Friday, December 16, 2011

பாத்தாலே புடிக்கல....................


அலுவலகத்திலோ அல்லது நன்பர் குழாமிலோ, நமக்கு சிலரைப் பார்த்தாலே பிடிக்காது. அவர்களது இருப்பே எரிச்சலை உண்டாக்கப் போதுதானதாக இருக்க, சிலரது இருப்பு நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

மற்றவர்களைப் பற்றி யோசிப்பது ஒருபுறம் இருக்கட்டும்!, நமது இருப்பினை (Presence)  மற்றவர்கள் எப்படி உணருகிறார்கள் என யோசித்துப் பார்த்தால், அப்படி ஒன்றும் கிலாசிக்கும்படியாக இல்லை தான்.

காரியம் ஆகவேண்டும் என்பதற்காகவோ அல்லது அந்த நபர், பதவிப் படிக்கட்டுகளில், ஒருபடி மேலே இருக்கிறார் என்பதற்காவோ இளிக்கும் காக்கைகள் கூட்டத்தை ஓட்டிவிட்டு  யோசித்தால், மற்றவர்களிட்டையே பாப்புலராக இருக்க சில “கோட்பாடுகள் இருப்பதாக தென்படுகிறது.

மனிதர்கள் யாவரும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறார்கள். மகிழ்ச்சியானவர்கள் தங்களைச் சுற்றயுள்ளவர்களை மகிழ்ச்சியாக்கி விடுவார்கள். நம்மை மற்றவர் விரும்புவதும், விரும்பாததும் நமது கைகளில்தான் உள்ளது.  நாம் விரும்பத்தக்க மனிதராக இருக்க சில எளிய வழிமுறைகள்:

                                                 1.       கவணியுங்கள்:

அடுத்தவர் சொல்லுவதை கவணிப்பது, காது கொடுத்துக்  கேட்பது முக்கி யமானது.  இச்செயல், கேட்பவர் மனதில், “தனக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கேட்கிறார் என்ற எண்ணத்தினை உண்டாக்கும். ஆழ்மனதில் படியும்.  "கவணிக்கப் படுகிறோம் என்று அவர் உணரும்போது சொல்பவர் மனதில்  நீங்கள் உயருகிறீர்கள். இடம் பெறுகிறீர்கள் . மனதளவில் நெருங்குகிறீர்கள். உங்களை மிக முக்கியமானவராகக் கருதத் துவங்குவார்.

இது நண்பர்களுக்கு மட்டுமல்ல, கணவன் மனைவிக்கும் இடையேயும் கூட முக்கியமானது. 


மனைவி (அ) கணவன் ஏதேனும் பேசிக் கொண்டிருக்கும்போது,  மற்றவர் “மோட்டு வளையையோ அல்லது “கனவுலகில் மிதப்பதோ அல்லது “இது வரை  நீ என்ன சொல்லிக் கொண்டிருந்தாய் என வினவுவதோ  தப்பாட்டம்.  


தாங்கள் சொல்லுவதை கவணிக்கவில்லை என்ற உணர்வு, மற்றவர்களை காயப்படுத்தும்.


நீங்கள் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற உணர்வு விரிசலுக்கே வழிவகுக்கும். மேலும் இது சப்தமில்லாமல் ‘அவமதிக்கும் முறையே!  இது 
உத்திரவாதமாக பிரிவை உண்டாக்கும். மேலும் உங்களது நன்பரோ / மனைவியோ ஏதோ ஒரு விஷயத்தை தீவீரமாக சொல்லிக் கொண்டிருக்கும் போது, சம்பந்தமில்லாமல் ‘கொலவெறி பாட்டை பாடியது யார்? என அபத்தமாக்க் கேட்கக் கூடாது.  நட்பை இழக்க மிகச் சுலுவான வழி இது.

அனைவருமே தாங்கள் பேசுவது கவணிக்கப் படவேண்டும் எனவே விரும்புவார்கள்.

                                               2.    தகுதியாக்கிக் கொள்ளுங்கள்.

இன்னொரு விஷயம். நீங்கள் உங்களது அறிவினை விருத்தி செய்து கொள்ளுவது முக்கியம். 


உங்களிடம் ஆலோசனையோ அல்லது குறிப்போ கேட்கும் போது கூடுமான வரை பதில் சொல்லும் அளவுக்காவது!  


தெரியாவிட்டால் ‘தெரியாது, ‘கேட்டுச் சொல்லிவிடுகிறேன் எனச் சொல்வதுதான் உத்தமம்.சும்மா ‘கேஸ் விடுவது ஆபத்து! உங்களது ‘புளுகுகள் வெகுவிரைவிலேயே கண்டுகொள்ளப்படும். 


Credibility யினை இழப்பது மோசமான விளைவை உண்டாக்கும். அதே சமயம் உங்களுக்கு தெரியும் / முடியும் என்றால் தயங்காமல் முழுமையாக உதவி செய்யுங்கள்.

                                              3.        கலகலப்பாக இருங்கள்:

உம்மனாம் மூஞ்சிகளையும், சிடு மூஞ்சிகளையும், வெங்கடுப்பான்களையும் எவரும் விரும்புவதில்லை. உரையாடுவதற்கு 'தோதான' நபராக மாறுங்கள். உங்களுடன் பேசுவதை மற்றவர்கள் விரும்ப வேண்டும்.
“நான் சொல்வது மட்டுமே சரி என்ற போக்கு உதவாது!


பிறரைக் காயப்படுத்தாத நகைச்சுவை எவரையும் வசப்படுத்தும். 


சொல்வதை சுவாரஸ்யமாக, சுருக்கமாக சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.


குறிப்பாக மற்றவர் சோகமாகவோ, துக்கத்திலோ இருக்கும்போது ஆறுதல் கூறுவது அவசியம்.  


“இதுஎன்ன பெரிய விஷயம்? நான் பட்ட கஷ்டத்தை விடவா இது பெரிது போன்ற  சுயபுராணங்கள்,  எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். சரியான ‘போர் ஆசாமி எனப் பெயர் வாங்குவது கவைக்குதவாது!
                                                                                                      


4.    ஒத்துக் கொள்ளுங்கள்:

இது மிகவும் முக்கியமானது! உலகில் எவருமே நூறு சதம் முழுமை யானவர்கள் அல்ல! “தன் பிழை  நோக்காமல்” ,” பிறன் பிழை மட்டும்  நோக்குவது உங்களை வெறுக்கத்தக்க மனிதராக மாற்றிவிடும். எனக்கு வேண்டிய ஒருவர், “எல்லோரையும், குறை சொல்லும் வழக்கமுள்ளவர். முகத்துக்கு நேரே மற்றவர்கள் அவரிடம் சிரித்துப் பேசினாலும், அவர் அந்தண்டை போனபின் “இவர் பெரிய யோக்கியமா? இந்த தப்பைச் செய்யவில்லையா? அந்த தப்பை செய்யவில்லையா?என கிண்டலடிப்பதைப் பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் உங்களது ‘நல்லனவற்றை மட்டுமே பேசவேண்டும் என விரும்புவது நூற்றுக்கு நூறு தவறு.  


நீங்கள் இல்லாத பொழுது, முதலில் உங்களது ‘அல்லன மட்டுமே பேசப்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இவற்றை தவிர்க்க நல்ல வழி ‘நீங்கள் மற்றவர்களின் “நல்லனவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதே!  நீங்கள் சொல்லியது / செய்தது தவறு என்றால் தயங்காமல் “ஒத்துக் கொள்ளுங்கள்!” .  நாம் நினைப்பது போல இது மரியாதைக் குறைவோ இழுக்கோ அல்ல! மாறாக உங்களது மதிப்பு பன்மடங்கு உயரும். 

 5.        நேசியுங்கள்:

நிபந்தனையுடன் கூடிய நட்பு (அல்லது) காதல் என்று உலகில் ஒன்றும் இல்லை! உளமாற அன்பு செலுத்தும் போது குறைகள் தெரியா.  குறைகளுடனே  நட்பை ஏற்றுக் கொள்வது உத்தமம். அதற்காக அவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு துணை போக வேண்டாம்.              

6.       பரிசு:
நீங்கள் வெளியூருக்கு போகிறீகள். அப்போது, உங்கள்  நன்பரை நினைவுகொண்டு, அவருகு ஏதேனும் பரிசு வாங்கி வாருங்கள். அது விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என அவசியமில்லை! சிறிய 20 ரூபாய் “ஊதுபத்தி ஸ்டாண்டாகக் கூட இருக்கலாம்.  வெளியில் சென்றாலும் உங்களது நினவுகளில் நன்பர் இருக்கிறார் என்பதை உணரவைப்பதே விலை உயர்ந்த பரிசு.
                            


இதையும் மீறி உங்களை எவரும் விரும்பவில்லை எனில் திரு 'மன்மோகன் சிங்கிடம்' அவர்களிடம்தான் ஆலோசனை கேட்கவேண்டும். 
                  -oOo-

1 comment:

  1. Yarunga adhu venkaduppan ? Nongeduppanillaiye ? Super guidelines. Everybody should have a self analysis. I totally agree with this.
    pkp

    ReplyDelete