Sunday, December 18, 2011

ஞாயிறு இரவு ஒரு மீட்டிங் (ஒரு பக்க சிறுகதை)


ஞாயிற்றுக்கிழமை! மாலை மூன்று மணி. “பாஸ்கரன், வீட்டில் உட்கார இயலாமல் தவித்துக் கொண்டிருந்தார். டி.வி யையும், புத்தகத்தையும் நாட, மனம் மறுக்கிறது! நேரம் ஆகிக் கொண்டே இருக்கிறது! இன்னும் ஒரு அரை மணியில் கிளம்பினால்தான், அவர் போக வேண்டிய இடத்திற்கு, சரியான நேரத்திற்குப் போகமுடியும்.  மனைவியோ தூங்கிக் கொண்டி ருக்கிறார். விஷயத்தை, மனைவியிடம் சொல்லுவது எப்படி என்ற தவிப்பு அவருக்கு! சொன்னால் ஒரு சண்டையும், சொல்லாமல் போனால் இரு சண்டையும் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், முதலாவதையே நாடினார்.  

‘கண்மணி... கண்மணி...

‘ம்ம்ம்..ம்ம்ம்.

முனகினாளே தவிர விழிப்பதாக காணொம்.


சரி ஒரு ஐந்து நிமிடம் பொறுத்துப் பார்ப்போம். போய் சாய்வு நாற்காலி யில் அமர்ந்து கொண்டார். சட்டைப் பையில் வைத்திருந்த குறிப்புகளைப் மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொண்டார்.

கைபேசி கூப்பிட, ‘ஹலோ...

‘என்ன தோழர்... கிளம்பிட்டீங்களா?

“இதோ ஆச்சு.. புறப்பட்டுக்கிட்டே இருக்கேன்! நீங்க நேரா பஸ்-ஸ்டாண்டுக்கு வந்திடுங்க,  நாலேகால் பஸ்ஸைப் பிடித்து விடலாம்

‘சரி... தாமதப்படுத்தாமல் வந்திடுங்க...

இந்த உரையாடல், கண்மணியை எழுப்பி விட்டது போலும்!

‘எங்க போறீங்க..?

‘அது வந்து..., பக்கத்து ஊர்ல ஒரு இலக்கிய கலந்துரையாடல் கூட்டம் இருக்கு, அதில் பேசுவதற்கு, என்னையும் ஒருத்தராக போட்டிருக்காங்க. அதான்

‘உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லியா? யார் கூப்பிட்டது? ரங்கனாதனா? அந்த ஆளுக்கும் புத்தியில்லை, உங்களுக்கும் இல்லை! ஞாயித்துக் கெழம கூட வூட்ல இல்லாம அப்படி என்ன மீட்டிங்? இன்னிக்கு சாயங்காலம் கோவிலுக்கு போவலாம்னு சொன்னீங்களே, அது என்ன ஆச்சு?

‘அதில்லை கண்மனி, இந்த மீட்டிங் முன்னாடியே ஒத்துக்கிட்டது. இப்ப, நான் போவலன்னா நல்லா இருக்காது!  கடசி நேரத்துல வேற ஆளைப்புடிப்பதும் கஷ்டம், ஏழு மணிகெல்லம் மீட்டிங் முடிஞ்சுடும், போய்ட்டு வந்துடுறேன். அதுக்கப்புறம் கோவிலுக்கு போவலாம். இல்லேன்னா நம்ம “சங்கர்ஆட்டோவைக் கூப்பிட்டுக்க, இருந்து அழைச்சுகிட்டு வந்துடுவான்! நான் வேனா, சங்கரை கூப்பிட்டு சொல்லிட்டு போவட்டுமா?

‘ஒரு எழவும் வேணாம்.. நீங்க போய் ஊர் சுத்திட்டு வாங்க! நா வூட்லய அடஞ்சு கிடக்கேன். நீங்கள்ளெல்லாம் என்னாத்துக்கு கல்யாணம் கட்டிகிட்டு, பொண்டாட்டி உயிரை எடுக்கிறீங்களோ தெரியல! பேசாம அந்த மீட்டிங்கையே கட்டிக்கிட்டுருந்திருக்கலாம். 

'.........'

"ஊருக்கு உபதேசம் பண்ணிக்கிட்டு,  மைக் கெடச்சா போதுமின்னுகிட்டு, வெட்டிக்கா பேசிக்கிட்டு திரியரீங்க! ரோட்ல அவனவன் வெட்டிக்கிட்டுத்தான சாவறான். என்ன ஆச்சு உங்க உபதேச பேச்செல்லாம்?" 

"வேண்டாம் இவளுடன் பதில் சொல்ல ஆரம்பித்தால் இன்னொரு சண்டைதான் மிச்சம்"  சப்தம் காட்டாமல் செருப்பை அணிந்து கொண்டு வெளியேறினார் பாஸ்கர். அனேகமாக எல்லா மீட்டிங் தினங்களிலும் நடக்கும் உரையாடல் இது! 


“அப்பாடா, இன்னிக்கு வெளியே போறோம்னு சொல்லியாச்சு! அதுவே பெரிய திருப்தியாகிவிட்டது அவருக்கு.

பஸ் பிடித்து, நன்பருடன் பக்கத்து ஊருக்கு போய்ச்சேரும் போது மணி ஐந்தரை. கூட்டம் ஒரு சிறிய உள் அரங்கில் நடைபெற உள்ளது.   எல்லா பேச்சாளர்களையும் சேர்த்தே, ஒரு இருபது பேர்தான் வந்திருந்தனர்.

இன்று, இரண்டு புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. இவர் அறிமுகப்படுத்தி பாராட்ட வேண்டிய புத்தகம், ஒரு உப்பு சப்பில்லாத, ‘மின்சார அடுப்பின் கதை என்பது போன்ற ஒரு ‘கட் அண்ட் பேஸ்ட் புத்தகம்! “என்னத்தைப் பேசுவது? 


நினைத்திருந்த விஷயங்களைப் பேசிவிட்டு, கடைசியில் மாட்டைப் பிடித்து தென்னை மரத்தில் கட்டிவிட வேண்டியது தான் என திட்டமிட்டார் பாஸ்கர்.

மின்சார அடுப்போ இல்லை பல்போ,  "எப்படியாவது, தமிழர்கள் புத்தகம் வாங்கிப் படித்தால் சரி” என நினைத்துக் கொண்டார். 

எப்போதும் போல, ஆறு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி ஏழுமணிக்குத் தான் துவங்கியது. இப்போது ஒரு முப்பது பேர் கூட்டத்தில் சேர்ந்திருந்தனர். புத்தக எழுத்தாளர்கள் ஆளுக்கு ஒரு பத்து பேரை ‘ஓட்டிக்கொண்டு  வந்திருப்பார்கள் போலும்!

எனினும், ‘மைக் மோகன்கள் விடுவதாக இல்லை! இவரது முறை வரும்போது மணி எட்டாகிவிட்ட்து. அதற்குள் இரண்டு மிஸ்டு கால் வந்துவிட்டது.  கண்மணி கூப்பிட்டிருந்தாள். எதற்கு கூப்பிட்டிருக் கிறாள் எனத்தெரியும் பாஸகருக்கு!

இருபது நிமிடத்தில் தனது பேச்சினை முடித்துக் கொண்டுவிட்டார்.

இவர் பேசி முடிக்கும் போதும, மனைவியிடமிருந்து வந்த ஒரு எஸ்.எம்.எஸ், ‘இப்போது மணி எட்டரை!  என்றது

சற்று பொறுத்து, மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ்! ‘நான் தூங்கலாமா?

“விழாக் குழுவினர்,  "ஏதும்" ஏற்பாடு செய்திருப்பார்களா? இவர்களை நம்பி மனைவிக்கு ‘தூங்கு என பதில் சொல்லிவிடலாமா?

'தூங்கு என்பதைத் தவிர, வேறு மாதிரி செய்தி அனுப்பினால் சண்டைதான் வரும்! எனவே ‘நீ தூங்கு.. என பதில் அனுப்பிவிட்டார்.

மீட்டிங் முடிந்தது!  வங்க தோழர்,  "டீ" சாப்பிடலாம் அழைத்தனர் விழாக் குழுவினர்.

‘ஓ..........

பஸ் ஏறி வீட்டுக்கு வந்த போது மணி பத்தரை ஆகிவிட்டது.

தன்னிடம் எப்போதும் வைத்திருக்கும் இன்னொரு சாவியினால் வீட்டைத் திறந்தார் பாஸ்கர்.

ஒரு சபலத்தில், சமையல் உள்ளே சென்று பார்த்தார். எல்லாம் சுத்தமாக கவிழ்க்கப்பட்டிருந்தது. ஒரு சொம்பு நீரை எடுத்துக் கொண்டு படுக்கைக்கு வரைந்தார் பாஸ்கர்!

3 comments: