Tuesday, December 29, 2015

உடை ஒழுங்கு...

தமிழ் ஹிந்து நாளிதழுக்கு, கஷ்கத்திலும் மார்பிலும் முடியிருக்கும் ஆண்கள் குறித்து மிகுந்த விசனமாகிவிட்டது.  அத்தகைய ஆண்களைப் பார்த்ததும், பெண்கள்  முகத்தை திருப்பிக்கொள்கிறார்களாம். அதுவும் தொப்பை இருப்பது மிகவும் சங்கடமாக இருக்கிறதாம். 

இந்த ஞானம் எல்லாம், நீதி மன்றம் கோயிலினுள் நாகரீகமாக உடுத்திச் செல்லுங்கள் என அறிவுறுத்தியபின் வந்தவை. 

இந்து அற நிலையத்துறைக்கு, பக்தர்கள் கோயில்களுக்குச் செல்லும்போது, கண்ணியமான உடை உடுத்துக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்த ஆணையிட்டுள்ளது. இந்த நீதிமன்ற ஆணைக்கு ‘ஹிந்து’பத்திரிகையின் எதிர்வினைதான் மேலே சொன்னவை.  நல்ல வேளை இந்த உத்தரவை ‘நீதிமன்றம்’ பிறப்பித்தது. இதையே மதகுருமார்கள் சொல்லியிருந்தால், இந்த ‘மதசார்பின்மை’ வாதிகள் எல்லாம் வெகுண்டெழுந்து சிக்குலரிஸம் பேசி, ஆரவாரித் திருப்பார்கள். நீதிமன்றம் சொல்லியதால், அடக்கி வாசிக்கிறார்கள். சமஸ் அவர்கள், கோர்ட்டின் உத்தரவை மீண்டும் படித்தால் நல்லது. சட்டையைக் கழற்றிவிட்டு வரவேண்டும் என, கோர்ட் சொல்லவில்லை. கண்ணியமாக உடுத்துங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறது.

முதலில், கோயில்களுக்கு இப்படி உடுத்திக்கொண்டு போவதுதான் சரி என ‘கோர்ட்’ உபதேசிக்கும் அளவிற்கு,  நிலைமை கெட்டுப்போனதே அவலம்.  இது குறித்து நமக்கு எந்த வெட்கமும் இல்லை. நமது பாரம்பரியம்-கலாச்சாரம் குறித்த போதனை, புரிதல் இல்லாததே இதற்குக் காரணம். எப்படி வேண்டுமானாலும் உடுத்திக் கொள்ளலாம் என்ற மனோபாவத் தோடு சில தலைமுறைகளை உருவாக்கிவிட்டோம். 

எந்த இடத்திற்குப் போனாலும், அதற்கென ஒரு ஒழுங்கு, எல்லா இடங்களிலும் அமலாகித்தானே இருக்கிறது? பள்ளிக்குச் சென்றால் ‘சீருடை’ அணியத்தானே வேண்டும்? காவலருக்கும் கூட  ஒரு சீருடை உள்ளது. ராணுவத்திற்கும் ஒரு டிரஸ் கோடு..

தொழுவதற்குச் சென்றாலும், எப்படி தொழவேண்டும், எத்தனைமுறை தொழவேண்டும் என்ற  ஒரு ஒழுங்குமுறை இருக்கிறதுதானே? ப்ரேயருக்குச் சென்றாலும் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.  குருத்வாராக்களில் (சீக்கிய கோயில்கள்) பெண்கள் முக்காடிடுட்டுதான்  செல்லவேணும். ஆண்கள் கூட தலையில் துணி கட்ட வேண்டும். சில கேரள கோயில்களில், ஆண்கள் மேலுடை இல்லாமல்தான் செல்கிறார்கள். திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இப்படித்தான் உடுத்திக் கொண்டு வரவேண்டும் என ஒழுங்கு முறைகள் இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் பொங்காத ‘தமிழ் ஹிந்து’ இப்பொழுது பொங்கி வழிகிறது.  அடாடா என்னே கரிசனம்? 

கோயிலில் உள்ள சிலைகளுக்கு முதலில் உடை அணிவித்துவிடவேண்டும் அல்லது அத்தகைய சிலைகளை கோயில்களில் இருந்து ‘வெளியேற்றி’ விட வேண்டுமாம்..  இப்பொழுது புரிந்ததா, இவர்கள் நோக்கம் என்னவென்று?

பெயரில் ‘ஹிந்து’ என வைத்துக் கொண்டிருக்கும் இந்த வீரதீர பத்திரிகை, வேறு யாரைப் பற்றியாவது லேசாக ‘முணக’ தைரியம் பெற்றிருக்கிறதா? இந்து மதத்தைப்பற்றி மட்டும் எப்படி வேண்டுமானாலும் தாறுமாறாக விளாசலாம்..இல்லையா? கோயிலினுள் ‘செல் பேசாதீர்கள்’ என்ற அறிவிப்புகூட ‘வன்முறையாம்’;

சில க்ளப்களில் ஓவர் கோட் போட்டவர்களுக்குத்தான் அனுமதி, வேட்டிக்கு இல்லை என்றதும் பொங்கிப் புளகாங்கிதம் அடைந்து, ‘ஆஹா தமிழனின் ‘வேட்டி’ க்கு இழைக்கப்பட்ட அவமானம் என வரிந்து கட்டியவர்கள், இப்பொழுது வேட்டி அணிந்து ‘கோயிலுக்கு வா’ என்றதும்,  மீண்டும் ஆர்பாட்டம் செய்து, ‘வேட்டி கட்டமாட்டேன்’ என பொங்குகிறார்களே.. என்ன நியாயமோ? 

1 comment:

  1. Samas observations are irrelevant and

    and he has complied with his duty to fill

    the pages. Nothing else.

    Namakkal Venkatachalam

    ReplyDelete