Wednesday, June 8, 2016

அட்மிஷனோற்சவத்தில் ஒரு நாள்....

குடும்பம், கல்யாணம், குழந்தைகுட்டி  போன்ற எந்த இம்சைகளுமே வேண்டாம் என, தனித்திருப்போரைத் தவிர, பாக்கியெல்லோரும், வாழ்க்கையில் பல கண்டங்களைக் கடந்துதான் வரவேண்டும். அவர்கள், வாழ்க்கைத்துணை தேடல் போன்ற ‘எளிய’ கண்டங்களைக் கடந்து வந்துவிட்டாலும், குழந்தைகளின் காலேஜ் அட்மிஷன் என்ற மகா அசுரனைக் கடப்பது எளிதானதா என்ன?

‘மனைவி சொல்லே வேதம்’ என தலையாட்டிக் கொண்டு, தானுண்டு - தன் தயிர் சாதம் உண்டு வாழ்ந்தாலும் ‘கல்லூரி அட்மிஷன்’ என்று வரும்போது, பல புதிய ‘டெர்மினாலாஜிகளை’ பழகியாக வேண்டும்.  அதில் முக்கியமான வார்த்தைப் பிரயோகம் ‘மேனேஜ்மென்ட் கோட்டா”. 

மகன்/ள்,  என்ன மார்க் வாங்கப் போகிறாள்/ன் என்ற கலவரத்தில் இரவுத் தூக்கத்தைத் தொலைக்காதவர்கள் பாக்யசாலிகள். 95% வாங்கும் மகனை/ளைப் பெற்ற பெற்றோரும் 40% தான் கிடைக்கும் என்றிருப்போரும் கவலையற்ற மனிதர்கள். 60% மார்க் வாங்குவோர் பாடுதான் திண்டாட்டம். அரசு கோட்டா கிடைக்குமா அல்லது மேனேஜ்மென்டாதானா, அகடமிக்கா இல்லை புரப்ஷேனலா என்று தீர்மாணிக்க இயலாமல், நட்டாற்றில் தவிப்போர் இவர்களே! சரி.. சரி...எல்லாவற்றையும் கடந்துதானே வரவேண்டும்? 

சென்றமாதம், +2 ரிசல்ட் வருவதற்கு முன்பே, பொறியியல் கல்லூரி அட்மிஷனுக்காக (மேனேஜ்மென்ட் கோட்டாதான்) சென்னை செல்ல வேண்டியிருந்தது.  முடிவெடுப்பதற்கு ஏற்பட்ட குழப்பம், நிதி ஏற்பாடு என்ற எல்லா சிடுக்குகளையும் மறந்து, சென்னை சென்ற  அந்த ஒரு நாளின் அனுபவம் தான் இது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டு,  தலைசுற்ற வைக்கும் கட்டிடங்களோடு, பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் மலைப்பூட்டும் கல்லூரிகள். இவர்களுக்கு ஏது இவ்வளவு பணம் என்ற பிரமிப்பில் உள் நுழைந்தோம்.  இக்கல்லுரிகளில், பெரும்பாலனவை அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை என்பது ரகசியமில்லை. 

ஆளுயுர கேட்டில்,  நமது கார் நுழையும்போதே, கல்லுரி நிர்வாகத்தின்  கெடுபிடிகள் துவங்கும். அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பதற்குக் கூட இவ்வளவு பந்தாக்கள் இருக்குமா எனத் தெரியவில்லை. கார் நெம்பர், காரின் உள்ளே எத்தனைபேர் இருக்கின்றனர், எதற்காக வந்திருக்கின்றனர், அவர்களின் மொபைல் நெம்பர் என அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன. பின்னரே ஒரு என்ட்ரி பாஸ் வழங்குகிறார்கள்.  இந்த புலன் விசாரணை, திருப்பாற்கடலின் முதல் கேட்டிறகானது. (Gate)

சற்றே பயணித்து, இரண்டாவது கேட்டின் உள்ளே நுழைந்தவுடன்,   நம்மை, வரிசை வாரியாக நாற்காலிகள் போட்டு, அமரவைக்கின்றனர்.  அந்த ஹாலில், மூன்றாவது சொர்க்கவாசலுக்கு நுழை வதற்குண்டான நிபந்தனைகளை, போர்டு ஒன்றில்,  மளிகை சாமான்கள் ரோக்கா போல எழுதி வைத்திருக்கிறார்கள்.

முதல் நிபந்தனை, மூன்றாவது கேட்டில் நுழைவதற்கு முன்னால், நமது மொபைல் போன்களை அவர்களிடம் ஒப்படைத்தாக வேண்டும். அவற்றை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.  இல்லாவிடில், வெளியிலேயே விட்டுவிட்டு வர வேண்டும். ஆச்சா....

அடுத்த நிபந்தனை,  நீங்கள் ஃபார்மல் டிரஸில்தான் இருக்கனும். தெரியாத்தனமாக ஜீன்ஸோ அல்லது டி-ஷர்ட்டோ போட்டுக்கொண்டு வந்துவிட்டால் உள்ளே அனுமதி இல்லை. வேட்டிக்கு அனுமதி உண்டா இல்லையா எனத் தெரியவில்லை.   நினைவில் கொள்ளுங்கள். இந்த நிபந்தனை மாணவர்களுக்கு மட்டும் இல்லை.  பெற்றோர்களுக்கும்தான்.

இஸ்லாமியப் பெண்கள் ‘பர்தா’ போட்டுக்கொண்டுதான் வெளியே வரவேண்டும் என்பதற்கு ‘பொங்குபவர்கள்’, இந்த  கல்லூரி நிர்வாகம் போடும் ‘ஃபத்வா’ வுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்? நல்ல வேளை.. ஷூ இல்லாவிடில் உள்ளே வரக் கூடாது என்று சட்டமியற்றவில்லை. அடிக்கிற வெயிலில் அதை மாட்டிக்கொண்டு என்ன செய்வது?

அவர்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால், என் கல்லூரிக்கு வந்துவிட்டாயல்லவா? இனி மானவன்/ள் மாத்திரமல்ல; பெற்றோர்களும் எங்கள் அடிமைகளே என மறைமுகமாக, மனோரீதியாக நம்மை பயமுறுத்தி, பணியவைக்கும் காரியம் இது.  நல்லவேளையாக, நான்  எனது ‘யூஷுவல்’ குர்தா-ஜீன்ஸ் போட்டுக் கொண்டு போகவில்லை. 

அங்கே அமர்ந்திருக்கும் பணியாளர்கள் யாவரும், ‘கடுகடு’ வென முகத்தை வைத்துக் கொண்டிருப்பது ஏனோ?  கனிவாகப் பேசினால், ஏதாவது ‘ஆப்ளிகேஷன்’ கேட்டு விடுவார்களோ என்ற அச்சமா அல்லது அவ்வாறு நடந்துகொள்ள பணிக்கப்பட்டிருக்கி றார்களா தெரியவில்லை.
பல்வேறு என்ட்ரிகளுக்குப்பின்னர், பின்னர், நமது சட்டையிலேயே, QC pass என்பது போன்ற ஒரு ஸ்டிக்கரை ஒட்டி, உள்ளே அனுப்புகிறார்கள். 

ஆஹா..மூன்றாவது சொர்க்கவாசலுக்கு நேராகப் போய் அட்மிஷனை முடிக்கலாம் என்றால் அதுவும் இல்லை. அங்கேயும் நாற்காலிவரிசைகள் போடப்பட்டு, சேவகர் ஒருவர் வந்து, எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பது போன்ற தகவல்களை மீண்டும் கேட்பார்.  பின் நம்மைக் காத்திருக்கச் சொல்வார்.

தேவையில்லாமல், பெற்றோர்கள் ஒருவருடன் ஒருவர் சம்பாஷித்துக் கொள்கிறார்களா என அவ்வப்போது உறுதிசெய்து கொள்வார் பணியாளர். எந்த ஃபேகல்டிக்கு எவ்வளவு கேபிடேஷன் கேட்டார்கள் என விசாரித்துக் கொள்ளக் கூடாதல்லவா?

அங்கே காத்திருக்கும் பெற்றோர் அனைவரும், கலவர முகத்துடன்,  நாற்காலியின் நுனியில்தான் அமர்ந்திருந்தார்கள்.   அப்போதுதான்  +2 பரீட்சை எழுதிவிட்டு வந்திருக்கும் மானாக்கர்கள்;  பாவம்..பலியாடு போல பெற்றோர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  

நமக்கு வழங்கப்பட்ட டோக்கனின் எண் எப்போது வரும் எனத் தவமிருக்கும் பொழுது, சடாரென நம்மை அழைப்பார் ஒரு பணியாளர். நம்மை கிட்டத்தட்ட ‘ஓட்டிக்கொண்டு’ போய் தாளாளரின் அறைக்கு முன்பாகவோ அல்லது அட்மிஷன் செய்யும் அதிகாரம் கொண்டவரின் அறைக்கு முன்பாகவோ, அமரவைப்பார்கள். அங்கே மீண்டும் காத்திருக்க வேண்டும்.

அந்தக் கணங்களில்,  மூலஸ்தானத்திலிருந்து வெற்றிகரமாக அட்மிஷன் முடிந்து வெளிவரும் பெற்றோரின் முகத்தைப் பார்க்க வேண்டுமே..! உலகைவென்றுவிட்டு வரும் கம்பீரம் தெரியும்.

நமது முறை வந்ததும், உள்ளே நுழைந்தால், அங்கே மூலவர் கம்பீரமாக சன்னிதானத்தில் வீற்றிருப்பார்.  அவர் நம்மைப் பார்க்கும் பார்வையில், “உனக்கு அனுமதிக்கப்பட்ட நேரம் இரண்டு நிமிஷம்தான். அதற்குள் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பு” என்ற  செய்தி ஒட்டப் பட்டிருக்கும்.

‘டிப்ளமாடிக்’ பேச்சு என்பார்களே, அதை, இந்த  மூலவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். என்ன ஒரு கறார்!! என்ன ஒரு திறமை!  உங்களை உள்ளே விட்டதற்கும், உங்கள் வாரிசை எங்கள் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள  நாங்கள் சம்மதித்ததற்கும் நீங்கள் பூர்வ ஜென்ம புன்னியம் செய்திருக்க வேண்டும் என,  நம்மை ‘ஒரே’ நிமிஷத்தில்  நம்ப வைத்துவிடுவார்கள்.  அல்லது நாம் அப்படி நடித்தாக வேண்டும்.  அவருக்கு எதிரே, இரண்டு நாற்காலிகள் மட்டும் போடப்பட்டிருக்கும். மற்றவர் நிற்க வேண்டியதே!

அரசியல்வாதிகள் ‘கூட்டணி சீட்டு பகிர்வு பேச்சு வார்த்தைக்கு’ இவர்களை அழைத்துச் செல்லலாம். வெற்றிகரமாக காரியத்தை முடித்து விடுவார்கள். அவ்வளவு சாமர்த்தியம். சைக்காலஜி மாஸ்டர்கள்.

உங்களுக்கு ‘என்ன ப்ராஞ்ச் வேண்டும்.. +2வில் எவ்வளவு மார்க் எடுக்கக் கூடும்.. பத்தாவது மார்க் என்ன..” என்பனவற்றை குறித்துக் கொள்வார். சில கண்டிஷன்களை விளக்குவார். பின்  கழுதைவாயில் பிடிங்கிக் கொண்டு வந்தது போன்ற ஒரு துண்டுச் சீட்டில் சில லகரங்களை குறியீடாக எழுதித் தருவார். அவ்வளவே!  தரிசன டைம் முடிந்தது.  ஒரு பணியாளர்,  நம்மை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டுபோய், பணம் கட்ட வேண்டிய இடத்தில் விடுவார். பணத்தைக் கட்டிவிட்டு (ஒரு ரசீதும் இருக்காது... பணம் கட்டிய தேதியையும்-மாணவனின் பெயரும்தான் ரெஃபரன்ஸ்), ஹாஸ்டலில் ‘இலவசமாகச்’ சாப்பிட்டுவிட்டு கிளம்ப வேண்டியதுதான். 

உணவருந்திவிட்டு, திரும்பும் போது எட்டிப் பார்த்தால் மஞ்சள் பையிலோ, ஹேண்ட் பேக்கிலோ லட்சங்களை நிரப்பிக் கொண்டு, ‘எப்படியாவது’ அட்மிஷன் கிடைத்தால் போதும் என்ற முகபாவத்தோடு பெற்றொர்  பலர் காத்துக் கொண்டிருந்தார்கள்.

கிளம்பும் போது ‘எச்சரிக்கையொன்றையும்’ விடுத்தனர். அதாவது, ரிசல்டில் +2  மார்க் 60% க்கும் கீழே  வந்துவிட்டால், கேள்விகேட்காமல் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிடவேண்டும். அட்மிஷன் கேன்சல். அட்மிஷன் காலங்களில் நிகழ்வது போன்ற அவமானங்கள், மனிதனுக்கு வேறு எங்கும் நிகழாது.

‘எது மனிதனை கலாச்சார ரீதியாக உயர்த்துகிறதோ, எது மனிதனை நேசிக்கச் செய்கிறதோ, எது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறதோ, எது சிந்திக்கும் திறனை வளர்க்கிறதோ, அதுவே கல்வி. ஆனால், இந்த கல்வி வியாபாரிகளிடமிருந்து, இளம் சந்ததியினர்  எதைக் கற்றுக் கொண்டு, எந்த நாட்டை முன்னேற்றப் போகின்றனரோ தெரியவில்லை.

ஆனால், படிக்கவைக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு, அதுவும் மிட்-ரேஞ்ச் மார்க் எடுப்பவர்களுக்கு, இவர்கள் காலில் விழுந்து, கேட்ட பணத்தைக் கொடுப்பதைத் தவிர வேறு வழியென்ன இருக்கிறது?

1 comment:

  1. அரசியல் வியாதிகளின் முழு ஒத்துழைப்போடு நடக்கும் கல்விகொள்ளை தமிழகசாபம்.…

    ReplyDelete