புருஷன் ஓங்கி அறைஞ்சாலும் அறைஞ்சான், கண்ணுல இருக்கும் பீளை போச்சு
என ஒரு வழக்கு மொழி சொல்வார்கள். அரசியல் காரணங்களுக் காகவோ அல்லது சிக்கலில்
மாட்டிவிட வேண்டும் என்பதற்காகவோ, தமிழ் நாட்டில் பூரண மது விலக்கு என்னும் கோஷம்
தீவீரமாகியுள்ளது. எதுவானாலும் கண்ணில் இருக்கும் பீளை போகவேண்டும்.
பலர், மாநிலம் பெரும் பாய்ச்சலுக்கும் புரட்சிக்கும் தயாராகிவிட்டது
போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்த முயன்றாலும் உண்மை நிலவரம் அப்படி இல்லை. எப்படியும்
மதுவிலக்கு வந்துவிடாது என குடிமக்கள் நம்புகிறார்கள். அரசியல்வாதிகள் மேல்
அவ்வளவு நம்பிக்கை.
ஆனாலும் நிலைமை படு மோசமாகிவிட்டது எனப் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
சாலையோரங்களிலும், பஸ் நிலையத்திலும் ஆங்காங்கே
சிலர் ஆடை விலகியிருப்பது கூடத்தெரியாமல், நினைவிழந்த நிலையில் வீழ்ந்து கிடப்பதை,
சலனிமின்றிப் பார்க்கும் அளவிற்கு மிதமிஞ்சிய குடி தினசரி நிகழ்வாகிவிட்டது.
பார்த்தவர்களுக்குத் தெரியும். சாலையோர புளியமரத்தடியோ, சிதைந்து போன
கோயிலோ, கட்டிடமோ, பாலத்தடியோ எதுவானாலும் அங்கே காலிபாட்டில்கள் இறைந்து
கிடக்கும். சுற்றுலாத்தலம் ஒன்று பாக்கி யில்லை;
எங்கும் பாட்டில்கள்.
சமுதாயத்தில் குறைந்த பொருளாதர வசதியுள்ள ஆட்களே கடுமையாகப் பாதிக்கப்
படுகிறார்கள்.
ஆண்களில் பலர் உழைக்கத் தயாராக இல்லை. அன்றைய குடிக்கு சம்பாதித்து
விட்டால், அதற்கு மேல் உழைக்கத் தேவை இல்லை என்கிறார்கள். வேலைக்கு ஆள் இல்லை
என்பதே இங்கு நிலை. வட இந்திய மாநிலங்களிலிருந்து கடினமாக வேலைகளுக்கு ஆட்கள்
இறக்குமதியாவதன் ரகசியம் இதுவே.
காலை ஐந்து மணிக்கெல்லாம் கூட, சாரயக்கடை வாசல்களில் ஒரு நூறு
வாகனங்களையாவது பார்க்க முடிவதே, நாடு எந்த அளவு சீர்கெட்டுப் போயுள்ளது என்பதை
விளக்கப் போதுமானது.
சாவோ, கல்யாணமோ, திருவிழாவோ, அரசியல்கட்சிகளின் ஊர்வலமோ அல்லது பொதுக்
கூட்டமோ எந்தக் கொண்டாட்டம் ஆனாலும் சாராயம்தான் மையப்புள்ளி. அரசியல் கட்சிகளின்
பொதுக் கூட்டம் என்றால், டாஸ்மாக் வருமானம் எகிறும். படையாகக் குடித்துவிட்டு
கண்ணில் தென்படுவதை யெல்லாம் உடை. சட்டமாவது-ஒழுங்காவது?
உளரீதியாக, சாராயம் குடிப்பது என்பது ஒரு விஷயமே அல்ல என்பது போன்ற
ஒரு நிலை தமிழ்னாட்டில் உருவாகிவிட்டது. முன்பெல்லாம் குடித்துவிட்டு எங்கோ
கிடக்கும் புருஷனையோ, மகனையோ இழுத்துவரும் நிலைமை மாறி எங்கு நோக்கினும்
மட்டையாகிக் கிடப்பது சர்வசாதரணமாகிவிட்டது.
அடிமட்ட மக்களின் வருமாணம் அட்டை போல டாஸ்மாக்கால் உரிஞ்சப் படுகிறது. உரிஞ்சப் பட்ட அவர்களின்
பணம்தான் ‘விலையில்லா பொருளாக’ எச்சமிடப்படுகிறது என்பது புரியாத கூட்டம். புரிந்தாலும் மீண்டுவர இயலாத/முடியாத மக்கள்.
‘அட போப்பா...’ மதுவிலக்கெல்லாம் வராது என்பதே, நவீன இளைஞர்கள் மற்றும் அடித்தள மக்களின் நிலை.
எதுவாயினும், மதுவிலக்கு ஒரு கோஷம் என்றளவிலாவது அங்காங்கே புகைவது
நல்லதே.
பள்ளிச் சிறுவர்கள் கூட குடிக்கும் அளவிற்கு நிலைமை படுமோசமா கியுள்ளது.
கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என அரசியல் கட்சிகள் சொல்வதைப் பயன்படுத்திக் கொண்டு,
மது விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர இதுவே சந்தர்ப்பம். இதைச் செய்தால் கூடவே கள்ளச் சாராயம்
காய்ச்சப்படுவதும் அதிகரிக்கும்.
இந்த விஷச் சாராய ஊறல்களைச் செய்வோர் உள்ளூர் தாதாவாகவோ அல்லது
அரசியல் ஈடுபாடு உள்ளோர்களாகவோ இருப்பர்.
உறுதியான அரசியல் நிலைபாடும் நேர்மையான காவல்துறையும் இருந்தால் மதுக்கட்டுப்பாடும்-விலக்கும்
சாத்தியமானதே!
பக்கத்து மாநிலம் கேரளா அரசின் நிலைபாடு, யதார்த்தமானது. அங்கே
பார்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன. ஊருக்கு ஒரு சில கடைகள் மட்டுமே. அவர்களது
அனுபவம் நமக்கு உதவக்கூடும். கூடவே மதுவிற்கு எதிரான வலுவான பிரச்சாரம்.
இது சரியாண தருணம்.. செய்வார்களா?
No comments:
Post a Comment