Wednesday, September 23, 2015

கூட்டத்தினின்றும் தனியே! (Odd Man out!)

நமக்கு சம்பந்தமில்லாத ஒரு மீட்டிங்கில் சிக்கிக்கொள்வதும் ஒரு சுவாரஸ்யம்தான், அறிமுகமில்லாத ஊரில், வழிதவறிப்போவது போல.

சென்றவாரம் பெங்களூர் சென்றிருந்தபொழுது, தொழிலதிபரும், எனது நண்பருமான ஒருவர், BNI (Business Network International)  மீட்டிங்கிற்கு வருகிறீர்களா என்றார். இந்த அமைப்பைப் பற்றி கிஞ்சித்தும்

அறிந்திலேனெனினும், இது தொழில் முனைவோரின் கூட்டமைப்பாக இருக்கக் கூடும் என்பது பெயரிலிருந்து விளங்கியது. நுகர்வோரில்


ஒருவனாகிய என்னை, தொழில் முனைவோரின் அமைப்பிற்கு அழைத்தற்கு காரணம் என்னவாக இருக்கக் கூடும் என விளங்கவில்லை. ஒருவேளை, வாரம் ஒருவரை ‘அறிமுகம்’ செய்தாக வேண்டும் என்ற சிடுக்கில் மாட்டிக்கொண்டுள்ளாரோ என்றால், அப்படியும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அழைத்தவர் பிக் ஷாட். ஒருவேளை, 'வாடிக்கையாளரே கடவுள்' என்ற வாசகத்திற்கு பொருள் கொடுக்க வேண்டி, அழைத்திருப்பாரோ?

எப்பொழுதும் போல, எனது ‘டிரேட்மார்க் குர்த்தாவை’ ,இந்த மீட்டிங்கிற்கும் அனிந்துகொள்ள யத்தனித்தபொழுது, எனது அண்ணன் மகள் ஆட்சேபித்தார். “சித்தப்பா.. Formal உடை உடுத்திக்கொண்டுதான் போகணும், இந்த குர்தா.. கிர்தா வெல்லாம் போட்டுக் கொண்டு போகக் கூடாது..“ என்றார். அடாடா.. ஆரம்பமே சரியில்லையே..!! ‘குர்தா – ஜீன்ஸ்’ Formal இல்லையெனில் வேறு என்ன உடுத்திக் கொள்ளனும்? அவர்கள் என்ன Dress Code வைத்திருக்கிறார்கள் எனப் புரியவில்லையே? இது என்ன தொழிற்சங்க மீட்டிங்கா என்ன, point of order  எழுப்பி, ஆட்சேபிப்பதற்கு?

அந்த காலத்தில், மாப்பிள்ளை அழைப்பிற்கு, மணமகன்  ‘கோட்’ அனிந்தாகனும் என ஒரு ‘டிரஸ் ஒழுங்கு’ இருந்தது. மாப்பிள்ளைவாள், அன்று கோட் அணிந்தபின் இந்த ஜென்மத்தில் இன்னொரு முறை அணியக்கூடாது என்பது மத்யதர வர்க்கத்தின் Code. அந்த உடை, கரப்பான்பூச்சிக்கோ, வண்டுகளுக்கோதான் பயன்படனும்.

ஆனானப்பட்ட உலக மகா கோடீஸ்வர கடவுள், வெங்கடாஜலபதியே, Dress Code வைத்துக் கொண்டு  எல்லோரையும், வேட்டி-புடவையில்தான் வரணும் என சட்டமியற்றும் பொழுது, உள்ளூர் மானுட பணக்காரர்கள் சட்டமியற்றுவதில் தவறொன்றும் இல்லையே? கோயில்களுக்கான ‘உடை ஒழுங்கில்’ கேரளம் பரவாயில்லை எனத் தோன்றியது. அங்கு மேலே சட்டையே போடக் கூடாது! செலவில்லாத இறைவன் கொடுத்த உடையே போதுமானது!

என்ன...., அடுத்தவர் உடல் மேலே பட்டால் கொஞ்சம் அருவருப்பு ஏற்படும், அவ்வளவே!

சரி... நமது கவலைக்கு வருவோம். சூட்கேசைக் குடைந்து, ஒரு சட்டையை எடுத்துக் கொடுத்தார் மகள். உடுத்திக் கொண்டு ‘பிஸினஸ்’ செய்யக் கிளம்பியாயிற்று!

கூட்டம் நடக்கவிருந்தது, ஒரு மூன்று ஸ்டார் அந்துள்ள ஹோட்டல் போலிருந்தது. கான்ஃப்ரன்ஸ் அறைக்குள் நுழையும் முன்பே, வழி மறித்தார் பதிவாளர் ஒருவர். "உங்களது பெயர், தொழில் சொல்ல முடியுமா, பதிவேற்றனும்."

பெயர் சொன்னேன்.

தொழில் ‘கதையடிப்பதுதான்’ என்றேன், ‘அஸ்வத்தாமா என்ற யானை‘ என்பது போல மெலிதாக.. ‘Pardon me Sir…’ என்றார். சீரியஸான இடத்தில் ஜோக்கடித்தால் எப்படி?

‘தொழில் என்று, ஒன்றும் இல்லை’

பின் ஏன் வந்தாய் என்பது போலப் பார்த்தார்’

‘பிஸினஸ் கார்டு தர்ரீங்களா...’

விசிட்டிங் கார்டு பையில் இருந்ததுதான். அதில் அவருக்குப் பயன்படும்படியான தகவல் ஒன்றும் இல்லாததினால், ‘கார்டு இல்லை’ என்றேன். பூச்சியைப் பார்ப்பது போலப் பார்த்தார் பதிவாளர். முகத்தில் ஐயம் தொற்றிக் கொண்டது. அவர் தோளில் வாத்ஸல்யமாய் கையை வைத்து, ‘டோன்ட் வொர்ரி ஜென்ட்ல்மேன்.. ஐயாம் ஜஸ்ட் ஆன் அப்ஸர்வர்.. எ ஃப்யூட்சர் பிஸினஸ் மேன், ... காட் இட்? .. ஓகே.. நௌ?’ என அமைதிப் படுத்த, மனிதர் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.

‘ஐநூறு ரூபாய், ரிஜிஸ்ட்ரேஷன் ஃபீஸ் ப்ளீஸ்...’

இனி அரங்கிக்குற்குள் போவோம்.

எடுத்த எடுப்பிலேயே, தங்களது ‘மோட்டோ’ என்ன, என்பதை ஐயம் திரிபர தெளிவாக்கி விடுகிறார்கள். ‘வி வான்ட் டு மேக் மோர் மணி...’ இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்கனும்.

அங்கு, அன்று, கவனித்தவரை நடுத்தர தொழில் முனைவோர், வாரம் ஒருமுறை கூடி, தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுவதற்கான  அமைப்பு இது. ஐநூறு கோடி, ஆயிரம் கோடி முதலீடு செய்யும் ஆட்களை இங்கு பார்க்க முடியவில்லை. ஐம்பது கோடிக்குள்ளான முதலீட்டுடன் தொழில் துவங்குபவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

உதாரணமாக, ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்பவர்கள் (DLF எல்லாம் வரமாட்டார்கள்) என வைத்துக் கொள்வோம். அவருக்கு, இன்டீரியர், எலக்ட்ரிகல், ப்ளம்பரிங்க் சேவைகள் தேவை. அவருக்கு, விளம்பரத்திற்கு, வெப் டிசைனிங் செய்பவரும் தேவை. அக்கவுன்டிங் ஸ்பெஷலிஸ்ட் தேவை.. இன்ஸ்யூரன்ஸ் ஆட்கள் தேவை. இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒரே கூரையின் கீழ் அறிமுகமாகிக் கொண்டு, ஒருவருக்கொருவர், பொறுப்புடன்,  தொழிலில் உதவி செய்து கொள்கிறார்கள். விதவிதமான ஆட்கள் ஒன்று கூடி ஒருவர் மற்றொருவரின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, தங்களின் தொழிலையும் அபிவிருத்தி செய்து கொள்கிறார்கள். 'Camaraderie' என்பது இவர்களுக்குள் உண்மையாகவே இருக்கிறது. தொழில் என்றாலே போட்டியும் பொறாமையும்தான் என்பதை மாற்றுகிறார்கள். 

மற்றவர்களால் வழங்கப்படும் வாய்ப்பை இவர்கள் referrals என்கிறார்கள்.

கூடியிருக்கும் அத்துனை பேரும், புது முகங்கள் உட்பட, தங்களை, தங்களது தொழில் பற்றிய அறிமுகத்தை பதினைந்து வினாடிக்குள் முடித்துக் கொள்கிறார்கள். குறிப்பெடுத்துக் கொண்டு, கடைசியில் தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள். ரெஃப்ரல்கள், நடைமுறைப் படுத்தப்பட்டு, பிஸினஸ் நடந்துவிட்டால், அதற்கான நன்றியும் தெரிவிக்கிறார்கள். நடுவில், தொழில் நுணுக்கங்களைப் பற்றிய ஒரு சிறு, சிறப்பு உரையும் உண்டு.

நல்ல நடைமுறைதான். தொழில்முனைவோருக்கான ஒரு நல்ல என்ட்ரி பாயின்ட் இது.

எப்பொழுதும் போல, வலையில் ‘ஏன் BMI – ல் சேரணும்’ என கதறிக் கொண்டு ஒரு கோஷ்டியும், ‘ஏன் சேர வேண்டாம்’ என புலம்பிக் கொண்டு ஒரு கோஷ்டியும் இருக்கிறது.


மிக-மிக பெரிய தொழில் முனைவோருக்கு இந்த அமைப்பு தேவையில்லை. சேர்ந்தால் ஒரு Burden ஆகிவிடும். மற்றவர்களுக்கு ஏற்றதே! 

No comments:

Post a Comment