தவிர்க்க
வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பாகம் – 3/3)
1. மற்றவர்களிடம் இருப்பதெல்லாம், உங்களிடமும்
இருக்க வேண்டும் என்று அவசியமில்லை! மற்றவர்களிடம் இருப்பதையே பார்த்துக்
கொண்டிருந்தால், உங்களிடமிருப்பதை பார்க்கத் தவறிவிடுவீர்கள்! திருப்தி என்பது
வெளியில் இல்லை! உங்களுக்குள்தான்!
வாழ்வின் இறுதியில் தான், பொறாமையினால், எவ்வளவு தினங்களை
வீணடித்திருக்கிறோம் என உணர வேண்டும் என்பதில்லை. இப்போதே கண்டு கொள்வோம்.
இறுதியில் கொண்டு போவது எதுவுமில்லை! எனவே ‘பொறாமை’ என்பதை
அறவே நீக்குவோம்! முயற்சி என்பது வேறு-பொறாமை வேறு!
2. அன்றைக்கு ஒரு மனை வாங்கிப்
போட்டிருந்தால்...., அப்போதே இன்னும் தங்கம் வாங்கியிருந்தால்..., வேறு வேலைக்கு
போயிருந்தால்.., அப்படிச் செய்திருந்தால், இப்படி செய்திருந்தால் – இன்றைக்கு எங்கேயோ
போயிருப்பேன் என சொல்வதை பலரும் கேட்டிருப்போம். கடந்த காலத்தில் செய்திருக்க
வேண்டிய செயல்கள் குறித்து, இன்று புகார் ஏதும் கூற வேண்டாம். இபோது விசனப்பட்டு
ஆகப்போவது ஒன்றுமில்லை! அது மாத்திரமல்ல, எந்த நிகழ்வும், நடக்கும்போதே அதன் பின்
விளைவுகள் குறித்து, பூரணமாக அறிந்து கொள்ளும் அளவுக்கு உலகில் எவரும் இல்லை! நேற்று இருப்பதைக் காட்டிலும் இன்று நன்றாக
இருக்கிறீர்கள் தானே! அதுகுறித்து புன்னகை செய்யுங்கள்! நேற்றைக்காக இன்று
வருந்துவதை விட இன்றைக்காக வாழ்வது புத்திசாலித்தனம்.
3.
எவரையும் வெறுக்காதீர்கள்!
இதனால் காயமடைவது நீங்கள்தான்! அவர்கள் அல்ல! “மன்னிப்பு”
என்பதன் பொருள் “ நீ எனக்கு தீங்கிழைத்து
விட்டாய், அதைப் பொறுத்துக் கொண்டுவிட்டேன் என்பது அல்ல” மாறாக, ‘நீ எனக்கு தீங்கிழைத்தது, நான் கஷ்டப்பட வேண்டும் என்பது தான்; ஆனால் உனது
செய்கை என்னைத் துன்பப்பட அனுமதிக்க மாட்டேன்” என்பது தான். பிறர் உங்களுக்கிழைத்த தீங்கினின்றும்
வெளியே வாருங்கள்! அமைதி கொள்ளுங்கள். மேலும் மன்னிப்பு என்பது பிறருக்கு அளிப்பது
மாத்திரமல்ல! உங்களுக்கும் வழங்கிக் கொள்ளுங்கள்! “அடுத்தமுறை இந்த மாதிரி அசட்டுத்தனமான்,
தவறான காரியங்களைச் செய்யாதே” என உங்களையும் மன்னித்துக் கொள்ளுங்கள்.
4.
உங்களுக்கான ‘தரம்’ என்ன
என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மற்றவர்களின் ‘நெருக்குதலுக்காக’
உங்களது தரத்தினை தாழ்த்திக் கொள்ளவே கூடாது.
உதாரணத்திற்கு: ‘அலுவலகத்தில் ஏராளமான அதிகார
துஷ்பிரயோக கும்பல் இருக்கும்’ அவர்கள்,
அலுவலக வாகனம், பணம், பொருள் போன்ற வற்றை ‘பயன்படுத்திக்’
கொள்வார்கள்! அது அவர்களது ‘தரத்திற்கு’ சரி. உங்களது
கொள்கைப்படி சரிப்படாது எனில், என்னால் முடியாது என மறுத்து விடுங்கள்.
5.
மற்றவர்களுக்கு தேவையின்றி விளக்கமளிப்பதை
நிறுத்துங்கள்! உங்களது நிஜமான
நன்பர்களுக்கு உங்களது ‘விளக்கம்’ தேவைப்படாது! எதிரிகள் நீங்கள்
என்ன சொன்னாலும் ‘நம்ப மாட்டார்கள்’! பின் ஏன்
நேர விரயம்? மனசாட்சிப் படி செயல்படுங்கள்.
6.
செக்கு மாட்டு வேலை உதவாது. செய்தவற்றையே திரும்ப திரும்ப செய்து
கொண்டிருந்தீர்களானால், இப்போது கிடைப்பது தான் திரும்ப திரும்ப கிடைக்கும்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், மற்றவற்றையும் செய்யுங்கள். பணத்திற்காக
மட்டும் அல்ல! அனுபவத்திற்காகவும் கூட!
7.
வாழ்வின் “அற்புதகணங்களை”
தவற விடாதீர்கள். வாழ்க்கையில், சந்தோஷமளிக்கும் விஷயங்கள் யாவும் பெரியதாகத்தான்
இருக்க வேண்டும் என அவசியமில்லை! அழகை ரசியுங்கள்.
ஐந்து வருடத்திற்கு முன் எனது பேரன், வரைந்து
வைத்த ஒரு சித்திரம்,
ஒரு பிச்சைக்காரன் தன்னிடம் இருக்கும் ஒரு ரொட்டியினை
விண்டு, ஒரு தெரு நாய்க்கு போடும் ஒரு புகைப்படம்,
முன் பின் தெரியாத ஒருவருக்கு, அவசர நேரத்தில் செய்த
உதவிக்காக, அவர் எழுதிய நன்றிக் கடிதம் ஆகியவை என்னிடம் உள்ளன! இவை தரும் சந்தோஷம்
வேறு எதற்கும் குறைந்ததல்ல!
8.
எல்லா நடைமுறைகளிலும், விடாப்பிடியான முழுமையாளியாக
(Perfectionist) இருப்பது முடியாது, தவறு. வறட்டுத்தனமாக Perfection பார்ப்பவர்கள்
வீட்டிலும், அலுவலகத்திலும் வெறுக்கத்தக்க மனிதராக இருப்பர். குழந்தை 5.15-க்கு
விளையாடப்போய், 6.15-க்கு படிக்கப் போய், 8.00க்கு சாப்பிட்டுவிட்டு 9.15-க்கு
தூங்காவிட்டால் என்ன குடி முழுகிப் போச்சு? ஒரு அரைமணி நேரம் அதிகமாக
விளையாடினாலோ, டி.வி பார்த்தாலோ ‘காச்-மூச்’ கூடாது!
9.
எப்பொழும், இருப்பதிலியே மிக்ச் சுலுவான
வழிகளைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள். கொஞ்சம் வேறுவகையாகத்தான் முயலுங்களேன்!
10. மற்றவர்களுக்காக
உணர்ச்சிகளை மறைக்க வேண்டாம். வாய்விட்டு சிரிக்கத் தோன்றுகிறதா? சிரியுங்கள்.
அழவேண்டும் போல் உள்ளதா? அழுங்கள். எப்போதுபம் இரும்பு மனிதன் போர்வை போர்த்திக்
கொண்டிருப்பது தப்பாட்டம்.
11.
உங்களது கனவுகளின் ‘வெற்றி’
என்பது நீங்கள் எவ்வளவு முயன்றீர்கள்-அதற்கு எவ்விதம் பொறுப்பேறுக் கொண்டீர்கள் என்பதில்
தான் உள்ளது. பிறர்மீது ‘சௌகரியமாக’ பழிபோடுவதில் அல்ல!
12.
எல்லாமுமாக, எல்லோரிடத்திலும் இருக்க
முயல்வது சாத்தியமானதல்ல! எனவே பன்முகத்தன்மை என்பதை ஓரளவோடு நிறுத்திக்கொண்டு ‘குறிப்பிட்ட’ துறையில் ‘ஒருமுகமாக’
ஈடுபடுவதே நல்லது!
13.
கவலைகள் உங்களது தினங்களை
விழுங்க அனுமதிக்க வேண்டாம்.
அதீத கவலைகள் தீங்கானவை.