Friday, December 25, 2015

உங்கள் கண்களுக்கு ‘நல்லகண்ணு’ தெரியவில்லையா?


இன்று ‘தமிழ் ஹிந்து’ நாளிதழில், ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதன் தலைப்புதான் மேலே கண்டது. 

“எப்பொழுதும் நேர்மைக்கும், எளிமைக்கும் உதாரணமாக, உங்களுக் கெல்லாம்  ‘காமராஜர்’ மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவாரா?  நீங்கள் ஏன் கடந்த காலத்திற்குள் ‘தலையை விட்டுக் கொள்கிறீர்கள்?’ இன்றைக்கும் அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் ‘நல்லகண்ணு’வைத் தெரியவில்லையா?”  என்று இடதுசாரிகள், பத்திரிகைகளைப் பார்த்து கேட்பது போல ஆரம்பிக்கிறது அக்கட்டுரை.

இக்கேள்வியை, ஊடகத்தைப் பார்த்துக் கேட்கவேண்டாம். மாறி..மாறி கோபலபுரதையும்-தோட்டத்தையும் சுமந்துவிட்டு, அடுத்ததாக கோயம்பேட்டையும் சுமக்க தயாராகிக் கொண்டிருக்கும் உங்களது தலைவர்களைப் பார்த்துக் கேளுங்கள் என காட்டமாக பதலளிக்கிறது ‘தமிழ் ஹிந்து’.

தமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது எனவும், மக்கள் இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, ஒரு நேர்மையான அரசியல் தலைமையை தேடிப் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறது அப்பத்திரிகை.  இதற்காக சகாயம் போன்ற அரசு அதிகாரிகளை தேடிப்பிடிக்க வேண்டியதில்லை; இடது சாரி இயக்கங்களில்  நல்லக்கண்ணு போன்ற அரும்பெரும் எளிய, நேர்மையான தலைவர்கள் கொட்டிக் கிடக்கின்றனர் எனவும் கூறுகிறது.

இடதுசாரிகளின் கண்களுக்கே, ‘நல்லகண்ணு’ ஒரு முதல்வர் வேட்பாளர் என, கண்ணுக்குத் தெரியவில்லையே என திரும்ப வினவுகிறது ஹிந்து.

நல்லகண்ணுவை மாத்திரமல்ல, சங்கரையா, ஜி.ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் (சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ) ,முத்தரசன், மகேந்திரன், நன்மாறன், சுகந்தி, வீரபாண்டியன், டில்லிபாபு என ஒரு  பெரிய நேர்மை யாளர்களின் பட்டியலையே ஒப்புவித்திருக்கிறது ஹிந்து. இடது சாரிகளுக்கு இது ஒரு நல்ல தருணம். க. வும் வேண்டாம், ஜெ. யும் வேண்டாம் என இடது சாரிகள் முடிவெடுத்தது நல்ல முடிவு. மாற்றாக, ‘விசயகாந்தையோ’, ‘வைகோவையோ’ முன்னிறுத்தாமல், தாங்கள்தான் மாற்று என இடது சாரிகளை நம்பச் சொல்கிறது அப்பத்திரிகை.

இவர்கள் பெயரெல்லாம், நாடறிந்தவர்கள். இன்னும் முகமறியா  நூற்றுக்கணக்கான தியாகிகள் இடதுசாரி இயக்கத்தில் இருக்கிறார்கள். நான் பணியாற்றிய தொலைபேசித்துறையிலேயே, ‘ரகுனாதன் ‘ போன்ற பலர் இன்னமும் கொண்ட கொள்கையில் இன்னமும் பிடிப்போடு, சுயனலமின்றி, நேர்மையின் உறைவிடமாக இருக்கிறார்கள்.  பல இடங்களில் சிவப்பு சற்றே சாயம்போய் காணப்படினும், இவர்களது தியாகத்திலோ, நேர்மையிலோ குறைகாண இயலாது.

விடுதலை அடைவதற்கு முன்னும் பின்னும் கம்யூனிஸ்ட் கட்சியே (அப்போது பிளவு பட்டிருக்கவில்லை), காங்கிரஸுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக நிலைபெற்றிருந்த்து.  சீன யுத்தத்திற்குபின், இந்திய இடது சாரிகளுக்கு வந்தது வினை. இடது சாரிகளுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே வந்தது சோதனை. இந்திய கம்யூனிஸ்ட்கட்சி பிளவுபட்டது.  அதன்பின் இந்திய இடதுசாரி இயக்கம் பிளவுபட்டது போல,  வேறு எந்த கட்சியாவது உடைந்திருக்குமா என்பது கேள்விக்குறி.

இனி, அதைப்பற்றி விவாதித்து என்ன பலன்? இன்றைய தேவை, இடது சாரிகளின் ஒற்றுமைதான். அப்பத்திரிகையே சொல்லியிருப்பது போல, அவர்களின் ஒற்றுமை அவர்களுக்கு மாத்திரமல்ல.. இந்தியாவிற்கே தேவை.

‘உலகத் தொழிலாளர்களை’ ஒன்றுபடச் சொல்லிவிட்டு, உள்நாட்டில் பிளவுபட்டு நிற்பது எந்த வகையில் சரி எனப் புலப்படவில்லை.

இன்னமும் அடிவானத்தில் கூட தென்படாத ‘மக்கள் ஜன நாயகமா?’, ‘தேசீய ஜன நாயகமா?’ என்ற வினாவினை ஒத்திவைத்துவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்துவிடுவதே அனைவருக்கும் நல்லது.

இதைச் செய்யாவிடில், தத்துவார்த்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் அவர்கள் இன்னமும் நீர்த்துப் போய்விடுவார்கள். இலக்கற்ற தியாகத்தால் என்ன பயன்?  இதே ரீதியில் பயணித்தார்கள் என்றால், எத்தனை நல்லகண்ணுக்கள், எத்தனை மாணிக் சர்கார் வந்தாலும் இடது கப்பலை கரையேற்ற முடியாது. ஒருங்கிணைக்கப்படாத எந்த முயற்சியும், தியாகமும், உழைப்பும் விழலுக்கு இறைத்த நீரே!

இனி மே.வங்கமும்-கேரளமும் கைகூடுமா என்பது பெரிய வினா!

பிளவுபட்ட இடதுஇயக்கங்களால், சுவாரஸ்யமன கோஷ்டிகளை உருவாக்க முடியுமே தவிர, ஒரு அடி கூட முன்னேற முடியாது. அரசியல் அரிச்சுவடிகூட தெரியாத ‘கேஜ்ரிவால்’ ஒரே வருடத்தில், பல சொதப்பல்களுக்குப் பின்னரும் மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியும், அரசமைக்க முடியும் என்றால் இவர்களால் முடியாதா?

தடிமனான தத்துவப் புத்தகங்கள் மக்களைக் கட்டாது. செயல் ஒன்றே மக்களை ஈர்க்கும். நீயா நானா விவாதங்கள் போதும். தேவைக்கும் அதிகமாக, சலித்துப் போகும்வரை, ஓய்ந்து போகும்வரை விவாதித்து அயர்ந்துவிட்டோம்.

தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவெங்கிலும் ஒரு மாற்று மக்களுக்கு தேவைப்படுகிறது. இதைவிட நல்ல தருணம், எதிர்காலத்தில் வாய்க்கும் எனத் தோன்றவில்லை.

சரித்திரத்திற்கு, பலர் பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள். சரித்திரத்தின் முன்னால் கைகட்டி நிற்க வேண்டாம். மாறாக அதை உருவாக்குங்கள்.

3 comments:

  1. சிந்திக்க வைத்த பதிவு. என்னுள்ளும் இப்படி ஒரு நிலை இருந்தது. சிவப்பு சட்டைக்கார்கள் தனித்து நின்று இந்த பிரச்னையை மக்களிடம் கொண்டு சேர்த்தால் ஆட்சியமைக்கக் கூட வாய்ப்பிருக்கிறது. மக்கள் அந்தளவிற்கு அரசியல் கட்சிகள் மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. இந்த பதிவு தமிழ்மணம் சூடான இடுகைகள் பக்கம் வந்தும் கூட திரு.நல்லகண்ணூ பலரின் கண்ணில் படவில்லை போல இருக்குதே.

    கார்ல் மார்க்ஸை கடைத்தெருவில் வைத்து விற்றும்,ரஷ்யாவின் கம்யூனிச வீழ்ச்சிக்குப் பின் காணாமல் போனாலும் போராட்ட குரலாக கம்யூனிஸ்ட்டுகள் இருந்தார்கள். கலைஞருக்கும்,ஜெயலலிதாவுக்கும் ஆறு வித்தியாசம் எளிதாக கண்டு பிடித்து விட முடியும். இடது சாரிகளுக்கும்,வலதுசாரிகளுக்கும் ஒரு வித்தியாசம் என்ன என்று காம்ரேட்களை தவிர்த்து சராசரி மனிதனை கேளுங்கள் பார்ப்போம்.

    நல்லகண்ணு சரியான தேர்வு அல்ல.ஏனென்றால் தமிழர்களுக்கு முகப்பூச்சு அரசியல் தேவை.அப்படியே அவரை முன்னிறுத்தும் எண்ணமிருந்திருந்தால் மக்கள் கூட்டணி உருவான போதே செய்திருக்க முடியும்.

    யூத் என வயோதிக அரசியல்வாதிகள் சிலர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
    தமிழகத்தின் தேவை இளமையும்,புது யுகத்தை புரிந்து கொண்ட ஒருவர். 2016ல் சாத்தியமில்லை.

    ReplyDelete
  3. திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பளித்து இது வரை தமிழகம் கண்டது என்ன?கம்யுனிசத்துக்கு ஒரு வாய்ப்பளிப்பது வரவேற்கதக்கதே

    ReplyDelete