Friday, April 3, 2015

வட சென்னிமலை

வட சென்னிமலை

ஆத்தூருக்கு (சேலம்-ஆத்தூர்) அருகில் உள்ள காட்டுக்கொட்டகை என்ற கிராமத்தின் அருகே அமைந்துள்ளது ‘வட சென்னிமலை’  "பாலசுப்ரமணியர் முருகன் ஆலயம். கோயில், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் முதிர்ந்தது என்றும் சொல்லுகிறார்கள். முருகன் தண்டாயுதபாணியாகவும், சிறுவனாகவும், தம்பதி சமேதராகவும் என மூன்று வடிவங்களில் காட்சி தருகிறார்.

சிறு பிராயத்தில் ஆத்தூருடன் எனது உறவு அதிகமானது. பள்ளிப் படிப்பு கூட ஆத்தூரை ஒட்டியே!

அந்த காலத்தில் (1960 கள்), பங்குனி உத்திரத்தின் பொழுது இரண்டொரு முறை இந்த கோயிலுக்கு சென்று வந்துள்ளேன். அப்பொழுது ஒரே சன்னிதி, ‘பால சுப்ரமணியர்’ மட்டுமே! 

எனதாருயிர் நன்பர் ‘செந்தில்’ அவர்களின் விருப்பப்படி, 02/04/15 அன்று  மீண்டும் அந்த சிறு குன்றிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 1960-களில் மேலே செல்லுவதற்கு சரியான படிகள் கூட இல்லை. நிஜமாகவே “கல்லும்-முள்ளும் காலுக்கு மெத்தை” தான். மிகச் சிறிய கோயில். 1968-ல் எனது தாய்வழிப் பாட்டி ‘சிவகாமு அம்மாள்’ குச்சியை ஊன்றிக் கொண்டு, முருகா என கோஷித்த வண்ணம், தனது எழுபதாவது வயதில்,  மலையேறியது நினைவிருக்கிறது. ஏன்...பக்தர்களின் ‘அரோகரா..’ கோஷம் கூட காதில் இன்னமும் ஒலிக்கிறது.

தற்பொழுது, பெரியதாக விஸ்தாரமாக கோயில் கட்டி உள்ளனர். ராஜ கோபுரம் உட்பட.. மேல் வரை கார் செல்லலாம். வாட்டமான படிக்கட்டுகள்.

பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் அல்லவா? சர்வ அலங்காரத்துடன் முருகன் காட்சியளித்தார். முருகு என்றாலே அழகுதானே?

கொளுத்தும் வெய்யிலில், கற்களைப் பிடித்துக்கொண்டு, குச்சி ஐஸ் சப்பிக் கொண்டு, முருகா..முருகா என முழங்கிய வண்ணம், தரிசனம் செய்த பொழுது கிடைத்த ஒரு குதூகலம், காலம் வளர்ந்து-வயது தேய்ந்து, சொகுசாக மேல் வரை காரில் செல்லும் பொழுது கிடைத்ததா எனச் சொல்லத் தெரியவில்லை...

வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள். அழகான கோயில். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமல்லவா?






No comments:

Post a Comment