Saturday, August 29, 2015

கண்கள் எங்கே.. நெஞ்சமும் எங்கே

ஏதோதோ பண்டிகைகள் வந்து போகின்றன.  ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு தினுசான நைவேத்தியங்கள் இறைவனுக்குச் செய்கிறார்கள். சிலவற்றிற்கு கொழுக்கட்டை, சிலவற்றிற்கு போளி, சிலவற்றிற்கு பக்ஷனங்கள்.... இப்படி. இதன் காரணகாரியம் புரியாவிடினும், பண்டிகைகள் தரும் உற்சாகம், சந்தோஷம் அலாதி.

என் மனைவிக்கு, பண்டிகைக்கு ஏற்றவாறு நைவேத்தியங்கள் செய்வதில் அலாதி ப்ரியம். எடுபிடி வேலைகளுக்கு தோதாக நான் இருந்ததால் , சில இம்சைகள் இருந்தாலும், அவருக்கு சௌகரியமாகவே இருந்தது.  சொப்பு செய்வது, மாவு பிசைவது, பிழிவது இப்படி.

அவருக்கு இத்தகைய விசேட தினங்களில் ‘வைத்துக் கொடுப்பது’ மிகவும் விருப்பமான செயல். ‘வைத்துக் கொடுப்பது’ என்றால் நன்பர்கள், உறவினர் களுக்கு சேலை, ரவிக்கைத் துணி கொடுப்பது. 

இவை, அனேகமாக எல்லா பெண்களும் செய்யக் கூடியது தான்.  ஆனால் என் மனைவிக்கு, வேறு ஒன்றில் மிக விருப்பம்.  தனக்கு ஆட்டோ ஓட்டுபவருக்கு பெண்ட்-சட்டை, ஆபீஸில் தரை துடைப்பவர்களுக்கு புடவை, ஏதாவது சிறு பெண்களுக்கு பாவாடை-சுடிதார், வீட்டில் வேலை செய்பவர்களுக்கு புடவைகள், என வழங்க வேண்டும். அதுவும் யாருக்கும் தெரியாமல், சத்தமின்றி. வெளியூர் சென்றால் கூட அவரது சினேகிதிகளுக்கு வாங்கி விட்டுத்தான், பிறகு தான் வீட்டிற்கு..

அந்த உத்தமி மறைந்து, இதோ இருபது மாதங்களாகிவிட்டன. எந்த பண்டிகை வருகிறது, போகிறது என்ற பிரக்ஞை இல்லாமல் இருக்கிறேன். இன்று அவிட்டமாம். நேற்று வரலக்ஷ்மி விரதமாம். ஆரவாரமாக அவர் கொண்டாடும் விசேடம். வெகுனாள் முன்பாகவே, புடவைகளும்-ரவிக்கைத் துணிகளுமாய வாங்கி அடுக்கிக் கொள்வார். ‘வைத்துக் கொடுக்க’. 

அவர் செய்யும் அம்மனின் அலங்காரம் கொள்ளை கொள்ளும். அன்பானவர்கள் எது செய்தாலும் அழகு மிளிர்வது இயல்புதானே? அவரின் நினைவு நேற்று மேலிடவே,  இரவு தூக்கம் பிடிக்கவே இல்லை. யூடியூபில், அவருக்கு பிடித்தமான பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘கர்ணன்’ திரைப் படத்தில் ‘கண்கள் எங்கே.. நெஞ்சமும் எங்கே’ என்று ஒரு பாடல். சொக்க வைக்கும் இசை. அப்படிப்பட்ட பாடல்கள் இனி கிடைக்குமா என ஏங்க வைக்கும். அப்பாடலை என் துணைவியார் இனிமையாகப் பாடுவார். தூக்கம் கொள்வதற்கு முன்னால், ஒரு அரை மணி நேரம் அவருக்கு இசை நேரம். இப்பாடல் ‘மத்யமாவதியா’ வேறு ஒரு ஒன்றா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.  

அதை விசாரித்துக் கொள்வது இப்பொழுது பெரியவிஷயமில்லை. ஆனால், அந்த சந்தேகம் நிவர்த்திக்கப் படாமலேயே இருக்கட்டும்.

இன்னும் எத்தனையோ விசேட தினங்கள் வரத்தான் போகிறது. இருக்கும் வரை எனக்கு எல்லா நாட்களும் ஒரே நாளே.

அவரை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்ற அசையாத நம்பிக்கை கொண்டிருந்தேன். இவ்வளவு விரைவில் முடிவு வந்துவிடும் என நினைக்கக் கூட இல்லை. இறுதி தினங்களில் என்னால் ஆன அனைத்து உபசரணையும் செய்தேன்; அவர் முகத்தில் ஒரு கணமெனும் மகிழ்ச்சி இருக்காதா என ஏங்கினேன். யாரிடம் பேசினால், அவர் மகிழ்ச்சி கொள்கிறார் என அலைந்தேன். அவர் நாலு வாய் சாதம் உண்டாலே பரம சந்தோஷம் ஆகும். என்ன செய்து என்ன? பல்வேறு காரணங்களால், அவர் இறுதி தருணங்களில் மகிழ்ச்சியாக இல்லை. அவர் எதிர்பார்த்தது அன்பான, கனிவான வார்த்தைகளை, ஆறுதலை, நேசத்தை.  அது எவரிடமிருந்தும் கிடைக்காமல், ஏமாற்றத்தோடே போய்விட்டார். ‘நானிருக்கிறேனே..’, உனக்கு வேண்டியதைச் செய்கிறேனே என்று சொல்வேன். புன்னகையோடு தலையாட்டுவார்.

இது கழிவிரக்கமோ, சுயபுராணமோ அல்ல. தெளிவாகத்தான் இருக்கிறேன்.

இதை ஏன்  இங்கே பகிர வேண்டும் என்ற என் கேள்விக்கு என்னிடமே பதில் இல்லை.. ஒருவேளை, என் விஜியைப் பற்றி யாரிடமாவது பேச விழைகிறேனோ என்னவோ? அந்த மகோன்னதமான ஜீவனை, அவரது பெருமைகளை சொல்ல வேண்டும் எனத் தவிக்கிறேன். கேட்பார் எவரும் இல்லாத இந்த சூழலில், தனியனாக என்னிடமே நான் சொல்லிக் கொள்ளும் முறையோ என்னவோ?4 comments:

 1. அவர் தங்களது பேத்தி வடிவில் இருப்பர் அல்லது வருவர்.

  ReplyDelete
 2. எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை

  ReplyDelete
 3. no words to say.. i have attended one time " varalakshmi vratham" at cuddalore...so many varieties of dishes.....

  ReplyDelete
 4. What a blessed married live you had!!!! Those wonderful moments will give the strenght to pull along.

  ReplyDelete