Sunday, December 20, 2015

மனைவிக்கு மற்றும் ஒரு கடிதம்.


என தருமை விஜிக்கு,

பௌதீக உடலாக என்னை விட்டு நீ விலகி, இம்மாதத்தோடு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.  இதோ,  உனது திதியும் வரப்போகிறது.  பிரிவும்-மறைவும், வாழ்வின் நினைவு கூறத்தக்க பசுமையான அம்சங்களை மட்டுமே விட்டுச் செல்லும் என்பார்கள். ஓரளவிற்கு மட்டுமே உண்மை.  எதையும் நான் மறக்கவில்லை.

இறுதிக் காலத்தில் நீ பட்ட அவஸ்தைகளும், துன்பங்களும் இன்னமும் என்னை வாட்டுகின்றன. பிறர் துன்பம் காணப் பொருக்காத உணக்கு, கடுமையான வலிகளே பரிசாகக் கிடைத்தன.  புன்னைகைக்க நினைத்தாலும் உன்னால் இயலவில்லை.  பிறரின் பசியாற்றுவதும், அவர்களுக்கு உடைகள் அளிப்பதும் உனக்கு உவப்பளிக்கும் செயல்கள். ஆனால் இறுதியில் உன்னால் உண்ணக் கூட இயலாத சூழல் வாய்த்துவிட்டது.  ஒரே ஒரு வேளை, ஒரே ஒரு கவளம் உணவு உண்ண மாட்டாயா, பசியாற மாட்டாயா என  நான் தவித்த நாட்கள் ஏராளம்.  ஆண்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டக் கூடாதாமே? எப்பொழுதாவது நன்பர்கள் இல்லத்தில், ஆசையாக நீ ஓரிரு கவளம் உணவுண்டபோது, மறைவாக கண்களைத் துடைத்துக் கொள்வேன்.

எல்லாம் விதிப்படியே நடக்கும் என சொல்லிக் கொள்வது, நம்மை ஏமாற்றிக்கொள்ள, சௌகரியமாக உபாயம்.  நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலேயே உடல் சோதனை செய்திருந்தால் , உன்னை இழந்திருக்க மாட்டேன். எந்த தீய பழக்கங்களும், எந்த எதிர்மறை எண்ணங்களும் அற்ற உனக்கு, என்ன வியாதி வந்துவிடப் போகிறது என்ற அறியாமை என்னை ஆட்கொண்டிருந்தது.  சகலத்திலும் முடிவெடுக்கும் நீ, இதில் மட்டும் எப்படித் தவறிழைத்தாய்?  பிறருக்கு உதவுவதற்கு மட்டுமே மருத்துவ மனைக்குச் சென்ற உனக்கு, அந்த இடமே உன்னைப் பறித்தது என்ன கோரம்?

அன்பு விஜி, நீ விட்டுச் சென்ற வெற்றிடம், உன் அருமை, உனக்கே புரியுமா? அப்படிப் புரிந்திருந்தால் என்னை விட்டுச் சென்றிருப்பாயா? உற்றம், சுற்றம், நட்பு இல்லம் என சகலத்தையும் ஆக்கிரமித்திருந்தாயே!  இந்த வீடு முழுவதும், ஏன் நீ இருக்கும் இடமெங்கிலும் நீ மட்டுமே இருந்தாய்.  நீ இருந்தால் இந்த இடம் முழுவதும் அங்கே அன்பாலும், இன்சொல்லாலும் , நகைச்சுவையாலும் நிரப்பப் பட்டிருக்கும். மனிதர்களை எவ்வளவு நேசித்தாய் என அறிவேன்! உதாரணப் பெண்மணி நீ !   நல்ல மனிதர்கள் ஏன் விரைவாக உலகிலிருந்து விலகி விடுகிறார்கள் என விளங்கவில்லை!

மறைவதற்கு முன்னர், என்னிடம் ஒரு முறை சொன்னாய்! உங்களது திமிர், கம்பீரம், தைரியம், பொலிவு என அனைத்தையும் இழந்துவிட்டீர்கள் என. எல்லாவற்றிற்கும் பின்னாலும்  நீ மட்டுமே இருந்தாய். நீ நோயுற்றதால், எனது குணங்கள் என, நீ குறிப்பிட்டவை அனைத்துமே நோயுற்றதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

விஜி..... நீ மறைந்தபின், வெள்ளமென நிகழ்வுகள் பல நடந்தேறிவிட்டன.  வாழ்க்கை அயர்ச்சியையும், சோர்வையும், சலிப்பையும் தருகின்றன.

“யவருமற்ற ஆள்தானே நீ...  உனக்கென தனியாக அடையாளம் எதற்கு?  உனக்கு உணவிடுவதும், ஏன் உன்னுடன் உரையாடுவதும்  கூட என கருணையால்தான். உன்னை அவமதிப்பது எனது உரிமை ..”  என்ற ஒரு அலட்சியப் பார்வை, சிலரின் பார்வையில், பொதுவான அடித்தளமாகத்  தெரிகிறது.  

மீதி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதே, நிமிர்ந்து நிற்பதுவே, கைகளை ஒருபோதும் மேல் நோக்கி வைத்திருக்காமலிருப்பதே, அவர்களுக்கு என் ஒரே பதில்.   நீயும் அதைத்தான் விரும்புவாய் என நான் அறிவேன்.  நீ பல முறை சொல்லியிருக்கிறாய். “நான் உங்களுக்குப் பின்னர்தான் இறக்க விரும்புகிறேன். ஏனெனில்,   நான் மட்டுமே உங்களைப் புரிந்து கொண்டிருக்கிறேன்“  என. எல்லாம் தலைகீழாய்விட்டது.  


எப்பொழுதும் போல உனது வழிகாட்டுதலில் இன்றும் வாழ்கிறேன்.  உன்னைப் பற்றிப் பேச, பகிர்ந்து கொள்ள, வேறு வழியில்லாததால், இங்கே எழுதுகிறேன்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

4 comments:

 1. சம்பந்தர் தேவாரத்துடன் கடிதம் முடிக்கப்பட்டது மனது நெகிழ்ந்து போனது.
  பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்தது.
  நினைவுகள் நிழலாடும் இனிமை.

  அன்புடன்
  அரசு.

  ReplyDelete
 2. சம்பந்தர் தேவாரத்துடன் கடிதம் முடிக்கப்பட்டது மனது நெகிழ்ந்து போனது.
  பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்தது.
  நினைவுகள் நிழலாடும் இனிமை.

  அன்புடன்
  அரசு.

  ReplyDelete
 3. Life is like that. Every needs to go. Some went early. We are on the way. God will help you.

  ReplyDelete
 4. "" யவருமற்ற ஆள்தானே நீ... உனக்கென தனியாக அடையாளம் எதற்கு?".....இவை ஆழ் மனதின் வலியின் வார்த்தைகள்.இவையெல்லாம்,தற்போதய மனிதர்களுக்கு மற்ற அனைவரும் தனக்கு கீழானவர்கள் என்ற எண்ணமே க் காரணம்.சகோ விஜி அவர்கள் உங்களுடனிருப்பபார் எல்லாத் தருணங்களிலும்.

  ReplyDelete