Thursday, December 22, 2011

சிறார்களுக்கு (14)


14.திரும்பத் திரும்ப......

தியாகு என்று ஒருவர். அவர், எந்த நேரமும் தனக்கு தீங்கு செய்தவர் களைப்பற்றியே, நினைத்து நினைத்து மருகிக் கொண்டிருப்பார். அவர் இப்படி எனக்கு தீங்கிழைத்தார்; இவர் எனக்கு இப்படி தீங்கிழைத்தார் என பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படியும், மனம் நிம்மதி அடையவில்லை!

ஒரு நாள், அவர், ஒரு அறிஞரை சந்திக்க நேர்ந்தது! அவரிடமும் போய், தனது உறவினர்கள், தனக்கு தீங்கிழைத்த கதையினை விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்!

தியாகுவை, ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார் அந்த அறிஞர். “உனக்கு பிடிக்கவே பிடிக்காத சினிமாவின் பெயர் ஒன்று சொல் என்றார்.  தியாகுவும் சொன்னார்.

உடனே, அந்த அறிஞர், அந்த சி.டி யை வரவழைத்து, DVD பிளேயரை 'ஆன்' செய்துவிட்டு, ரூமின் கதவுகளை வெளிப்புறமாகத் தாளிட்டுவிட்டு, இந்த சினிமா முழுவதையும் பார் என்றார். சொல்பவர் அறிஞர் ஆயிற்றே? மறுக்காமல் மூன்று மணி நேரம் சங்கடத்துடன், நெளிந்தவாறே உட்கார்ந்து பார்த்தார்!  படம் முடிந்தது! உள்ளே வந்தார் அறிஞர். அதே சி.டி யைப் போட்டு,  மீண்டும் அந்த சினிமாவைப் பார் என்று சொல்லிவிட்டு, கதவை தாளிட்டுக் கொண்டு சென்று விட்டார். இந்த முறை தாங்கமாட்டாத சலிப்புடன் அதைப் பார்த்தார். அறிஞர் விடவில்லை! முன்றாம் முறையாக, மீண்டும் பார் என்றார்.

வெகுண்டெழுந்தார் தியாகு! “பைத்தியமா நீ? இந்த பாடாவதிப் படத்தை ஒரு முறை பார்ப்பதே தண்டனை! மூன்று முறை பார்ப்பதற்கு நான் என்ன கிறுக்கா? நீர் அறிஞரே அல்ல; சரியான மூடன் என சீறிப் பாய்ந்தார்.

சிரித்தவாரே கேட்டார், அறிஞர். “நீ பார்த்தது சினிமாதானே?

“ஆம்

“அதில் நடந்தது நிஜம் அல்லவே?

“இல்லவே இல்லை!

“இந்த சினிமா உன்னை, உண்மையாக கொடுமைப் படுத்தியதா?

“நிஜமாக இல்லை தான்! அதற்காக ஒரு மோசமான சினிமாவை எதற்காக திரும்ப திரும்ப பார்க்கவேண்டும்? அது என்னை கோபமுற வைக்கிறதே?

“உனக்கு பிடிக்காத ஒரு பிம்பத்தை, மூன்று முறை திரும்ப திரும்ப பார்ப்பதே உனக்கு கிறுக்குத் தனமாகத் தோன்றுகிறதல்லவா?

“வேறு எப்படித் தோன்றும்? இது சரியான பைத்தியக்காரத்தனம் தான்!

"ஆனால், நீ உனக்குப் பிடிக்காத நினைவுகளை (உனக்கு கெடுதல் செய்தவர்களின் நினைவுகளை) மட்டும் எதற்காக தினமும் மனதில்,திரும்ப திரும்ப போட்டு பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய் ?

தியாகுவிற்கு சட்டென்று எல்லாம் புரிந்தது!







“உண்மைதான்! வேண்டாத நினைவுகளை ரிவைண்ட் செய்து, ரிவைண்ட் செய்து பார்ப்பதினால் என் மன நிம்மதிதான் கெடுகிறது! இந்த கணமே அவைகளை தூக்கி எறிந்தேன் என கூறிவிட்டு, மகிழ்ச்சியுடன் வெளியேறினார் தியாகு!

========================================================================
நீதி:  உனக்கு கெடுதல் செய்தவர்களை மற! அந்த நினைவுகளினால்
      பலனொன்றும் இல்லை! உன் மன நிம்மதியை இழப்பதைத் தவிர!
========================================================================



1 comment: