Wednesday, July 27, 2011

தெய்வத்திருமகள் - சினிமா விமரிசனம்.

விஜய் மற்றும் விக்ரம்-ன் வெற்றிக் கூட்டணிப் படம் இது! 'ஐ யாம் சாம்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் (காப்பி?)இந்த 'தெய்வத்திருமகள்' என்பது ஊரறிந்த ரகசியம். போகட்டும் விடுங்கள். இப்படத்தினை விமரிசிக்கும். முன், படத்தில்  கீழ்க்கண்ட "இல்லை" களை சொல்லி விடுவது நலம்.

முதலில் நாயகிகளின் "வலிப்பு நடனங்கள்" இல்லை!  நாயகனும் - நாயகியும் டூயட் பாட, சடுதியில்,ஆஸ்திரேலியாவுக்கோ, 
சுவிட்ஸர்லாந்துக்கோ புறப்பட்டுப் போவதும், பின்னனியில் ஒரேமாதிரி உடை உடுத்தி அசைந்தாடும் அந்த நாற்பது 'பெண்களும்' இல்லை.

நாயகன் நூறு பேரை வீழ்த்தும் சினிமா சூரத்தனம் இல்லை. 

ஆபாசங்கள் இல்லை. நாயகியின் "நாபிக்கமல" தரிசனங்கள் இல்லை!
ரத்தக் களேபரங்கள் இல்லை. இன்னும் பல "தமிழ் சினிமாத்தனங்கள்" இல்லாததினாலேயே, "பார்க்க வேண்டிய படம்"  தகுதியினை இப்படம் பெற்றுவிடுகிறது.

கொஞ்சம் மெதுவாக செல்லும் திரைக்கதை.

விக்ரம் மன நிலை பாதிக்கப் பட்டவர். மனைவியை இழந்தவர். தனது குழந்தையை 'கவர்ந்து' செல்லும் பணக்கார மாமனாரிடமிருந்து "தனது இயல்பான" மன நிலையில் குழந்தையை பார்த்துவிட துடிக்கிறார்.  பார்த்தும் விடுகிறார். 

இண்டர்வல் வரை, யூகிக்க முடிந்தாலும், கதை கொஞ்சம் பிடிமானம் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறாற்போல் இருக்கிறது. முதல் 10 நிமிடங்களுக்குள் ஆடியன்ஸை 'நாட்டுகுள்'  (naught) கொண்டுவர வேண்டாமா?

இண்டர்வெலுக்குப் பின் அடுத்த அரைமணி நேரம், படம் புல்லட் ட்ரெயின் வேகம்.

விக்ரம் தனக்கு கொடுக்கப் பட்ட ரோலுக்கு ஏற்றாற்போல அடக்கி வாசித்து, பாத்திரத்திற்கு நியாயம் செய்கிறார். அவரது கேரக்டரை உணரவைக்க, டைரக்டர் தேர்ந்தடுத்திருக்கும் காட்சிகள் பிரமாதம். (பறவை குஞ்சு-ரெட் சிக்னல்-குழந்தையோடு கொஞ்சுவது,குழாயில் ஒழுகும் தண்ணீ­ர் etc..)

பல காட்சிகள் நினவில் நிற்கின்றன. 

விக்ரம், தன் குழந்தை நிலாவின் கேள்விகளுக்கு, தனக்கு தெரிந்த முறையிலேயே பதில் சொல்வதாக அமையும் காட்சிகள்;

பாட்டி வடை சுட்ட கதையை-ராஜா மந்திரி கதையுடன் கிராஃபிக்ஸில் கலந்து சொல்லுவது; 

அமலாபாலும், நிலாவும் சந்திக்கும் காட்சிகள்;

இது போன்ற பல இடங்களில் இயக்குனரின் திறமை அடையாளம் காட்டப் படுகிறது.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு ஒரு ஒவியம் போல இருக்கிறது. 

மிக இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தக்கூடிய நாசர் அவர்கள், "கௌரவம்" சிவாஜி கணேசன் (பாரிஸ்டர் ரஜினிகாந்த்) போல் நடிக்க முயன்று பரிதாபமாகிறார். இன்னும் அழகாக,  இயல்பாக அவரால் செய்திருக்கக் கூடும்.

படத்தின் உயிரூட்டம் என்றால் அது விக்ரமின் குழந்தை நிலா(சாரா) தான். அற்புதமான முகபாவம்!

 ப்ரியா (அஸிஸ்டெண்ட்) நிச்சயம் கவனிக்கப் பட வேண்டியவர். 

அமலா பாலுக்கு நடிக்க சந்தர்ப்பமில்லை! மிக அழகாக வந்து போகிறார்.

ஒய்.ஜி.மகேந்திராவின் நடிப்பில் அனுபவம் மிளிர்கிறது.

தேவையேயில்லாமல், வணிக நோக்கத்தோடு, அனுஷ்காவை கட்டிப்பிடித்ததும் வரும் 'டூயட்' மாதிரியான கனவு பாட்டு கதையோடு ஒட்டவே இல்லை. இந்த படத்திற்கு நியாயம் செய்வதாகவும் இல்லை. ஆனால் இந்த காட்சியில் காமிரா விளையாடுகிறது. அனுஷ்காவையும், மழைத்துளிகளையும், இதைவிட அழகாக, இவ்வளவு குளோசப்பில் காட்டவே முடியாது. ஆனால் கதையோடு ஒட்டாததால் ரசிக்க முடியவில்லை. 

ஒரு பைத்தியத்தின் மேல் பரிதாபம் கொள்ளலாம்! அனுதாபம் காட்டலாம்! உதவலாம். ஆனால் காதலிப்பது எங்கனம்? அதுவும் ஒரு பெரும் பணக்காரி!??.   ஐந்து வயது குழந்தையின் மனநிலை உள்ள ஒருவன், அவளிடம் கலந்து குழந்தை பெற்றுக்கொண்டது நம்பும்படியாக இல்லை. இது ஆரம்பத்திலிருந்தே இடிக்கும் ஒரு லாஜிக்! 

ஜீ.வி.பிரகாஷ்குமார், பின்னணி இசையில் பல இடங்களில் அருமை. சில இடங்களில் மௌனமாகாகவே விட்டிருந்தால், அதுவே சிறந்த பின்ணனி இசையாக இருந்திருக்கும். 

படத்தின் முடிவு விக்ரமின் கேரக்டருக்கு மிகப் பொருத்தமாக உள்ளது. 

படத்தை பாருங்கள்-தியேட்டரில்!  இது போன்ற படங்களை ஆதரிக்காவிட்டால், நாபிக் கமலங்களே நமக்கு கதியாகிவிடும்!

===============================================
நடிகர்கள் : விக்ரம், அனுஷ்கா, அமலா பால்,  நாசர், பேபி சாரா, ப்ரியா.
இசை : ஜீ.வி.பிரகாஷ்குமார்
இயக்கம் :விஜய்


No comments:

Post a Comment