Thursday, July 14, 2011

ங்கொன..... ங்கொன...

நன்றாக கணக்குப் போடும் வாத்தியார், புரியும்படி கனிதம் சொல்லிக்கொடுப்பதிலும் வல்லவராக இருக்க வேண்டும் என்று சட்டம் இலை. விஷயம் தெரிந்தவர்கள் எல்லாம், ஆசானாகிவிடுவதில்லை. நம்மில் பலருக்கும் பல விஷயங்கள் தெரியக்கூடும்.  ஆனால் அதை மற்றவர்களுக்கு சொல்லும் திறமை இருக்காது அல்லது சொல்லும் திறன் மாறுபடும்.  உண்மையில் இந்த திறமையில் நிபுனத்துவம் பெற்றவர்கள்தான் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தப்படுகின்றனர்.  சமூகத்தில் வெற்றிபெறுபவர்களும் இவர்களே! இதை "Communication Skills" என்று கூறுவர். (விஷயமே இல்லாமல் மணிக் கணக்கில் உரையாற்றும் அரசியல் வாதிகள் இந்த கணக்கில் இல்லை)


இதில் பரிமளிக்க விரும்புவோர், தாங்கள் சார்ந்துள்ள துறை பற்றிய நுன்னறிவு பெற்றவர்களாகவும், காலத்திற்கும், தேவைக்கும் ஏற்றாற்போல தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டே (அ)  மாற்றிக் கொண்டேயும் இருப்பர். மணிப்பிரவள நடை, வார்த்தைகள் தேர்வில் நுனுக்கம், அவையின் 'மூட்' அறிந்து பேசுவது-இதுவெல்லாம் அத்தியாவசிய தேவைகள். இதில் பரிமளிப்போர் பாப்புலராகவும் இருப்பர்.


இந்த communication skills-ஐ,  தொடர்ந்து மெருகேற்றிக் கொள்வது குறித்து, பல்வேறு புத்தகங்கள் உள்ளன. தற்காலத்தில், பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களின் திறமையை வளர்ப்பதற்காக பயிலரங்குகளையும், செமினார்கள்களயும் நடத்திக் கொண்டே இருக்கின்றன. 


இத்தகைய நிறுவனகளுக்கு இத்திறமை வாய்ந்த டிரெய்னர்கள் தேவைப்படுகின்றனர். இத்தகைய டிரெய்னர்கள் தான் அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களது, உற்சாகத்தினையும், ஆர்வத்தினையும் குறையாது வைத்திருக்க வல்லவர்கள். சோர்வினையும், விரக்தியையும் நீக்க வல்லவர்கள். மேலும், நிர்வாகம் தீர்மாணிக்கும் முடிவுகளை, வலிக்காமல்,  கீழே கொண்டு செல்ல பயன்படுபவர்கள். 


நான் சொல்ல வந்தது இந்த திறமை குறித்து அல்ல.  இத்தகைய ஒரு 'பயிலரங்கில்' நான் மாட்டிக் கொண்ட பரிதாபம் குறித்தே! சென்ற வாரம் இரண்டு நாட்கள், சென்னையில் ஒரு அரங்கிற்கு சென்றுவந்தேன். அது பயிலரங்கா (அ) மீட்டிங்கா என்று பாகுபடுத்த முடியவில்லை.  தமிழ் நாடு முழுவதிலிருந்து, பல்வேறு தூரங்களிலிருந்து, இந்த பயிலரங்கிற்கு (மீட்டிங்?) வந்திருந்தனர்.  


இந்த அரங்கத்தில், இரண்டாம் நாள் காலை, ஒருவர் வகுப்பெடுத்தார். எந்த தகுதியில் இவரை அழைத்து வந்தனர் என தெரியவில்லை. ஒருவேளை முன்பு சொன்னது போல, நன்றாக வேலை செய்யக்கூடியவர் என்ற தகுதி ஒன்றே போதும் என நினைத்து விட்டனரோ என்னவோ?


மைக்கை எடுத்து காலரில் பொருத்திக் கொண்டார். எதைப் பற்றி பேசப்போகிறார் என்ற அடித்தளம் இல்லை. குரலில் தீர்க்கம் இல்லை. வார்த்தைகளில் தெளிவு இல்லை. உற்சாகம் இல்லை. உச்சரிக்கவும் தெரியவில்லை. பேசுவது அவருடைய காதுக்கும்.. தப்பு..தப்பு.. மனதுக்கு மட்டும் கேட்டால் மட்டும் போதும் என தீர்மாணித்தவர்போல ங்கொன.... ங்கொன...  வென எதோ முணுமுணுத்தார்..  


முணுமுணுத்தார்..முணுமுணுத்தார்...முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.  பின் வரிசையினரின் வாய்கள் 270 டிகிரி அளவில் பிளந்து கொண்டன.  நெளிந்தனர். என்ன சொல்கிறார் என சலிப்படைந்தனர். முக்கினர். முனகினர்.  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம.. 'மைக்' காரர் எதற்கும் மசிவதாக தெரிவதில்லை. பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிவரை 'ராவி'த்தள்ளினார்.  அவரது கண்கள் அவையோரை பார்த்ததாகவே தெரியவில்லை. எதிரில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியினை பார்த்தார். பின் விட்டம் நோக்கி பேசிக்கொண்டே இருந்தார்.


நானும் இப்படித் திரும்பி, அப்படித் திரும்பி, ஸ்பீக்கர் பக்கம் காதைத் திருப்பி, அதிகமான ஒலி அலைகளை வாங்கி, செவியினுள் அனுப்புவதற்காக, உள்ளங்கையினை குவித்து, காதின் அருகே புனல் போல வைத்து, இன்னும் என்னவெல்லாமோ செய்து, அவர் என்னதான் சொல்கிறார் புரிந்து கொள்ள முயன்றேன்.  ஏதோ அவர் பேசும் மொழி 'ஆங்கிலம்' என்பது தவிர வேறு எதுவும் புரியவில்லை.  


ஒருவேளை வயதாகி விட்டதால், எனக்கு கேட்கும் திறன் குறைந்து விட்டதோ (அ) சைனசிடிஸ் காரணமாக சரியாக கேட்கவில்லையோ என சந்தேகம் வந்துவிட்டது.  


இதன் நடுவில், உரையாளரின் காலர் மைக் 'ஆஃப்' ஆகிவிட்டது.  குறுக்கிட்டாலும் பரவாயில்லை என 'Sir,  fix your Collar Microphones please'  என உரைத்திட்டேன்.  உடனே பக்கத்திலிருக்குன் நன்பர் சொன்னார்:  "சார் இவர் பேசுவது ஒன்றும் புரிந்த பாடில்லை.. இந்த இலட்சனத்தில் "Mic"  இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என்றார்.  இதனால் ஒரு விஷயம் தெளிவாயிற்று.. "நான் செவிடு இல்லை" .

No comments:

Post a Comment