Friday, October 7, 2011

தாஜ்மஹாலுக்கு ஆபத்து?


ஆண்டு தோறும், வெளி நாட்டிலிருந்தும், உள் நாட்டிலிருந்தும் லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகளைக் கவரும், இந்தியாவின் சலவைக்கல் அதிசயமான “தாஜ்  தற்போது ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது.

சில ஆண்டுகளாகவே, தாஜ்மஹாலுக்கு ஆபத்து என பலரும் பேசியும், எழுதியும் வருகின்றனர்.  அதாவது, மாசுபட்ட காற்று மற்றும் பாதிப்படைந்த சுற்றுச் சூழல் காரணமாக,  தாஜ் தனது எழிலினையும், பொலிவினையும்,  பளபளப்பினையும் இழந்து பழுப்பு நிறமாகி வருவதாகத்தான் சொல்லி வந்தனர்.

முன்பு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட, அமெரிக்க ஜனாதிபதி திரு.கிளிண்டன் கூட தாஜ் பொலிவிழப்பதை ‘சலவைக்கல்லில் புற்று நோய்என வர்ணித்தார். நானே கூட 80-களில் பார்த்த தாஜுக்கும் தற்போதைய தாஜுக்கும் பளபளப்பில் உள்ள மாற்றத்தினை உணர முடிகிறது.

சென்ற வாரம், தாஜ் பொலிவினை இழப்பது மாத்திரமல்ல..... தாஜ் இடிந்துவிழும் ஆபத்தும் உள்ளது என அச்சுறுத்தினர், சில ஆராய்ச்சியாளர்கள்.  அப்படி என்னதான் தாஜுக்கு ஆபத்து நேர்கிறது?

கம்பீரமான, முண்ணூற்று ஐம்பத்தெட்டு வயதான, தாஜ்மஹால், சிதைந்து வரும் அஸ்த்திவாரம் காரணமாக, பலவீனமடைந்து வருகிறதாம். அஸ்த்தி வாரத்தினை பலப்படுத்தாவிடில் இன்னும் ஐந்து வருடங்களுக்குள் தாஜ் சிதைந்துவிடும் அபாயம்  நேர்ந்துவிடும் என அவர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே, பளபளப்பினை இழந்து விட்ட, இக்கட்டிடத்தின் அஸ்த்திவாரம், கடினத்தன்மையை இழந்து வருவதாகவும், இற்று வருவதாகவும் கூறுகிறார்கள்.

இதன் காரணமாக, சென்ற வருடமே, கம்பீரமான அதன் நான்கு மினார் களிலும், மத்திய மாடத்திலும் வெடிப்புகளின் ஆரம்பங்களை கண்டுள்ளனர்.

இந்த கட்டிடத்தின் அஸ்த்திவாரம், மரங்களினால் தாங்கப்படுகிறது. இந்த மரங்கள் நிலையாக,ஸ்திரமாக இருக்க தண்ணீர் தேவைபடுகிறது.  தாஜ் கட்டப்பட்ட காலத்தில் யமுனை ஆற்றில் (இந்த  நதிக் கரையில் தான் தாஜ் கட்டப் பட்டுள்ளது), எப்பொழுதும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த்து.  இம்மாதிரி, யமுனை வரண்டுவிடும் என இக்கட்டிடத்தை கட்டும்போது, எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் தண்ணீர் இருக்கும், என்ற நிலையினைக் கொண்டே, தாஜின் அஸ்த்திவாரம் வடிவமைக்கப்பட்டு, கட்டிடம் எழுப்பப் பட்டுள்ளது. எனவே ஆறு வறண்டால், தாஜும் சேதமடையும்.  எனவேதான் தாஜின் ஆயுள் யமனை ஆற்றினை சார்ந்துள்ளது

ஆனால் தற்போது யமுனை ஆண்டில் பெரும்பகுதி வரண்டு கிடப்பதால், அஸ்திவாரம் பலவீனமாகி வருகிறது என்கிறார் புரொஃபஸர் ராம் நாத். 

சரித்திரவியலாளர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசியல் வாதிகளும் ‘இனியும் காத்திருக்க நேரமில்லை... அழிவை எதிர் நோக்கியிருகும் இக்கட்டி டத்தினைக் காப்பாற்ற ஏதாவது செய்யவேண்டும் என்கின்றனர்.

அவ்வாறு ஏதும் செய்யவில்லை எனில் இரண்டு முதல் ஐந்து ஆண்டிற்கும் தாஜினை முற்றிலுமாக இழந்துவிடுவோம் என்றும் கூறுகின்றனர்.
உண்மை அப்படி இல்லை என்றால், கடந்த முப்பது ஆண்டுகளாகவே, யாரையும் அஸ்த்திவாரத்தினை ஆய்ந்து பார்க்க அனுமதிக்கப்படுவதில்லையே – ஏன்?  என வினவுகின்றனர் இவர்கள்.
எனவே அரசாங்கம், உடனடியாக, கட்டிடவியல் நிபுனர்களைக்கொண்டு, ஆய்வு செய்து, குற்றச்சாட்டு உண்மையா-இல்லையா என தெரிவிக்க வேண்டும். அப்படி ஆபத்து இருப்பது உண்மையானல், தேவையான பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
செய்வார்களா? 
இல்லை, பற்றி எரியும் பிரச்சினைகளில் கூட கும்பகர்ண தூக்கம் போடும் மன்மோகன் அரசு (உம்-தெலுங்கான, மாவோயிஸ்ட் பிரச்சினைகள்) இதிலும் ஒரு குட்டித் தூக்கம் போடுவார்களா?
சோனியாகாந்தியின் சொந்த நாடான, இத்தாலியில் “பைசா நகர சாய்ந்த கோபுரத்தினை ஓரளவுக்கு நிலை நிறுத்தியுள்ளனரே...  அங்கேபோயாவது கேட்டுக் கொண்டு வரவேண்டியதுதானே?

2 comments:

  1. தொழிற்சாலைகள் கக்கும் புகையால் மக்களின் நுரையீரல் பாதிக்கப் படுமே என்று அவற்றை மூட நடவடிக்கையில்லை, ஆனால் அது தாஜ்மஹாலின் சலவைக் கற்கள் கருமையாகி விடுமே என்று மூடச் சொன்னார்கள். தற்போது லட்சக் கணக்கான விவசாயிகளின் நிலங்களுக்கு நீரையும், குடி நீரையும் கொடுத்து வாழ்வாதாரமாக விளங்கி வந்த ஜீவநதிகளில் ஒன்றான யமுனை சாக்கடையாகவும் தொழிற்சாலை கழிவுகளால் விஷமாகவும் ஆக்கப் பட்டது குறித்து யாரும் கவலைப் பட்டதாகக் காணோம். தாஜ்மஹாலின் அஸ்திவாரம் பாதிக்கப் படுகிறது என்று நடவடிக்கை எடுக்க கூக்குரலிடுகிறார்கள். ஆக, முன்னூற்றைம்பது வருடத்துக்கு முன்னாடி ஒரு பொம்பிளையைப் புதைச்ச இடத்துக்கு குடுக்கிற முக்கியத்துவம் கூட, லட்சக் கணக்கான மக்களின் உயிருக்குக் கொடுக்கப் படுவதில்லை. பாரதம் ஒளிர்வது நன்றாகத் தெரிகிறது. :(

    ReplyDelete
  2. உங்களது ஆதங்கம் நியாயமே! காற்றும், நதிகளும் மாசுபடுவதை தடுக்கத்தான் வேண்டும். மக்களுக்கு குறைந்த பட்சமாக வீடு,தண்ணீர்,காற்று இவைகளைக் கூட நமது அரசாங்கங்களால் உறுதி செய்ய முடியவில்லை. உலகமயம், தாரளமயம்,தனியார் மயம் இவற்றின் உப விளைவுகள்தான் இவை என்பதை உணர்ந்து கொண்டாக வேண்டும்.

    வளர்ந்த நாடுகள், மாசு ஏற்படுத்தும் தொழில்களை மூன்றாம் உலக நாடுகள் பால் தள்ளிவிட்டு விடுகின்றன. (உ-ம்: தூத்துக்குடி தாமிர ஆலை) சுற்றுச் சூழலை மாசு படுத்துவதில் வளர்ந்த நாடுகளின் பங்கு அதிகம்.

    அது ஒரு புறமிருக்க, 120 கோடி மக்களுக்கு வேலையும், உணவும் அளித்தாக வேண்டுமே? என்ன செய்வது? தொழில் வளர்ச்சியில்லாமல், இது எப்படி சாத்தியமாகும்?. நிலப் பரப்பளவு விஸ்த்தரிப்பு சாத்தியமில்லாமலிருக்கும் போது, மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகும் போது, ecological balance மாறத்தான் செய்யும்.

    ஆனால், கூடுமானவரை ‘மாசு இல்லாமல்’ வளர்ச்சிகான் புது வழிகளைத்தான் காண வேண்டும்.

    யமுனையை சாக்கடையாக்கியதில், யாருக்கு பங்கு அதிகம்? மக்களுக்க்கா? இல்லை ‘ நொய்டாவில்’ ஏகமாய் தொழிற்சாலைகளை வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனுங்களுக்கா?

    “மாசற்ற சூழல்” என்பது, மக்கள் போராட்டமாக மாறும் வரை, சாதிப்பது, கடினமான காரியம் தான்.

    ஆனால் நாம் (மக்கள்) என்ன செய்கிறோம்? எந்த அளவிற்கு விழிப்புனர்வு நம்மிடையே இருக்கிறது? உயர்,மத்திய தர வர்க்கத்தினர் பேசுவதோடு சரி. மற்றவர்கள், சாராயம், பிரியாணி பொட்டலம்,1000 ரூபாய் காசு இவற்றோடு திருப்தி அடைந்து விடுகின்றனர். உண்மையாக போராடும் குழுக்கள் இருக்கின்றன; மைனாரிட்டிகளாக!

    (தாஜ் என்பது இந்தியாவின் பெருமைமிக்க ஒரு கட்டிடம் சார். நம்மிடையே ஏராளமான கோளாறுகள் இருக்கிறதுதான், அதற்காக தாஜை இழந்துவிட்டால் சரியாய்விடுமா என்ன? )

    ReplyDelete