Sunday, July 31, 2011

எங்கேதான் தப்பித்து ஓடுவது?

பல்வேறு வகையான 'பொல்யூஷன்' களைப் பற்றி உலகமே கவலைப் படும் போது, இந்தியர்களாகிய நாம் 'Noise Polution'  என்று வரும்போது,  அலட்டிக் கொள்வதேயில்லை! ஏனெனில் நாம் பொதுவாக சப்தம் விரும்பிகள்.  கூடுதல் சப்தம் கூடுதல் குஷி. 


குடியிருப்பு பகுதிகளில், பகலில் 55db  ஆகவும்- இரவில் 45 db ஆகவும், அரசாங்கம், சப்தத்தின் அளவை நிர்ணயித் துள்ளது.  யார் இதுபற்றி கவலைப் படுகிறார்கள்?இந்த வருடம் மார்ச் மாதம், மத்திய வன-மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகம், இந்தியாவின் முக்கிய நகரங்களில்,(தில்லி,மும்பை, கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத்) 'நாய்ஸ்' பொல்யூஷன் பற்றிய தகவல்களை திரட்டியது.  இத்தகவல்கள் முடிவுகள்,  வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சப்தங்களின் அளவு, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அளவைத் தாண்டி, அரசாங்கம் நிர்ணயித்த சப்த் அளவையும் தாண்டி அபாயகரமாக அளவை எட்டியுள்ளதை சுட்டிக் காட்டியது. 


சப்தம் எப்படி உடல் நலத்தினை பாதிக்கும் என்கிறீர்களா? 


பிரச்சினையே அதுதான். இந்த "NOISE POLLUTION" பற்றி பெரும்பாலான மக்களுக்கு விழிப்புனர்வு இல்லை 


மிகுந்த சப்தம், உயர் ரத்த அழுத்தம்,  உயர் இருதய துடிப்பு, மன ரீதியான பாதிப்பு, எரிச்சலைடைவது போன்றவற்றை உருவாக்கும்.  மிக முக்கியமாக நாம் அமைதியினை இழக்கிறோம்.


உதாரணமாக சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, நமது பேருந்துகளின் அலறும் "ஹார்ன் சப்தம்"  நம்மை என்ன பாடு படுத்துகிறது?  


நமது மட்டமான,  'டிரைவிங் கலாச்சாரம்' , நாய்ஸ் பொல்லியூஷன் பற்றிய விழிப்புனர்வின்மை, நாளும் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, அதற்கேற்ற வகையில் அகலமான சாலைகள் இல்லாதது ஆகிய யாவும் 'நாய்ஸ் பொல்லியூஷனை' அதிகரிக்கின்றன.  


சூரியன் உதயமாகும் போதே, காது கிழிபடும் சப்தங்களும் துவங்கி விடுகிறது. ஆடி மாதம், கார்த்திகை மாதம் என்றால் விடியற் காலை மூன்று அல்லது நான்கு மணிக்கே, இந்த இரைச்சல் துவங்கிவிடும். கோவில் களைத்தான் சொல்கி றேன்!! 


தெருமுழுக்க 'கோன்' 'ஸ்பீக்கர்களை' நிறுவி,  "எல்.ஆர். ஈஸ்வரி யிலிருந்து"  துவங்கி இன்றைய புது பாடகர்கள் வரை ஓயாமல் அலறுவார்கள்.  இரவு எத்தனை நேரம் வரையிலும் கத்தலாம். கேட்பாரில்லை. 


கோயில்களுக்கிடையே 'அலறல்' போட்டி இருக்கும் போலிருக்கிறது. ஒருவர் இருபது 'ஸ்பீக்கர்' கட்டினால் மற்றோருவர் 30 .  கோயில் என்பது அமைதியாய் இருக்க வேண்டிய இடம் என்பதை இவர்களுக்குச் யார் சொல்லுவார்கள்? கொஞ்ச நேரம் ஆடாமல் நின்றால் நமது காதிலும் ஒரு 'கோன்' 'ஸ்பீக்கரை கட்டிவிட்டு சென்றுவிடுவார்கள் போல!


"ஆடி மாத அலறல்" ஒரு மாதம் என்றால்,  'கார்த்திகை' பிறந்துவிட்டால், இந்த சங்கடம், தை மாதம் - பொங்கலையும் தாண்டி கூட மூன்று மாதத்திற்கும் மேலாக நீடிக்கும். பிளாட்பாரக் கோயில் ஆரம்பித்து அனைவரும் 'ஸ்பீக்கர்' கட்டி 'ஐயப்பன்' பாடல்களை ஆரம்பித்து விடுவார்கள்.   அதுவும் சினிமா பாடல் 'ஸ்டைலில்' சரணம் இருந்து விட்டால், 'ஆஹா.. 'ரிபீட்' ஆகிக்கொண்டே இருக்கும்!  இப்போ தெல்லாம் MP3 சி.டி க்கள் இருப்பதால், ஒரு சி.டியைப் போட்டுவிட்டு மறந்து விடலாம். குறைந்த பட்சம் 3 மணி நேரம் பேய்க்கத்தலாக அனுபவிக் கலாம். அமைதியே உருவான ஐயப்பன் இப்படியா 24 மணி நேரமும் கத்தச் சொல்லிறார்?


படிக்கும் குழந்தைகளையோ, முதியவர்களையோ அல்லது என்போன்ற அமைதி விரும்பிகளையோ எவரும் ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள் போல! திருமண மண்டங்கள் உள்ள தெருக்களில் உலா வந்திருக்கிறீர்களா? இந்த தெருக்களில் வசிப்பவர்களுக்கு, அடுத்த பிறவி என்பதும்,  நரகம் என்பதும் கிடையாது. அனைத்து வேதனைகளையும், 'ஒலிபெருக்கிகள்' மூலம்,  இப்போதே அனுபவித்துவிட சபிக்கப் பட்டவர்கள் இவர்கள்.

நான் வேலை செய்யும் அலுவலகத்தின் வாசலில் ஒரு மாரியம்மன் ஆலயம் இருக்கிறது.  இக்கோயிலைச் சுற்றி, ஒரு 100 மீட்டருக்குள் ஒரு அரசினர் தலைமை மருத்தவு மணை, மூன்று பெரிய தனியார் மருத்துவ மணைகள், ஏராளமான கிளினிக்குகள் மற்றும் பல அலுவலகங்கள்!  அதனால் என்ன?  'ஸ்பீக்கர்கள்' தலைவிரி கோலத்தில் 24 மணி நேரமும் உச்ச 'ஸ்தாயியில்' கத்தித் தீர்க்கின்றன. 


கோயில் திருவிழாக்களில், 'இரவு 11 மணிக்கு மேல் 'சினிமா' பாடல்களை "மியூஸிக் டிரூப்கள்" பாடியாக வேண்டும் என சட்டம் இருக்கிறது. பக்கத்து தெருவரை 'ஸ்பீக்கர்கள்' கட்டி விடிய விடிய பாஆஆஆஆஆஆஆஆஆஆடித் தீர்ப்பார்கள்!.  


கோயிலில்  ஐயர் மந்திரம் சொல்லும் போது காலர் மைக் வைத்துக் கொள்வார் போலும்! சாமிக்கு மட்டுமல்லாமல் அந்த ஊருக்கே கேட்கும்! 


"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது இக்காலத்தில் தப்பு. "கோயில் இருக்கும் தெருவிலிருந்து தூர ஓடிப்போ!" என்பது தான் சரியாக இருக்கும்.


'எலக்ஷன் டைம்' என்றால் கேட்கவே வேண்டாம். அம்மா, ஐயா, அண்ணண்,அன்னை என் பலபேர் 'வோட்டுக்களை தாருங்கள்.. தாருங்கள் என ' காதைத் திருகுவார்கள்'.  "எலக்ஷன் கமிஷன்" சாட்டையை சுழற்றி யதால், இரவு 10 மணியோடு விட்டார்கள்.


நம்மில் எவரேனும் பிரயாணம் செய்யாமல் இருக்க முடியுமா? தற்போதெல்லாம் பேருந்தில் 'சக்கரம்' இருக்கிறதோ இல்லையோ சவுண்ட் சிஸ்டம் இருந்தாக வேண்டும்.  ட்ரைவர் எனப்படுபவர் கையில்தான் அதன் கண்ட்ரோல்.  ஆபத்தான வளைவு, கடுமையான டிராபிக் -இதைப்பற்றியெல்லாம் கவலையின்றி, சி.டி மாற்றுவதில் மும்முரமாய் இருப்பார்.  மீதி வேலையெல்லாம் சி.டி மாற்றிய பின் தான். அதுவும் 'வால்யூம்' எப்படி? இதற்கு மேல் திருகமுடியாது என்பது வரை வால்யூமை திருகி, ரிவிட் வைத்துவிடுவார். விடியோவும் இருந்து விட்டால் இன்னும் பிரமாதம்.   நரக வேதனை!!


 பிரயாணம் என்பது அமைதியாக இருக்கக் கூடாதா என்ன?  இந்த காது கிழியும் அலறல் குறித்து எவரும் புகார் கூறுவதாக இல்லை. மாறாக இன்னும் - இன்னும் சவுண்ட் வைக்கக் கோரி 'ஆர்ப்பாட்டம்' நடத்துகிறார்கள்.


இந்த மஹா இரைச்சலுக்கு பயந்து பல பிரயாணங்களை தவிர்த்து விடுகிறேன்.  தவிர்க்க இயலாத போது டாக்ஸி.  ரெகுலர் டாக்ஸி என்பதால் என்னைப் பார்த்ததும் மியூஸிக் சிஸ்ட்டத்தை ஆஃப் செய்து விடுவார் டிரைவர்.


இந்த 'ஸ்பீக்கர்' கலாச்சாரம் நமது நாட்டின் தனிப்பட்ட அடையாளம்.  குழந்தை பிறந்தால் 'ஸ்பீக்கர்'. பெயர் வைக்க 'ஸ்பீக்கர்'. பெண்ணாக இருந்தால் வயதுக்கு வந்ததும் 'ஸ்பீக்கர்'. திருமணத்திற்கு இரண்டு நாள் 'ஸ்பீக்கர்'. கடைசியில் செத்துபோனா அதற்கும் 'ஸ்பீக்கர்'. பத்தாவது நாளும் 'ஸ்பீக்கர்'. 


கோயிலில் 'ஸ்பீக்கர்', ஆபீஸில் 'ஸ்பீக்கர்', மீட்டிங்கில் 'ஸ்பீக்கர்' - இவைகளைத்தாண்டி வீட்டிற்கு வந்தால் அக்கம் பக்கத்து வீடுகளில் 5.1 பேரிரைச்சல்.   தெருவில் உள்ள வீடுகளில்,  எவரேனும் ஒருவருக்கு காது சற்று மந்தமாக இருந்து விட்டால், அந்த வீட்டில், அந்த நபர் பார்க்கும் சீரியலை தெருவே கேட்டாக வேண்டும்!


செல்போன்களில் கூட நம்மவர்களில் பலருக்கு, பேசியெல்லாம் பழக்கமில்லை. இரைச்சலாக அலறித்தான் பழக்கம்.  


காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு படுத்தால், இரவில் வீட்டில் உள்ளவர்கள்,  400db ல் விடும் "பெருங்குரட்டை" !! 


எங்கேதான் தப்பித்து ஓடுவது? 


-0-

No comments:

Post a Comment