Monday, September 29, 2014

பழம் நழுவி விஷத்தில் விழுந்து......


 கனிகள், ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என புதிதாக விளக்க வேண்டிய தேவை இல்லை. உடலுக்கு தேவையான கனிமங்களும், விட்டமின்களும், இனிப்பும் நிறைந்தது.   ஆனால் நாம் உன்பது கனிகளா என்பதுதான் சந்தேகமாய் இருக்கிறது!

இயற்கைக்கு மாறாக, கனிகள் யாவும் இராசயன முறையில் கனியவைக்கப் பட்டு, பூச்சி கொல்லி மருந்துகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, மெழுகுகளால் அலங்கரிக்கப்பட்டு கண்களுக்கு விருந்தாக பரிமாறப் படுகிறது!

பழங்கள் இயற்கையாக கனியும் பொழுதுதான், பழங்களின் முழுமையான ஊட்டங்கள்  நமக்குக் கைகூடும். இயற்கையாக கனியும் பொழுது காயுனுள் என்ன மாற்றம் நிகழ்கிறது? கனிகளின் மேலேயும் உள்ளேயும்  இயற்கையான வண்ண மாற்றம் ஏற்படுகிறது. பழத்தினுள் இனிப்பு கூடுகிறது. இது தவிற உட்டச்சத்துக்களும் , வைட்டமின்களும் மிகுகின்றன. காய்களின் கசப்பும் புளிப்பும் மாறுகின்றன. மணம் வீசுகிறது! 

இயற்கையாக கனியும் பழங்களில் ‘எத்தலின்’ வாயு உற்பத்தியாகிறது. இதுவே காய்கள் கனிவதற்கு காரணமான பழச் செடிகளின் ‘ஹார்மோன்’.

செயற்கையாக கனியவைப்பது என்றால் என்ன?



சர்வ சாதாரணமாக “கால்சியம் கார்பைடு” போன்ற உணவுப் பாதுகாப்பு சட்டப்படி தடைசெய்யப்பட்ட, இரசாயணங்கள் உதவியோடு காய்கள் கனிய வைக்கப்படுகின்றன. இவை  நீருடன் சேர்ந்து வினையாற்றும் பொழுது, “அசிடிலின் வாயு”  எனப்படும் கார்பைடு கேஸை வெளியிடுகின்றது. இந்த வாயுதான் செயற்கைமுறையில் பழங்களின் தோல் நிறத்தை மாற்றுகிறது. பழத்தினுள்ளேயும், பழம் கனியத்தக்க விதத்தில் முற்றியுள்ளதா எனத்தெரியாமல் பழுக்க வைக்கிறது.






இந்த கார்பைடு கற்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இவை ‘புற்றுநோயினை ' உண்டாக்கும்’ காரணிகளில் ஒன்று.

இந்த கார்பைடு காய்களுக்கு கவர்ச்சிகரமான வண்ணங்களைத் தருகிறது. செயற்கையாக பழங்களை கொழகொழக்க  வைக்கிறது. சுவையையும், மணத்தையும் குறைக்கிறது, உடலுக்கு ‘டாக்ஸின்களை’ அள்ளி அள்ளி தருகிறது.  இந்த இரசாயணம் ‘புற்று நோய்’ உண்டாக்கும் காரணிகளைக் கொண்டது எனப் பார்த்திருந்தோம். இது தவிர, இரத்த வாந்தி, இரத்தம் அல்லாத வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, வயிறு அப்செட், தொண்டை மற்றும் வயிறு எரிச்சல், இருமல், மூச்சு வாங்குதல் போன்ற நோய்களையும் வழங்கக் கூடியது,

இந்த வாயு அளவுக்கு அதிகமாகச் சேரும் பொழுது, நுரையீரல்களில் நீர் கோர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு.

இம்முறையில் பழுக்க வைக்கப் பட்ட பழங்கள், வயிற்றினுள் செல்லும் பொழுது, இந்த இரசாயணத்தின் தன்மையால், வயிறு-குடல் பகுதிகளில் உள்ள சளிப்படலம் வீணாகிறது. செரிமான மண்டலத்தின் வேலைகளைக் குலைக்கிறது. இது மாத்திரமல்ல, சிறுமூளை வீக்கம், ஞாபக மறதி, ஒரு வித மயக்கமான  நிலை, குழப்பமான மன நிலை ஆகியவற்றையும் தோற்றுவிக்கும் வல்லமை வாய்ந்தது.

பெரும்பாலும், மாம்பழம், பப்பாளி, சப்போட்டா, வாழை, தக்காளி, பேரீச்சை போன்றவற்றை பழுக்க வைக்க ‘கார்பைடு’ உபயோகிக்கின்றனர்.


தற்போது விற்கப்படும் மாதுளை பார்க்கிறீர்கள் அல்லவா? அவை என்ன ஃபேக்டரியில் செய்யப்பட்டதா அல்லது செடிகளில் காய்த்ததா? பார்சல் செய்வதற்கு ஏற்றதாக, ஒரே மாதிரி சைசில் இறக்கும் படியாக , மரபணு மாற்றம் செய்துவிட்டார்களா என்ன? ஆப்பிள்களில் மெழுகு பூசப்படுவது பற்றி புதிதாக ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. பளபளப்பிற்காக மெழுகும், உள்ளே கெட்டுப் போவது வெளியே தெரியாமல் இருக்க இரசாயண பூச்சு செய்யப்படுவதும் யாவரும் அறிந்த்தே!

ஏற்கனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட கனிகளால் புற்று உட்பட பல்வேறு நோய்களால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் கார்பைடு கற்களின் கொட்டம் அதிகமாகிவிட்டது. கற்கள் போட்டு பழுக்க வைக்காத வாழைகளே இல்லை. பப்பாளிகளே இல்லை என்றாகிவிட்டது.

சரி... எந்த வகையில் ‘கார்பைடின்’ அடாவடியை கொஞ்சமாவது குறைத்துக் கொள்ளலாம்?



1.       தண்ணீரில் பல நிமிடங்கள் கழுவுங்கள்.

2.       பழங்களை துண்டாக்கி சாப்பிடுங்கள்.

3.       தோலில்தானே சத்து இருக்கிறது என தோலோடு எந்தப் பழத்தையும் சாப்பிட வேண்டாம். தோலை உரித்துவிட்டே உண்ணுங்கள். (முக்கியமாக ஆப்பிளை தோலை நீக்கிவிட்டு உண்ணுங்கள்.)

வியாபாரிகளுக்கு கொஞ்சமும் மனிதம் கிடையாது. விற்க வேண்டும். கொள்ளை லாபம் அடிக்க வேண்டும். அவ்வளவே! எவன் செத்தால் என்ன ? வாழ்ந்தால் என்ன ?

அரசு ‘கார்பைடு கற்களின் விற்பனையை ஒழுங்கு செய்தால் ஒழிய, வியாபாரிகளை ஒன்றும் செய்ய முடியாது.


அது சரி... என்ன திடீரென ‘கார்பைடு’ கதை என்கிறீகளா?

இரு தினங்கள் முன்பு, ஒரு புகழ்பெற்ற பழக்கடையில் ஒரு ‘பப்பாளி’ வாங்கினேன். மிகவும் புத்திசாலியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு, ‘எனக்கு விதைகள் அற்ற ஹைபிரிட் பப்பாளி வேண்டாம்-விதையுள்ளதாகக் கொடுங்கள்” எனக் கேட்டு வாங்கினேன். விதை இருந்தது தான். ஆனால் அது கார்பைடு போட்டு பழுக்க வைக்கப்பட்ட ‘கலர்ஃபுல்’ பப்பாளி.

இதை உண்டதால், இரண்டு நாட்களாக, கடுமையான வயிற்றுவலி, 103 டிகிரி காய்ச்சல்,  மண்டை இடி, வாந்தி, உடல் வலி, அசதி எல்லாம் வந்து சேர்ந்தது.  'தனியன்' வேறா? உதவிக்கு எவருமின்றி , நடப்பது கூட இயலாததாயிற்று. சமாளிப்பது சிரமமாயிற்று!  அல்லோபதி போகக் கூடாதென விரதம் இருக்கிறேன். ஆனாலும் ஒரே ஒரு பாராஸிடமால்.


தற்போது, வயிற்றுவலி மாத்திரம் மீதி இருக்கிறது. பார்ப்போம். “ஜீரகம்-மோர்-கஞ்சி” இவை குணமாக்கும் என நம்புகிறேன். 

2 comments:

  1. வீட்டுத் தோட்டத்தில் காய்த்துப் பழுப்பவை மட்டுமே நம்பகத் தன்மை கொண்டதாக இருக்கிறது. உலகம் போகும் போக்கு...? நல்லதொரு எச்சரிக்கை. 'தனியன்' - :(( நோய் தூண்டும் மற்றொரு வேதனை. அலோபதி குறித்த விழிப்புணர்வும் தற்போது பரவலாக தென்படுகிறது சற்று ஆறுதல். இரசாயனம் சூழ் வாழ்வு கடுமையாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. Thank U Nilamagal Mam... Its long time I heard from you! How r u Mam?

      Delete