Saturday, June 18, 2016

என்ட குருவாயூரப்பன்…..

குருவாயூருக்குப் பல முறை செல்லும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும், திருப்தியாக, மனதில் நிற்கும்படியாக, குருவாயூரப்பனின் தரிசனம் கிட்டியதே இல்லை.  முதல் காரணம், எனக்கு சற்று  நிதானமாக, சில வினாடிகளாவது, நல்ல வெளிச்சத்தில்  பார்த்தால்தான், எதுவுமே தெரியும்.  இரண்டாவது மூர்த்தி சிறியதாக, ஏகப்பட்ட மலர் அலங்காரங்களுடன் இருப்பதால், ஒரு தோராயமாக ஒரு உருவம்  இருப்பது தெரியுமே தவிர, முகம் தெளிவாகத் தெரிந்ததே இல்லை.

கோயிலில், கொஞ்சம் ரேம்ப் மாதிரி உயரத்திலிருந்து சரிவாக செல்வது போல, தரிசன வழி அமைத்திருந்தாலும் பரவாயில்லை; பார்த்துக் கொண்டே செல்லலாம். ஆனால், அருகில் போனால்தான் மூர்த்தியே தெரிகிறது. நமக்குக் கிடைக்கும் சில மில்லி செகன்ட் நேரத்தில் எப்படி நிதானமாகப் பார்ப்பது? அதற்குள், சேவகர்கள் இழுத்துவிட்டு விட்டுவிடுவார்கள். 

மற்றவர்கள் யாவரும் ‘ஆஹா... நல்ல தரிசனம்!’ என வியந்து, ‘நீங்கள் பார்த்தீர்களா?’ என்று என்னை வினவும்  பொழுது, ஒரு மாதிரியாக இளித்துவைத்து, ‘ம்ம்ம்ம்ம் பார்த்தேன்.. பார்த்தேன்..’ எனச் சொல்லிவைப்பேன். “எனக்கு முன்னால்  நிற்கும் நம்பூதிரிதான்   தெளிவாகத் தெரிந்தார்” என்றா சொல்ல முடியும்?  ‘ஓஹோ... பார்க்கவில்லையா? உங்களுக்குக் கொடுப்பினை இல்லைபோலும்’  என்ற பதில் வசனத்தை அடுத்தவரிடமிருந்து  கேட்க விரும்பாததால், சமாளித்துவைப்பேன்.

16/06/16 அன்று, எனது நண்பர் ‘குருவாயூருக்குச் செல்லலாமா’ என வினவியபோது,   ‘எப்படியும் சாமி தெரியப்போவதில்லை... போய் என்ன செய்ய..’ என நினைத்தாலும், ‘அதற்கென்ன போகலாமே..!’  எனச் சொல்லிவைத்தேன்.  

அப்போது, மாலை மணி நான்கு.

கோவையிலிருந்து, கேரள எல்லை வாலையாரைத் தொட்டதுமே, பிடித்தது மழை. மழையென்றால், நம் ஊரில் பெய்வதுபோல, பிசுபிசு மழையெல்லாம் இல்லை!  ‘அடியோதண்டம்’ என்று சொல்வார்களே அப்படி ஒரு மழை. வைப்பர் எத்தனை வேகமாகச் வழித்தாலும், சாலைதெரியாத அளவிற்கு!  கூகுளாண்டவர் மற்றும் ஜி.பி.எஸ் துணையால் பாலக்காடு, த்ரிஷூர் யாவற்றையும் தவிர்த்து குருவாயூரை அடைந்த பொழுது இரவு மணி எட்டு. கோயில் வாசலிலேயே, ஒரு சௌகரியமான ஒரு லாட்ஜ் கிடைக்க, அவசரக் குளியல் போட்டுவிட்டு, வேட்டி துண்டுடன் விரைந்தோடினோம்; ஒன்பது மணிக்கு நடை அடைக்கப்படும் என்பதால், தரிசனம் கிடைக்குமோ என்று சந்தேகத்தோடு.

பழைய நினைவில், ஏதோ ஒரு நடைவழியாக கோயிலின் உள்ளே  நுழைந்து வைக்க, ‘இப்படியெல்லாம் உள்ளே வந்தால், சாமி பார்க்கலாகாது, வெளியே போய் க்யூவில் வா..’ என விரட்டப்பட்டு, வெளியே வந்தால், வரிசைவரிசையாக, நீள நீள க்ரில் அடைப்புகளில் , மக்களை நிற்க வைத்து, ஒவ்வொரு வரிசையாக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர்.  நாங்களும் ஒரு வரிசையில் போய் நின்று கொண்டோம். 

‘ஒன்பது மணிக்குள் பார்க்க முடியுமா.. இன்னும் அரைமணி நேரம்தானே இருக்கிறது, இவ்வளவு கூட்டம்..’ என்று முணக, பக்கத்தில் இருந்த ஒரு நம்பூதிரி, ‘சார்.. குருவாயூருக்குப் புதுசோ..? இன்னைக்கு கூட்டமே இல்லியாக்கும்’ என்றார்.

‘கூட்டம் இல்லையா?’ இவ்வளவு ஜனம் இருக்கு.. இதைப்போய் கூட்டமே இல்லை என்கிறாரே. . அப்ப மற்ற தினங்களில் எப்படி இருக்குமோ ?

‘ஆமாம் சாரே! இன்னிக்கு கூட்டம் ரொம்ம கொரச்சு .. பாருங்க.., இன்னும் 15 நிமிஷத்திலே தரிசனம் ஆயிடும்’ என்றார்.  சற்றே, அவநம்பிக்கையுடன் காத்திருந்தபோது, சரசர வென கூட்டம் கரைந்து கொண்டிருந்தது.  

அவர் சொன்னபடியே, 15ஆவது  நிமிடத்தில்  சன்னிதானம் முன் நின்றோம்.  கிருஷ்ணனுக்கு பூ அலங்காரங்கள் எதுவும் இல்லை. முகம் மிகத் தெளிவாகத் தெரிந்தது.  ஸ்வாமி சந்தனக் காப்பில் இருந்தார். மிக நன்றாக, ஏன்... கொஞ்சம் நிதானமாகக்கூட  தரிசனம் செய்ய முடிந்தது.  

தரிசனம் முடிந்ததும், அருகில் நின்ற அந்த நம்பூதிரி,  “வெளியே போக வேண்டா.. ராத்திரி ஒன்பது மணிக்கு ‘ஓலைவாயனா’, ‘திருப்புகா’ உண்டு.. சேவிச்சுட்டு போலாம்; சுவாமி     நம்மளையெல்லம் பார்க்க வேண்டி, பிரகாரத்தில் மூன்று தடவை வலம் வருவார்” என்றார்.

அவர் சொன்ன இரண்டும், பாரம்பரியாமாக கோயிலில், க்ருஷ்ணனுக்கு செய்யப்படும் சேவைகள்.  

திருப்புகா என்பது, வெள்ளித்தட்டில் க்ருஷணனுக்கு
கருவரையில் செய்யப்படும் ஒரு ‘ஹாரத்திசேவை. 
ஓலைவாயனா என்பது, அன்றைய தின வரவு செலவு பற்றிய 
ஒரு அறிக்கையை கிருஷ்ணன் முன் வாசித்தல்.

“இப்படி ஒரு தினசரி நிகழ்வு இருப்பதே பலருக்குத் தெரியாது சாரே! பொறுத்திருந்து பாருங்கள். ப்ரமாதாய்  இருக்கும்.  நீங்க அதிஷ்டம் செஞ்ஜுண்டு

அவர் சொல்வது, ஓரளவிற்குப் புரிந்தாலும், என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால், ‘அவ்வளவு எளிதாகக் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பம் இல்லை’ என்று மட்டும் விளங்கிற்று. கூடியிருந்த மலையாள பக்தர்கள் அனைவரும், பரவசத்துடன், ஸ்வாமி வெளியே வரும்  அந்தக் கணத்திற்காக காத்திருந்தனர்.

மழைத் தூறல் வேறு. அப்போது மூன்று யாணைகள் சரசரவென, கோயிலின் உள்ளே நுழைந்தன. தங்க நிறத்தில் நெற்றிப் பட்டங்கள் ஜொலிக்க, அலங்கரிக்கப் பட்ட மூன்று யாணைகள், கம்பீரமாக வரிசையில் அணிவகுத்து நின்றன. 

மணி ஒன்பது.  கருவரையிலிருந்து உற்சவ மூர்த்தி  வெளியே வந்தார்.  “ராம..ராம..   க்ருஷ்ண..க்ருஷ்ண” என்ற கோஷம் இயல்பாக, கூட்டத்திடமிருந்து வந்தது.

ஒரு யாணை, குணிந்து மண்டியிட்டு, ஸ்வாமியை தன் தலையில் ஏற்றிக் கொண்டது.  பக்தர்களைக் காண குருவாயூரப்பனே, வெளிப் பிரகாரத்தில், மூன்று முறை யாணைமீது அமர்ந்து வலம் வருகிறார். இந்த பிரகார வலத்தில்,  யாணையில் முன்னால், அந்தக் கோயிலுக்குண்டான மங்கள வாத்தியக் கோஷ்டியினரும், நாதஸ்வரக் கலைஞர்களும், கேரள மேளம் இசைத்துக் கொண்டே செல்கிறார்கள். அடாடா.. சிறியதான அழகான விக்ரஹம்; அழகோ அழகு.

மூன்றாவது சுற்று முடிந்ததும்,  தங்க ‘கிருஷ்ணன்’ சிலை பொருத்தப்பட்ட , பதாகை போன்ற ஒன்றும் யாணைமீது ஏற்றப்பட்டு, மற்ற இரு யாணைகளும் அணிவகுப்பில் சேர, முறையான சோடசோபராங்களுடன் மூன்றுமுறை வலம் வருகிறார்.

ஹாரத்திக்குப் பின், க்ருஷ்ணன் கருவரைக்குச் செல்கிறார். நடை சாத்தப் படுகிறது.


இங்கே ஒரு பள்ளி கொண்ட பெருமாள் சிலை ஒன்று இருக்கிறது. சீதேவில் மடியில் தலை வைத்துக் கொண்டு, பூதேவியில் மேல் கால்களைப் போட்டுக் கொண்டு, சகல மூர்த்திகளும் பின்னால் நிற்க, அற்புதம்!


அனுபவித்துப் பார்த்த தினம்.








படங்கள் உதவி: கூகுள் 

2 comments:

  1. கோவிலில் சுவாமி தரிசனம் என்பது ஒரு அனுபவம். உணர்தலே வழிபாடு. உங்கள் அனுபவம் குறித்து நீங்கள் விவரித்த விதம் நன்றாக இருக்கிறது. கோவிலுக்கு கோவில் நடைமுறையில் பல சிறப்பம்சங்கள் உண்டு. தில்லையில் பால் நைவேத்யம் போல. நம் நாட்டின் கோவில்களை அதன் பாரம்பரிய முறைப்படி காண ஒரு பிறவி போதாது சார்.

    ReplyDelete
  2. புதிய தகவல்கள்! குருவாயூர் தரிசனப் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete