Wednesday, April 2, 2014

பெண்குழந்தைள் பேரழகு!

மகன் என்னும் உறவு மகனுக்கு திருமணம் ஆகும் வரை!
மகள் என்னும் உறவு வாழ்வின் இறுதிவரை!
                               -நெட்டில் படித்த்து!

புது தில்லியில் என்னுடைய ஃபேஸ்புக்  நண்பி ஒருவர்.
எடித்த எடுப்பில் ‘அப்பா’ என வாஞ்சையோடு அழைத்தவர். எனது பிளாக்கில் (orbekv.blogspot.in)  நான் எழுதும் சில புலம்பல்களைப் படித்துவிட்டு, ஆறுதல் கூறியவர். நல்ல கவிஞர். தமிழில் ஆர்வம் மிகுந்தவர். புத்திசாலி. நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து பகிர்ந்து கொள்பவர்.

தமிழில் ஆர்வம்,
மனித நேயம்,
பெரியவர்களின் மதித்தல்,
மரபுகளைக் காத்தல்,
தமிழ்க் கலாச்சாரத்தை வளர்த்தல்,
வார்த்தைகளில் கண்ணியம்

-என பல பரிமாணங்களை உள்ளடக்கியவர்.

இவ்வளவுக்கும் அவரை  நேரில் சந்தித்ததில்லை. எனது மகளைவிடச் சிறியவர். மனதால் பெண்குழந்தைகள் பேரழகுதான்.

அவர் எனது மனைவியின் மறைவு குறித்து, எனது நோக்கில் ஒரு கவிதை எழுதி அனுப்பியிருந்தார். அவரது அனுமதியின்றி பெயரைக் குறிப்பிடுவதும், முகநூல் விலாசத்தைச் சொல்வதும் முறையாகாது என்பதால், அவரது கவிதையினை மட்டும் வெளியிடுகின்றேன். அந்த தமிழ்ப்புதல்வி நீண்ட ஆயுளோடும், அரோக்கியத்தோடும், நலமாக வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன், ஆசீர்வதிக்கிறேன்.

கவிதை வரிகள் உன்னதமாயிருக்கின்றன. தமிழில் அவருக்கு இருக்கும் புலமையை கோடிட்டிக் காட்டுமின்றன. முதல் கவிதை கிளாசிக். 
உ-ம்: முதல் கவிதையில் மனகுதிரை மேய்ச்சல், பந்தயக் குதிரை, புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் குரல்  போன்றவை.

இரண்டாவது உணர்ச்சிக் குவியல். 
திலும் இரண்டாவது கவிதையின் ஐந்து முதல் எட்டாவது வரிவரை என் மனதை அப்படியே பிரதிபலிக்கின்றன. அற்புதம்!.

இனி அவரது கவிதை!
---------------------------------------

1.       காற்றோடு பேசிய உன் நினைவுகள்.
கொஞ்சம் கொஞ்சமாய் பகல் தனது
வலிமையை இழந்து கொண்டிருக்க,
நெடிய இரவு நீர் கப்பிய மேகங்களின்
ஊடாக  மரங்களில் இறங்கிக் கொண்டிருந்தது தொலைவில்.

மன குதிரைகள் மெல்ல நகர்ந்தபடி
மேய்ச்சலில் இருந்தன.
சாளரங்களின் வழியாக சலனமின்றி
என்னையே நோட்டமிடும்போது இடையில்
குறுக்கும் நெடுக்குமாய் உன் நினைவுகள்,
பந்தய குதிரைபோல் பாய்ந்து ஓடின .

என் மனமானது அவசரம் இன்றி
ஒரு புதிய பாணியில் இயங்கிக் கொண்டிருந்தது,
கண்களில் கனவு, விழி திடலில் நீ
..... அரேபியக் குதிரையின் சுக்கானைப் பிடித்தபடி

தொடுவானத்தில் நின்று ஒரு முறை
தகிப்பாய் இரவின் சுவடுகளை நோட்டமிட்ட
கதிரவன் மெல்ல மெல்ல மறையத் துவங்கியிருந்தான்.
உன்னில் என் நினைவுகளை போல .........
விழி நீர் வழிந்திரங்க,
உப்பு நீர் உள்ளிரங்க,
துடைக்க உன் விரலன்றி காய்ந்தது கண்ணீர்.
 சலனமற்ற என்னில் விவரிக்க முடியாத நேசமும்,
ஏமாற்றமும் தொக்கிக் கிடந்தது.

மனம் மெளனித்து இருக்க,
உதடுகள் உன் பெயரை சொல்லி புலம்பி அழுகின்றன
புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் குரல்
இப்படித்தான் காற்றில் எங்காவது கேட்பாரற்றுச் சுற்றி அலைகிறது.

உன் நினைவுகள் திரும்பிய பக்கமெல்லாம்
காற்றைப் போல நிரம்பிக் கிடக்கிறது,
துயரமும், வலியும் நிரம்பிய என்னை
ஒரு புரியாத புதிர் வட்டத்துக்குள் தள்ளியது ஏன் ?
நன் சுமந்த உன் நினைவுகள்
 கேட்பாரற்றுக் கரைந்து கொண்டிருக்க
இயலாமை நிரம்பிய சொற்களை
காற்றோடு பேசியபடி என் மனக்குதிரை கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுக்கத் துவங்கியது.

கிணற்றுக்குள் நீண்டு தொங்கிக் கிடக்கிற
வாளிக் கயிற்றை எடுப்பது போல்
உன்னைச் சுற்றித் திரிகிற மனம் என்கிற
எனது நீட்சியை லாவகமாக எடுத்துச்
சுற்றிவிட்டு உறங்க துவங்கினேன்.
என் உறங்காத விழிகளோடு.

2.தாளாத துயரம்

கூப்பிட்ட குரலுக்கு என் முன்னே நின்றவளே!
கூப்பாடு போட்டு குழந்தை போல் பிதற்றுகிறேன்!
தள்ளாடி தரைமீது விழுந்து புரளுகிரேன்!
எங்கு போனாயோ,எப்போ நீ வருவாயோ
என் கண்ணீரும் வேதனையும்
என் பலவீனதின் சுவடு அல்ல
உன் பேரிழப்பு தந்த பெரும் பரிசு
நான் சுமக்க முடியாமற் சுமந்து நிற்கும் வேதனை பரிசு

என் இளமைக்கும் முதுமைக்கும்
இடையில் வந்த ஓர் அற்புதமான பினைப்பு நீ
என் வாழ்வின் ஒவ்வொரு பக்கத்திற்கும் அர்த்தம்
தேடித்தந்த அகராதி நீ!

புழக்கடை முற்றம் புறக்கணித்து கிடக்க
கோலமிட குனிவாய்யென தெருவாசல் காத்திருக்கு !

கிழிக்காத தேதியும் கிழியாத சேலையும்
ஏற்றாத தீபமும்,தூற்றாத அறைகளும்
உனக்காக காத்திருந்து

என்னில் உன் நினைவை தூர்வாரி
சுறக்கச் செய்கிறது.

கண்களில் வழியும் நீரை துடைத்தெறிந்தே
கைகள் சோர்வில் துவண்டன.
பால்கணக்கு கோடுகளை

அடுப்படிச் சுவர் தாங்கி நிற்க............
உன் சிருவாட்டு சில்லரையோ
என் நெஞ்சத்தை பொல் சிதறுதடி.
உன் தோலிருந்த கைபையில்
மடித்திருந்த குங்குமமும்
 குட்டி நிலா வெட்டி போட்ட
நகவெட்டி சாவிக்கொத்தும்
உனக்காக காத்திருந்து.............. உன்னறையில் ஏங்குதடி
என்னுடன் நீ இருந்த
பொழுதுகளெல்லாம் பூமகள்
உனை போன்றே பூத்துகுலுங்கின
இன்றோ வண்ணம் தொலைத்த பாலை
நிலத்து  பாதைதனில் என்னை விடுத்து
எங்கோ மறைந்தாய்

நீ பேசிய பொழுதெல்லாம் உன் வார்த்தையை
மறுத்த நானே............... என் தவறு திருத்தி
இப்பொழுதெல்லாம் நிறைய பேசுகிறேன்
உன்னுடன்,கேட்க நீ இல்லை.....மீண்டும் பேசுகிறேன்

விதியத்து போணவன் நான்
வீதியில் நடந்து வர உதிர்த்தன
சருகுகளை தெருவோர மரங்களெல்லாம்
எதிர் காற்றில் தல்லாடி விழுந்தவன் என் முன்னால் நீ இருந்தாய்.............வெரும் பிம்பமாய்
உன் மரணத்திற்கு முன்னுரை எழுத
உனக்குமுதுமையும், நோயும் வந்தனவோ வரிசை கட்டி?

என் வாழ்வின் இறுதிக்கட்டம் சோகத்தில் மூழ்கடிக்க.
உயிரே வருவேன் காத்திரு,
காற்றோடு கலந்த உன்னை என் மூச்சுக்காற்று

தொலைத்தேனும் உன்னில் எனை கரைக்க வருவேன் காத்திரு..........................

3 comments:

  1. முதல் கவிதை இலக்கியமாய் கடினமான வார்த்தைகள்! அடுத்ததில் இலேசான வார்த்தைகள்! அருமையான கவிதைகள்! பாராட்டுக்கள் சகோதரிக்கு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா, நானே அந்த தமிழ் மகள் வீரா டில்லியில் இருந்து.

      Delete