Thursday, September 3, 2015

மொய்

“Things aren’t often what they appear to be at first blush. But embarrassment is.” 


மாதம் ஒரு நூறு கிராமுக்கு குறையாமல், திருமண அழைப்பிதழ் வந்து விடுகிறது. தினுசு தினுசாக பத்திரிகை டிசைன் வருவது போல, ‘பத்திரிகை வைப்பதும்’ பலவிதங்களில் ‘நவீனமாகி’ விட்டது. பத்திரிகையை ஸ்கேன் செய்து எல்லோருக்கும் மெயில் அனுப்பி, கூடவே ஃபோனில் கூப்பிட்டு சொல்வது வழக்கமாகிவிட்டது.   ‘என்னங்கானும், நீர் கல்யாணத்துக்கு வரவேயில்லை’ என்ற ராமர் அம்புக்கு, ‘அப்படியா, பத்திரிகை வரவேயில்லையே?’ என்று போஸ்டல் மேல் பழியைப் போடமுடியாது. இந்த வழக்கம் ஏற்றுக் கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது. பேப்பர் செலவு மீதி. மரங்கள் இல்லாவிடினும் சில கிளை களாவது தப்பும். தாமதம் இல்லை. நேரம் மிச்சம்.

சில ‘ஆபீஸர்ஸ்’ இருக்கிறார்கள். “நீங்க என் ஆபீஸுக்கு வந்து, என் மகன்/ள் கல்யாணப் பத்திரிகையை வாங்கிக் கொள்கிறீர்களா?” என்பர். அதெற்கென்ன...ஹி..ஹி வந்தே வாங்கிக்கொள்கிறேன் என வழிவோர் சிலர் இருந்தாலும், என் நண்பர் ஒருவர் சட்டென், ‘மொய்க் கவர் வீட்ல வந்து வாங்கிக்கிறீங்களா?’ எனக் கேட்டுவிட்டதாகச் சொன்னார்.  அது உண்மையோ இல்லையோ, மிகச் சரியான பதில் அதுதான்.

அலுவலகங்களில் பார்க்கலாம். சம்பந்தமில்லாத ஒருவர், ‘இன்னாருக்கு கல்யாணம்.. இந்தாங்க பத்திரிகை..’ என தகவல் சொல்லிக் கொண்டே, காலை தினசரி பேப்பர் மாதிரி போட்டுக் கொண்டே செல்வார்.

மௌனகுரு மாதிரி, வாயைத்திறக்காமல், தன் வீட்டு விழாவிற்கான பத்திரிகையை சுண்டல் மாதிரி கொடுத்துவிட்டுச் செல்வோரும் உண்டு.

“நோட்டீஸ் போர்டில்” பத்திரிகையை ஒட்டி ‘அனைவரையும்’ அழைப் போரும் உண்டு.

நமக்கு நல்ல அறிமுகமான நண்பர் வருவார். அவருடனே,  கை  நிறைய பத்திரிகையோடு இருக்கும் மற்றொருவரையும் அழைத்து வருவார். அவரை எந்த ஜென்மத்திலும் பார்த்திருக்க மாட்டோம். பார்க்கப் போகும் வாய்ப்பும் இருக்காது. ஆனால் நமது நண்பர், ‘சார்... என்னோடு ஃப்ரண்டு, அவரது வீட்டுக் கல்யாணம்.. பத்திரிகை வைக்கிறார்..’ என்பார். அந்த திடீர் நட்பும்,  நம்மிடமே, நமது பேரைக் கேட்டு அழைப்பிதழில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதி பத்திரிகை நீட்டுவார்.

இதுதான் சங்கடம். இந்த திருமணத்திற்கு போவதா வேண்டாமா? ஒரிஜினல் நண்பருக்கு என்றால் அவசியம் போகணும்.. அவர் மூலம் வரும் திடீர் நட்புக்கு என்ன செய்வது?

இப்படி ஒரு கல்யாணம் நேர்ந்துவிட்டது. 

வேலைமெனக்கெட்டு, வழியில் பார்த்து அந்த கல்யாணத்திற்கு வந்துவிடனும் என்ற வேண்டுகோள் வேறே!  நாள் நெருங்கட்டும் பார்க்கலாம் என தீர்மாணிப்பதை ஒத்திவைக்கும் போது, வெளியூரிலிருக்கும் வேறு ஒரு நண்பர் கூப்பிடுகிறார்.

‘சார்... அந்த திருமணத்திற்கு போகிறீர்களா?’

‘போகக்கூடும்..ஏன்..?’

‘நான் வெளியூரில் இருப்பதால். வர இயலாது..!’

‘ஒஹோ.. உங்களுக்கு தெரிந்தவரா?’

‘இல்லை... பத்திரிகை வைத்துவிட்டார். நீங்கள் போகும் பொழுது எனக்கும் சேர்த்து மொய் வைத்துவிடுகிறீர்களா?’

‘அதுக்கென்ன வைத்துட்டா போகுது...?’

இக்கட்டான சூழல்களில் வலுவே சென்று மாட்டிக் கொள்வது எமது குல வழக்கம். சரி... போய்த்தான் வந்துவிடலாமே, என முடிவெடுத்து விட்டேன். மண்டப வாசலில் இயல்பாக கண்கள், எனது நண்பரைத் தேட.. அவர் தென்படவே இல்லை...’

மண்டபத்தில், ஏகக் கூட்டம். பெரிய கை போலிருக்கிறது. தெரிந்த முகம் யாதொன்றும் இல்லை. ஏற்கனவே சங்கோஜி…


யாரோ ஒருவர் சாப்பிட வாருங்கள் என அழைக்க, சங்கடமாக சாப்பாட்டு ஹாலில்.

அப்புறம், மொய்க்கவர் கொடுக்கணுமே?

சம்ரதாயங்கள் முடியாததால், பலரும் மொய்க் கவர்களை மணமகள் தந்தையிடத்திலோ அல்லது மணமகன் தந்தையிடத்திலோ கொடுத்துக் கொண்டிருந்தனர்.

வந்தது சந்தேகம்.  யாரிடம் கொடுப்பது? யார் பத்திரிகை வைத்தது? பையன் அப்பாவா? பெண்ணின் அப்பாவா?

மறந்துவிட்டதே...வெளியில் வைத்திருக்கும் போர்டையும் கவணிக்க வில்லையே?

பையன் பக்கம்தான் பத்திரிக்கை கொடுத்ததாக நினைவு...
அப்படி என்றால், இதில் பையனின் அப்பா யார்? பெண்ணின் அப்பா யார்?

இருவருக்கும் என்னைத் தெரியாது, என்னையும் இருவருக்கும் தெரியாது..

எனக்கு பின்னே ஒரு இருநூறு பேர், கையில் மொய்க்கவருடன் வரிசையில்..

பின்னே இருப்பவரின் காதைக் கடித்தேன். ‘இதில் பையனின் அப்பா யார்?’ அவர் விந்தையாகப் பார்த்துவிட்டு, ஒரு தம்பதியினரைக் காட்டினார். அவரிடம் கவர்களைத் திணித்துவிட்டு..

விடு ஜூட்....


2 comments:

  1. சில இடத்தில் இரு மண்டபங்கள் சேர்ந்து இருக்கும்.அங்கு பரிசுகள் மாறியதும் உண்டு!

    ReplyDelete
  2. அச்சடித்த பத்திரிகையை வீணாக்காமல் நேற்று தெரிந்தவர், இன்று பார்த்தவர் வரை தள்ளிவிடும் இவர்களை ....

    ReplyDelete