Sunday, December 27, 2015

மாயவரம்.

இவ்வளவு நாள் இங்கே இருக்கிறோம்;  நூறு கி.மீ, அருகே உள்ள மாயூர நாதரை தரிசிக்காமல் இருக்கிறோமே என்று தோன்ற, இன்று காலை மாயூரம் பயணம். (மயிலாடுதுறை). போகும் வழியில், 108 திவ்ய தேசத்துள், 22வது வரிசையில் வரும் பரிமளரங்கனாதர் கோயிலைப் பார்த்தால் என்ன எனத் தோன்றவே, வண்டியை இந்தளூர்-பரிமள ரங்கனை நோக்கித் திருப்பினோம்.

ஏற்கனவே அலங்காரப் ப்ரியரான மஹாவிஷ்ணு இங்கே சயன கோலத்தில் மிகுந்த அழகுடன் இருக்கிறார்.


இறைவன்: பரிமள ரங்கநாதர் தல இறைவி : பரிமள ரங்கா நாயகி தீர்த்தம் : இந்து புஷ்கரணி. பட்டாச்சார்யார் இக்கோயில் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார். திருமங்கையாழ்வார் அவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.பஞ்சரங்க திருத்தலங்களுள்ஒன்று. பஞ்சரங்க ஸ்தலங்கள்: ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்), ஸ்ரீரங்கம், ஆதிரங்கம், கும்பகோணம் மற்றும் இக்கோயில்
திருஇந்தளூர்

.
பெருமாள் மேல் மிகுந்த பக்தி கொண்ட அம்பரீசன் என்ற அரசனது ஏகாதசி விரதத்தை முறியடிக்க தேவர்கள், துர்வாச முனிவரை வேண்ட, அவரும் சம்மதிக்க, முனிவர் சில சதிவேலைகளில் ஈடுபட, அரசன் பெருமாளை வேண்ட, பெருமாளும் அரசனை ரட்சித்து, துர்வாசருக்கும் தவறைஉணர்வித்தார்.  பக்தியின் பெருமையையும், விரதத்தின் வலிமையையும் விளக்கும் திருத்தலம் இந்த திருஇந்தளூர் திருத்தலம். மேலும் இத்தலத்தை குறித்து வேறு கதைகளும் உள்ளன.

அற்புதமான சிற்பங்கள் நிறைந்த கோயில்.  சிலவற்றைக் காணூங்கள்.


















----------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து சென்றது புகழ்பெற்ற மயூரநாதர்  திருக்கோயில் . மிகழப் பழமையான, அழகான கோயில். அம்மன் மயில் ரூபத்தில், இறைவனை வழிபட்ட இடம். இத்தலத்தைப் பாடாத புலவர்கள் இல்லை என சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.





மயூர நாதர் / அபயாம்பிகை / பிரம தீர்த்தம். 1500 ஆண்டுகள் பழமையானது.

அதென்ன, ஒரு சன்னதியிலும் ஒரு சிவாச்சார்யாரும் இல்லை?. பூட்டிய கதவுகளுக்கிடையேதான் தரிசனம், காலை ஏழரை மணிக்கே.

தரிசனம் முடித்துவிட்டு, அக்கால நினைவில் 'காளையாக்குடி' சென்று காலைச் சிற்றுண்டி முடிக்கத் திட்டமிட்டேன். ம்ம்..ஹூம்..  மிக, மிகச் சாதாரணமாகி இருக்கிறது. 

(திருவாரூர் சாலையில்  இருந்தஇன்னும் சில கோயில்களையும்  தரிசித்தேன்.. அவை அடுத்த பதிவுகளில் ....)

Friday, December 25, 2015

உங்கள் கண்களுக்கு ‘நல்லகண்ணு’ தெரியவில்லையா?


இன்று ‘தமிழ் ஹிந்து’ நாளிதழில், ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதன் தலைப்புதான் மேலே கண்டது. 

“எப்பொழுதும் நேர்மைக்கும், எளிமைக்கும் உதாரணமாக, உங்களுக் கெல்லாம்  ‘காமராஜர்’ மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவாரா?  நீங்கள் ஏன் கடந்த காலத்திற்குள் ‘தலையை விட்டுக் கொள்கிறீர்கள்?’ இன்றைக்கும் அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் ‘நல்லகண்ணு’வைத் தெரியவில்லையா?”  என்று இடதுசாரிகள், பத்திரிகைகளைப் பார்த்து கேட்பது போல ஆரம்பிக்கிறது அக்கட்டுரை.

இக்கேள்வியை, ஊடகத்தைப் பார்த்துக் கேட்கவேண்டாம். மாறி..மாறி கோபலபுரதையும்-தோட்டத்தையும் சுமந்துவிட்டு, அடுத்ததாக கோயம்பேட்டையும் சுமக்க தயாராகிக் கொண்டிருக்கும் உங்களது தலைவர்களைப் பார்த்துக் கேளுங்கள் என காட்டமாக பதலளிக்கிறது ‘தமிழ் ஹிந்து’.

தமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது எனவும், மக்கள் இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, ஒரு நேர்மையான அரசியல் தலைமையை தேடிப் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறது அப்பத்திரிகை.  இதற்காக சகாயம் போன்ற அரசு அதிகாரிகளை தேடிப்பிடிக்க வேண்டியதில்லை; இடது சாரி இயக்கங்களில்  நல்லக்கண்ணு போன்ற அரும்பெரும் எளிய, நேர்மையான தலைவர்கள் கொட்டிக் கிடக்கின்றனர் எனவும் கூறுகிறது.

இடதுசாரிகளின் கண்களுக்கே, ‘நல்லகண்ணு’ ஒரு முதல்வர் வேட்பாளர் என, கண்ணுக்குத் தெரியவில்லையே என திரும்ப வினவுகிறது ஹிந்து.

நல்லகண்ணுவை மாத்திரமல்ல, சங்கரையா, ஜி.ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் (சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ) ,முத்தரசன், மகேந்திரன், நன்மாறன், சுகந்தி, வீரபாண்டியன், டில்லிபாபு என ஒரு  பெரிய நேர்மை யாளர்களின் பட்டியலையே ஒப்புவித்திருக்கிறது ஹிந்து. இடது சாரிகளுக்கு இது ஒரு நல்ல தருணம். க. வும் வேண்டாம், ஜெ. யும் வேண்டாம் என இடது சாரிகள் முடிவெடுத்தது நல்ல முடிவு. மாற்றாக, ‘விசயகாந்தையோ’, ‘வைகோவையோ’ முன்னிறுத்தாமல், தாங்கள்தான் மாற்று என இடது சாரிகளை நம்பச் சொல்கிறது அப்பத்திரிகை.

இவர்கள் பெயரெல்லாம், நாடறிந்தவர்கள். இன்னும் முகமறியா  நூற்றுக்கணக்கான தியாகிகள் இடதுசாரி இயக்கத்தில் இருக்கிறார்கள். நான் பணியாற்றிய தொலைபேசித்துறையிலேயே, ‘ரகுனாதன் ‘ போன்ற பலர் இன்னமும் கொண்ட கொள்கையில் இன்னமும் பிடிப்போடு, சுயனலமின்றி, நேர்மையின் உறைவிடமாக இருக்கிறார்கள்.  பல இடங்களில் சிவப்பு சற்றே சாயம்போய் காணப்படினும், இவர்களது தியாகத்திலோ, நேர்மையிலோ குறைகாண இயலாது.

விடுதலை அடைவதற்கு முன்னும் பின்னும் கம்யூனிஸ்ட் கட்சியே (அப்போது பிளவு பட்டிருக்கவில்லை), காங்கிரஸுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக நிலைபெற்றிருந்த்து.  சீன யுத்தத்திற்குபின், இந்திய இடது சாரிகளுக்கு வந்தது வினை. இடது சாரிகளுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே வந்தது சோதனை. இந்திய கம்யூனிஸ்ட்கட்சி பிளவுபட்டது.  அதன்பின் இந்திய இடதுசாரி இயக்கம் பிளவுபட்டது போல,  வேறு எந்த கட்சியாவது உடைந்திருக்குமா என்பது கேள்விக்குறி.

இனி, அதைப்பற்றி விவாதித்து என்ன பலன்? இன்றைய தேவை, இடது சாரிகளின் ஒற்றுமைதான். அப்பத்திரிகையே சொல்லியிருப்பது போல, அவர்களின் ஒற்றுமை அவர்களுக்கு மாத்திரமல்ல.. இந்தியாவிற்கே தேவை.

‘உலகத் தொழிலாளர்களை’ ஒன்றுபடச் சொல்லிவிட்டு, உள்நாட்டில் பிளவுபட்டு நிற்பது எந்த வகையில் சரி எனப் புலப்படவில்லை.

இன்னமும் அடிவானத்தில் கூட தென்படாத ‘மக்கள் ஜன நாயகமா?’, ‘தேசீய ஜன நாயகமா?’ என்ற வினாவினை ஒத்திவைத்துவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்துவிடுவதே அனைவருக்கும் நல்லது.

இதைச் செய்யாவிடில், தத்துவார்த்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் அவர்கள் இன்னமும் நீர்த்துப் போய்விடுவார்கள். இலக்கற்ற தியாகத்தால் என்ன பயன்?  இதே ரீதியில் பயணித்தார்கள் என்றால், எத்தனை நல்லகண்ணுக்கள், எத்தனை மாணிக் சர்கார் வந்தாலும் இடது கப்பலை கரையேற்ற முடியாது. ஒருங்கிணைக்கப்படாத எந்த முயற்சியும், தியாகமும், உழைப்பும் விழலுக்கு இறைத்த நீரே!

இனி மே.வங்கமும்-கேரளமும் கைகூடுமா என்பது பெரிய வினா!

பிளவுபட்ட இடதுஇயக்கங்களால், சுவாரஸ்யமன கோஷ்டிகளை உருவாக்க முடியுமே தவிர, ஒரு அடி கூட முன்னேற முடியாது. அரசியல் அரிச்சுவடிகூட தெரியாத ‘கேஜ்ரிவால்’ ஒரே வருடத்தில், பல சொதப்பல்களுக்குப் பின்னரும் மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியும், அரசமைக்க முடியும் என்றால் இவர்களால் முடியாதா?

தடிமனான தத்துவப் புத்தகங்கள் மக்களைக் கட்டாது. செயல் ஒன்றே மக்களை ஈர்க்கும். நீயா நானா விவாதங்கள் போதும். தேவைக்கும் அதிகமாக, சலித்துப் போகும்வரை, ஓய்ந்து போகும்வரை விவாதித்து அயர்ந்துவிட்டோம்.

தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவெங்கிலும் ஒரு மாற்று மக்களுக்கு தேவைப்படுகிறது. இதைவிட நல்ல தருணம், எதிர்காலத்தில் வாய்க்கும் எனத் தோன்றவில்லை.

சரித்திரத்திற்கு, பலர் பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள். சரித்திரத்தின் முன்னால் கைகட்டி நிற்க வேண்டாம். மாறாக அதை உருவாக்குங்கள்.

Thursday, December 24, 2015

விட்டலாபுரம்


சில கோயில்களுக்கு போகவேண்டும் என பலகாலம் திட்டமிடுவோம். ஏதோ ஒரு காரணத்தால் திட்டம் கைகூடாது. ஆனால் சடாரென அக்கோயிலுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டிவிடும்.

இன்று அப்படி தரிசனம் செய்த ஒரு கோயில் ‘விட்டலாபுரம்’. புதுவையிலிருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில் புதுப்பட்டினம் அருகே இருக்கும் ஊர் விட்டலாபுரம். இங்கே காட்சியளிப்பவர் பாண்டுரங்கன். விட்டலேஸ்வரர் என்னும் ‘பிரேமிக விட்டல்’. இக்கோயிலுக்கு செல்ல வேண்டும் என ஒருவருடமாக நினைத்துக் கொண்டிருந்தாலும் சாத்தியப்படவில்லை.

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது. விஜய நகர பேரரசால் தமிழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதல் பாண்டுரங்கன் கோயில் இது என்கிறார்கள். வெகுகாலமாக சிதலாமகிக் கிடந்த கோயில். பரணூர் ஸ்ரீ கிருஷ்ணப் ப்ரேமி அவர்களின் முன்முயற்சியில், இக்கோயில் புணருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வு இலாக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வெகு அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது இக்கோயில். கர்ப்பக்கிரஹத்தில், பாண்டுரங்கன், ருக்மணி-சத்யபாமாவுடன் காட்சியளிக்கிறார். சம்ப்ரதாயமான பூஜைகள் இல்லை; மாறாக நாமசங்கீர்த்தனங்களே ப்ரதானம்.  பாண்டுரங்கன் எப்பொழுதும் போல அலங்காரத்தில் அற்புதமாயிருக்கிறார்.  கோயிலுக்கு எதிரே ஆஞ்சனேயரும், த்வஜ்ஸ்தம்பத்தின் அருகே கருடாழ்வாரும், விட்டல் சன்னதியின் அருகே சந்தானலக்ஷ்மி தாயாரும் காட்சியளிக்கின்றனர். 

அருகே, ஸ்ரீனிவாசப்பெருமாள், வரதாரஜப்பெருமாள், ராமானுஜர் & விஸ்வக்சேனர் ஆகியோருக்கும் தனித்தனியே சன்னிதிகள் இருக்கின்றன. உற்சவ மூர்த்திகளான, விட்டல், ருக்மணி, சத்யபாமா அழகோ அழகு.  சுற்றிலும் பூந்தோட்டங்கள்;  நேர்த்தியாக பராமரிக்கிறார்கள். கோயில் குருக்கள், விட்டல் ஸ்வாமி சிவாதாரமாகவும் இருப்பதால், வைகுண்ட ஏகாதசி போல, மஹாசிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது என்றார்.  கோயிலின் சுத்தமும், அழகும் அமைதியைத்தரவல்லவை.


மாலை நேரத்தில், சிலரே குழுமும் பக்தர்களின்  இனிமையான ‘நாமாவளிகளின்’ பின்ன்னியில் யாருக்குத்தான் சட்டென தியானம் கைகூடாது?  தரிசிக்க வேண்டிய தலம்.


அஞ்சநேயர் 

முகப்பு 


சந்தான லட்சுமி தாயார் சந்நிதி 





புணருத்தாரணம் செய்யப்படுவதற்கு முன்னால் 

விட்டல் 


Sunday, December 20, 2015

மனைவிக்கு மற்றும் ஒரு கடிதம்.


என தருமை விஜிக்கு,

பௌதீக உடலாக என்னை விட்டு நீ விலகி, இம்மாதத்தோடு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.  இதோ,  உனது திதியும் வரப்போகிறது.  பிரிவும்-மறைவும், வாழ்வின் நினைவு கூறத்தக்க பசுமையான அம்சங்களை மட்டுமே விட்டுச் செல்லும் என்பார்கள். ஓரளவிற்கு மட்டுமே உண்மை.  எதையும் நான் மறக்கவில்லை.

இறுதிக் காலத்தில் நீ பட்ட அவஸ்தைகளும், துன்பங்களும் இன்னமும் என்னை வாட்டுகின்றன. பிறர் துன்பம் காணப் பொருக்காத உணக்கு, கடுமையான வலிகளே பரிசாகக் கிடைத்தன.  புன்னைகைக்க நினைத்தாலும் உன்னால் இயலவில்லை.  பிறரின் பசியாற்றுவதும், அவர்களுக்கு உடைகள் அளிப்பதும் உனக்கு உவப்பளிக்கும் செயல்கள். ஆனால் இறுதியில் உன்னால் உண்ணக் கூட இயலாத சூழல் வாய்த்துவிட்டது.  ஒரே ஒரு வேளை, ஒரே ஒரு கவளம் உணவு உண்ண மாட்டாயா, பசியாற மாட்டாயா என  நான் தவித்த நாட்கள் ஏராளம்.  ஆண்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டக் கூடாதாமே? எப்பொழுதாவது நன்பர்கள் இல்லத்தில், ஆசையாக நீ ஓரிரு கவளம் உணவுண்டபோது, மறைவாக கண்களைத் துடைத்துக் கொள்வேன்.

எல்லாம் விதிப்படியே நடக்கும் என சொல்லிக் கொள்வது, நம்மை ஏமாற்றிக்கொள்ள, சௌகரியமாக உபாயம்.  நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலேயே உடல் சோதனை செய்திருந்தால் , உன்னை இழந்திருக்க மாட்டேன். எந்த தீய பழக்கங்களும், எந்த எதிர்மறை எண்ணங்களும் அற்ற உனக்கு, என்ன வியாதி வந்துவிடப் போகிறது என்ற அறியாமை என்னை ஆட்கொண்டிருந்தது.  சகலத்திலும் முடிவெடுக்கும் நீ, இதில் மட்டும் எப்படித் தவறிழைத்தாய்?  பிறருக்கு உதவுவதற்கு மட்டுமே மருத்துவ மனைக்குச் சென்ற உனக்கு, அந்த இடமே உன்னைப் பறித்தது என்ன கோரம்?

அன்பு விஜி, நீ விட்டுச் சென்ற வெற்றிடம், உன் அருமை, உனக்கே புரியுமா? அப்படிப் புரிந்திருந்தால் என்னை விட்டுச் சென்றிருப்பாயா? உற்றம், சுற்றம், நட்பு இல்லம் என சகலத்தையும் ஆக்கிரமித்திருந்தாயே!  இந்த வீடு முழுவதும், ஏன் நீ இருக்கும் இடமெங்கிலும் நீ மட்டுமே இருந்தாய்.  நீ இருந்தால் இந்த இடம் முழுவதும் அங்கே அன்பாலும், இன்சொல்லாலும் , நகைச்சுவையாலும் நிரப்பப் பட்டிருக்கும். மனிதர்களை எவ்வளவு நேசித்தாய் என அறிவேன்! உதாரணப் பெண்மணி நீ !   நல்ல மனிதர்கள் ஏன் விரைவாக உலகிலிருந்து விலகி விடுகிறார்கள் என விளங்கவில்லை!

மறைவதற்கு முன்னர், என்னிடம் ஒரு முறை சொன்னாய்! உங்களது திமிர், கம்பீரம், தைரியம், பொலிவு என அனைத்தையும் இழந்துவிட்டீர்கள் என. எல்லாவற்றிற்கும் பின்னாலும்  நீ மட்டுமே இருந்தாய். நீ நோயுற்றதால், எனது குணங்கள் என, நீ குறிப்பிட்டவை அனைத்துமே நோயுற்றதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

விஜி..... நீ மறைந்தபின், வெள்ளமென நிகழ்வுகள் பல நடந்தேறிவிட்டன.  வாழ்க்கை அயர்ச்சியையும், சோர்வையும், சலிப்பையும் தருகின்றன.

“யவருமற்ற ஆள்தானே நீ...  உனக்கென தனியாக அடையாளம் எதற்கு?  உனக்கு உணவிடுவதும், ஏன் உன்னுடன் உரையாடுவதும்  கூட என கருணையால்தான். உன்னை அவமதிப்பது எனது உரிமை ..”  என்ற ஒரு அலட்சியப் பார்வை, சிலரின் பார்வையில், பொதுவான அடித்தளமாகத்  தெரிகிறது.  

மீதி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதே, நிமிர்ந்து நிற்பதுவே, கைகளை ஒருபோதும் மேல் நோக்கி வைத்திருக்காமலிருப்பதே, அவர்களுக்கு என் ஒரே பதில்.   நீயும் அதைத்தான் விரும்புவாய் என நான் அறிவேன்.  நீ பல முறை சொல்லியிருக்கிறாய். “நான் உங்களுக்குப் பின்னர்தான் இறக்க விரும்புகிறேன். ஏனெனில்,   நான் மட்டுமே உங்களைப் புரிந்து கொண்டிருக்கிறேன்“  என. எல்லாம் தலைகீழாய்விட்டது.  


எப்பொழுதும் போல உனது வழிகாட்டுதலில் இன்றும் வாழ்கிறேன்.  உன்னைப் பற்றிப் பேச, பகிர்ந்து கொள்ள, வேறு வழியில்லாததால், இங்கே எழுதுகிறேன்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

Tuesday, December 15, 2015

எங்கோ தொலைத்துவிட்டு, எங்கோ தேடுகிறோம்...

இன்று முகநூலில் ஒருவர் நொந்துபோய் ஒரு பதிவிட்டிருந்தார். நிவாரண உதவி வழங்குவதற்காக வந்திருந்த ஒரு குழுவிற்கு நேர்ந்த சில அனுபவங்களை, அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

உதவி வாங்கிய நபர்களே திரும்பத் திரும்ப வந்து வாங்குவது, பிறருக்கு பொருட்களை கொடுப்பதைத் தடுத்து - தாங்களே பெற்றுக் கொள்வது, தேவைப்படாதோர் கூட பொருட்களைப் பெற்றுக் கொள்வது, ஒரு ஒழுங்கு முறை இல்லாமல் அடித்துக் கொள்வது, நிவாரணம் வழங்க வந்த ஒருவரிடமே ‘பர்ஸை’ ஜேப்படி செய்தது என பல வற்றைக் குறிப்பிட்டிருந்தார். பர்ஸைப் பரிகொடுத்தவர், ‘இவர்களை வெள்ளம் இழுத்துச் செல்லட்டும்’ என சபித்துவிட்டுச் சென்றுவிட்டாராம்.  இவ் வெள்ளச்  சமயத்தில் நானும் சில தகாத செயல்களை பார்த்திருக்கிறேன்.

இந்த சமுதாயம், ஏன் இப்படி மாறிவிட்டது  என சற்று விசனமாயிருந்தாலும்,  இந்த சமுதாயம்தான், பல இன, மொழி, மத வேறுபாடுகளைக் கடந்து உதவிக்கரம் நீட்டியிருக்கிறது என்பதை மறந்து விடலாகாது. உதவிக் கரம் நீட்டியதில் தன்னாலர்வர்கள், அது போன்ற குழுக்களின் பங்கு கனிசமானது. இவர்கள்தான் உடனடியாக களத்தில் இறங்கினார்கள். பல்வேறு முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தில், எல்லோரும் நல்லவராக இருந்திட விழைவது நடக்காத காரியம் தானே?

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அது 1970 கள். அப்பொழுது சேலம் பஸ் நிலையம், பழைய விக்டோரியா தியேட்டர் அருகில் இருந்தது.  பேருந்துகள் உள் சென்று வெளிவரக் கூடாத அளவிற்கு, பழக் கடைகள் நுழைவாயில் ஆக்கிரமிப்பு செய்திருப்பார்கள்.  காவல்துறை பல முறை எச்சரித்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றமாட்டார்கள். ஒரு துடிப்பு மிக்க இன்ஸ்பெக்டர் ஒருவர், கடுப்பாகி, ஆக்கிரமிக்கப் பட்டிருந்த கடைகளில் அடுக்கியிருந்த பழங்களை, கூடை கூடையாக தூக்கி வீதியில் எறிந்தார். இதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்னவெனில்,  அப்பழங்களை அள்ளுவதற்கு (பொறுக்குவதற்கு) ‘கனவான்கள்’ சிலரும் அலைந்ததே!  இலவசமாகக் கிடைக்கும் ஒன்றை எடுத்துக் கொள்வதற்கு எவரும் தயங்கவில்லை.  இன்று அந்த ‘சிலர்’, ‘பலராகி’ விட்டனர். அவ்வளவே!

இந்த சமுதாய நடத்தைக்கு (ஸொஷல் பிகேவியர்) காரணம் என்னவாக இருக்கக் கூடும்? ஒரு இடதுசாரி நன்பரிடம் கேட்டேன். ‘அப்படித்தான் நடக்கும். ஏழ்மை அதிகமாகி, செல்வம் ஒருசிலரிடமே குவியும் போது, கலவரங்கள் நிகழ்வது சாத்தியமே! நிலைமை மோசாமாகிப் போனால் உணவுக் கலவரம் கூட வரும் (ஃபுட் ரையாட்), உணவிற்காக கொலையும், கொள்ளையும் கூட நடக்கலாம் என்றார்.

எனக்கென்னவோ அது, முற்றிலும்  சரியான நிலைபாடாகத் தோன்றவில்லை. ஓரளவிற்கு உணமை இருக்கும்.  ஏழ்மை மிகுந்தால், சில மாரல்களும், எதிக்ஸ்களும் போய் போய்விடுமா என்ன? ஏழ்மையாயிருந்தால் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என சலுகை இருக்கிறதா?

‘ஏற்பது இகழ்ச்சி..’ என்று மூதுரைத்ததும் நம் சமூகம் தானே?

யோசித்துப் பார்த்தால், இரண்டு காரணங்கள் தோன்றியது. முதலாவதாக, உதவிகள் யாவும் அரசு போன்ற உயர் கட்டமைப்பால், முழுமையாக ஒழுங்கு படுத்தப்படவில்லை. வெளியூர் ஆட்களுக்கு யாருக்கு உதவி தேவைப்படுகிறது என்ற தெளிவான வழிகாட்டுதல் இல்லை. எனவே  குழப்படிகள் வரும்தான்.

இரண்டாது, தனி நபர் ஒழுங்கு  சம்பந்தப்பட்டது.  ஒரு தனிமனிதன் ஒழுக்கத்தை எங்கிருந்து கற்றுக் கொள்ளமுடியும்? பள்ளிக் கூடங்கள், பெற்றோர்கள், நல்ல நூல்கள்  போன்றவற்றின் மூலம் தானே?  துரதிர்ஷவசமாக, முக்கியமான பங்காற்ற வேண்டிய நமது கல்விமுறை முழுமையான தோல்வியைக் கண்டிருக்கிறது.   முன்பு நமது கல்விமுறை நல்ல  ‘குமாஸ்தாக்களை’  உருவாக்கியது. தற்போது கனிதம், இயற்பியல், மின்னனு போன்றவற்றைக் கற்றுத் தருகிறது. ஆனால் ஒரு ‘நல்ல மனிதனை’ தந்திருக்கிறதா என்றால், ஆமாம் என தலையாட்ட முடியவில்லை.

எங்கே தவறு?

தரமான சமுதாயம் வேண்டுமெனில், ‘நன்னெறிகள்’ போதிக்கப் படவேண்டும். அவை அனுசரிக்கப் படவேண்டும்.  அதாவது,  ஒழுக்க நெறிகளும் சிறுவயதில், பள்ளிகளில் மனதில் பதிய வைக்கப் படவேண்டும். மிக முக்கியமாக, இவை யாவும், தாய்மொழியில்தான் கற்றுத் தரப்பட வேண்டும். 90% ஆங்கிலமயமாகிவிட்ட ஒரு கல்விமுறையில் -  கனித, இயற்பியல், உயிரியல் பாடங்களில் நூறு மார்க்குகள் பெற்றே ஆகவேண்டும் என வெறிகொண்டு ஓடும் ஒரு சமூகமாக மாறிவிட்ட சூழலில், மொழிப்பாடம் (லாங்குவேஜ்) என்பதே கடைபட்சமாக மாறிவிட்ட நிலையில் திருக்குறளையும், நாலடியாரையும், மூதுரையையும், அக நாணூரையும் யாருக்குத் தெரிகிறது? இதுவே தெரியாதெனில், பெரியபுராணமும், தேவாரமும், திருவாசகமும்,  பிரபந்தங்களும் எங்கே தெரியும்? 

இவைகளைப் புறந்தள்ளிவிட்டு, எங்கிருந்து ‘நன்னெறிகளை’ கற்றுக் கொள்வது? தமிழில் “ஜஸ்ட் பாஸ் மார்க்” போதுமப்பா என்ற நிலமை வந்துவிட்டது.  “என் குழந்தைகளுக்கு தமிழ் எழுதவெல்லாம் தெரியாது” என்று சொல்வது கேவலம் என்பது தெரியாமல், அதை ‘கௌரவமாகக் கருதும்’ பெற்றோர்களே அதிகம்.  “ஸ்போக்கன் இங்க்லீஷ்” வகுப்பு போல,  தமிழில் உரையாட தனி வகுப்பு நடத்த வேண்டும் போலுள்ளது நிலைமை. எந்த நாட்டிலாவது இந்த அபத்தத்தைக் கண்டதுண்டா?  தாய்மொழியில் கற்பிக்கப்படும் நெறிகள்தானே மனதில் பதியும்!

 மோப்பக் குழையும் அனிச்சம் முதல், எனது பொருளாதார திட்டமிடல் வரை, எனகது திட்டமிடலுக்கு அடிப்படை   தமிழே!  ‘ஆகாறளவிட்டிதாயினும் கேடில்லை, போகாறகலாக்கடை’ என்ற குறள்தான் இன்னமும் வழிகாட்டுகிறது என்பதை நம்புவீர்களா?

தர்மங்களைப் போதிக்கும், ‘சமயக் கல்வி’ என்பது இல்லவே இல்லை. தமிழக வினோத அரசியல் காரணங்களினால்,  திவ்யபிரபந்தங்களும்-தேவாரங்களும்-திருவாசகங்களும் தீண்டத் தகாதவை ஆகிவிட்டன.  கடவுள் பயமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். தன்னைத் தவிர வேறொன்றையும் எண்ணாத,  எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற மனோபாவம் கொண்ட,  நியாய-ஒழுக்க நெறிகளுக்கு உடன்படாத ஒரு கூட்டம் வேகமாக வளர்ந்து வருகிறது

இத்தனை குளறுபடிகளுக்குப் பின்னாலும், இப்போது நடக்கும் நற்காரியங்களை நினைத்தால் நம்பிக்கை இழந்து போக வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.

முயன்றால்,  நம்மால் வழிகாட்டும் இனமாக மாறமுடியும்.  சற்றே நமது கலாச்சார, ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டால், கற்பிக்கப் பட்டால் போதும்.



Saturday, December 12, 2015

மூண்றாம் உலக யுத்தம்

மூன்றாம் உலக யுத்தம் வருமா அல்லது வந்தேவிட்டதா என்ற பீதி, அச்சம் இப்பொழுது எழுந்துள்ளது. ஆங்கில மீடியாக்களில் விவாதம் அனல் பறக்கிறது.  ஜாம்பவான்கள், மூன்றாவது யுத்தம் வருமா? வந்தால் அது எப்படி இருக்கும்? எத்தகைய பாதிப்பு இருக்கும் என்றெல்லாம் எழுதி மாய்கிறார்கள்.  

துருக்கி ரஷ்ய விமானத்தை வீழ்த்தியபோதும், சீனக்கடல் பிராந்தியத்தில் அமெரிக்க உளவு விமானம் பறந்த போதும், தென் கொரியா  அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த போதும் இந்த அச்சம் மேலெழுந்தது.  தற்போது
ISIS காரணம் காட்டி மிரளுகிறார்கள்.
இந்த அச்சமும், விவாதமும் புதிதல்ல.  1980 களிலிருந்தே வருவதுதான். சோவியத் யூனியன் இருக்கும்போதும் இந்த அச்சம் உச்சத்தில் இருந்தது. அதன் பிறகும் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பதைப்பூட்டும் நிகழ்ந்தாலும் அது உலகயுத்தமாக மாறிவிடுமா என்ற யூகங்கள் உலாவரும்.  காரணம், விரல்  நுனி அழுத்தலில், அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் புறப்பட்டுவிடக்கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் என்ற பதட்டமே.

இதுவரை நடந்த உலக யுத்தங்களின் அடிப்படையாக இருந்தது, நேரிடையாக  ‘நாடு பிடிக்கும் ஆசை’.  மறைமுகமாக ‘செல்வம்’ கொழிக்கும் நாடாக மாறவேண்டும்; அதற்கு ‘மற்ற நாடுகளை அடிமைப்படுத்தி சுரண்ட வேண்டும்’ என்ற திட்டமே.
தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற   செலவுபிடிக்காத  திட்டங்கள் பலவற்றை மேலை நாடுகள் கைவசம் வைத்திருக்கின்றன. சோவியத் யூனியனையே ‘அதிக’ செலவின்றி சிதறச் செய்யவில்லையா?

எனவே, தற்போதய நிலையில், மூன்றாம் உலகயுத்தம் ஒன்று வருவதற்கான  “நிச்சய வாய்ப்பு” இருப்பதாகத் தோன்றவில்லை.  அதாவது கன்வென்ஷனலாக  நாம் உணர்ந்திருக்கும் படியான யுத்தம் என்றால் (ஃப்ஸிகல் அசால்ட்)

அத்தகைய யுத்தம் அமெரிக்கா உட்பட யாவருக்கும் கட்டுப்படியாகாது.  இன்றைய தினத்தில் ‘போர்’ என்பது  மிகச் செலவு பிடிக்கும் சமாச்சாரம். ஒரு
 நவீன போர்விமானத்தின் அடிப்படை விலை 165 மில்லியன் யு.எஸ் டாலர்.  எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கள் சேர்த்தால் 200 மில்லியன் டாலர் வரும். ரஷ்ய நவீன போர் விமானகளும் ஏறத்தாழ அதே விலை. அட்டாக்கிங்க் நீர்மூழ்கிக் கப்பல் 2.5 பில்லியன் டாலர். விமானம் தாங்கிக் கப்பல் 4,5 பில்லியன் டாலர். பிற ஆயுதங்களை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மூன்றுமாத யுத்தம் பல வளர்ந்த நாடுகளை போண்டியாக்கிவிடும்; அதுவரை எவரேனும் அணுஆயுதங்களை ஏவி மனித குலத்தையே அழித்திருக்காவிட்டால்!!

இந்தியாவால் ஒருமாத யுத்தத்தை  சமாளிக்க முடிந்தாலே பெரிய விஷயம். (நமது வெடிபொருட்களின் ஸ்டாக் அவ்வளவே)

எல்லோரையும் ஏழையாக்கிவிட்டால், மேலை நாடுகள், யாரிடம், எதை விற்று ‘காசு பார்ப்பார்கள்?’

எனவே, உலகை ஒரு பதட்ட்த்திலேயே வைத்திருந்து, எல்லோருக்கும் ஆயுதங்களை விற்று, ‘ரத்த சேதமில்லாமல்’ காசு பார்ப்பது அமெரிக்காவிற்கு உகந்தது தானே?

அப்படி ஆயுதங்களை விற்றுக் கொண்டே இருக்கச் செய்ய, பல யுக்திகளை அமெரிக்கா அறியும். நடக்கும் சிரிய யுத்தம் உட்பட பலவும் அத்தகையதே! ஆனால் தங்களுக்கு யார் எதிரி என்பதை விளங்கிக் கொள்ளாத அல்லது விளங்கியும் அமெரிக்க திட்டங்களுக்கு உடந்தையாகி விட்ட சில நாடுகள் உலகின் துரதிர்ஷ்டம்.

இவற்றை எல்லாம் மீறி யுத்தம் ஒன்று வந்தால் அது அது அமெரிக்காவிற்கும்-சீனாவிற்குமாகத்தான் இருக்கும். (தற்போது அணி சேர்ந்திருக்கும்  நாடுகளின் பட்டியலைப் புறந்தள்ளி விடுங்கள். சீன்கள் மாறிக்கொண்டே இருக்கும்) ஏனெனில், சீனப் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்தை எல்லா முனைகளிலும் வெல்லும் காலம்  வெகுதூரத்தில் இல்லை. ஏற்கனவே அளவில் பெரிய பொருளாதார சக்தியாக 2014 வாக்கில் உருவாகிவிட்டது. ரிடெய்ல் சேல்ஸில் அமெரிக்கவை விஞ்சிவிட்டது சீனா. (சீனா 1.97 ட்ரில்லியன் டாலர். அமெரிக்கா 1.56 ட்ரில்லியன் டாலர்.)

சந்தைப் போட்டியில்  தோல்வியைத் தழுவ அமெரிக்கா விரும்பாது. தங்கள் பொருட்களை விற்பதற்கு உலகில் நாடுகளே இல்லை என்ற கையறு நிலைவந்தால், அமெரிக்கா சீனாவைத் தாக்கலாம்.  இந்தெந்த பொருட்களை நீ விற்றுக்கொள், இந்தெந்த பொருட்களை நான் விற்றுக் கொள்கிறேன் என திரைமறை உடன்பாடு ஏற்பட்டு, தங்கள் போட்டிகளைத் தீர்த்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்தது.

அதுவரை, தங்களது ஆயுதங்களை விற்க, அமெரிக்கா, உலகில் ஏதாவது ஒரு இடத்தில், பதட்டத்தை தோற்றுவித்துக் கொண்டேதான் இருக்கும். 

யுத்தம் வந்தால் அது ‘அணு ஆயுத யுத்தமாகத்தான்’ இருக்கும் என்பதை பெரியண்ணன் நன்கறிவார். அப்படி ஒன்று நடந்தால் மனித இனமே இருக்காது; ஏன் எந்த உயிரனமுமே இருக்காது என்பதையும் அறிவார். எனவே உலக யுத்தம் கவலையின்றி உறக்கம் கொள்க.







Sunday, December 6, 2015

கடலூர்

நான் கடலூரைச் சார்ந்தவன். கடலூர் இன்னொமொரு இன்னலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சுனாமி, தானே புயல் என பலவற்றையும் தாங்கிய கடலூர் மற்றும் ஒரு பெருவெள்ளத்தையும் தாங்கும் நிர்பந்தம். அரசு இயந்திரம் தன் முழுவேகத்தில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இயற்கையின் சக்தி எல்லாவற்றையும் மீறியதல்லவா?

பல்வேறு உதவிக் குழுக்கள் விளம்பரமின்றி ஆதரவுக்கரத்தை நீட்டியிருக்கின்றன. அரசாங்கமும் பெரிய அளவில் முகாம்களை நிறுவியிருக்கிறது. பேரிடர் என வரும் பொழுது, எல்லா மாச்சர்யங்களையும் மீறி, உதவிகள் குவிகின்றன. குறைகளை பலர் சொன்னாலும், பல்வேறு குணாதிசியங்கள் கொண்ட இச் சமூகத்தில், இதைவிட சிறப்பாக பொருட்களை வினியோகித்திருக்க முடியாதுதான்.

ஆனால், அடிப்படையான பிரச்சினை ஒன்று இருக்கிறது. அதுதான், பேரிடர்களை எந்த அளவிற்கு எதிர்பார்த்திருக் கிறோம், அதற்கான தயாரிப்புகளில் எந்த அளவிற்கு ஈடுபட்டிருந்தோம் என்பதுதான்.

இங்கே எந்த ஒரு தனிப்பட்ட கட்சியையும் குறை சொல்லவில்லை. இப்படி பேரிடர் வந்தால், இப்படிச் செயல்பட வேண்டும் என்ற ப்ளூபிரிண்ட் ஏதாவது இருக்கிறதா என்றால், துரதிர்ஷடவசமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ராணுவத்தில் ஒன்று சொல்வார்கள், ‘அமைதிக் காலத்தில் செலவாகும் வியர்வை, போர்க்காலத்தில், போர்க்களத்தில் விரயமாகும் இரத்தத்தின் அளவைக் குறைக்கும்’ என. அதாவது அந்த அளவிற்கு தயாரிப்பும், தயார் நிலையும் தேவை என்கிறார்கள்.

கடலூர், புவியியல்படி, அதிக அனுகூலங்களைக் கொண்டது. இது மிகப் பெரிய நகரும் அல்ல. நகரினுள்ளேயே இரு பெரும் ஆறுகள் ஓடுகின்றன. தென்பெண்ணை மற்றும் கெடிலம் (கருட நதி). இது தவிர நிறைய உப்பனாறுகள். மிக அருகில் கடல். இவ்வளவையும் வைத்துக் கொண்டு வெள்ள நீர் வடியவில்லை என்றால் கோளாறு யாரிடம்?

பொதுவாக, கடலூரை நெல்லிக்குப்பம் சாலைக்கு இந்தப் பக்கம், கெடிலம் ஆற்றுக்கு அந்தப்பக்கம், முது நகர் என நீர்வாட்டதிற்கு ஏற்றாற்போல மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம். அந்தந்தப் பகுதிகளில் சேரும் வெள்ள நீரை அந்தப் பகுதி ஆற்றில் சேருமாறு செய்வது எளிது.

எங்கே வெட்டினால், சுலபமாக வெள்ளம் வடியும் என்ற நில அமைப்பைப் பற்றிய ‘க்ளூ’ கூட இல்லாமல் இருக்கிறார்கள்.

எக்காலத்திலும் கடலூர் இப்படித்தான் இருந்ததா என்றால், அப்படி இல்லை.. நகரில் இருந்த பல்வேறு குளங்களைக் காணோம். குறுக்கும் நெடுக்குமாக ஓடிய வடிகால்களையும், கால்வாய்களைக் காணோம். எல்லாவற்றையும் ப்ளாட் போட்டாகிவிட்டது அல்லது ஆக்கிரமிப்பில் உள்ளது.

எங்கே கோரிக்கையும் மறியலும் நிகழ்கிறதோ அங்கே ‘பொர்க்லைன்’ கொண்டுவந்து நோண்டிவிட்டால், அது பிரச்சினையை வேறு ஒரு இடத்திற்கு மாற்றல் செய்கிறதே தவிர, அடிப்படையான விஷயம் அப்படியேதான் இருக்கிறது. ஒரு நகர்வாசிகள் அடைந்த இன்னலை மற்றொரு நகர்வாசிகள் அனுபவிப்பார்கள் அவ்வளவே.

இவைகளுக்கு அரசு இயந்திரத்தை குறை கூறிப் பயனில்லை. தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் எந்த பேரிடரையும் கற்பனைகூட செய்திருக்கவில்லை அல்லது நிகழ்ந்த பேரிடர்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

நடந்த வெள்ளப் பெருக்கு, நமது பலவீனங்களை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. வெள்ள நீர், தனது பாதை எதுவென தீர்க்கமாகச் சொல்லிவிட்டது. அதற்கேற்றாற்போல அடுத்த வெள்ளக் காலத்திற்குள்ளாக சுதாகரித்துக் கொள்வோமா, உடணடியாகத் திட்டங்களைத் தயாரித்துக் கொள்வோமா இல்லை, இந்த சீசன் முடிந்ததும் எல்லாவற்றையும் மறந்து ‘வழக்கம்’ போல பணிகளை மேற்கொள்ளப் போகிறோமா என்பதை ஆட்சியாளர்கள் தீர்மாணிக்க வேண்டும்.

வடிகால்கால்களை நிர்மாணிக்காவிட்டால், லேயவுட்களை அப்ரூவ் செய்யும் பொழுது, தனித்தனி தீவுகளாக இல்லாமல், மற்ற நகர்களுக்கு இணைப்பு இருக்கிறதா, வடிகால்களுக்கு வசதி இருக்கிறதா, முக்கிய சாலையிலிருந்து அந்த நகர் எந்த அளவு பள்ளத்தில் இருக்கிறது போன்ற அடிப்படையான விஷயங்களை கணக்கில் கொள்ளாவிட்டால், இது தொடர்கதைதான்.

தயவுதாட்சணமின்றி, அரசியல் நோக்கின்றி, ஓட்டுக்களை கணக்கில் கொள்ளாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அவர்களுக்கு மாற்று குடியிருப்பு என்பது தனி விஷயம். ஆக்கிரமிப்பு இல்லையென்றால், இந்த அளவிற்கு நிலைமை மோசமாயிருக்காது.

செய்வார்களா?