Sunday, July 10, 2011

டைப்ரைட்டர்

ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் பிறந்தவர்களுக்கு, ஸ்கூல் முடித்துவிட்டு, "டைப்ரைட்டிங்-ஷார்ட்ஹேண்ட்" கிளாஸுக்கு போவது என்பது, "சாப்பிட்டுவிட்டு, உடனே கையலம்புவது" போல, ஆட்டோமெடிக்காக, தொடர்ந்தாற்போல செய்யப்பட வேண்டிய ஒரு வேலை. பெரிய ஊர்களில், சில சமயம், "அக்கவுண்டன்ஸியும்"  இந்த கூட்ணியில் சேரும். அக்காலத்தில் நிலவிய 'தொழில் நுட்ப' படிப்பு இது. பேச்சுலர் டிகிரி படிப்பவர்களும் கூட இந்த இன்ஸ்டிடியூட்களில் படிப்பதைப் பார்த்திருக்கிறேன்.


'டைப்ரைட்டர்' என்னும் மிஷின்களை சுனாமி போல, கம்ப்யூட்டர்கள் துடைத்தெறிந்து விட்டது.  அதே நிலைதான் 'ஷார்ட் ஹேண்டுக்கும்'  இப்போதெல்லாம் "ஸ்டெணோகிராஃப்ர் கில்டெல்லாம்" இருக்கிறதாவெனத் தெரியவில்லை.


அக்கால டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிடியூட்கள், வேலைதேடும் அனைத்து இளைஞர்கள் / இளைஞிகளுக்கு ஒரு பாலைவனச் சோலை. இங்கிலீஷ்/தமிழ் ஹையர் பாஸ் பண்ணிவிடுவோம். ஷார்ஹேண்ட் கொஞ்சம் மக்கர் பண்ணும். டைப்ரைடிங் தேர்வுகளில் 'மெக்கானிக்கல்' என்று, ஒரு தேர்வு உண்டு. லூஸ் dog, ரிஜிட் dog எல்லாம் வரும்.


இன்ஸ்டிடியூட்களில், லொயர் படிக்கும் ஆட்களுக்கு 'ரெமிங்டனும்', ஹையர் மற்றும் அழகான பெண்களுக்கு 'ஹால்டா' மிஷின் களும் ஒதுக்கப்படும்.  "ரெமிங்டன் " என்பது நாட்டுக்கட்டை.  ஓங்கி அறைந்தால் தான் 'கீ" மேலே கிளம்பும்.  "ஹால்டா" என்பது நளினமான், நாசூக்கான, மெலிதான இளம்பெண் போல.  அழகாயிருக்கும்.  தொட்டாலே 'கீ' க்கள் பேசும். உற்சாகமாய் அடிக்கும். இந்த மிஷிங்களை 'அலாட்' பண்ணும் வேலை, அங்கு படிக்கும் ஒரு சீனியருக்கு கிடைக்கும்.  அவனை கண்டு கொண்டால் 'ஹால்டா' கிடைக்கும்.  


இன்ஸ்டிடியூட்கள், தன் வேலையைத் தவிர,  காதல் வளர்க்கும் பூங்காக்கள் வேலையையும் செய்தன.  இங்கு விடலைக் காதலில் விழா தவர் எவருமில்லை. நான் ஆத்தூர்ல் இருந்த 'ஸ்ரீ ராம் இன்ஸ்டிடியூட்டில்' ஹையர்வரை படித்தேன்.  காலை ஏழு மணி முதல் எட்டு வரை ஆங்கிலம். எட்டு முதல் ஒன்பது வரை தமிழ் அடித்தேன்.  பக்கத்தில் 'சாந்தி' என்னும் பெண் உட்காருவாள். உட்கார்ந்ததும், ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்ப்பாள். ஒரு புன்னகை. வசீகரமான, மந்திரப் புன்னகை. புன்னகைக்கும் போது, அவள் மேல் உதட்டில் இருக்கு பூனை முடி அழகாக இருக்கும்.   "நீங்க தினம் ஒரு சட்டை மாத்துவீங்களா" - விசாரிப்பாள்! கேரேஜ் ரிடர்ன் செய்யும் போது லேசா கைபடும்.   இது போதாதா?   பதினைந்து நிமிஷத்தில் அடிக்கவேண்டிய பக்கங்களை 10 நிமிடத்தில் முடித்துவிடுவேன். கையெல்லாம் "மை" ஈஷிக் கொண்டு 'ரிப்பன்' மாற்றிக் கொடுப்பேன்.  வாழ்க்கையில் நிகழ்ந்த பெல்வேறு விடலைக் காதல்களில் அதுவும் ஒன்று. அது கிடக்கட்டும்.


இந்த டைப்ரைட்டர்களை நேசிப்பவர்கள் லிஸ்ட்டில்,  வேறு யாரைக் காட்டிலும், பத்திரிக்கை யாளர்கள்தான் முன் நிற்பார்கள்.  அவர்கள் செல்லுமிடமெங்கும் "செல்ல நாய்க்குட்டி" யினை அழத்துச் செல்வது போல, ஒரு 'போர்ட்டபிள் டைப்ரைட்டரை' யும் உடன் அழைத்துச் செல்வர். அந்த மிஷனிடம், பேசுவார்கள், கொஞ்சுவார்கள். ஏன்? கோபம் கூட கொள்வார்கள். செண்டிமெண்டெல்லாம் உண்டு.


இந்த வாரம் 'ஹிண்டுவில்' ஸ்ரீ வி.கங்காதர் அவர்கள் எழுதியிருக்கிறார். உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் கடந்த ஏப்ரலில், பூனே அருகில் மூடப்பட்டு விட்டதாம்.  டைப்ரைட்டகள் காலம் ஓய்ந்தது!  அங்கென்றும், இங்கென்றுமாக அத்திப் பூ போல இருக்கும் ஒரிரண்டு டைப்ரைட்டகளும் இன்னும் சில காலத்தில், மியூசியத்திற்கு போய்விடும்.


ஆனால் இந்த மிஷின் எழுப்பிய ஓசைகள் 'இசை போல' இன்னும் பல ஆண்டுகளுக்கு, காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment