Saturday, December 12, 2015

மூண்றாம் உலக யுத்தம்

மூன்றாம் உலக யுத்தம் வருமா அல்லது வந்தேவிட்டதா என்ற பீதி, அச்சம் இப்பொழுது எழுந்துள்ளது. ஆங்கில மீடியாக்களில் விவாதம் அனல் பறக்கிறது.  ஜாம்பவான்கள், மூன்றாவது யுத்தம் வருமா? வந்தால் அது எப்படி இருக்கும்? எத்தகைய பாதிப்பு இருக்கும் என்றெல்லாம் எழுதி மாய்கிறார்கள்.  

துருக்கி ரஷ்ய விமானத்தை வீழ்த்தியபோதும், சீனக்கடல் பிராந்தியத்தில் அமெரிக்க உளவு விமானம் பறந்த போதும், தென் கொரியா  அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த போதும் இந்த அச்சம் மேலெழுந்தது.  தற்போது
ISIS காரணம் காட்டி மிரளுகிறார்கள்.
இந்த அச்சமும், விவாதமும் புதிதல்ல.  1980 களிலிருந்தே வருவதுதான். சோவியத் யூனியன் இருக்கும்போதும் இந்த அச்சம் உச்சத்தில் இருந்தது. அதன் பிறகும் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பதைப்பூட்டும் நிகழ்ந்தாலும் அது உலகயுத்தமாக மாறிவிடுமா என்ற யூகங்கள் உலாவரும்.  காரணம், விரல்  நுனி அழுத்தலில், அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் புறப்பட்டுவிடக்கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் என்ற பதட்டமே.

இதுவரை நடந்த உலக யுத்தங்களின் அடிப்படையாக இருந்தது, நேரிடையாக  ‘நாடு பிடிக்கும் ஆசை’.  மறைமுகமாக ‘செல்வம்’ கொழிக்கும் நாடாக மாறவேண்டும்; அதற்கு ‘மற்ற நாடுகளை அடிமைப்படுத்தி சுரண்ட வேண்டும்’ என்ற திட்டமே.
தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற   செலவுபிடிக்காத  திட்டங்கள் பலவற்றை மேலை நாடுகள் கைவசம் வைத்திருக்கின்றன. சோவியத் யூனியனையே ‘அதிக’ செலவின்றி சிதறச் செய்யவில்லையா?

எனவே, தற்போதய நிலையில், மூன்றாம் உலகயுத்தம் ஒன்று வருவதற்கான  “நிச்சய வாய்ப்பு” இருப்பதாகத் தோன்றவில்லை.  அதாவது கன்வென்ஷனலாக  நாம் உணர்ந்திருக்கும் படியான யுத்தம் என்றால் (ஃப்ஸிகல் அசால்ட்)

அத்தகைய யுத்தம் அமெரிக்கா உட்பட யாவருக்கும் கட்டுப்படியாகாது.  இன்றைய தினத்தில் ‘போர்’ என்பது  மிகச் செலவு பிடிக்கும் சமாச்சாரம். ஒரு
 நவீன போர்விமானத்தின் அடிப்படை விலை 165 மில்லியன் யு.எஸ் டாலர்.  எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கள் சேர்த்தால் 200 மில்லியன் டாலர் வரும். ரஷ்ய நவீன போர் விமானகளும் ஏறத்தாழ அதே விலை. அட்டாக்கிங்க் நீர்மூழ்கிக் கப்பல் 2.5 பில்லியன் டாலர். விமானம் தாங்கிக் கப்பல் 4,5 பில்லியன் டாலர். பிற ஆயுதங்களை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மூன்றுமாத யுத்தம் பல வளர்ந்த நாடுகளை போண்டியாக்கிவிடும்; அதுவரை எவரேனும் அணுஆயுதங்களை ஏவி மனித குலத்தையே அழித்திருக்காவிட்டால்!!

இந்தியாவால் ஒருமாத யுத்தத்தை  சமாளிக்க முடிந்தாலே பெரிய விஷயம். (நமது வெடிபொருட்களின் ஸ்டாக் அவ்வளவே)

எல்லோரையும் ஏழையாக்கிவிட்டால், மேலை நாடுகள், யாரிடம், எதை விற்று ‘காசு பார்ப்பார்கள்?’

எனவே, உலகை ஒரு பதட்ட்த்திலேயே வைத்திருந்து, எல்லோருக்கும் ஆயுதங்களை விற்று, ‘ரத்த சேதமில்லாமல்’ காசு பார்ப்பது அமெரிக்காவிற்கு உகந்தது தானே?

அப்படி ஆயுதங்களை விற்றுக் கொண்டே இருக்கச் செய்ய, பல யுக்திகளை அமெரிக்கா அறியும். நடக்கும் சிரிய யுத்தம் உட்பட பலவும் அத்தகையதே! ஆனால் தங்களுக்கு யார் எதிரி என்பதை விளங்கிக் கொள்ளாத அல்லது விளங்கியும் அமெரிக்க திட்டங்களுக்கு உடந்தையாகி விட்ட சில நாடுகள் உலகின் துரதிர்ஷ்டம்.

இவற்றை எல்லாம் மீறி யுத்தம் ஒன்று வந்தால் அது அது அமெரிக்காவிற்கும்-சீனாவிற்குமாகத்தான் இருக்கும். (தற்போது அணி சேர்ந்திருக்கும்  நாடுகளின் பட்டியலைப் புறந்தள்ளி விடுங்கள். சீன்கள் மாறிக்கொண்டே இருக்கும்) ஏனெனில், சீனப் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்தை எல்லா முனைகளிலும் வெல்லும் காலம்  வெகுதூரத்தில் இல்லை. ஏற்கனவே அளவில் பெரிய பொருளாதார சக்தியாக 2014 வாக்கில் உருவாகிவிட்டது. ரிடெய்ல் சேல்ஸில் அமெரிக்கவை விஞ்சிவிட்டது சீனா. (சீனா 1.97 ட்ரில்லியன் டாலர். அமெரிக்கா 1.56 ட்ரில்லியன் டாலர்.)

சந்தைப் போட்டியில்  தோல்வியைத் தழுவ அமெரிக்கா விரும்பாது. தங்கள் பொருட்களை விற்பதற்கு உலகில் நாடுகளே இல்லை என்ற கையறு நிலைவந்தால், அமெரிக்கா சீனாவைத் தாக்கலாம்.  இந்தெந்த பொருட்களை நீ விற்றுக்கொள், இந்தெந்த பொருட்களை நான் விற்றுக் கொள்கிறேன் என திரைமறை உடன்பாடு ஏற்பட்டு, தங்கள் போட்டிகளைத் தீர்த்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்தது.

அதுவரை, தங்களது ஆயுதங்களை விற்க, அமெரிக்கா, உலகில் ஏதாவது ஒரு இடத்தில், பதட்டத்தை தோற்றுவித்துக் கொண்டேதான் இருக்கும். 

யுத்தம் வந்தால் அது ‘அணு ஆயுத யுத்தமாகத்தான்’ இருக்கும் என்பதை பெரியண்ணன் நன்கறிவார். அப்படி ஒன்று நடந்தால் மனித இனமே இருக்காது; ஏன் எந்த உயிரனமுமே இருக்காது என்பதையும் அறிவார். எனவே உலக யுத்தம் கவலையின்றி உறக்கம் கொள்க.







No comments:

Post a Comment