Wednesday, December 21, 2011

அரசும் அதிகார மையங்களும்.அரசு:
மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், அரசாங்கத்தினை நடத்துவதற்கு அதிரகாரமளிக்கப்படுகின்றன. கோட்பாடு ரீதியில், இது சரிதான். ஆனால் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மிக்க மக்கள், தங்கள் கையில் வைத்திருக்கும் வாக்குச் சீட்டில் வைக்கப் போகும் முத்திரையின் ‘முக்கியத்துவம்,பொறுப்பு, ‘இந்த சீட்டுதான் தங்களை அரசாள்வதற்கான உரிமையையும், அதிகாரத்தினையும் அளிக்கிறது என்பனவற்றை ஊணர்ந்திருக்கிறார்களா – என்றால், 100% உறுதியாகக் கூற இயலவில்லை; சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கழிந்தும்!


தங்களது அரசாங்கத்தினை தேந்தெடுப்பதற்கு, மேற்சொன்ன காரணங்களுக்கு புறம்பாக, ‘சில ஈனமான காரணங்களுக்காக  வாக்களிப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது! திருமங்கலம் ‘ஃபார்முலாக்கள் இதைத்தான்  தெரியப்படுத்துகின்றன.

‘எக்காலத்திலும், மக்கள் முழுவதுமே, இப்படித்தான் வாக்களிக்கிறார்களா என்றால், அப்படி இல்லை! மேற்கு வங்கம், தமிழக ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் தெளிவாகவே இருக்கின்றன. “ஆகவே... மக்களனைவரும் அரசியல் தெளிவும், அரசியல் அறிவும் பெற்றுவிட்டனர் என்ற முடிவுக்கும்  வந்து விடலாகாது! அவர்களுக்கே பொறுக்க முடியாத அளவிற்கு ஊழலும், அராஜகமும், அதிகார துஷ்ப்பிரயோகமும் தலைவிரித்தாடின என்றுதான் கொள்ள வேண்டும்.

வாரிசுகள்:

இப்படியாக, ‘ஏதோ ஒரு வகையில் அரசாங்கத்தினைக் கைப்பற்றும் கட்சிகளின் தலையினைப் பார்த்தால், அது ‘ஒரு முடியாட்சி அரசியல் போலத்தான் இருக்கிறது! தலைவருக்குப் பின் அவரது மகன்; பின் அவரது மகன் என்றுதான், துயரமாகப் போய்க் கொண்டிருக்கிறது!  இதற்கான நிரூபனத்தை தேடுவதற்கு, சிரமம் ஏதும் வைக்க வில்லை நமது அரசியல் கட்சிகள். ஜவஹர்லால் நேரு காலந்தொட்டு, சில காலம் நீங்கலாக, இன்றளவும், நாட்டை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஆள்வது நேரு குடும்பம் தான்.  கருணாகரன், கருணாநிதி,  என அரசியலில்  வாரிசுகளை கொணர்ந்தோர்களை, அடுக்கிக் கொண்டே செல்லலாம். 

இம்மாதிரியான வாரிசு அரசியல் உலகெங்கும், இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்தாலும், இந்தியா போல ‘சாசுவதப் படவில்லை’.  குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இது அதிகம்.  'இது என்ன அநியாயம்' என்ற கோபமும் யாருக்கும் இல்லை!

என்ன காரணம்:

கட்சிகளில், உட்கட்சி ஜன நாயகம் என்பது முற்றிலும் அற்றுப் போய்விட்டதே வாரிசு அரசியலுக்குக் காரணம். சோனியாவையோ, கருணாநிதியையோ எதிர்த்து, அவர்கள் கட்சியில் எவர் போட்டியிட முடியும்? போட்டியிட்டுவிட்டு ஊர் போய்ச்சேர முடியுமா? உட்கட்சி ஜனநாயகம் என்பது பெயரளவிற்குத்தான் உள்ளது!

தலைமை தனிமைப்படுகிறது!

வாரிசு அரசியல், தலைமையினை தனிமைப்படுத்துகிறது! அதாவது, தலைவர்களின் “வாரிசு பாசம் அவர்களது கண்களை மறைக்கிறது!  எனவே, அவர்களது  தீர்மாணங்கள் யாவும் ‘மக்களின் நலன்களைவிட வாரிசுக்கு லாபமானதா என்பதை வைத்தே முடிவெடுக்கப் படுகிறது.

இந்த வாரிசுகளைச் சுற்றி, எப்போதும் ஒரு ‘களவாணிக் கூட்டம் சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்களது முக்கிய வேலையே, கட்சியின் தலைமைக்கு,  நாட்டின் உண்மை நிலைமையின மறைப்பது தான். அடுத்த வேலை, உண்மையான நேர்மை யானவர்களையும், திறமையானவர்களையும்  தலைமையினை நெருங்காமல் பார்த்துக் கொள்வது! அடுத்து, மக்களின் உணர்வுகளை, ஏமாற்றங்களை, கோபங்களை, ஆத்திரத்தை, எதிர்பார்ப்புகளை தலைமையிடமிருந்து மறைப்பது! இந்த வேலையில் இந்த ‘ சட்டத்திற்கு புறம்பான அதிகார மையங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிடும். இந்த அதிகார மையங்களின் முக்கிய நோக்கம், முடிந்தவரை ‘கொள்ளையடிப்பது, நிலங்களை அபகரிப்பது ஆகியவை தான். நிழலான (மறைவான) காரியங்களைச் செய்து திருடும் இக்கும்பல், பழியினை சாமர்த்தியமாக ‘தலைமை மீது திருப்பி விட்டு விடும். இந்த கோஷ்டிகள் வெகு எளிதில் வாரிசுகளின் பெயர்களைச் சொல்லி தலைமையை வளைத்துப் போட்டுவிடுவதில் வல்லவர்களாக இருப்பர்.  

கொஞ்சம் பின்னால்:

கொஞ்சம் வயதானவர்களுக்குத் தெரியும். 1975-ல் இந்திரா காந்தி ‘எமர்ஜென்ஸிகொண்டுவந்தார். ஜனநாயகம் ‘சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதற்குக் காரணமே ‘அதிகாரக் கும்பல் தான். இந்த கும்பலுக்கு அப்போதைய பெயர் ‘Extraordinary constitutional authority’ (Caucus) .  அடக்கு முறைகளும், ஜனநாயக விரோத செயல்களும் கூச்ச நாச்சமின்றி இந்தியா முழுதும் அரங்கேறியது! அடித்த கொள்ளைகளுக்கு கணக்கில்லை!  இந்த கும்பலின் முக்கிய புள்ளியாக இருந்தவர், இந்திரா காந்தியின் புதலவர் திரு. சஞ்சய் காந்தி!  அடுத்த தேர்தலில் படு தோல்வி அடைந்த்து காங்கிரஸ். தெரிகிறதா வாரிசுகளின் வேலைகள்!

தலைமையின் பொறுப்பு:

கட்சித்தலைமைக்கு கொஞ்சமேனும், மக்களைப் பற்றிய சிந்தனையும், நாட்டைப் பற்றிய அக்கறையும் இருந்தால், தன்னைச் சுற்றி அதிகார மையங்களை உருவாக விட மாட்டார்கள்! காமராஜர், ராஜாஜி, வாஜ்பாய், நிருபன் சக்ரவர்த்தி, ஜோதிபாசு ஆகியோர் சிறந்த உதாரணங்கள். இதற்கு மாறாக ‘சம்பாதிப்பதையே நோக்க மாக்க் கொண்டிருந்தால், அதிகார மையங்கள் உருவாவதை தவிர்க்க முடியாது!

அதிகார வர்க்கம்:

நாம் குறிப்பிடும் ‘அதிகார மையங்கள் முக்கிய வேலையாக்ச் செய்வது, அதிகார வர்க்கத்தினை வளைத்துக் கொள்வது தான். நாட்டின் துரதிர்ஷ்டம் என்ன வெனில், நமது அதிகார வர்க்கம், முதுகெலும்பற்றதாக மாறி விட்டது தான். அதிகார மையம் போடும் எலும்புத் துண்டுகளுக்காக ‘ஏவல் நாய்களைப் போல (இந்த வார்த்தையினைப் பயன் படுத்தியதற்காக மன்னிப்பு கோருகிறேன்), அவர்கள் சுட்டிக் காட்டிய திக்கிலெல்லாம் பாய்கின்றனர்,! கொடுமை என்ன வெனில், இவர்கள் ரிடயர் ஆனதும் ‘நீட்டி முழக்கி அநியாயங்களைப் பற்றி புத்தகமாக எழுதுவார்கள்!

யார் என்ன மிரட்டினாலும், சட்டப்படிதான் நடப்பேன் என ஐம்பது சதமான அதிகாரிகள் உறுதி மேற்கொண்டாலே போதும்! மாறாக துணிச்சலும், நேரிமையும் கொண்ட அதிகாரிகள் மிகச் சிறுபான்மை யாக இருப்பதால், ‘அதிகாரக் கும்பலால் பந்தாடப் படுகிறார்கள்!

கண்ணால் காண்பது பொய்:

நாம் செய்தித் தாட்கள் மூலம் தெரிந்து கொள்ளும், தேசீய, சர்வதேசீய செய்திகள் யாவும் ஒரு சிறு பகுதி தான். மறை நிரலாக (Hidden agenda) வேறு ஒரு காரியம்தான் இருக்கும். உதாரணமாக மக்களுக்கு இன்ஸூரன்ஸ் திட்டம் கொண்டுவருகின்றனர் என்பது படிக்கும் செய்தி; அதன் மூலம் நன்மை பெறுவது, தலைமைக்கு வேண்டப்பட்ட ஒரு கம்பெனியாக இருக்கும்! 


சில பொருட்கள் ‘ஆன் லைன் வர்த்தகத்தில் தடுக்கப் படுகிறது என்றால், அதன் மூலம் சிலர் ஒழித்துக் கட்டப்படுவர் (அ) சிலர் கொழுக்க வைக்கப் படுவர். எனவே மக்கள் உண்மைச் செய்திகளை தெர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். (நக்கீரன் பானி செய்திகள் அல்ல)

தமிழ் நாட்டில்:

சில நாட்களுக்கு முன், தமிழ் நாட்டில், இத்தகைய கும்பல் ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் அடியோடு நீக்கப் பட்டுள்ளனர். இது தொடருமா இல்லை மீண்டும் சேர்ந்து கொள்வார்களா என்பதற்கு பதிலளிக்க இயலாது! ஏனெனில்,இவை யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படுவது!

தற்போதைக்கு நடந்தது நல்லதே! இத்தோடு நிறுத்திக் கொள்வது கூடாது! இக்கும்பல் ஏற்படுத்திய நாசங்களை சீர்படுத்த வேண்டும்!  முப்பது வருட பந்தத்தின் மூலம், சுவை கண்டவர்கள், எளிதில் விட்டு விட மாட்டார்கள்! மறைவான செயல்களில் ஈடுபவதை எதிர்பார்க்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
முதல்வர் தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்தே செய்திருப்பார் என நம்புகிறோம். முதலில் இந்த கும்பலின் ‘Miss deeds’ அனைத்தும் திருத்தப் பட வேண்டும். இந்த கும்பல் அரங்கேற்றிய அராஜகங்கள் யாவும் இனிமேல் தான் ஒவ்வொன்றாக வெளிவரும்.
எப்படியாயினும் ஒரு நல்ல சம்பவம் நடந்துள்ளது! கட்சி எம்.எல்.ஏ க்கள் அனைவரும் அவருக்கு பூரண ஒத்துழைப்பினை உறுதி செய்துள்ளனர். அக்கட்சி தொண்டர்களும், பொது மக்களும் இக்கும்பல் ஒழித்துக் கட்டப்பட்டதை வரவேறு உள்ளனர்.

இனி: 

தலைமை தனது ஆலோசனையாளர்களாக,  நேர்மையாளர்களையும்- துணிச்சலானவர்களையும் அமர்த்துதல் அவசியம். அப்படிப் பட்டவர்கள் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். நேர்மையான அதிகாரிகளை, அவர்களது பாணியில், சுதந்திரமாக, அரசியல் குறுக்கீடு இன்றி செயல்பட அனுமதிக்க வேண்டும். மக்களின் உண்மையான உணர்வுகளைச் சொல்லும் உளவுத்துறை அதிகாரிகளை ஊக்கு விக்க வேண்டும். இல்லையெனில் ஆபத்து தலைமைக்குத் தான்.

பிற

இப்படிப் பட்ட அதிகார மையங்கள், இந்த கட்சியில் மட்டுமல்ல; முக்கியமான பிறகட்சிகளிலும் உள்ளது! இவர்களும் துணிவோடு,  செயலாற்றினால், அது அந்த கட்சிகளுக்கும், நாட்டிற்கும் நல்லது! செய்வார்களா?
1 comment:

  1. I remember one thing on reading this. Nehruji was asked by the Union leaders to settle their issues for which once Nehruji fought. Nehruji replied. Then I was an agitator, Now I am an administrator. Clean people should come forward and they should be encouraged.

    ReplyDelete