Wednesday, December 30, 2015

திருவழுவூர்.

மாயூரத்திற்குச் சென்று, மயூரனாதரை தரிசித்துவிட்டு, அருகில் உள்ள அஷ்ட வீரட்டான தலங்களுள் ஒன்றான திருவழுவூர் செல்லத் திட்டம். இந்த தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.  அட்ட வீரட்டான தலங்கள் என்றால், எட்டு இடங்களில், துஷ்டர்களை அழித்த இடங்கள். மற்ற ஏழு இடங்கள்: திருக்கண்டியூர், திருவதிகை, திருக்கோவிலூர், திருப்பறியலூர், திருவிற்குடி, திருக்குறுக்கை மற்றும் திருக்கடவூர். கோயிலினுள் சென்ற உடனேயே, அர்ச்சகர் ஐயப்பன் அவதரித்த தலம் இதுவே என்றார். இது கேள்விப்படாத தகவல்.

தருகாவனத்தில், தவமியற்றிக் கொண்டிருந்த முனிவர்களுக்கு தாங்கள்தான் தவ வலிமையில் உயர்ந்தவர்கள் என்றும், ரிஷி பத்தினிகளுக்கு தாங்கள்தான் கற்பு நிலையில் மிக உயர் வானவர்கள் என்ற அகந்தை ஏற்பட்டதாகவும், அவர்களது ஆனவத்தை அழிக்க சிவனும்-விஷ்னுவும் அவதரிக்க (பிச்சாடன்-மோகினி), அவர்கள் ஈன்றெடுத்த மகவுதான் ஹரிஹரபுத்திரன் (ஐயப்பன்) என்றார் அர்ச்சகர். 

மோகினி, ரிஷிகள் இருக்குமிடத்தை அடைய, அவர்களது தவம் மோகினியின் அழகால் கலைகிறது.  சினங்கொண்ட ரிஷிகள், ஹோமம் வளர்த்து,  ஒரு மதம் கொண்ட யானையை ஏவ, அந்த யானையை அழித்து, ரிஷிகளுக்கும் ஞானத்தை அளித்தாராம். அதனால் இந்த தலத்திற்கு ‘ ஞானசபை ‘ என்ற பெயரும் உண்டு.

மிகப் புராதனமான கோயில்.இறைவன்: வீரட்டேஸ்வரர். இறைவி: இளங்கிளைநாயகி (என்ன அழகான தமிழ்ப்பெயர்!!)

இந்த கோவிலில்
  பித்தளையால் செய்யப்பட்ட  நடராஜர் சிலை, மேற்சொன்ன கஜசம்ஹாரத்தை  அப்படியே   பிரதிபலிக்கிறது. காலடியில் யானையின் தலை. கூடவே பால முருகனை கையில் ஏந்திக்கொண்டிருக்கும் பார்வதி தேவியாருமாக மூர்த்தங்கள் தத்ரூபமாக இருக்கிறது.  நடராஜர் மூர்த்தியின் சிலையில் வேறு எங்கும் காண முடியாத வகையில் சிவபெருமானின் உள்ளங்காலை இங்கே காணலாம். 

இங்கே கஜசம்ஹார மூர்த்தி தான் முக்கியமாக கருதப்படுகிறார்.   மூலவருக்கு "கீர்த்திவாசர் " என்றும் அம்பிகைக்கு "பாலகுராம்பிகை" என்ற பெயரும் உண்டு.

சிதம்பரம் நடராஜராஜரைக்கூட இவ்வளவு அருகில் பார்க்க முடியாது. இங்கு மிக அருகில் தரிசிக்க முடிகிறது. அது மாத்திரமல்ல. நடராஜருக்கு பின்னால் அமையப்பெற்ற ‘சக்கரத்தை’  பார்த்தாலே புன்னியம் என்றார். அர்ச்சகர். மாயூரத்திலிருந்து 10 கி.மீதான். முடியும் பொழுது தரிசித்து வாருங்கள்.


இனி சில புகைப்படங்கள்:






உத்ராபதீஸ்வரர் - திருச்செங்காட்டான் குடி.

வினாயகர் சுயமுகாசுரனை வதம் செய்த பாவம் தீர இங்கு இறைவனை வழிபட்டாராம். அந்த அசுரனது குருதி படிந்து, இந்த இடம் செங்காடாக ஆகியதால், இந்த இடம் செங்காட்டாங்குடி என வழங்கப்படுகிறதாம்.  கணபதிஸ்வரம் என்றும் கூறுகிறார்கள். 

இறைவன் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக் கறி யமுது கேட்டு   நாடகம் ஆடி, பின்னர் சிறுத் தொண்டருக்கும், அவரது மகன், வேலைக்காரி ஆகியோருக்கும் முக்தி அளித்த இடம் இது.

சிறுத் தொண்டருக்கு சிவபெருமான் அருள்புரிந்தது பற்றி கேள்வியுற்ற, பல்லவ மன்னன், இங்கு வந்து சிவபெருமானுக்கு கோயில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்வித்ததாகச் சொல்கிறார்கள்.

            இறைவன்:  உத்ராபதீஸ்வரர். 
            இறவி: சூளிகாம்பாள் (குழலம்மை)
           காலம்: 1000 ஆண்டுகளுக்கு முன்பு.
                  (மயிலாடுதுறைக்கருகில்)












ரத்னகிரீஸ்வரர் ஆலயம் (இதுவும் மாயூரம் அருகே)






Tuesday, December 29, 2015

சௌரிராஜப்பெருமாள் - திருக்கண்ணபுரம்

நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் என்ற ஊரில் காட்சியளிப்பவர் சௌரிராஜப் பெருமாள். இந்த தலம் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. மூலவர் நீலமேகப் பெருமாள்.  உற்சவர் மூர்த்திதான் சௌரிராஜப் பெருமாள். இவரைத் தரிசிக்க வேண்டும் என ஓடோடி வந்தேன். 

இவருடன் இன்னும் ஆறு கோயில்களைத் தரிசிக்க வேண்டும் எனத் திட்டமிட்டருந்ததாலும், மார்கழி மாதங்களில் விரைவாகவே நடை சாத்திவிடுவார்கள் என்பதாலும், பெருமாள் கோயில்களில் அக்கோயில்களின் விதிப்படி  திரைபோட்டு விட்டால் தரிசிக்க முடியாமல் போய்விடுமோ என்ற  அச்சமும் இருந்ததால் அவசரப்பட்டுக் கொண்டு வந்தேன்.  ஒன்றும் பதற வேண்டாம், உனக்கு காட்சி உண்டு என்பது போல எல்லாக் கோயில்களில், சௌரிராஜன் உட்பட, நல்ல தரிசனம் கிடைத்தது.

பெருமாள் இங்கு கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். தானம் பெறும் கரத்துடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக்கொள்வார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது. வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது அதிகாலையில் சிவனாகவும் மாலையில் பிரம்மாவாகவும், இரவில் விஷ்ணுவாகவும் காட்சிதரும் மும்மூர்த்தி தரிசனம் இக்கோயிலின் சிறப்பாகும்.

கோவிலுக்கு வந்த அரசனுக்கு, இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், சுவாமிக்கு சூடிய மாலையை அளிக்க,  அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட்டார். 

அர்ச்சகர்,அரசு அதிகாரியாக இருந்திருக்க வேண்டியவர்  போலும். சும்மா எடுத்துவிட்டுவிட்டார்.   ஒரு வேளை இந்த ஜன்மத்தில் ஐ.ஏ.எஸ் ஆக இருக்கிறாரோ என்னவோ?

அரசன், தான் நாளை வந்து பெருமாளைப் பார்க்கும் போது, பெருமாளுக்கு முடி இல்லையெனில், அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார் என்று கூறிவிட்டுச் சென்றான். திகிலுற்ற அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். 
அரசனிடம் ஏதோ சொல்லிவிட்டாலும்,நிஜமான பெருமாள் பக்தர். காப்பாற்றாமல் இருப்பாரா?

அவரிடம் இரக்கம்கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜப்பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார் என்பது நம்பிக்கை. 


நான் தரிசனம் செய்துகொண்டிருக்கும் பொழுது, பின்னால் நின்ற ஒருவர், பெருமாளின் சௌரியை காணமுடியுமா, காட்டமுடியுமா, தரிசிக்க முடியுமா என விதவிதமாக கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தார். பட்டாச்சார்யார் கண்டு கொள்வதாகவே இல்லை. உற்சவர் உலாவில் அமாவாசையன்று மட்டும் திருமுடி தரிசனம் காணலாமாம். பக்தர் நகருவதாக இல்லை. மூலவருக்கு சௌரி இல்லையா என்று மல்லுக்கு நின்றார். மூலவர் நீலமேகப் பெருமாள்; உற்சவர்தான் சௌரிராஜர் என விளங்கவைப்பதற்கு பெரும்பாடுபட்டார் அர்ச்சகர்.

காளமேகப் புலவர் தெரியும்தானே? இருபொருள்பட பாடுவதில் வல்லவர். பிறப்பால் வைணவர். பின்னர் சைவராக மாறிவிட்டார். இதனால் கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம். மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப் பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி, பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.
கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் - முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது.

நான் சென்றிருந்தபோது ராமருக்கு அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனந்தமான தரிசனம். காணவேண்டிய கோயில்.

சில புகைப்படங்கள்:

கோபுரம்

கோயில் குளம் - நீர் மிகுந்திருந்தாலே அழகுதானே?

வெளியிலிர்ந்து





இந்தபடம் நெட்டில் எடுத்தது



ராதே க்ருஷ்னா!!

கோயிலின் பின்புறம்.

எல்லா கோபுரங்களும்...

உடை ஒழுங்கு...

தமிழ் ஹிந்து நாளிதழுக்கு, கஷ்கத்திலும் மார்பிலும் முடியிருக்கும் ஆண்கள் குறித்து மிகுந்த விசனமாகிவிட்டது.  அத்தகைய ஆண்களைப் பார்த்ததும், பெண்கள்  முகத்தை திருப்பிக்கொள்கிறார்களாம். அதுவும் தொப்பை இருப்பது மிகவும் சங்கடமாக இருக்கிறதாம். 

இந்த ஞானம் எல்லாம், நீதி மன்றம் கோயிலினுள் நாகரீகமாக உடுத்திச் செல்லுங்கள் என அறிவுறுத்தியபின் வந்தவை. 

இந்து அற நிலையத்துறைக்கு, பக்தர்கள் கோயில்களுக்குச் செல்லும்போது, கண்ணியமான உடை உடுத்துக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்த ஆணையிட்டுள்ளது. இந்த நீதிமன்ற ஆணைக்கு ‘ஹிந்து’பத்திரிகையின் எதிர்வினைதான் மேலே சொன்னவை.  நல்ல வேளை இந்த உத்தரவை ‘நீதிமன்றம்’ பிறப்பித்தது. இதையே மதகுருமார்கள் சொல்லியிருந்தால், இந்த ‘மதசார்பின்மை’ வாதிகள் எல்லாம் வெகுண்டெழுந்து சிக்குலரிஸம் பேசி, ஆரவாரித் திருப்பார்கள். நீதிமன்றம் சொல்லியதால், அடக்கி வாசிக்கிறார்கள். சமஸ் அவர்கள், கோர்ட்டின் உத்தரவை மீண்டும் படித்தால் நல்லது. சட்டையைக் கழற்றிவிட்டு வரவேண்டும் என, கோர்ட் சொல்லவில்லை. கண்ணியமாக உடுத்துங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறது.

முதலில், கோயில்களுக்கு இப்படி உடுத்திக்கொண்டு போவதுதான் சரி என ‘கோர்ட்’ உபதேசிக்கும் அளவிற்கு,  நிலைமை கெட்டுப்போனதே அவலம்.  இது குறித்து நமக்கு எந்த வெட்கமும் இல்லை. நமது பாரம்பரியம்-கலாச்சாரம் குறித்த போதனை, புரிதல் இல்லாததே இதற்குக் காரணம். எப்படி வேண்டுமானாலும் உடுத்திக் கொள்ளலாம் என்ற மனோபாவத் தோடு சில தலைமுறைகளை உருவாக்கிவிட்டோம். 

எந்த இடத்திற்குப் போனாலும், அதற்கென ஒரு ஒழுங்கு, எல்லா இடங்களிலும் அமலாகித்தானே இருக்கிறது? பள்ளிக்குச் சென்றால் ‘சீருடை’ அணியத்தானே வேண்டும்? காவலருக்கும் கூட  ஒரு சீருடை உள்ளது. ராணுவத்திற்கும் ஒரு டிரஸ் கோடு..

தொழுவதற்குச் சென்றாலும், எப்படி தொழவேண்டும், எத்தனைமுறை தொழவேண்டும் என்ற  ஒரு ஒழுங்குமுறை இருக்கிறதுதானே? ப்ரேயருக்குச் சென்றாலும் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.  குருத்வாராக்களில் (சீக்கிய கோயில்கள்) பெண்கள் முக்காடிடுட்டுதான்  செல்லவேணும். ஆண்கள் கூட தலையில் துணி கட்ட வேண்டும். சில கேரள கோயில்களில், ஆண்கள் மேலுடை இல்லாமல்தான் செல்கிறார்கள். திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இப்படித்தான் உடுத்திக் கொண்டு வரவேண்டும் என ஒழுங்கு முறைகள் இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் பொங்காத ‘தமிழ் ஹிந்து’ இப்பொழுது பொங்கி வழிகிறது.  அடாடா என்னே கரிசனம்? 

கோயிலில் உள்ள சிலைகளுக்கு முதலில் உடை அணிவித்துவிடவேண்டும் அல்லது அத்தகைய சிலைகளை கோயில்களில் இருந்து ‘வெளியேற்றி’ விட வேண்டுமாம்..  இப்பொழுது புரிந்ததா, இவர்கள் நோக்கம் என்னவென்று?

பெயரில் ‘ஹிந்து’ என வைத்துக் கொண்டிருக்கும் இந்த வீரதீர பத்திரிகை, வேறு யாரைப் பற்றியாவது லேசாக ‘முணக’ தைரியம் பெற்றிருக்கிறதா? இந்து மதத்தைப்பற்றி மட்டும் எப்படி வேண்டுமானாலும் தாறுமாறாக விளாசலாம்..இல்லையா? கோயிலினுள் ‘செல் பேசாதீர்கள்’ என்ற அறிவிப்புகூட ‘வன்முறையாம்’;

சில க்ளப்களில் ஓவர் கோட் போட்டவர்களுக்குத்தான் அனுமதி, வேட்டிக்கு இல்லை என்றதும் பொங்கிப் புளகாங்கிதம் அடைந்து, ‘ஆஹா தமிழனின் ‘வேட்டி’ க்கு இழைக்கப்பட்ட அவமானம் என வரிந்து கட்டியவர்கள், இப்பொழுது வேட்டி அணிந்து ‘கோயிலுக்கு வா’ என்றதும்,  மீண்டும் ஆர்பாட்டம் செய்து, ‘வேட்டி கட்டமாட்டேன்’ என பொங்குகிறார்களே.. என்ன நியாயமோ? 

Sunday, December 27, 2015

மாயவரம்.

இவ்வளவு நாள் இங்கே இருக்கிறோம்;  நூறு கி.மீ, அருகே உள்ள மாயூர நாதரை தரிசிக்காமல் இருக்கிறோமே என்று தோன்ற, இன்று காலை மாயூரம் பயணம். (மயிலாடுதுறை). போகும் வழியில், 108 திவ்ய தேசத்துள், 22வது வரிசையில் வரும் பரிமளரங்கனாதர் கோயிலைப் பார்த்தால் என்ன எனத் தோன்றவே, வண்டியை இந்தளூர்-பரிமள ரங்கனை நோக்கித் திருப்பினோம்.

ஏற்கனவே அலங்காரப் ப்ரியரான மஹாவிஷ்ணு இங்கே சயன கோலத்தில் மிகுந்த அழகுடன் இருக்கிறார்.


இறைவன்: பரிமள ரங்கநாதர் தல இறைவி : பரிமள ரங்கா நாயகி தீர்த்தம் : இந்து புஷ்கரணி. பட்டாச்சார்யார் இக்கோயில் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார். திருமங்கையாழ்வார் அவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.பஞ்சரங்க திருத்தலங்களுள்ஒன்று. பஞ்சரங்க ஸ்தலங்கள்: ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்), ஸ்ரீரங்கம், ஆதிரங்கம், கும்பகோணம் மற்றும் இக்கோயில்
திருஇந்தளூர்

.
பெருமாள் மேல் மிகுந்த பக்தி கொண்ட அம்பரீசன் என்ற அரசனது ஏகாதசி விரதத்தை முறியடிக்க தேவர்கள், துர்வாச முனிவரை வேண்ட, அவரும் சம்மதிக்க, முனிவர் சில சதிவேலைகளில் ஈடுபட, அரசன் பெருமாளை வேண்ட, பெருமாளும் அரசனை ரட்சித்து, துர்வாசருக்கும் தவறைஉணர்வித்தார்.  பக்தியின் பெருமையையும், விரதத்தின் வலிமையையும் விளக்கும் திருத்தலம் இந்த திருஇந்தளூர் திருத்தலம். மேலும் இத்தலத்தை குறித்து வேறு கதைகளும் உள்ளன.

அற்புதமான சிற்பங்கள் நிறைந்த கோயில்.  சிலவற்றைக் காணூங்கள்.


















----------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து சென்றது புகழ்பெற்ற மயூரநாதர்  திருக்கோயில் . மிகழப் பழமையான, அழகான கோயில். அம்மன் மயில் ரூபத்தில், இறைவனை வழிபட்ட இடம். இத்தலத்தைப் பாடாத புலவர்கள் இல்லை என சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.





மயூர நாதர் / அபயாம்பிகை / பிரம தீர்த்தம். 1500 ஆண்டுகள் பழமையானது.

அதென்ன, ஒரு சன்னதியிலும் ஒரு சிவாச்சார்யாரும் இல்லை?. பூட்டிய கதவுகளுக்கிடையேதான் தரிசனம், காலை ஏழரை மணிக்கே.

தரிசனம் முடித்துவிட்டு, அக்கால நினைவில் 'காளையாக்குடி' சென்று காலைச் சிற்றுண்டி முடிக்கத் திட்டமிட்டேன். ம்ம்..ஹூம்..  மிக, மிகச் சாதாரணமாகி இருக்கிறது. 

(திருவாரூர் சாலையில்  இருந்தஇன்னும் சில கோயில்களையும்  தரிசித்தேன்.. அவை அடுத்த பதிவுகளில் ....)

Friday, December 25, 2015

உங்கள் கண்களுக்கு ‘நல்லகண்ணு’ தெரியவில்லையா?


இன்று ‘தமிழ் ஹிந்து’ நாளிதழில், ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதன் தலைப்புதான் மேலே கண்டது. 

“எப்பொழுதும் நேர்மைக்கும், எளிமைக்கும் உதாரணமாக, உங்களுக் கெல்லாம்  ‘காமராஜர்’ மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவாரா?  நீங்கள் ஏன் கடந்த காலத்திற்குள் ‘தலையை விட்டுக் கொள்கிறீர்கள்?’ இன்றைக்கும் அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் ‘நல்லகண்ணு’வைத் தெரியவில்லையா?”  என்று இடதுசாரிகள், பத்திரிகைகளைப் பார்த்து கேட்பது போல ஆரம்பிக்கிறது அக்கட்டுரை.

இக்கேள்வியை, ஊடகத்தைப் பார்த்துக் கேட்கவேண்டாம். மாறி..மாறி கோபலபுரதையும்-தோட்டத்தையும் சுமந்துவிட்டு, அடுத்ததாக கோயம்பேட்டையும் சுமக்க தயாராகிக் கொண்டிருக்கும் உங்களது தலைவர்களைப் பார்த்துக் கேளுங்கள் என காட்டமாக பதலளிக்கிறது ‘தமிழ் ஹிந்து’.

தமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது எனவும், மக்கள் இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, ஒரு நேர்மையான அரசியல் தலைமையை தேடிப் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறது அப்பத்திரிகை.  இதற்காக சகாயம் போன்ற அரசு அதிகாரிகளை தேடிப்பிடிக்க வேண்டியதில்லை; இடது சாரி இயக்கங்களில்  நல்லக்கண்ணு போன்ற அரும்பெரும் எளிய, நேர்மையான தலைவர்கள் கொட்டிக் கிடக்கின்றனர் எனவும் கூறுகிறது.

இடதுசாரிகளின் கண்களுக்கே, ‘நல்லகண்ணு’ ஒரு முதல்வர் வேட்பாளர் என, கண்ணுக்குத் தெரியவில்லையே என திரும்ப வினவுகிறது ஹிந்து.

நல்லகண்ணுவை மாத்திரமல்ல, சங்கரையா, ஜி.ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் (சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ) ,முத்தரசன், மகேந்திரன், நன்மாறன், சுகந்தி, வீரபாண்டியன், டில்லிபாபு என ஒரு  பெரிய நேர்மை யாளர்களின் பட்டியலையே ஒப்புவித்திருக்கிறது ஹிந்து. இடது சாரிகளுக்கு இது ஒரு நல்ல தருணம். க. வும் வேண்டாம், ஜெ. யும் வேண்டாம் என இடது சாரிகள் முடிவெடுத்தது நல்ல முடிவு. மாற்றாக, ‘விசயகாந்தையோ’, ‘வைகோவையோ’ முன்னிறுத்தாமல், தாங்கள்தான் மாற்று என இடது சாரிகளை நம்பச் சொல்கிறது அப்பத்திரிகை.

இவர்கள் பெயரெல்லாம், நாடறிந்தவர்கள். இன்னும் முகமறியா  நூற்றுக்கணக்கான தியாகிகள் இடதுசாரி இயக்கத்தில் இருக்கிறார்கள். நான் பணியாற்றிய தொலைபேசித்துறையிலேயே, ‘ரகுனாதன் ‘ போன்ற பலர் இன்னமும் கொண்ட கொள்கையில் இன்னமும் பிடிப்போடு, சுயனலமின்றி, நேர்மையின் உறைவிடமாக இருக்கிறார்கள்.  பல இடங்களில் சிவப்பு சற்றே சாயம்போய் காணப்படினும், இவர்களது தியாகத்திலோ, நேர்மையிலோ குறைகாண இயலாது.

விடுதலை அடைவதற்கு முன்னும் பின்னும் கம்யூனிஸ்ட் கட்சியே (அப்போது பிளவு பட்டிருக்கவில்லை), காங்கிரஸுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக நிலைபெற்றிருந்த்து.  சீன யுத்தத்திற்குபின், இந்திய இடது சாரிகளுக்கு வந்தது வினை. இடது சாரிகளுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே வந்தது சோதனை. இந்திய கம்யூனிஸ்ட்கட்சி பிளவுபட்டது.  அதன்பின் இந்திய இடதுசாரி இயக்கம் பிளவுபட்டது போல,  வேறு எந்த கட்சியாவது உடைந்திருக்குமா என்பது கேள்விக்குறி.

இனி, அதைப்பற்றி விவாதித்து என்ன பலன்? இன்றைய தேவை, இடது சாரிகளின் ஒற்றுமைதான். அப்பத்திரிகையே சொல்லியிருப்பது போல, அவர்களின் ஒற்றுமை அவர்களுக்கு மாத்திரமல்ல.. இந்தியாவிற்கே தேவை.

‘உலகத் தொழிலாளர்களை’ ஒன்றுபடச் சொல்லிவிட்டு, உள்நாட்டில் பிளவுபட்டு நிற்பது எந்த வகையில் சரி எனப் புலப்படவில்லை.

இன்னமும் அடிவானத்தில் கூட தென்படாத ‘மக்கள் ஜன நாயகமா?’, ‘தேசீய ஜன நாயகமா?’ என்ற வினாவினை ஒத்திவைத்துவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்துவிடுவதே அனைவருக்கும் நல்லது.

இதைச் செய்யாவிடில், தத்துவார்த்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் அவர்கள் இன்னமும் நீர்த்துப் போய்விடுவார்கள். இலக்கற்ற தியாகத்தால் என்ன பயன்?  இதே ரீதியில் பயணித்தார்கள் என்றால், எத்தனை நல்லகண்ணுக்கள், எத்தனை மாணிக் சர்கார் வந்தாலும் இடது கப்பலை கரையேற்ற முடியாது. ஒருங்கிணைக்கப்படாத எந்த முயற்சியும், தியாகமும், உழைப்பும் விழலுக்கு இறைத்த நீரே!

இனி மே.வங்கமும்-கேரளமும் கைகூடுமா என்பது பெரிய வினா!

பிளவுபட்ட இடதுஇயக்கங்களால், சுவாரஸ்யமன கோஷ்டிகளை உருவாக்க முடியுமே தவிர, ஒரு அடி கூட முன்னேற முடியாது. அரசியல் அரிச்சுவடிகூட தெரியாத ‘கேஜ்ரிவால்’ ஒரே வருடத்தில், பல சொதப்பல்களுக்குப் பின்னரும் மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியும், அரசமைக்க முடியும் என்றால் இவர்களால் முடியாதா?

தடிமனான தத்துவப் புத்தகங்கள் மக்களைக் கட்டாது. செயல் ஒன்றே மக்களை ஈர்க்கும். நீயா நானா விவாதங்கள் போதும். தேவைக்கும் அதிகமாக, சலித்துப் போகும்வரை, ஓய்ந்து போகும்வரை விவாதித்து அயர்ந்துவிட்டோம்.

தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவெங்கிலும் ஒரு மாற்று மக்களுக்கு தேவைப்படுகிறது. இதைவிட நல்ல தருணம், எதிர்காலத்தில் வாய்க்கும் எனத் தோன்றவில்லை.

சரித்திரத்திற்கு, பலர் பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள். சரித்திரத்தின் முன்னால் கைகட்டி நிற்க வேண்டாம். மாறாக அதை உருவாக்குங்கள்.

Thursday, December 24, 2015

விட்டலாபுரம்


சில கோயில்களுக்கு போகவேண்டும் என பலகாலம் திட்டமிடுவோம். ஏதோ ஒரு காரணத்தால் திட்டம் கைகூடாது. ஆனால் சடாரென அக்கோயிலுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டிவிடும்.

இன்று அப்படி தரிசனம் செய்த ஒரு கோயில் ‘விட்டலாபுரம்’. புதுவையிலிருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில் புதுப்பட்டினம் அருகே இருக்கும் ஊர் விட்டலாபுரம். இங்கே காட்சியளிப்பவர் பாண்டுரங்கன். விட்டலேஸ்வரர் என்னும் ‘பிரேமிக விட்டல்’. இக்கோயிலுக்கு செல்ல வேண்டும் என ஒருவருடமாக நினைத்துக் கொண்டிருந்தாலும் சாத்தியப்படவில்லை.

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது. விஜய நகர பேரரசால் தமிழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதல் பாண்டுரங்கன் கோயில் இது என்கிறார்கள். வெகுகாலமாக சிதலாமகிக் கிடந்த கோயில். பரணூர் ஸ்ரீ கிருஷ்ணப் ப்ரேமி அவர்களின் முன்முயற்சியில், இக்கோயில் புணருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வு இலாக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வெகு அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது இக்கோயில். கர்ப்பக்கிரஹத்தில், பாண்டுரங்கன், ருக்மணி-சத்யபாமாவுடன் காட்சியளிக்கிறார். சம்ப்ரதாயமான பூஜைகள் இல்லை; மாறாக நாமசங்கீர்த்தனங்களே ப்ரதானம்.  பாண்டுரங்கன் எப்பொழுதும் போல அலங்காரத்தில் அற்புதமாயிருக்கிறார்.  கோயிலுக்கு எதிரே ஆஞ்சனேயரும், த்வஜ்ஸ்தம்பத்தின் அருகே கருடாழ்வாரும், விட்டல் சன்னதியின் அருகே சந்தானலக்ஷ்மி தாயாரும் காட்சியளிக்கின்றனர். 

அருகே, ஸ்ரீனிவாசப்பெருமாள், வரதாரஜப்பெருமாள், ராமானுஜர் & விஸ்வக்சேனர் ஆகியோருக்கும் தனித்தனியே சன்னிதிகள் இருக்கின்றன. உற்சவ மூர்த்திகளான, விட்டல், ருக்மணி, சத்யபாமா அழகோ அழகு.  சுற்றிலும் பூந்தோட்டங்கள்;  நேர்த்தியாக பராமரிக்கிறார்கள். கோயில் குருக்கள், விட்டல் ஸ்வாமி சிவாதாரமாகவும் இருப்பதால், வைகுண்ட ஏகாதசி போல, மஹாசிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது என்றார்.  கோயிலின் சுத்தமும், அழகும் அமைதியைத்தரவல்லவை.


மாலை நேரத்தில், சிலரே குழுமும் பக்தர்களின்  இனிமையான ‘நாமாவளிகளின்’ பின்ன்னியில் யாருக்குத்தான் சட்டென தியானம் கைகூடாது?  தரிசிக்க வேண்டிய தலம்.


அஞ்சநேயர் 

முகப்பு 


சந்தான லட்சுமி தாயார் சந்நிதி 





புணருத்தாரணம் செய்யப்படுவதற்கு முன்னால் 

விட்டல்