Saturday, January 15, 2011

திருப்பதி சென்று வந்தேன்.

நண்பர் திரு. செந்தில்குமாரும் நானும்,  என்று சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும் என ஊரெல்லாம் விசாரித்து "போகி-பொங்கல்" அன்று சென்றால் "சுலப தரிசனம்" பெறலாம் என தீர்மானித்து போகி அன்று திருப்பதி சென்றோம்.


ரூபாய் 50 முதல் வெங்கடாசலபதி தரிசன டிக்கட்டுகள் துவங்க - நாங்கள் எங்களுக்கு கட்டுப்படியாகும் ரூ.300/-த்  தேர்ந்தெடுத்து 'கியூ' வரிசையில் நின்றோம்.  டிக்கட் கௌண்டர்களும் - தரிசன காத்திருப்பு இடங்களும் ஆடு - மாடுகள் அடைக்கப்படும் பட்டிகளை நினைவூட்ட - நாங்களும் அவைகள் போலவே விரட்டப்பட்டோம்.  


நமது மக்களனைவரும் போகியன்று  குப்பைகளை கொளுத்தி காற்றை மாசுபடுத்துவதிலுமோ  - "இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் ஆயிரமாவது முறையாக" தமன்னாவை தரிசித்து பொங்கல் கொண்டாடுவதிலிமோ 'பிஸி'யாகியிருப்பார்கள்"  என நினத்தது தவறோ என்பது போல எங்கெங்கு காணிணும் மனிதத் தலைகள்.


சன்னிதானம் நெருங்க-நெருங்க பக்தர்கள் 'மாக்களாகவே" நடத்தப்பட்டனர் -  நடந்தும் கொண்டனர்.  பெருங்கூட்டத்தினால் செலுத்தப்பட்டும், பிழியப்பட்டும் கண  நேர தரிசனம் பெற்றோம்.


"இல்லை சார்..இன்று கூட்டம் மிகவும் கம்மி,    மற்ற நாட்களில் இதப்போல ஆயிரம் மடங்கு" என கலவரப்படுத்தினார் - திருப்பதிக்கு சீசன் டிக்கட் வைத்திருக்கும் ஒருவர்.


தேவஸ்தானத்திற்கு மனிதாபினமே இல்லையா?  வருபவர்களை பக்தர்களைப் போலன்றி கால் நடைகளைப் போல ஏன் நடத்த வேண்டும்? கொஞ்சம் கௌரவமாக தரிசனம் செய்யவிடலாமே என்ற சலிப்புடனும் - எரிச்சலுடனும் எனது மனைவியை ஓரிடத்தில் அமர்த்திவிட்டு - பெருமாளைப்போலவே பிரசித்தம் பெறற் 'லட்டு" வாங்கச் சென்றோம்.  அப்போது இரவு மணி ஒன்பது. 


லட்டு கவுண்டரிலிருந்து திரும்பும்போது "அங்கிள்,   உங்க ஆண்ட்டி மயக்கமடைந்து, நினைவில்லாமல் கீழே விழுந்து கிடக்கிறார் "   என எதிர் கொண்டு அழைத்தனர், செந்தில் குழந்தைகள்.  எனது மனைவியைத்தான்  சொல்கிறார்கள் .  35 வருட மண வாழ்க்கை மின்னல் போல் வந்து மறைந்தது.  


எனக்கு முன்னால் பாய்ந்து ஒடினார் செந்தில். இம்மாதிரியான இக்கட்டான நேரத்தில் எல்லாம் உடன் இருக்க வேண்டிய சாபம் அவருக்கு! வரம் எனக்கு.


அங்கேயிருந்த 'செக்கியூரிடிகள்" 108 -க்கு போன் செய்ய அடுத்த வினாடி வந்தது தேவஸ்தான 'ஆம்புலன்ஸ்'.  அதற்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் நடந்தவை யாவும் நம்ப இயலாதவை.  'எமெர்ஜென்ஸி' யில் இருந்த டாக்டர் செய்த முதலுதவிகள் - அக்கறையுடன் கூடிய சிகிச்சைகள். அடுத்து அவர் 'ரெஃபெர்' செய்த அப்போலோ 'கார்டியாலஜிஸ்ட்டின் ' ட்ரீட்மெண்ட். அந்த மாதிரியான நேரத்தில் இருக்க வேண்டிய வேகம்- தீர்மானம்- மனித நேயம்-  நம்பிக்கையளித்தல்- உடன்  வந்தவர்களுக்கு "பேஷன்டின் கண்டிஷன்" பற்றி எடுத்டுரைத்த பாங்கு... "மேல் நாடுகளில் மட்டுமே சாத்தியம் " என்று நினத்துக் கொண்டிருந்த யாவும் நனவாயிற்று. ஒரு இக்கட்டான நிலையிலிருந்து மனைவியை மீட்டுக்கொடுத்தனர்.   "திருமலை திருப்பதி தேவஸ்தான அஸ்வினி மருத்துவமனைக்கும் பணியிலிருந்த அனைவருக்கும்"  உடனுறை செந்திலுக்கும் அனந்தகோடி நமஸ்காரங்கள்' 


பட்டிகளில் அடைக்கப்பட்டும் விரட்டப்பட்டும் பெற்ற தரிசனத்தினையும் - மருத்துவ மனையில் கிடைத்த முதல்தர அனுபவமும் முரண்படாக தோன்றின.   யோசித்ததில் கோளாறு தேவஸ்தானதில் அல்ல!!   நம்மிடையேதான்.


இதைவிட வேறுவிதமாக கூட்டத்தினை தேவஸ்தானத்தினரால் "மேனேஜ்' செய்யவே முடியாது என்கிற அளவில் பக்தர்கள் கோடிக் கணக்கில்.    சுய கட்டுப்பாடே இல்லாத இந்த கூட்டத்தினை கட்டுக்குள் கொண்டுவருவது வேறு எங்ஙனம்? 
"தீக்குள் விரலை வைத்தாலும் - உணர வேண்டிய " அனுபவத்தினை "திருமலையில் மட்டுமே உணர முற்பட்டதால்"  வந்த வினை!.  


வாழ் நாளில் ஒருமுறை வந்தால் மட்டுமே போதும் - "ஜென்ம சாபல்யம்" கிடைத்துவிடும் என்கிற  லிஸ்டில் அவசரமாக சேர்க்கப்பட வேண்டிய ஊர்களில் சில - திருப்பதி - சபரிமலை - காசி.

No comments:

Post a Comment