Thursday, October 2, 2014

இப்படி ஒரு மனிதரா?...நம்ப மாட்டேன்..

1973 - அக்டோபர் இரண்டு. 

அன்றைய தபால தந்தி இலாக்காவில், தொலைதொடர்பு பிரிவில் பணியில் சேர்ந்த நாள். 24*7 என இயங்க வேண்டிய துறை என்பதால், அன்றைக்கு விடுமுறையென்றாலும் பணியில் சேர்ந்தேன். 

“புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒரு ஆளுக்கு, சேர்ந்த அன்றைக்கே ஓ.டி வழங்குவதா? கூடாது!”  என சக பணியாளர்கள் சிலர் ஆவேசம் கொண்டதால், பணி செய்யாமலேயே, பணியில் சேர்வதாக ரிப்போர்ட் மட்டும் கொடுத்துவிட்டு, ரூமிற்கு திரும்பினேன். முதல் நாளே, பணியாற்ற முடியாமல் தடுத்து விட்டார்களே என்ற வருத்தம் மட்டும் இருந்தது. 

அவை காந்தியைப் பற்றி எதுவுமே தெரியாத தினங்கள். சுதந்திரம் ‘வாங்கித் தந்தவர்’ என்று மட்டுமே போதிக்கப் பட்டிருந்தேன்.

கிட்டத்தட்ட  நாற்பது ஆண்டுகள் அத்துறையிலேயே பணியாற்றி, ஓய்வுபெற்றே ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன.

இந்த வருடம் ‘காந்தி ஜெயந்தியை’ “சுத்தமான இந்தியாவாக” அனுசரிக்கும்படி மத்திய அரசு தனது அலுவலகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இன்று ‘சிரம தானம்’ (அதாவது உழைப்பு தானம்) செய்து அலுவலகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும்படி அறைகூவல். நாம் வேலைசெய்யும் இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வதற்குக் கூட காந்தி தேவைப்படுகிறார்.
‘செய்யும் தொழிலே தெய்வம்’ எனப் பாடிவைத்தார் தமிழ்ப் புலவர். தெய்வம் வாசம் செய்யும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூட நமக்கு மற்றொருவர் சொன்னால்தான் தெரியும்.

இது இருக்கட்டும்.....

‘இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை பின்னாளில் உலகம் நம்ப மறுக்கும்’ ,

“மனித இன மனசாட்சியின் குரல்” ,

“எளிமையும் சத்தியமும் எந்த பேரரசைவிடவும் வலிமையானது”

-என காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் வர்ணித்தது எவ்வளவு நிஜமானது!

அவர் அஞ்சியபடியே, “காந்தி சொல்வது போல வாழ்வதெல்லாம் காலத்திற்கு ஒவ்வாதது – ஏற்க முடியாது“ என்பதுதான் நிஜமாகி வருகிறது.

அவரது அரசியல் சிந்தனை குறித்து விமர்சணங்கள் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் தனி மனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, எளிமை, நேர்மை, சத்தியம் ஆகியவற்றிக்கு காந்திய சிந்தனை தவிர மாற்று இல்லை என்பதுதான் நிஜம்.

உலகெங்கும் சர்வவியாபிகா பரவிக்கிடக்கும் மத – இன துவேஷங்கள்,
வெறித்தனமாக, கண்ணை மூடிக்கொண்டு, நாம் ஆரோகிக்கும் நவீன வாழ்க்கைமுறை, இவை உலகிற்கு கொண்டுவந்து சேர்த்த தீர்க்க இயலாத இன்னல்கள் - சிக்கல்கள்,

நாடுகளுக்கிடையே-நாட்டிற்குள்ளேயே ஓயாத போர்கள், இதன் காரணமாக செத்துமடியும் ஆயிரக்கணக்கான மக்கள், இவற்றை நடத்திவைத்து உலகையே சூரையாடிக் கொண்டிருக்கும் சூத்திரதாரி ‘பெரியண்ணன்’ மற்றும் பெரியண்ணன்கள் நிர்வகிக்கும் பன்நாட்டு நிறுவனங்களின் தீராத லாபவெறி!

நம்மை வழி நடத்த வேண்டிய அரசியல்-மதத் தலைவர்கள் பலரும் ‘செல்வவெறி கொண்டு,  நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலையின்றி, இந்தியாவில் ஒரு கள்ள பேரலல் பொருளாதாரத்தையே நடத்திக் கொண்டு, சுக போகிகளாக வலம் வரும் அவலம்– எனச் சொல்லிக் கொண்டே போகலாம்!  

இவற்றிற்கெல்லாம் தீர்வு எங்கிருக்கிறது எனத் தேடினால், வேறு வழியே இல்லை – காந்தியித்தில் அடைக்கலம் பெறுவதைத் தவிர!

அடிப்படையில் நான் அன்பற்றுப் பொனோம்! வெறுப்புக்களின் ஊற்றுக்கண் ஆனோம். பேராசை கொண்டு அலைகிறோம்! இங்குதான் ஆரம்பிக்கிறது நாம் வளர்த்து வைத்திருக்கும் விஷ விருட்சத்தின் ஆனிவேர்.

சக மனிதர்களிடம் அன்பில்லை! பெற்றோர்களிடம் அன்பில்லை! பெரியோர்களிடம் அன்பில்லை! பிள்ளைகளிடம் அன்பில்லை! இயற்கையிடம் அன்பில்லை! மரம் செடி கொடிகளிடம் அன்பில்லை.

எதையும் நேசிக்க மாட்டோம். ஆனால் வெறுப்பதற்கான காரணத்தை நோண்டி-நோண்டியாவது கண்டுபிடிப்போம். கிடைக்கவில்லை  என்றால் காரணத்தை உருவாக்கியாவது சண்டைக்கு நிற்போம்!

நமது செயல்கள் எல்லாவற்றையும் தீர்மாணிப்பது ‘சுய நலமும்’, ‘பணத்தாசையும்’, அர்த்தமற்ற வரட்டு ‘ஈகோ’ வும் தான் என்றால் என்ன செய்ய?

இவற்றிகு எதிராக குரல் கொடுக்கும் மனிதர்களே இல்லையா என்றால், இருக்கிறார்கள்- இரண்டு வகையாக.

ஒரு வகையினர் அத்தி பூத்தாற்போல, எங்கோ ஒருவராக சப்தமின்றி இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றொருவகையினர் வெறும் ஃபோட்டோவிற்கு போஸ் கொடுக்கும் வேஷதாரிகள். காந்தியையும் விற்று காசாக்குவதில் வல்லவர்கள். இவர்களுக்குத்தான் இப்பொழுது காலம்!

“இயற்கையிடம் மனிதனின் தேவைக்கானது எப்பொழுதும் இருக்கிறது! ஆனால் பேராசைக்கு அதனிடம் பதில் இல்லை” என்றார் காந்தி. மனிதனின் சுயநலமும், பேராசையும் எல்லை கடந்து போய்விட்டது.  நமது பேராசை இயற்கையினையே அழித்து ஒழிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது. எச்சரிக்கை...!  இதற்கான தண்டனையை இயற்கை நமக்கு வழங்காமல் போகாது. 
இந்த பிரபஞ்சத்தை நாம் ஒன்றும் செய்ய இயலாது! அதனோடு இயைந்து வாழத்தவறி புவியையே அழிக்க நினைத்தால், இழப்பு புவிக்கல்ல! நமக்குத்தான்! மனித இனமே பூண்டோடு அற்றுப் போய்விடும்.

சரி... அப்படி என்னதான் சொன்னார் காந்தி?

எளிய தேவைகள்! ஆடம்பர மறுப்பு!

மனதால்-சிந்தனையால்-சொல்லால்-செயலால் உண்மை,நேர்மை, சத்தியம்!

நிபந்தனைகள் அற்ற அன்பு – அனைவரிடமும்!

அடுத்தவர்களுக்கு இயன்றவரை பணத்தாலோ, உடலாலோ உதவுவது – 

இவையே காந்தீயத்தின் சாரம்.

இதற்காக, அனைவரும் தெருவில் இறங்கி கொடிபிடிக்க வேண்டும், சிறைக்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் இல்லை! அவரவர்கள், தாங்கள் இருக்கும் இடத்திலேயே, செய்யும் தொழிலிலேயே மேற்கண்டவற்றை கடைப்பிடியுங்கள். உங்களது உறவுகளை, நட்புக்களை, சுற்றத்தாரை, குடும்பத்தாரை, அக்கம் பக்கத்தோரை நேசியுங்கள். சுருக்கமாக அன்பு மிக்கவராக மாறுங்கள். 

செய்யும் காரியங்கள் அனைத்திலும் நேர்மையினை, தர்மத்தினை, உண்மையினை கடைப்பிடியுங்கள் .....


வேறெங்கும் தேட வேண்டாம்...இவ்வுலகே சொர்க்கம் தான்.

(கனவு காணக்கூட மனிதனுக்கு  உரிமை இல்லையா என்ன?)

9 comments:

 1. கனவை நிஜமாக்குவோம்!

  ReplyDelete
 2. On the murder of Mahatma Gandhiji, BernardShaw said " It is too bad to be too good".

  ReplyDelete
 3. மிக அருமையான இன்றைய நிலைக்குத் தேவையானதுமான ஒரு கட்டுரை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. Thank U Shri Vedachalam and Shri Shanmuga Sundaram Sirs

   Delete
 4. நல்ல சிந்தனை !
  " மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
  ஆகுல நீர பிற "
  இதுவே அறம் . மனம் தூய்மை ஆனால் பிற எல்லாம் தானாக வரும் .
  நல்ல பணி . வாழ்த்துக்கள்

  திருநாவுக்கரசு  ReplyDelete
 5. காந்திய வாரம்! காந்திய மாதம்! காந்திய ஆண்டு! என மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக யுனெஸ்கோவின் முயற்சியில் உலகமக்கள் அனைவருக்கும் காந்தியத்தைப் பழக்குவதற்கான காலக்கெடுவை நிர்னயம் செய்து உலகநாடுகளின் அரசுகளும் இதற்கு ஒத்துழைப்பை வழங்கினால் மக்கள் பேரளவுக்கு காந்தியச்சிந்தனைக்கு மாற முடியும்! யுனெஸ்கோ கவனத்தில் எடுத்துக்கொண்டு எதிர்வரும் ஆண்டுமுதல் செயல்படுமா? செயல்படும்படி நாமெல்லாம் சேர்ந்து யுனெஸ்கோவிடம் கேட்டுக்கொள்வோமா? நன்றி பலராமன் ராமச்சந்திரன் அவர்களே!

  ReplyDelete