Thursday, June 9, 2016

சொன்னா கேட்டிருக்கணும்...

“சுளை’’ ஒன்று ஐந்து ரூபாய் என அடாவடியாய் விற்றால்தான் என்ன குடிமுழுகிப் போச்சு? ஐந்து சுளை.. அட, பத்து சுளை சாப்பிட முடியுமா? ஆர்பாட்டமில்லாமல், கேட்ட விலையைக் கொடுத்து, பிளாஸ்டிக் கவரில், பலாச்சுளைகளை வாங்கிவந்து தின்றுவிட்டால் கதை முடிந்திருக்கும் தானே? என்ன....? தெருப்புழுதி கொஞ்சம், புகை கொஞ்சம் படிந்திருக்கும். நன்கு, கழுவிச் சாப்பிட்டால் ஆயிற்று.  தெருவில் சுளை வாங்கிச் சாப்பிடுபவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? ரொம்பவும் மூளையை உபயோகப்படுத்துவதாக நினைத்து, ஒரு சுமாரான சைசில் முழுப் பலாப்பழத்தை யார் வாங்கிவரச் சொன்னது?

வாங்கிவந்த பழத்தை(காயை), ‘மோப்ப நாய்’ முகர்ந்து பார்ப்பது போல மணிக்கொருதரம் மோந்து பார்த்தால் பழுத்துவிடுமா என்ன? “வெயிலில் வைத்தால் பழுக்கும்” என்று கேள்விப்பட்டது  நினைவுக்கு வர, மாடிக்கு எடுத்துப்போய், பேப்பர்களை கனமாகப் பரப்பி, பாலாவின் மேலேயும் பேப்பர்களால் மூடி வைத்துவிட்டு, அடுத்த நாள் காலைவரை, ஞாபகமாக  மறந்துவிட்டாயிற்று.

அடாடா.. நேற்று வச்ச மீன் குழம்பு வேண்டுமானால் நன்றாக இருக்கும்..  நேற்று வச்ச பலாப்பழம் எப்படி இருக்குமோ என்ற கவலையுடன், இரண்டிரண்டு படிகாளாகத்  தாவி, மாடிக்குப் போய்ப்  பார்த்தால், நல்ல வேளையாக, பெருச்சாளியோ பூனையோ பிராண்டி வைக்காமல், வைத்த மேனிக்கு பழுதில்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தது பலா.  ஹனுமன், பாக்ஜலசந்தியை ஒரே தாவலாகத்தாண்டி, ‘கண்டேன் சீதையை’ என்பது போல, நானும் 'கண்டேன் பலாப்பழத்தை'. மகிழ்ச்சியில், சென்ட்ரல் ஸ்டேஷன் போர்ட்டர் போல, பாவித்து பலாவைத் தலையில் தூக்கிக் கொண்டு, ‘விரு விரு’ வென கீழே வந்தாயிற்று.

மீண்டும் மோப்ப நாய் வேலையைத் துவங்கினால், லேசாக பாலாச்சுளை வாசம் வந்தது. இதென்ன வாழைப்பழமா, சடாலென தோலை உரித்து, விழுங்கி வைக்க? பிறகுதான் நினைவுக்கு வந்தது பலாப்பழத்தை உரிக்க, ‘ஆயுதங்கள்’ வேண்டும் என்பது. தெருவில் சுளை விற்கும் ஆயாவி னுடையதைப் போன்ற உபகரணங்கள் என்னிடம் ஏதுமில்லை. இருப்பது ஒரு தேங்காய் உரிக்கும் அரிவாள் மற்றும் சில காய்கறி வெட்டும் கத்திகள் மட்டுமே!

பலாப்பழத்தை நிற்கவைத்து, அரிவாளால் ஒரே போடாக போட்டு, இரண்டாகப் பிளக்க முடியுமா? ம்ம்ம்ம். நினைக்கவே கொடூரமாகத் தோன்றவே, தாஜா செய்தே பிளப்பது எனத் தீர்மாணித்தேன்.

அரிவாட்கள் எல்லாம் ஒரே அரிவாட்கள் அல்ல... ஒவ்வொரு  வேலைக்கும் அதன் தன்மைக்கு  ஏற்றாற்போல தனித்தனி அரிவாட்கள் உள்ளன. என்னிடம் இருக்கும் அரிவாள் எந்தக் கணக்கிலும் சேராத ஒரு கருவி. அதிக பட்சமாக தேங்காயின் நாரை மட்டுமே உரிக்கும். சிலசமயம் சினம் கொண்டு இடதுகை கட்டைவிரலையும் உரிக்கும்.

சாக்பீஸால் பாலாவின் நடுவே கோடுபோட்டு, அதன் மேலாக அரிவாளால் கீறினால், ம்ம்ம்ம் ஒரு மில்லி மீட்டர் கூட உள்ளே நுழையவில்லை. அரிவாள் மொக்கையோ மொக்கை.

திருப்புளி, சுத்தியல், காய்கறி வெட்டும் சுத்தி, டெஸ்டர், கட்டிங் ப்ளையர் என வீட்டில் இருக்கும் அத்தனை ‘ஹைடெக்  உபகரணங்களைக்' கொண்டு, பழத்தின் உள்ளே நுழைந்தாயிற்று. அதற்குள் கீழே பரப்பியிருந்த அத்துனை பேப்பர்களும் சுருட்டிக் கொண்டுவிட்டன.  போகட்டும் போ.. இந்த மாசம் பழைய பேப்பர்காரனுக்குப்  போட்டு காசு வாங்கமுடியாது.. அவ்வளவுதானே?

உள்ளே நுழைந்தால் போதுமா? அதை இரண்டாகப் பிளக்க வேண்டுமே  'நரசிம்மன்' வெறும் கை விரல் நகங்களால் , ஹிரண்யகசிபுவின் குடலை உருவிப்போட்டாராமே?  அதுபற்றிய ரெஃப்ரன்ஸ் அல்லது மேனுவல் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

உட்கார்ந்து, படுத்து, தம்கட்டி இரண்டாகப் பிளக்க முயன்று, கஜினியே வெட்கப்படுவது போல, மீண்டும்  
மீண்டும் தோல்வியே கிட்டிற்று. வீட்டில் வேறு யாராவது இருந்திருந்தால், நீ கையைப்பிடி, நான் காலைப் பிடிக்கிறேன் என, பீமனைப்போல இரண்டாகக் கிழித்துப் போட்டிருக்கலாம். தனியன். யாரைக் கூப்பிடுவது. சரி.. கால்களால் ஒருபக்கம் பிடித்துக்கொண்டு, கைகளால் இழுத்தால் என்ன? சே...சே.. தின்னும் பண்டத்தில் காலை வைப்பதாவது? ஆனாலும் வேறு வழியில்லை. அதை அப்படியே வைத்துவிட்டு, இடுப்பு வரை நன்றாகக் குளித்துவிட்டு, மீண்டும் இரண்டாகப் பிளக்கும் முயற்சி... ம்ம்ம்ம்.. ஸ்டாலின் எவ்வளவுதான் முயன்றாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாதது போலத்தான் என் முயற்சியும்.

நேற்றைக்கு, மோடி அமெரிக்க பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது ‘ஸ்டேன்டிங் ஒவேஷன்’ பெற்றது நினைவுக்கு வர, எழுந்து நின்று கால்களால் பழத்தின் ஒருபகுதியை இறுகப் பற்றிக் கொண்டு கைளால் ஒரே இழுப்பு.. அப்பாடா, ஒரே அடியில் மூன்று துண்டு.. பலாப்பழம் இரண்டாகப் பிளந்து மூலைக்கொன்றாகவும்,  நான் ஒருபக்கமாகவும் விழுந்துவைத்தேன்.

‘என்ன சார் சப்தம்?..’ என்றார் டெனன்ட்.

‘ஒண்ணுமில்லையப்பா.. ஒட்டடை அடிக்கிறேன்’

உஃப்.... ஒருவழியாக ஜெயித்தாயிற்று.. இனி என்ன? அமைச்சரவை அமைக்க வேண்டியது தானே?

விஷயம் அவ்வளவு சுலுவில்லை என்பது விளங்கிற்று. சுளைகள் யாவும் பதுங்கிக் கொண்டிருந்தன. வீட்டில் இருக்கும் கத்திகள் யாவும், ஆபரேஷன் தியேட்டருக்கு வந்துவிட்டன.  எதை அறுக்க எந்த கத்தி என்பது தீர்மாணமாகவில்லை. எல்லாம் மொன்னை.

ஒரு டபரா நிறைய  நல்லெண்ணை எடுத்துக் கொண்டு, அடங்காத சண்டிப் பிள்ளையை வழிக்குக் கொண்டு வருவது போல, ஒவ்வொரு சுளையாக நோண்டி எடுத்து, கார்கில் யுத்தம் போல ஒருவழியாக முடிவுற்றது. அதற்குள் வேட்டி ஒருபக்கம். துண்டு ஒருபக்கம். கிட்சன் முழுவதும் ரணகளம். 

ஒரு சுளை சாப்பிட்டுப் பார்க்கலாமா? 

பொறு..பக்கி...பொறு.. வீட்டுக்காரம்மாவின் படத்திற்கு முன்னால் வைத்து எடுக்காமல், அப்படி என்ன அவசரம்?

செலவு? நாலு கிலோ தினசரி பேப்பர். 200 மில்லி எண்ணெய். ஆறு கத்திகள். ஒரு அரிவாள். ஏழெட்டு தட்டுகள் மற்றும் இரண்டு முறம் நிறைய தாள் மற்றும் தோல்.

இவ்வளவு பிரயத்தனத்திற்கு 50 சுளைதான் என்பது அற்பமாகப் பட்டது.

சமையலறையைப் பார்ப்பதற்கு எனக்கே அச்சமாக இருந்ததால், ஃபோன் செய்து, வேலைக்கார அம்மாவை வரவழைத்து, கத்தி கபடாக்களை க்ளீன் செய்து, சமையலறையை சுத்தம் செய்யச் சொன்னால், இந்த வேலைக்கு தனியாக 100 ரூபாய் கொடு என்றாள். இதில் நமக்கு ஆப்ஷன் என்ன இருக்கிறது? சரி.. தருகிறேன். சுத்தமாகச்  செய்.

மீண்டும் குளித்துவிட்டு,  மனைவி படத்திற்கு நைவேத்தியம் வைத்துவிட்டு,  ஒரு சுளையை எடுத்து வாயில் போட்டால்...  என்ன இது, ஒரு சுவையையும் காணோம்? வைக்கோலைத் தின்பது போலிருந்தது.  கலர் என்னவோ மஞ்சளாக இருக்கே! அடுத்தது... அடுத்தது... ம்ஹூம் எல்லாச் சுளைகளுமே சுவையற்று இருந்தன.  இதற்கு பேசாமல்  கீழே பரப்பிய ‘தமிழ் ஹிந்து’ நாளிதழையே மென்று தின்றிருக்கலாம். இரண்டிலயம் ஒரு சாரமும் இல்லை.  தேன் தொட்டுக் கொண்டு சாப்பிடலாமா? வேண்டாம். ‘சுகர்’ லெவல் ஏறிவிட்டால் இன்னும் சிக்கல்.

சே.. இதென்ன இப்படி ஆன்டிக்ளைமேக்ஸ் ஆகிவிட்டதே? இப்ப என்ன செய்வது? எல்லாப் பிரயத்தனமும் வேஸ்டாகி விட்டதே?

எல்லாச் சுளைகளையும் கீறி, கொட்டைகளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, மீதி ‘எல்லாவற்றையும்’ ஒரே கட்டாக அரிசிச் சாக்கில் கட்டி,  குப்பைத் தொட்டியில் வீச வேண்டியது தான்.

‘எங்கே சார் வெளியே கிளம்பிட்டீங்க...?’ என்றார், டெனன்ட்.

“ஹி..ஹி.. ஒட்டடை அடித்தேனா? கொஞ்சம்  அதிகமா குப்பை சேந்துட்டுது.. கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வரலாம் என கிளம்புகிறேன்”

எங்கள் நகரில் குப்பை கொட்ட இடம் இல்லை. குப்பை வண்டி வரும்போதோ அல்லது நாமாகவோதான் டிஸ்போஸ் செய்யனும்.

‘ஏன் சார்.. குப்பை வண்டிவருமே?’

“உள்ளே டெலிபோன் பெல் அடிக்கறாப்ல இல்லை...?”

“அப்படியா.. என் காதுல விழலியே....  தோ போய்ப் பாக்கறேன்.”


ஒருகிலோ மீட்டர் தள்ளிப் போய், முனிசிபல் குப்பைத் தொட்டியில், சாக்கைப் போட்டு விட்டு, திரும்பி வரும்பொழுது, மறக்காமல் இருபது ரூபாய்க்கு பலாச்சுளை வாங்கிவந்துவிட்டேன்.

3 comments:

  1. என்ன ஆச்சர்யம்! நேற்று வாங்கி வந்த பாதி பழத்தை (இங்கு பாதி / கால் வாசி கூட விற்கிறார்கள்!) காலையில் தான் நறுக்கி சுளை எடுத்தேன். நல்ல வேளை! அத்தனையும் தேன்! (இங்கு சுளையை தனியாக விற்பதில்லை)

    முக்கால் மணி செலவழித்து எடுத்து விட்டு கணினியை திறந்தால் உங்கள் பதிவு!

    ReplyDelete
  2. பலா சுவையை விட உங்கள் அனுபவ சுவையே சிறந்தது.!முதலிலேயே சுளையாக வாங்கிவந்திருந்தால் இந்த அருமையான பதிவு வராதே.!

    ReplyDelete
  3. ஹாஹாஹா! அருமையான அனுபவங்கள்! பலாப் பழத்தைப் பார்த்தால் வாங்கற டைப்பா நீங்க? தெருவிலே வாங்கறதுன்னால் ஏற்கெனவே உரிச்சு வைச்சிருக்கிறதை வாங்கக் கூடாது. உரிக்காமல் தனியே வைச்சிருப்பாங்க பழத்தோட ஒரு பகுதியை! அதிலிருந்து உரிச்சுத் தரச் சொல்லி வாங்கணும். ப்ளாஸ்டிக் கவரில் அடைச்சதை எல்லாம் நிச்சயமா வாங்கக் கூடாது. என்ன தான் அலம்பினாலும் அது நல்லாவா இருக்கும்? சுவை மாறிடுமே!

    ReplyDelete