்தார்.  மாத்திரை,டானிக் சாப்பிடுவது போல, தினமும் காலை,மதியம்,மாலை என மூன்று வேளையும், வடக்கு வீட்டு குடும்பமே வீதியில் நின்று, சண்டை வளர்த்தது.  


எவனாவது இந்தப்பக்கம் வந்தால் 'காலை ஒடிப்பேன், கையை எடுத்துவிடுவேன்' என வடக்கு வீட்டுக்காரர் பயமுறுத்த, எனது சொந்தக்காரர் என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளார்.


பூசாமலேயே வந்துவிடலாமா? வீட்டிற்கு பூசாமல் இருப்பது ஆபத்து ஆயிற்றே? இந்த வீட்டை இருக்கும் நிலையிலேயே விற்றுவிடலாமா  என பலவிதமாக குழப்பிக் கொண்டுள்ளார். 


இதில் எந்த ஆப்ஷனாக இருந்தாலும் வடக்கு வீட்டுக்காரர் 'காலை ஒடிப்பேன்' என்று சொல்லும் ஆப்ஷனைவிட  பெட்டர்தான் என்கிறார்.  உங்களுக்கு ஏதேனும் நல்ல யோசனை இருக்கிறதா?

No comments:

Post a Comment