Saturday, September 12, 2015

நான் எதைச் சாப்பிட வேண்டும்?

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், இருவேளை உணவை உறுதிசெய்ய இயலாத நிலைதான் இன்று இருக்கிறது. தொலைதூரங்களிலும், மக்கிப்போன குடிசைகளிலும், தெருவோரங்களிலும் வசிப்போருக்கு அடுத்தவேளை உணவைப் பற்றித்தான் கவலை. ஆனால் அரசாங்கங்களுக்கு, வேறு ஒரு கவலை. யார் யார், எந்தெந்த ‘கறி’ சாப்பிடலாம் அல்லது சாப்பிடக்கூடாது என நிர்ணயிக்கும் அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு கவலைப்படுகிறார்கள்.

அடுத்த மனிதரைக் கொன்று, அல்லது திருடி உண்ணாதவரை, ஒரு தனிமனிதன் என்ன சாப்பிட வேண்டும் என்பது அடிப்படை உரிமையா இல்லையா?

தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் ‘பதார்த்தங்களை’ தடுப்பதற்கு அரசு உரிமை பெற்றவையே. எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதற்காக, போதை மருந்துகளை உண்ணவோ அதை விற்கவோ உரியையில்லை.. சரிதான்.

ஆனால் இந்தந்த நாட்களில் இதை இதை சாப்பிடக்கூடாது என்பதைச் சொல்ல அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டா?

ஜெயின் சமூகத்தினரின் “ பர்யுஷான் “  பண்டிகையை ஒட்டி, மாட்டிறைச்சி விற்க தடைவிதித்திருக்கிறது மகாராஷ்ட்ராவும் ராஜஸ்தானும். ராஜஸ்தான் இன்னும் ஒருபடி மேலே போய், அந்த பன்டிகை தினங்கங்களில் மீனும் விற்கக் கூடாது என சட்டம் போட்டுவிட்டனர். இந்த என்ன மாதிரியான கேலிக்கூத்து? கேட்டால், இந்தத் தடை  அக்பர் காலத்திலிருந்தே இருக்கிறதாம்!

இறைச்சிக் கடைக்காரர்கள், ‘இன்று நீ கறி சாப்பிட்டே ஆகனும்’ என ஜெயின் சமூகத்தினரின் வாயில் ஊட்டி விடுகிறார்களா என்ன? அவரவர்கள் அவரவர்களின் மத-குடும்ப நம்பிக்கையை ஒட்டி எதையாவது சாப்பிடட்டும் அல்லது சாப்பிடாமல் போகட்டும்.  அது அவர்களது விருப்பம். அதில் மூக்கை நுழைக்க எவருக்கும் அதிகாரமில்லை.  ஆனால், அவர்கள் சாப்பிடவில்லை என்பதற்காக ஊரில் எவருமே கறி சாப்பிடக் கூடாது என சட்டம் போடுவது என்ன நியாயம்?

நான், கறி சாப்பிடுவதை அனுமதிக்காத ‘புரிஷ்யான்’ பண்டிகையை கொண்டாட ஜெயின் சமூகத்தவர்க்கு தடை விதிக்க வேண்டும் என கோரினால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம், அவர்களுக்காக மற்றவர்கள் மாமிசம் சாப்பிடக் கூடாது என்பதும்.

இன்று ஏகாதசி விரதம், அமாசை விரதம் எனவே எங்கும் கறி விற்கக் கூடாது என கிளம்பலாமா? புரட்டாசி மாதங்களிலும், ஐயப்பன் விரதம் இருக்கும் நாட்களிலும் மாட்டுக் கறி விற்கக் கூடாது என ஆரம்பிக்கலாமா?

இது என்ன விபரீதம்?

இந்திய அரசியல் கட்சிகள் யாவும், ஓட்டுகளுக்காக ‘ஜிம்மிக்’ அரசியல் செய்கின்றனவே தவிர, கொள்கை-நியாயம் எதுவும் கிடையாது. சிவசேனா, கறி விற்பனைத் தடையை எதிர்த்து, கறிக் கடைபோடுகிறார்களாம்! பி.ஜே.பி க்கு ஏதேனும் ஒரு நெருக்கடி-சங்கடம்-நெருடல் உண்டாக்க வேண்டும் என்பதைத் தவிர வேறேன்ன காரணம் இருக்க முடியும்?

இவ்வருட ஆரம்பத்தில், மகாராஷ்டிர அரசு, பசுக்களை கொல்லக் கூடாது, அதன் கறியை விற்கக்கூடாது, வைத்திருக்கக் கூடாது  சட்டம் இயற்றியது. பால் வற்றிய மிருங்களை வேறு என்னதான் செய்வது? யார் பராமரிப்பது? அதற்காகும் செலவை யார் ஏற்றுக் கொள்வது? ஈகலாஜிகல் பேலன்ஸ் என்ன ஆவது? அவற்றை முக்கிய உணவாகக் கொண்டிருப்போர் என்ன செய்வார்கள்? இந்த தடை அவர்களது உரிமையை பரிப்பதாகாதா? இறைவனின் படைப்பில் படைப்பில் சகல ஜீவன்களுமே சமம்தானே? சிலஉயிரினங்கள் மட்டும் எப்படி ‘புனிதமாகி’ விடும்? மற்றவை எப்படி ஹீனமாகிவிடும்? புராணங்களில், மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதாக வருகிறதே?

சரி... அவரவர்கள்  நம்பிக்கையின்படி எதைவேண்டுமானாலும் புனிதமாக வைத்துக் கொள்ளட்டும். அது கழுதையோ அல்லது கரப்பான் பூச்சியோ, அவற்றை அவர்கள் மட்டும் ஹிம்சை செய்யாமலிருந்தால் போதாதா?

எத்தனையோ நாட்டில் ‘பாம்புகளும்’, ‘நாய்களும்’, ‘பன்றிகளும்’ முக்கிய உணவு! அந்த நாட்டினருடன் ‘வணிக உறவு இல்லை’ எனற நிலையெடுக் கலாமா?

பண்டிகை நாட்களில் அமலுக்கு வரும் இந்த மாதிரியான ‘டோக்கன்’ தடைகள் நகைப்புக்குரியன. (தேர்தல் நாள் அன்று சாராய விற்பனை தடை.. புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அக்டோபர் இரண்டு மட்டும் ‘சாராயம்’ விற்கக் கூடாது. மற்ற நாட்களில் ‘மட்டையாகி’ ரோடில் கிடக்கலாம்? இது என்ன வகையான லாஜிக்?)

மத சார்பற்ற நாடு என்றால், வீட்டின் பூஜையறையில் அல்லது வழிபாட்டுத் தலங்களில் அவரவர்களுக்கு விருப்பமானவர்களை வழிபடும் உரிமையை உறுதி செய்வதும், அதற்கு குந்தகம் விளைவிபோரை தண்டிப்பதும் தான். வீட்டைத் தாண்டி தெருவிற்குள் வந்துவிட்டால் இந்திய அரசியல் சட்டத்தின் முன் அனைவரும் சமம். எவருக்கும் மதத்தின் பேரால் சலுகையோ அல்லது சலுகை மறுப்போ இருக்கக் கூடாது. அவ்வளவே!

இன்று நான் எதைச் சாப்பிடக் கூடாது என சட்டம் போடுவதெல்லாம், கடைந்தெடுத்த பிற்போக்குத் தனம்.



2 comments:

  1. கடைசி வரி அற்புதம்...
    அதே நாட்களில் பசுவின் பாலை மட்டும் ஏன் குடிக்க வேண்டும். பசுவின் பால் அதன் கன்றுக்கு மட்டும் தான். அதை அநீதியாக கொடுமை படுத்தி எடுப்பது ஏன். பாலை குடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. மத சார்பற்ற நாடு என்றால், வீட்டின் பூஜையறையில் அல்லது வழிபாட்டுத் தலங்களில் அவரவர்களுக்கு விருப்பமானவர்களை வழிபடும் உரிமையை உறுதி செய்வதும், அதற்கு குந்தகம் விளைவிபோரை தண்டிப்பதும் தான். வீட்டைத் தாண்டி தெருவிற்குள் வந்துவிட்டால் இந்திய அரசியல் சட்டத்தின் முன் அனைவரும் சமம். எவருக்கும் மதத்தின் பேரால் சலுகையோ அல்லது சலுகை மறுப்போ இருக்கக் கூடாது. அவ்வளவே!

    இன்று நான் எதைச் சாப்பிடக் கூடாது என சட்டம் போடுவதெல்லாம், கடைந்தெடுத்த பிற்போக்குத் தனம்.

    உண்மையான நல்ல கருத்து.

    ReplyDelete