காலை ஐந்து மணி.. கிர்..புர் என்றது செல்பேசி.. யாரப்பா இது இந்த காலையில்.. என்று யோசிக்கும்போதே நின்றுவிட்டது. சரிதான் இது எஸ்.எம்.எஸ் டோண். ஏதோ ஒரு ஒன்றுக்கும் உதவாத ஒரு மெஸேஜ் வரும்.... அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். மீண்டும் தூங்கினேன்.
ரொட்டீன் வேலைகளை முடித்து, நிதானமாக செல்போனை எடுத்து பார்த்தபொழுது எட்டு எஸ்.எம்.எஸ். எல்லாம் “ஹாப்பி வினாயகர் சதுர்த்தி” . இப்பொழுது பிள்ளயார் சதுர்த்திக்கெல்லாம் கூட “கிரீட்டிங்க்ஸ் மெஸேஜ்” அனுப்புகிறார்களா என்ன?
அந்த காலத்தில் எல்லாம் “வாழ்த்து அட்டை” என்பது ‘பொங்கல்’ காலத்தில் மட்டும்தான். இதற்கென தனியாக பிளாட்பாரங்களில் ‘திடீர்’ கடைகள் தோன்றும். ஜோடி மாடுகள், தனி மாடு, பொங்கல் பானை, கரும்பு, வண்டிமாடு, மறக்காமல் ஒரு பெண்-இவை யாவும் பல்வேறு காம்பினேஷன்களில் விற்கும். ஒரு கார்டு குறைந்த பட்சமாக 10 பைசா தான்! இந்த கார்டுகளை வாங்குவதற்காக ஒருமாதம் முன்பிருந்தே சிறுவர்கள் நாங்கள் காசு சேர்க்க ஆரம்பிப்போம்.
நிறைய காசு உள்ள பையன்கள், ‘கவருக்குள் வைத்து ஒட்டி’ அனுப்பும் வாழ்த்து அட்டைகள் வாங்குவார்கள். அதிலும் இதே மாடு-கரும்பு-பொங்கல் பானை சமாசாரம் தான். கொஞ்சம் பள-பள காகித்த்தில் இருக்கும்.
அப்புறம் கொஞ்சம் காலம் மாறிப்போய், எம்.ஜி.ஆர், சிவாஜி, கே.ஆர்.விஜயா, விஜய நிர்மலா (அந்த கால கவர்ச்சி நடிகை) படம் போட்ட கார்டுகள் விற்றன. இம்மாதிரியான கார்டுகள் வாங்கி வந்தாலோ அல்லது நமக்கு யாராவது அனுப்பினாலோ அவற்றை உடண்டியாக ஒளித்து வைத்துவிடுவோம். வீட்டுப் பெரியவர்களிடமிருந்து ‘காவலிப் பய’ என்ற பட்ட்த்திலிருந்து தப்பிக்க.
எங்க வீட்டுக்கு இருபது அட்டைகள் வந்தது? உனக்கு?
வந்த அட்டைகளை பத்திரமாக வைத்திருப்போம். அடுத்த பொங்கல் வரை. அழுக்காகமல் இருந்தால், ரவிக்கைத்துணி சுழற்சி போல, மீண்டும் பயன்படுத்தலாமே?
சில சமயம், வாழ்த்து அட்டைகளின் ஒட்டப்படும் ‘ஸ்டாம்புகளில்’ போஸ்டாபீஸ் சீல் விழாது. அத்தகைய அட்டைகளை தண்ணீரில் ஊறவைத்து, கிழியாமல் ‘ஸ்டாம்புகளை’ பிய்த்தெடுப்பது தனிக்கலை.
தீபாவளிக்கு “பட்டாசு வாங்கியாச்சு” என்பது போல, பொங்கலுக்கு ‘வாழ்த்து அட்டை” வாங்கியாச்சு என்பது சிறார்களுக்கு முக்கியமான கவலை!
பொங்கல் வாழ்த்து மாதிரி ‘தீபாவளி வாழ்த்து அட்டைகள்’ விற்பனை எல்லாம் கிடையாது! ‘கங்கா ஸ்னானம் ஆச்சா” வோட சரி..
பிறகு மெள்ள, மெள்ள இந்த கலாச்சாரம் காணாமற் போய், பிறகு பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் பிரபலமாயின. சிறு வயதில் நான் பிறந்த நாளை கொண்டாடியதாக நினைவேயில்லை. எதாவது ஒருவருஷம், தப்பித்தவறி பெரியவர்களுக்கு நினைவுக்கு வந்துவிட்டால், கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வருவார்கள். அதுவும் இக்காலம் போல அந்த-அந்த தேதிகளில் இல்லை. ஜென்ம நட்சத்திரம் என்று வருகிறதோ அன்றுதான் பிறந்த நாள். இதனால் தான் ஃபேஸ் புக்கில் யாராவது ‘ஹாப்பி பர்த்டே’ சொல்லும் போது புளகாங்கிதம் அடைய முடியவில்லை. பர்த்டே என்பது மற்றுமொரு நாளே!
அது கிடக்கட்டும் விடுங்கள். இந்த பி.நா.வா. அட்டைகள் அப்பாவுக்கு, அம்மாவுக்கு,அக்காவுக்கு, தம்பிக்கு,தங்கைக்கு, ஏன் மாப்பிள்ளைக்கு கூட தனித்தனியாக கிடைத்தன.
அப்போது, குழந்தைகள் கூட, பிறந்த நாளன்று ஒரு ‘ஆர்ச்சீஸ்’ கிரீட்டிங்ஸ் கார்டு’ அனுப்பவில்லையெனில், விரோதமாக பார்க்கும்.
இந்த கார்டு அச்சடிக்கும் கம்பனிகளுக்கு ‘வசனம்’ எழுதிகொடுக்க ஸ்பெஷல் எழுத்தாளர்கள் கூட உண்டு!
‘வசனகளை செலெக்ட்’ பண்ணுவதற்காக பாய்/கேர்ள் பிரண்டுகளை அழைத்துச் செல்வதெல்லாம் நடக்கும். அதுவும் ‘காதலனுக்கோ / காதலிக்கோ பிறந்த நாள் எனில் செலக்ஷன் இன்னும் களை கட்டும்! அதென்ன விசேஷமோ தெரியவில்லை, காதலர் பிறந்த தின கார்டுகள் எல்லாம் 50ரூபாய்க்கு மேல்தான். மோகத்தில் இருப்பவர்களிடமிருந்து நோகாமல் “பறிக்க” இது நல்ல வழி இல்லையா?
பின் இதுவும் மாறி விட்ட்து. இப்போது எல்லாம் e-Card தான். காசு செலவில்லாமல், ஸ்டாம் ஒட்டாமல், ஆன்லைனில் தேடித்தேடி செலக்ட் செய்து அனுப்பலாம். ஒரு எலி போதும்.
பிறந்த நாள் கார்டு மட்டுமல்ல, அம்மா நாள், அப்பா நாள், காதலர் நாள், நண்பர் நாள், குருவி நாள், கொழுந்தியாள் நாள், நாத்தனார் நாள் என பல்வேறு தினுசுகளில் நாட்கள் வருகின்றன. அமெரிக்க நாகரிகத்தை காப்பியடிக்காவிட்டால் நமது மானம் மரியாதை யெல்லாம் என்னாவது? மல்ட்டி நேஷனல் கம்பணிகள் கல்லா கட்ட வேண்டாம்?
என்னதான் இந்தியத்தனமாக இருந்தாலும் ‘ஹாப்பி வினாயகர் சதுர்த்தி’ என்பது கொஞ்சம் இடிக்கத்தான் செய்கிறது.
வினாயகர் ரௌத்தர சுவாமி இல்லை. பயமில்லாமல், அவரை எப்படி வேணுமானாலும் வரையலாம். வாழ்த்தலாம். இலை போல, கம்ப்யூட்டர் போல, மௌஸ் போல, கட்டிடம் போல தங்களது கற்பனை திறத்திற்கேற்றாற் போல வரைந்து தள்ளலாம். அவரது உருவம் வேறு எப்படி வேண்டுமென்றாலும் வரைவதற்கு ஏற்றால் போல இருக்கிறதல்லவா? அவர் எதற்கும் கோவித்துக் கொள்ள மாட்டார்.
அந்த SMS-ல் ஒன்று நான் அனுப்பியது?!
ReplyDelete