Saturday, October 1, 2011

ரூம் நெம்பர்-32

அந்த லாட்ஜ் டவுன் - ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி இருந்தது.  
"லாட்ஜிங்' மாத்திரம் தான்.   'போர்டிங்க்-க்கு (சாப்பாட்டிற்கு), பக்கத்து கடை.  ரெண்டு கடைக்கும் ஒரே முதலாளி.  


அந்த லாட்ஜில் தான்,  நான் 'மேனேஜர்' உத்தியோகம் பார்த்தேன். .  'மேனேஜர்' என்றதும் நீங்கள் ஏதேனும் 'ஆபீஸை' நினைத்துக் கொள்ளாதீர்கள்.  


வரும் 'கஸ்டமர்களுக்கு' சிங்கிளா? டபிளா?' கேட்டு ரூம் புக் பண்ணும் வேலை.  ரிஜிஸ்டர் 'மெயிண்டென்' பன்னுவதும்-வரவு செலவு 
பார்த்துக் கொள்வதும் தான் பிரதான வேலை. நிதம் காலை பத்து மணிக்கு வரும் முதலாளிக்கு, கணக்கு ஒப்படைத்து அவர் 'சரி' சொன்னதும்,
வசூல் பணத்தை 'பாங்கிலோ' போர்டிங்கிலோ' கொடுத்துவிட்டு கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.


ரூம்களுக்கு 'பெட்ஷீட் மாற்ற, தண்ணீர் வைக்க, கிளீன் பண்ண ரூம் பாய்கள் ' உண்டு.   ஆணால் வேலயில் கணக்கெல்லாம் பார்க்க முடியாது.  நானேகூட சில சமயம் மேற்சொன்ன 'வேலை' களை செய்ய வேண்டி வரும்.


அந்த லாட்ஜில் என்னையும் சேர்த்து 4 பேர் வேலை செய்தோம்.  லாட்ஜிலேயே தங்கிக்கொள்வோம்.  'ரூம் பாயகள்' வராண்டாவிலேயே 
படுத்துக் கொள்ள , நான் 'மேஜையில்'.   சாப்பாட்டுற்கு, 'போர்டிங்' கடைக்குப் போய்விடுவோம். ஃபரீ தான். எங்களை மாதிரி,  முதலளி கடைகளில் வேலை செய்பவர்களுக்கென் தனி மேஜை ' உட்புரமாக' இருக்கும்.  எங்களுக்கு வேண்டியதை நாங்களே போட்டுக் கொள்ளலாம். 
ஆனால் 'ஸ்வீட்' , ' தயிர்',  'வடை' போன்ற ஐட்டங்கள் கிடையாது.


"ஹோட்டலிலும்-லாட்ஜிலும்'  வேலை செய்தவர்கள் பலரும் 'ஊரில்' பிழைக்க முடியாதவர்கள், வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்,  வேறு வேலை கிடைக்காதவர்கள், படிக்காதவர்கள் போன்ற வகைக்குள் 'அடங்கிவிடுவர்'.   சம்பளம் என்று ஏதும் கிடையாது.  தங்கி - சாப்பிட்டுக்கொள்ளலாம்.  முதலாளி நினைத்தால் 'அவ்வப்போது' பத்தோ, இருவதோ கிடைக்கும்.  நாங்கள் எங்களது செலவுகளை பார்த்துக் கொள்வது 'கஸ்டமர்கள்' த்ரும் 'டிப்ஸ்' மூலம். எனவே நாங்கள் 'கஸ்டமர்களை' கவனித்துக் கொள்வது, டிப்ஸ் கருதி அவசியமாயிற்று. 


வாடிக்கையாளர்கள், ஏதாவது வாங்கி வரச்சொல்லும் போது அடிக்கும் கமிஷன், ரூம் பாய்களைச் சார்ந்தது.  ரூம் காலி பண்ணும் போது கிடைக்கும் கமிஷனில் மேனஜரும்-ரூம் பாய்களூம் 50-50 பங்கிட்டுக் கொள்ள வேண்டும், என்பது அப்போதெல்லாம் அனைத்து 'லாட்ஜ்' களிலும் எழுதப்படாத ரூல்.  


லாட்ஜ் தொழிலில் 'பீக்', 'ஆஃப் பீக்' என இருவகை உண்டு.  'பீக்' பீரியட் களில்' வடகையெல்லாம் உச்சத்திலிருக்க, ஆஃப் பீக்கில் தலைகீழ்.
கஸ்டமர்களை லாட்ஜ்களில்' கொண்டு வந்து சேர்க்க 'ஏஜண்ட்கள்' எல்லாம் உண்டு.  அவர்களுக்கு நாங்கள் கமிஷன் தருவது போன்ற  
'தொழில் நுட்பங்கள்' பல உண்டு. 


வேலை செய்பவர்களுக்கு வேலை நேரம் என்று எதுவும் இல்லை.   'வயிற்று பிரச்சினை'  தீர்ந்து விடுவதால்,  நாங்கள், 24 மணி நேர வேலை 
என்றாலும் கூட,  புகார் ஏதும் கூறுவதில்லை. 


ரூமில் யாரிடமாவது 'கை' வைத்து, மாட்டிக் கொண்டு உதையுடன் வெளியேற்றப்படும் ரூம் பாகளும், ஊரிலிருந்து வரும் 'ஆட்கள்' அடையாளம் கண்டு பிடித்து பசங்களை "செவுளில்' ரெண்டு விட்டு" இழுத்துக் கொண்டு போவதும், அவ்வப்போது நடக்கும்.  வீட்டை விட்டு ஓடி வரும் பையன்களுக்கு பஞ்சமேதும் இருந்ததில்லையாதலால்,  " வேலைக்கு " ஆள் கிடைப்பதில், சிரமமேதும் இருந்ததில்லை.  




எங்களது அனுபவத்தில், 'லாட்ஜில்' தங்கும் நபர்கள், ஒருவிதமான 'குஷி' மூடில் இருப்பதை எப்போது பார்த்திருக்கிறோம்.  ஒரு வேளை,  ஒரு சில நாட்களேனும் 'வீட்டை விட்டு' வெளியே வந்து 'சுதந்திரத்தை' அனுப விக்கும் 'உற்சாகமா?'  அல்லது  'தப்பு செய்வதை கேட்பதற்கு ஆள் இல்லை' என்ற எண்ணம் கொடுக்கும் "குதூகலமா?' தெரியவில்லை.   


பசங்ககள் 'சிகரெட்',' ஹாஃப்,'குவார்ட்டர்' போன்றவற்றை 'ஸ்டாக்' வைத்து இருப்பர்.  வேளை கெட்ட நேரத்தில் கேட்கப்படும் போது
' நல்ல விலைக்கு விற்பதற்காக.'   எங்கள் லாட்ஜில் 'குடும்பத்தோடு' வந்து தங்குபவர்கள் அநேகமாக இல்லை.  


இப்படிப்பட்ட , சுவாரஸ்யம் எதுமற்ற 'மற்றுமொரு' நாளாக அன்றைய பொழுது கழிந்தது.  "மணி ராத்திரி 12 ஆகப்போகிறது.   ரெண்டாவது ஆட்டம்' விடப்போகிறது. இனி 'கிராக்கி' எவரும் வர மாட்டார்கள்.  கணக்கெல்லாம் காலையில் பார்த்துக் கொள்ளலாம்."  


அன்றைய வசூலை எண்ணி பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, அந்த மேஜை மேலேயே ஒரு 'தலாணி' வைத்து படுத்தேன். 


ஒரு அரைமணி நேரம் சென்றிருக்கும். 


 'ஏய் கதவைதொறங்கடா..........!'  குரலிலேயே தெரிந்து விட்டது!  
'மாமாக்கள்'  என எங்களால் அழைக்கபடும் அவர்கள் வந்து விட்டனர்.


இந்த நேரத்தில் ரூம் நெம்பர் '32' பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும்.   அந்த அறை தான் 'ஐட்டங்கள்' தங்கும் ரூம்.  கஸ்டமர் தேவைக்கு இங்கிருந்து தான் சப்ளை.  அந்த அறை 'சரசக்கா' என்றழைக்கப்படும் பெண்ணிற்கு நிரந்தரமாக ஒதுக்கப்பட்டது.  அவள் மட்டும் தான் நிரந்தரம்.  அவள் அழைத்துவரும் 'ஐட்டங்கள்' 10 நாட்களுக்கு ஒருமுறை மாறும்.  இந்த விஷயம் 'ரெகுலர்' ஆட்களுக்கும், ஏஜண்ட்களுக்கும் தெரியுமாதலால், பெரும்பாலும் லாட்ஜில் ரூம்கள் நிறைந்து விடும். 


எனக்கு, இந்த 32-ம் ரூம் பெண்களின் தினசரி வார்த்தைப் பிரயோ கங்களான்,  'ஓவர் நைட்'   ,  'அவர் கணக்கு',  'ரேட்'  போன்ற விஷயங்க ளில்லாம் ஈடுபாடு இருந்தது இல்லை.  பயமா, கூச்சமா அல்லது தயக்கமா தெரியவில்லை. அந்த 'சரசக்கா' மட்டும்அடிக்கடி என்னைச் சீண்டுவாள். 
"தம்பி ...ரொமப கூச்சப்படுது என கண்ட இடங்களில்தொட, நிஜமாகவே வெட்கம் வர, ஓடி வந்துவிடுவேன்.    


எனது கவணமெல்லாம் அவளிடமிருந்து 'கிடைக்கும்' டிப்ஸ்ஸில் தான்.  வாரம் தோறும் கனிசமாக கொடுப்பாள்.


'ஜெயா'வில் ஃப்ர்ஸ்ட்கிளாஸில் படம் பார்த்து,  'வினாயக கந்தாவில்-ஸ்பெஷல் சப்பாத்தி சாப்பிட்டு, வேஷ்டி சட்டை வாங்கி,  இன்னமும் மீதி இருக்கும்.   அந்த வேலையத்தான் நாளைக்கு, நாண் விட்டு விடப் போகி 
றேன். இனி 'மாமாக்களைக் கவணிப்போனம்!'


கேட்டைத்திறந்ததும்..  'யாருப்பா மேனேஜர்?'.  


'நான் தான் சார்!'...


அவர் எதிர் நோக்கிய உருவம் பொருந்தவில்லை போலும்!  வேஷ்டி-சட்டையில் 18 வயது பையனை எதிர்பார்த்திருக்க மாட்டார்.


'நோட்டை எடுறா...' ஏறக்குறைய பிடுங்கிக் கொண்டு, சொல்லி வைத்தாற் போல 'ரூம் 32-க்கு தாவினார் ர்.  பின் நடந்தவைகள் யாவும் நீங்கள்
யூகித்திருப்பீர்கள்.


சரசக்காவுடனும்,  நான்கு 'ஐட்டங்களுடனும்'  ஜீபில் ஏறினேன்!


"சாரே...இன்னிய பொழப்ப கெடுத்துட்டீயே.. போன வாரம் தானே கண்டுக்கினேன்..அதுக்குள்ள ஏன் சாமி ரெய்டு?"


சரசக்கா ஸ்டேஷனில் 'மாமாவிடம்' முறையிட்டாள்!


"அடி செருப்பாலே..மூடிகினு கிட..."  'நீ கண்டுக்கினா ஆச்சா?  லாட்ஜ் ஓணர் என்ன பண்றான்?


எனக்கும் விஷயம் விளங்கியது!


நல்ல வேளை. என்னையும் உள்ளே போட வில்லை. ஓரமாக உட்கார வைக்கப்பட்டேன்.


"அந்தாளு கண்டுக்காததுக்கு என்னிய தாளிக்கிறியா சாமி?...


"எங்களதான் உள்ள போட்டுட்டியே..அந்த தம்பி நல்ல புள்ள...அதுக்கு ஒண்ணும் தெரியாது...அத்த வுட்டுடு சாமி.." "அத்தப் புடிச்சு வச்சு என்ன ஆவப்போவுது......".  என்னைத்தான் சொல்லுகிறாள்!


'என்னை புடிச்சு வச்சிருக்கும்'  காரணம் வாசலில் 'பஜாஜ்' ஸ்கூட்டர் வந்து நின்றதும் தெரிந்தது.


'ஓணர்' தான் வந்தார்.  வெளியே நடந்த பேரங்களுக்குப்பின், நானும் ஓனரும் 'லெட்ஜருடன்'  கிளம்பினோம்.


'தம்பி... காலேல, கோர்ட்டுல ஃபைன் கட்டிட்டு வந்துடரோம்...நீ போய் வா..' .....சரசம்மா.


லாட்ஜ்க்கு அவர் 'ஸ்கூட்டரிலேயே திரும்பினேன்.


"வல்லார.....இவங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது..."


 'ஏண்டா.....?    வராங்கன்னு தெரிஞ்சதும் .எல்லாரயும் தொரத்தி விடறதுதாண்டா?


'மௌனம்,,,'  


' வெவரமான ஆளுங்களை வேலைக்கு வச்சுருக்கனும்.. உன்னைப்போய வேலைக்கு சேத்தேன் பாரு...என்னைய சொல்லனும்...'


அவர் சொன்ன விவரங்கள் எனக்கு அப்போது போதாமலிருந்தது தான்.  ஆனாலும் என்னை அவ்விதம் பேசியது அவமானமாக இருந்தது!
நாளைக்கு இந்த வேலையை விட்டுவிட வேண்டும் என தீர்மாணித்துக் கொண்டேன்.


அடுத்த நாள் காலை 12 மணிக்கெல்லாம், சரசக்காவும்-அவள் கூட்டாளி 
களும் திரும்ப, ரூம் நெம்பர் 32-க்கே வந்து விட்டனர்..




என்ன தம்பி.. நேத்தைக்கு பயந்துட்டியா?...சரசக்கா


'இல்லேக்கா...'


அந்த சமயம் 'ஓணர்' வர...'சார்.. நான் வேலய விட்டு நின்னுக்கிறேன்..."


'போ ..போ..."


அந்த 'பலான லாட்ஜுடன்' என் உறவு அன்றுடன் முறிந்தது..


ஒரு மஞ்சள் பையில் எனது சொத்துக்களை சேகரம் செய்துகொண்டு, தெரு முக்குட்டுக்கு வந்தேன்.


 "அடுத்து என்ன பண்ணலாம்.. திரும்ப 'ஃபில்ம்' ரெப்பாகவே போகலாமா.. 
ஊருக்கு போகலாமா"  வென யோசிக்கும் போது..சரசக்கா வந்தாள்.  


'தம்பி.... அந்த ஆளு.....ஏனாச்சும் காசு கொடுத்தானா?"  ஓணரைத்தான் 'சொல்கிறாள்.   


'இல்லேக்கா..'   


"கொடுக்கா மாட்டானே ..பிசுனாரிப் பய..."


இந்தா வச்சுக்கா.... முப்பது ரூபாவை நீட்டிணாள் '


"வேணாங்க்கா.."


அன்றைய தேதியில் முப்பது ரூபாய், என்பது ஒரு மாத சாப்பாட்டு 
செலவிற்கு போதுமானது. 


வேற வேல சிக்கர வரைக்கும் சோறு திங்கணுமில்ல.. இந்தா புடி..' 
சட்டைப்பையில் செருகிவிட்டு சென்ற் விட்டாள்.
---------




கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது.  சமூக கண்ணோடங்கள் ஏதும் இல்லாமல்..வயிற்றுப் பாட்டிற்கே
போராட்டமாய் இருந்த அந்த வயதில், இந்த நிகழ்ச்சி என்னை ஏதும் பாதிக்கவே இல்லை!  




இப்போது நிணைக்கும் போது..அந்த 'சரசக்காவும்'... ,  
அவள் 'அந்த தம்பிய வுட்டுடுன்னு'   ஸ்டேஷனில் அவள் இரைஞ்சியதும்..., 


கிட்டத்தட்ட விரட்டிக்கொண்டு வந்து கொடுத்த 30 ரூபாயும்,  


எப்போதும் தலை கவிழ்ந்தவாறே, அவளுடன் இருந்த அவளுடனிருந்த நான்கு பெண்களும்.,.


சில சமயம் தங்கள் குழந்தையை கூடவே கூட்டிக் கொண்டு வந்து, 'மேனேஜர்' டேபிளில் உட்கார்த்தி வைத்துவிட்டு, காலை போகும் போது கூட்டிக் கொண்டு போகும் சில பெண்களும்....


' இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் நெஞ்சு கனத்துப் போவதவற்கு  போதுமானதாய் இருக்கின்றன்.

1 comment:

  1. கொஞ்சம் என்னை அசைத்துப்பார்த்து விட்டது!

    ReplyDelete