இன்று முகநூலில் ஒருவர் நொந்துபோய் ஒரு
பதிவிட்டிருந்தார். நிவாரண உதவி வழங்குவதற்காக வந்திருந்த ஒரு குழுவிற்கு நேர்ந்த
சில அனுபவங்களை, அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
உதவி வாங்கிய நபர்களே திரும்பத் திரும்ப வந்து
வாங்குவது, பிறருக்கு பொருட்களை கொடுப்பதைத் தடுத்து - தாங்களே பெற்றுக் கொள்வது,
தேவைப்படாதோர் கூட பொருட்களைப் பெற்றுக் கொள்வது, ஒரு ஒழுங்கு முறை இல்லாமல்
அடித்துக் கொள்வது, நிவாரணம் வழங்க வந்த ஒருவரிடமே ‘பர்ஸை’ ஜேப்படி செய்தது என பல
வற்றைக் குறிப்பிட்டிருந்தார். பர்ஸைப் பரிகொடுத்தவர், ‘இவர்களை வெள்ளம் இழுத்துச்
செல்லட்டும்’ என சபித்துவிட்டுச் சென்றுவிட்டாராம். இவ் வெள்ளச் சமயத்தில் நானும் சில தகாத செயல்களை பார்த்திருக்கிறேன்.
இந்த சமுதாயம், ஏன் இப்படி மாறிவிட்டது என சற்று விசனமாயிருந்தாலும், இந்த சமுதாயம்தான், பல இன, மொழி, மத
வேறுபாடுகளைக் கடந்து உதவிக்கரம் நீட்டியிருக்கிறது என்பதை மறந்து விடலாகாது. உதவிக்
கரம் நீட்டியதில் தன்னாலர்வர்கள், அது போன்ற குழுக்களின் பங்கு கனிசமானது. இவர்கள்தான்
உடனடியாக களத்தில் இறங்கினார்கள். பல்வேறு முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தில்,
எல்லோரும் நல்லவராக இருந்திட விழைவது நடக்காத காரியம் தானே?
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அது 1970
கள். அப்பொழுது சேலம் பஸ் நிலையம், பழைய விக்டோரியா தியேட்டர் அருகில் இருந்தது. பேருந்துகள் உள் சென்று வெளிவரக் கூடாத
அளவிற்கு, பழக் கடைகள் நுழைவாயில் ஆக்கிரமிப்பு செய்திருப்பார்கள். காவல்துறை பல முறை எச்சரித்தாலும்,
ஆக்கிரமிப்புகளை அகற்றமாட்டார்கள். ஒரு துடிப்பு மிக்க இன்ஸ்பெக்டர் ஒருவர், கடுப்பாகி,
ஆக்கிரமிக்கப் பட்டிருந்த கடைகளில் அடுக்கியிருந்த பழங்களை, கூடை கூடையாக தூக்கி
வீதியில் எறிந்தார். இதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்னவெனில், அப்பழங்களை அள்ளுவதற்கு (பொறுக்குவதற்கு) ‘கனவான்கள்’
சிலரும் அலைந்ததே! இலவசமாகக் கிடைக்கும்
ஒன்றை எடுத்துக் கொள்வதற்கு எவரும் தயங்கவில்லை. இன்று அந்த ‘சிலர்’, ‘பலராகி’ விட்டனர்.
அவ்வளவே!
இந்த சமுதாய நடத்தைக்கு (ஸொஷல் பிகேவியர்) காரணம்
என்னவாக இருக்கக் கூடும்? ஒரு இடதுசாரி நன்பரிடம் கேட்டேன். ‘அப்படித்தான்
நடக்கும். ஏழ்மை அதிகமாகி, செல்வம் ஒருசிலரிடமே குவியும் போது, கலவரங்கள் நிகழ்வது
சாத்தியமே! நிலைமை மோசாமாகிப் போனால் உணவுக் கலவரம் கூட வரும் (ஃபுட் ரையாட்),
உணவிற்காக கொலையும், கொள்ளையும் கூட நடக்கலாம் என்றார்.
எனக்கென்னவோ அது, முற்றிலும் சரியான நிலைபாடாகத் தோன்றவில்லை. ஓரளவிற்கு உணமை
இருக்கும். ஏழ்மை மிகுந்தால், சில
மாரல்களும், எதிக்ஸ்களும் போய் போய்விடுமா என்ன? ஏழ்மையாயிருந்தால் எப்படி
வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என சலுகை இருக்கிறதா?
‘ஏற்பது இகழ்ச்சி..’ என்று மூதுரைத்ததும் நம்
சமூகம் தானே?
யோசித்துப் பார்த்தால், இரண்டு காரணங்கள்
தோன்றியது. முதலாவதாக, உதவிகள் யாவும் அரசு போன்ற உயர் கட்டமைப்பால், முழுமையாக ஒழுங்கு
படுத்தப்படவில்லை. வெளியூர் ஆட்களுக்கு யாருக்கு உதவி தேவைப்படுகிறது என்ற தெளிவான
வழிகாட்டுதல் இல்லை. எனவே குழப்படிகள் வரும்தான்.
இரண்டாது, தனி நபர் ஒழுங்கு சம்பந்தப்பட்டது. ஒரு தனிமனிதன் ஒழுக்கத்தை எங்கிருந்து கற்றுக்
கொள்ளமுடியும்? பள்ளிக் கூடங்கள், பெற்றோர்கள், நல்ல நூல்கள் போன்றவற்றின் மூலம் தானே? துரதிர்ஷவசமாக, முக்கியமான பங்காற்ற வேண்டிய
நமது கல்விமுறை முழுமையான தோல்வியைக் கண்டிருக்கிறது. முன்பு நமது கல்விமுறை நல்ல ‘குமாஸ்தாக்களை’ உருவாக்கியது. தற்போது கனிதம், இயற்பியல், மின்னனு
போன்றவற்றைக் கற்றுத் தருகிறது. ஆனால் ஒரு ‘நல்ல மனிதனை’ தந்திருக்கிறதா என்றால்,
ஆமாம் என தலையாட்ட முடியவில்லை.
எங்கே தவறு?
தரமான சமுதாயம் வேண்டுமெனில், ‘நன்னெறிகள்’
போதிக்கப் படவேண்டும். அவை அனுசரிக்கப் படவேண்டும். அதாவது,
ஒழுக்க நெறிகளும் சிறுவயதில், பள்ளிகளில் மனதில் பதிய வைக்கப் படவேண்டும். மிக
முக்கியமாக, இவை யாவும், தாய்மொழியில்தான் கற்றுத் தரப்பட வேண்டும். 90%
ஆங்கிலமயமாகிவிட்ட ஒரு கல்விமுறையில் - கனித,
இயற்பியல், உயிரியல் பாடங்களில் நூறு மார்க்குகள் பெற்றே ஆகவேண்டும் என வெறிகொண்டு
ஓடும் ஒரு சமூகமாக மாறிவிட்ட சூழலில், மொழிப்பாடம் (லாங்குவேஜ்) என்பதே கடைபட்சமாக
மாறிவிட்ட நிலையில் திருக்குறளையும், நாலடியாரையும், மூதுரையையும், அக நாணூரையும்
யாருக்குத் தெரிகிறது? இதுவே தெரியாதெனில், பெரியபுராணமும், தேவாரமும்,
திருவாசகமும், பிரபந்தங்களும் எங்கே
தெரியும்?
இவைகளைப் புறந்தள்ளிவிட்டு, எங்கிருந்து ‘நன்னெறிகளை’
கற்றுக் கொள்வது? தமிழில் “ஜஸ்ட் பாஸ் மார்க்” போதுமப்பா என்ற நிலமை வந்துவிட்டது.
“என் குழந்தைகளுக்கு தமிழ் எழுதவெல்லாம்
தெரியாது” என்று சொல்வது கேவலம் என்பது தெரியாமல், அதை ‘கௌரவமாகக் கருதும்’
பெற்றோர்களே அதிகம். “ஸ்போக்கன் இங்க்லீஷ்”
வகுப்பு போல, தமிழில் உரையாட தனி வகுப்பு
நடத்த வேண்டும் போலுள்ளது நிலைமை. எந்த நாட்டிலாவது இந்த அபத்தத்தைக் கண்டதுண்டா? தாய்மொழியில் கற்பிக்கப்படும் நெறிகள்தானே
மனதில் பதியும்!
மோப்பக் குழையும் அனிச்சம் முதல், எனது பொருளாதார திட்டமிடல் வரை, எனகது திட்டமிடலுக்கு அடிப்படை தமிழே! ‘ஆகாறளவிட்டிதாயினும்
கேடில்லை, போகாறகலாக்கடை’ என்ற குறள்தான் இன்னமும் வழிகாட்டுகிறது என்பதை நம்புவீர்களா?
தர்மங்களைப் போதிக்கும், ‘சமயக்
கல்வி’ என்பது இல்லவே இல்லை. தமிழக வினோத அரசியல் காரணங்களினால், திவ்யபிரபந்தங்களும்-தேவாரங்களும்-திருவாசகங்களும்
தீண்டத் தகாதவை ஆகிவிட்டன. கடவுள் பயமற்ற
ஒரு சமுதாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். தன்னைத் தவிர வேறொன்றையும்
எண்ணாத, எப்படி வேண்டுமானாலும்
சம்பாதிக்கலாம் என்ற மனோபாவம் கொண்ட, நியாய-ஒழுக்க நெறிகளுக்கு உடன்படாத ஒரு கூட்டம் வேகமாக
வளர்ந்து வருகிறது
இத்தனை குளறுபடிகளுக்குப் பின்னாலும், இப்போது
நடக்கும் நற்காரியங்களை நினைத்தால் நம்பிக்கை இழந்து போக வேண்டியதில்லை என்று
தோன்றுகிறது.
முயன்றால்,
நம்மால் வழிகாட்டும் இனமாக மாறமுடியும்.
சற்றே நமது கலாச்சார, ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டால், கற்பிக்கப்
பட்டால் போதும்.
நல்ல ஆய்வு. தர்மநெறிக்குட்பட்ட வாழ்வுக்கு செவி கொடுக்காத சமூகம் வளர்கிறது. காரணம் கல்வியின்மை. கலைவிநிலையம் போவது வருவது கல்வி கற்றல் இல்லை. கல்வி கறையில கற்பவர் நாள் சில. எனவே கடினம்தான் மக்கள் தானே திருந்துவது
ReplyDelete