திருக்கோவிலூரில் அமைந்திருக்கும் ‘உலகளந்த
பெருமாள்’ கோயில் தரிசனம் ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். எனினும், அவ்வூருக்குச் சென்று, வெகுவருடங்களாயிற்று
என்பதால், சென்றவாரம் அங்கு சென்றுவரத்
தீர்மானித்தேன்.
இது வாமன த்ரிவிக்ரம அவதார ஸ்தலம். இந்த திவ்ய தேசம் பொய்கை
ஆழ்வார்,
பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற மூவராலும் பாடப்பெற்றது. மூலவர்
வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்ரமுமாக வலது காலால் உலகை அளந்து
நிற்கிறார். மகாபலியின் கர்வத்தை அடக்கி ஆட்கொண்ட ஸ்தலம். தேசிகன்
தேஹளீசதஸ்துதி இயற்றிய ஸ்தலம். எம் பெருமானார் ஜீயர் பரம்பரை மஹான்கள்
ஆதிக்கத்துக் குட்பட்ட ஸ்தலம்.
இந்த ஊர் பஞ்ச க்ருஷ்ணாரண்ய கேஷ்த்திரங்களில் ஒன்று. மற்றவை – திருக்கண்ணங்குடி, திருக்கண்ணன் கவித்தலம், திருகண்ணபுரம், திருகண்ணமங்கை. இவ்வளவு
பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது.
நிற்க, இப்பொழுதெல்லாம் எந்தக் கோவிலுக்கு
காரில் சென்றாலும், ‘வசூல் ராஜாக்களின்’ இம்சை தாள இயல வில்லை. காரைக் கண்டதும் ஒரு துண்டுச் சீட்டை எடுத்து நீட்டுவார்.
முப்பது ரூபாய் முதல், அறுபது ரூபாய் வரை அவருக்கு கப்பம் கட்டியாகனும். கோயிலுக் குண்டான பார்க்கிங் இடத்தில் காரை
நிறுத்துவதற்காக கட்டணம் வசூலிப்பதை, எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் அந்த
ஊருக்குள் நுழைந்தாலே, அந்தக் கால ராஜாக்கள், சுங்கம் வசூலிப்பதைப் போல வசூலில்
ஈடுபடுவது விந்தை.
திருக்கோவிலூர் பெருமாள் கோவிலின் வெளியே,
பெரிய கோபுரத்திற்கு முன்னால், ஏதாவது சிற்றுண்டியகம் இருக்கிறதா என்று தேடினாலே,
துண்டு சீட்டை நீட்டினால் என்ன செய்வது?
இந்த ஊர் மாத்திரமல்ல, இன்னும் பல ஊர்களிலும்
இம்மாதிரியான வசூல் பிரசித்தம். உதாரணமாக, சிதம்பரம் நகருக்குள் நுழைந்தாலே, அதிலும்
கோவிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் துவார பாலகர்கள் துண்டுச் சீட்டுடன்
நிற்பார்கள்.
பெரம்பலூர் அருகில் உள்ள ‘திருப்பட்டூர்’
கிராமத்திலும் இதே கதை. ஊருக்கு வெளியிலேயே வசூல் ராஜாக்கள் நிற்பார்கள். கோவில்
முன்னால் நிற்கும் போது வசூலிப்பது சரி.
ஊருக்குள் நுழைந்தாலே ‘எடு காசை’ என்பது வழிப்பறி போல உள்ளது.
என் கார் டிரைவர், விடாக்கொண்டன். “ஊரில் எங்கு காரை நிறுத்தினாலும்
காசு வசூலிக்கலாம் என உன் டென்டரில் இருக்கிறதா? எடு டென்டர் காப்பியை” என
ஆரம்பித்தார். அவரது கேள்வி, எனக்கு உடன்பாடே என்றாலும், எய்தவனை விடுத்து, அம்பிடம் சண்டைக்குப் போவதில்
பொருளில்லை என்பதால், ‘விடப்பா... போய்த் தொலையட்டும்..’ என கேட்டதைக் கொடுத்து விட்டு,
விலகினேன். ஆனானப்பட்ட தஞ்ஞைப் பெரிய கோயிலின் வெளியே, பார்க்கிங் இடத்தில் நிறுத்தினால் மட்டுமே, கட்டனம் ரூபாய் பத்து. அங்கே
தாரளமாக பார்கிங் இடமும், கழிப்பறைகளும், குப்பைத்தொட்டிகளும் வைத்திருக் கிறார்கள். திருக்கோவிலூரில், அகப்பட்ட இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி விட்டு, ‘எடு ரூபாயை’ என்கிறார்கள். விவாதித்தால் ஏக வசனம்.
கோவிலின் உள்ளே சென்றால், மந்திரிமார்கள் வருகைகயை ஒட்டி, சவுக்கு கட்டை கட்டுவார்களே,
அதுபோல, மூலவர் சன்னதிக்கு முன்னால் ஒரு
நீண்ட கழி வைத்திருந் தார்கள். எப்பொழுது
திறப்பீர்கள் என வினவினால், அங்குள்ள பணியாளர், ஒரு அறிவிப்புப் பலகையை, கண்களால்
சுட்டிக் காட்டினார். பேசமாட்டார் போல. அவருக்கு
பெருமாளைவிட தான் மேலிடத்தில் இருப்பதாக எண்ணம் போலும். ‘கனிவு’ என்பது அவருக்கு சம்பந்தமில்லாத
விவகாரம்.
அறிவிப்புப் பலகை, காலை 06.45 முதல் 0830 வரை
தரிசனம் கிடையாது என சொல்லிக் கொண்டிருந்தது. அது பூஜை நேரமாம். இவ்வளவு நேரம் நடை
சாத்தியிருப்பதன் காரணம், அதுவும் காலை நேரத்தில், சரியெனத் தோன்றவில்லை. இது அவர்கள் வழக்கம் போலும்.
0830 மணிக்கு கழி நீக்கப்பட்டது. உள்ளே சென்றால், பத்து ரூபாய் டிக்கட் கவுண்டர்
மட்டும் திறந்தது. தர்ம தரிசன வழி
மூடியிருந்தது. ‘ஏன் சுவாமி, ‘தர்ம தரிசனம் கிடையாதா?’ என்ற கேள்விக்கு ‘இது
சாத்தமுது தரிசனம்’ என்றார். “அப்படி எழுதவில்லையே? சிறப்பு தரிசனம் ரூபாய் பத்து
என்றுதானே போட்டிருக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலில்லை.
சரி போகட்டும் என டிக்கட் வாங்கிக் கொண்டு
உள்ளே சென்றால், பெருமாளைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சி யாகிவிட்டது.
ஏனெனில் சிலவருட காலம் முன்பு பார்த்த பெருமாள்,
அருமையான வடிவில், நல்ல ஆகுருதியுடன், ஒரு காலை தலைக்கு மேல் தூக்கிய வண்ணம், கரிய
நிறத்தில், மெய் சிலிர்க்கும் அனுபவத்தைத் தந்திருந்தார்.
இப்பொழுதோ, பெருமாளுக்கு ‘பச்சை நிற பெயின்ட்’
அடித்து வைத்திருக்கிறார்கள். உதடுகளுக்குமேல் வரைந்தும் வைத்தி ருக்கிறார்கள்.
அதிர்ச்சிமேலிட, அங்கிருந்த பட்டரிடம், ‘ஏன்..
ஸ்வாமி, பெருமாளுக்கு பச்சை வண்ணம்
பூசியிருக்கிறீர்கள்?’ என வினவ, அவர் பதிலேதும் கூறவில்லை.
வெளியே, கவுண்டரில் டிக்கட் விற்கும்
பணியாளரிடம் வினவ, ‘மூலவர் மரத்தினால் ஆனவர். எனவேதான் கேரளத்திலிருந்து இயற்கை
சாறுகொண்டு வர்ணம் பூசியிருக்கிறோம்’ என்றார். சரி, ‘வாமனர்’ சன்னதியை எப்பொழுது
திறப்பீர்கள் என்ற கேள்விக்கும் சரியான பதிலில்லை.
முன்பு தரிசித்த பொழுது, பெருமாள் இந்த பச்சை வண்ணத்தில்
இல்லையே, கற்சிலை போல, கரிய நிறத்தில்தானே
இருந்தார், அதை அப்படியே பின்பற்றியிருக்கலமே எனத் தோன்றினாலும், கேட்டுப்
பலனொன்றும் இல்லை என்பதால், தரிசனம் முடிந்து கிளம்பினோம்.
அருமை
ReplyDeleteஇந்து அறநிலையத்துறை கோயில்களின் லட்சணம் இப்படித்தான்!
ReplyDelete