Monday, April 6, 2015

ஸ்ரீ கந்தாஸ்ரமம்

ஸ்ரீ கந்தாஸ்ரமம், சேலம் நகரின் அருகே உள்ள உடையா(ர்)பட்டி என்ற இடத்திற்கு அருகில், ஒரு குன்றின் மேல் உள்ள தலம்.

1970-71 –ல் ஒரு முறை, இந்த கோயிலுக்கு சென்று வந்ததாக நினைவு. படிக்கட்டுகளும், ஒரு சிறிய முருகன் கோயிலும் தான் நினைவில் இருக்கிறது.

பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள், இந்த கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. அந்த காலத்திய பழைய சாலையினை நினைவில் கொண்டு சென்றதால் கோயிலுக்கு செல்வதே சிரமமாகிவிட்டது. நான்கு வழி சாலை அமைப்புக்கும் பின் இடமே புரியவில்லை.

இந்த கோயிலுக்கான அணுகுச் சாலையை ஒளித்து வைத்திருக்கிறார்கள். எனவே, இத்தலத்திற்கு செல்வோர், சேலத்திலிருந்து ஆத்தூர் சாலையை அடைந்து, விசாரித்துக் கொள்ளுங்கள்

இந்த ஆஸ்ரமம் ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளால் நிறுவப்பட்டது. இப்பொழுது பிரமாண்டமாய் கட்டியுள்ளனர். ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் அதிஷ்டானத்திற்கு பின்புறம் அம்பாள்-பார்வதி. நேர் எதிரே முருகப் பெருமான். தாயைப் பார்த்த வண்ணமிருக்கும் முருகன்.

நாங்கள் சென்றிருந்த சமயம், வேலவன் விபூதி அலங்காரத்தில் இருந்தார். வெகு நேர்த்தியாக இருந்தது. முருகப் பெருமானின் சன்னிதியைச் சுற்றிலும் நவக்கிரகங்கள், தத்தமது துணைவியருடன்.

அதிஷ்டானத்தின் இடது புறமும் வலது புறமும் நான்கு வேத மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை பார்க்காத, ஏன் கேள்விப்படாத சன்னிதிகள், இவை. உடன் வியாஸர்.

வெளியே 16 அடி உயர தத்ராத்ரேய பகவான், சொர்ண ஆகர்ஷண பைரவர், ஆஞ்சனேயர், இடும்பன், சங்கட ஹர கணபதி ஆகியோரின் சன்னதிகளும் பெரியதாக இருக்கின்றன. 

யஜுர்வேத பாடசாலையும், கோசாலையும் இருக்கின்றன. விரும்பினால் பாடசாலைக்கும் கோசாலைக்கும் காணிக்கை செலுத்தலாம்.

மிக அருமையான ஆன்மீக புத்தகங்கள், நுட்பமான வேலைப் பாடுகள் நிறைந்த கடவுளர்களின் வெண்கல-பித்தளை சிற்பங்கள், துளசி-ருத்ராட்ச மணி மாலைகள், ஒலி-ஒளி வட்டுக்கள், பூஜைக்குறிய பொருட்கள், ஹோம ரக்ஷை போன்றவை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

மூர்த்தங்களுக்கு அர்ச்சனை,அபிஷேகம் இல்லை. தீபாரதனை மட்டும்தான். தட்டில் ‘தட்சிணை’ போடக்கூடாது’ என எழுதியே வைத்து விட்டனர்.

எவ்வளவாக இருந்தாலும், விரும்பினால் மட்டும் டொனேஷன் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். ஹுண்டி கிடையாது. 

எனக்கு, சீக்கிய பொற்கோயில் தான் நினைவுக்கு வந்தது. அங்கே ஒரு ரூபாய் செலுத்தினாலும் ரசீது தருவார்கள்.


உடன் வந்த எனது நன்பர் செந்தில் மிகவும் நெகிழ்ச்சியுற்று, இங்கே வந்து ஒரு நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வளவு அமைதியான, உள்ளே நுழைந்த வுடனே ஆன்மீக உணர்வு மேலிட்டு-மனம் ஒன்றுபடும் இடம். 

சமயம் கிடைத்தால் சென்று வாருங்கள். 

வெளி முகப்பு 

இடும்பன் 

தத்தாத்ரேயர் 


கோயிலின் 
உட்புறம் 


செந்தில் - நான் - இராமநாதன் 

இதே நாளில் நாங்கள் சென்ற பிற கோயில்கள் 

1. Thaaramangalam - Kailasanathar2. 1008 - Sivalangam Temple Salem3. Vada Chenni Malai - Murugan4.    Chinna Thirupathi


No comments:

Post a Comment