Saturday, September 5, 2015

'நல்லவர்களே!"

நல்லவர்களும், திறமையானவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்” – ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு மோடி அவர்கள் அறைகூவல். 

இந்திரா காந்தி காலத்திலிருந்து, இந்த வசனங்களைக் கேட்டு அலுத்துவிட்டது. சுதந்திரப் போராட்ட காலத்தில்,  “நல்லவர்களே, போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்” எனத் தலைவர்கள் கேட்டுக் கொண்டா அரசியலுக்கு வந்தனர்? அது தன்னிச்சையாக  நடந்தது!

பி.ஜே.பி-காங்கிரஸ் உட்பட, அரசியல் கட்சிகளில், நல்லவர்களும் திறமை யானவர்களும் இல்லவே இல்லையா? அவர்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி சீட் கொடுத்தீர்களா? ஒரு சிலரைத் தவிர்த்து, கிரிமினல் பிண்ணனி உள்ளவர்களும், குண்டர்களும், தாதாக்களும்தானே ‘சீட்’ பெறுகின்றனர்?
இந்த பாராளுமன்றம் உட்பட, எத்தனை பேர் கிரிமினல் பின்ன்னி கொண்டவர்கள் என்பது ரகசியமா என்ன? எடியூரப்பாக்கள் தானே முதலமைச்சராக முடிந்தது?  நீங்கள் குறிப்பிடும் ‘நல்ல நபர்கள்’ கையில் அதிகாரம் இருந்திருந்தால், இன்று ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

அரசாங்கத்தை விடுங்கள்...அரசியல் கட்சிகள், கட்சித் தலைமைப் பதவிகளில், எளிமையானவரை-நேர்மையாளவர்களை அமர்த்தி யிருக்கின்றனவா? பணபலம்-அதிகார பலம்-தாதாக்கள்-குண்டர்கள் இவர்கள்தானே வரமுடிந்திருக்கிறது? இல்லையென்றால் வாரிசு மயம்!

நல்லவர்கள், அதிகாரத்திற்கு வந்துவிடாமல் பார்த்துக் கொண்டு, பிறகு அரசியலுக்கு வாருங்கள் என அழைப்பு விடுப்பது என்ன நாடகம்? கொடி ஒட்டுவதற்கா?

நாட்டில் உலவும்  நக்ஸல் போன்ற, பல தீவீர வாதக் குழுக்கள் (நம்ம ஊர் ஈய வாதக் குழுக்கள் அல்ல), அரசியல் கட்சிகளின் மேல் நம்பிக்கை இழந்து, வெறுப்படைந்து, சாதாரண மக்களுக்கு ஏதேனும் நல்லது உடனடியாக செய்யவேண்டும் என்ற ஆக்ரோஷத்தினால் உண்டான வைதான். இதை எங்களைவிட  நீங்கள் நன்றாகப் புரிந்து வைத்திருபீர்கள். ஆனாலும் அவர்களை ‘சட்ட ஒழுங்கு’ பிரச்சினை செய்பவர்களைப் போலத்தானே அணுகுகிறீர்கள்?

அரசியல் கட்சிகளை விடுங்கள்... குறைந்த பட்சம், உங்களது மொழியில் ‘நல்ல-திறமையான’ அதிகாரிகளை எப்படி நடத்துகிறீர்கள்? அரசு இயந்திரத்தை உங்களது கொள்ளைக்கு பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற நுணுக்கம் உங்களுக்கு கைவந்த கலையாயிற்றே? உங்களது கொள்ளைக்கு உடன்பட மறுத்தால், பழிவாங்குவீர்கள்! ட்ரான்ஸ்வர் செய்வீர்கள்! டம்மி பீஸாக்குவீர்கள்!  எத்தனை எத்தனை உதாரணங்கள்  இருக்கின்றன!!  (நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேய அரசாங்கத்தில் ‘யேல்’ என்ற அதிகாரி ஒருவர் இருந்தார். உங்களது யூகம் சரி. அண்ணாவை கௌரவப் படுத்திய அதே பலகலைக் கழகத்திற்கு உதவியவர் தான். அவர்மேல் வருமாணத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த்தாக வழக்கு தொடர்ந்து, அரஸ்டும் செய்த்து பிரிட்டிஷ் அரசாங்கம்)

நிருபன் சக்ரவர்த்தியையும் காமராஜையும் இன்றும் எங்களால் மறக்க முடியவிலை என்றால், அவர்களுக்கு நீங்கள் வைக்கும் ‘கட்டவுட்’ களால் அல்ல..  நேர்மையாக-திறமையாக-எளிமையாக வாழ்ந்து காண்பித்ததால்.

ஆசிரியர் தினம் போல, ஏதோ ஒரு தினம், அனுதினமும் வந்துகொண்டே தான் இருக்கிறது. நீங்களும் அந்த தினத்திற்கேற்றாற் போல, செக்ரடரியோ அல்லது நீங்களாகவோ எழுதிவைத்த ஒரு அறிக்கையை படித்துவிட்டுப் போவீர்கள். பத்திரிகைகளிலும் அவை பக்கங்களை நிரப்பிக் கொள்ளும்!


அட..போங்க, சலித்து விட்டது!! இந்தியாவில் மாறுதல் என்று வருமோ தெரியவில்லை!    

No comments:

Post a Comment