Tuesday, October 14, 2014

நாராயணா ..

அனந்தபுரிக்கு சீசன் டிக்கட் வாங்கிவிட்டேன். 16724 டி.டி.இ கேட்கிறார்.. என்ன சார் பத்து நாளா காணல?

                                                    


























தென்னை மரங்களுக்குள்ளும், பாக்கு மரங்களுக்குள்ளும் இன்ன பிற 
பசுமைகளுக்குள்ளும் இடையே செருகிக் கிடக்கும் நகரம் திருவனந்தபுரம். பிரதான சாலைகளில், பெரு நகரங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் உண்டுஒரு நூறு அடி பக்க வாட்டில் விலகினால், சந்துகளிலும் சிறு தெருக்களிலும் சரேலன விரியும் ரம்மிய கிராமங்கள், அழகுக் கலவை.

விரவிக்கிடக்கும் சாலைகள் அனைத்திலும், மதர்த்த நங்கைகளும், தளர்ந்த மூதாட்டிகளும், தேவியரையொத்த சிறுமிகளும் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகையலங்காரம். கருமேகக்கூட்டங்கள் வானில் மட்டுமல்ல; தரையிங்கி பெண்களின் கூந்தலிலும் குடியிருக்கின்றன!

நகரெங்கும் சிதறிக்கிடக்கும் கோயில்கள். தெருவுக்கு ஒரு பிள்ளையாரோ அல்லது பகவதியோ உத்தரவாதம். கோயில்கள் தோறும் ஜேசுதாஸோ அல்லது அவரது குரலையொத்தவரோ சி.டி க்களில் பாடிக்கொண்டே இருக்கின்றனர். ‘அவாளுக்கென’ ஒதுக்காமல், பெரும்பாலான கோயில்களில் காத்திரமான அல்லது சன்னமான குரல்களில் சாஸ்திரீய சங்கீதம் பாடப்படுகிறது. கீர்த்தனைகளில் தமிழும் தெலுங்கும் சரளமாக கலந்து வருகிறது. எதிர்ப்போ புகாரோ இல்லை.

அனைத்துக் கோயில்களிலும் சட்டையை கழற்று! 
சங்கோஜமும் கூச்சமும் மரத்து விட்டது.

பொக்கிஷங்களுக்கும் - ஏ.கே 47-க்களுக்கும் இடையே, பத்மனாபர் ‘அரிதுயில்’ கொண்டுள்ளார். 
பக்தர்களும்  பொக்கிஷ அறையா? ‘என்ன?... என்ன?...என்ன? எங்கே.. எங்கே..’ என சுந்தராம்பாள் கணக்காய் கரைவதில்லை! அவரவர் வேலை அவரவர்களுகென்பது போல, கர்ம சிந்தனையில் தரிசிக்கின்றனர். டூரிஸ்ட்கள் மாத்திரம், பொக்கிஷம் அந்த ரூமா-இந்த ரூமா என தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கோயில்களில் எவரும் வரிசையிலிருந்து விலகுவதும் இல்லை! மீறுவதும் இல்லை! தனி ‘க்யூ’ அமைப்பதும் இல்லை! அவ்விதம் செய்யும் தெலுங்கர்களை தடுப்பதும் இல்லை.

மூன்று கதவுகளுக்கிடைய சயனித்திருக்கும் பத்மனாபரை, ‘பாகம் – பாகமாகத்’ தான் தரிசிக்க வேண்டும். முழு உருவத்தையும் காண,  குருக்களாக இருக்கவேண்டும் அல்லது 108-வது திவ்ய ஷேத்திரத்தை அடையணும்.  அம்பலத்தில் காசு கொடுத்தால்தான் சந்தனம். ஆனால் கீழே இறங்கியதும் ‘சாப்பிட்டுப் போங்கோ..’ என உபசாரம்.

பெரும்பகுதியான  கோயில்களில் இது போன்ற அன்னதானம் உண்டு! அவை பிச்சைக்காரர்களையோ அல்லது வயிற்றை நிரப்பிக் கொள்வதை உத்தேசித்தோ அல்ல! பிரசாதமாகத்தான் பாவிக்கின்றனர்.

ஒரு விஷயம் ஆச்சர்யம்தான். கல்யாண பந்திகளில் ஆயிரம் போருக்கும் ஒரே சீராக ‘பொறியல்’ பரிமாறுபவரின் சாமர்த்தியத்தோடு, பக்தர்கள் அனைவருக்கும் ஒரு கடுகளவு சந்தனத்தை ‘சுண்டிவிடும்’ ஸ்கில்லினை பழகிக் கொண்டுள்ளனர் குருக்கள்!

கனிசமான வீடுகளில் முதியோர்கள் மட்டும் தனியாக! இளசுகள் திரைகடலோடி திரவியம் சேர்க்கின்றனர். அவர்கள் அனுப்பும் செல்வம் அனைத்தும் நகை வாங்கியே தீர்ப்பது என்பது போல, நகர் முழுவதும் ‘நகைக் கடைகள்’! தங்க வயல்கள் வற்றி விட்டதாமே? யார் சொன்னது? கேரளத்திற்கு வாருங்கள்.

ஜனவர்-பிப்ரவரி நீங்கலாக வருடம் முழுவதும், இதமான வானிலை. குடிகார புருஷன்மார்கள் திடீர்-திடீரெ நினைத்து- நினைத்து மனைவிமார்களை அடிப்பது போல, சாடுகிறது மழை. பெய்கிறது என்ற வார்த்தை பொருத்தமாக இல்லை.

திடுதிப்’ மழை குறித்து எவருக்கும் புகார் இல்லை. வேலைகள் நிற்பதும் இல்லை. அதது அததின் கிரமப்படி நடக்கின்றன.  மழை இரவின் மறுநாள் காலை, மக்கள், டி.வி காரர்களின் முழ நீள மைக்கின் முன் நின்று, அரசாங்கத்திடம், அரிசி கொடு, வேட்டி கொடு, காசு கொடு என எவரும் கேட்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை.

அத்துனை மழை நீரும் சடுதியில் மாயம்.   நகரெங்கும் ஆழமாய்-ஆர்பாட்டமின்றி கிளைத்திருக்கும் ஆறுகளும் வாய்க்கால்களும் அத்தனையும் வாங்கிக் கொண்டு விடுகின்றன.

நகரெங்கும் அலோபதிக்கு நிகராக ஆயுவேத மருத்துவர்கள் நிறைந்திருக்கின்றனர்.  கஷாயங்களும், குளிகைகளும் ஆங்கில மருந்துகளுக்கு நிகராக விற்கின்றன. நல்ல விஷயம்தான்.

அங்கு குப்பை மேலாண்மைதான் போதவில்லை. இரவு நேரங்களில் பதுங்கிப் பதுங்கி குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி, ஸ்கூட்டர்களில் வந்து, காவலர் காணத நேரத்தில் சந்து முனைகளில் எறிந்துவிட்டு சென்று விடுகின்றனர் மக்கள். பிடிபட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்.

மக்கள் ‘க்யூ’விற்கு அஞ்சுவதில்லை. ரயில் நிலையங்களில் கூட, டிக்கட்டிற்கு பதறாமல், நெளியாமல், நிதானமாக காத்திருக்கின்ற்னர்.

“நீங்க தமிழா…? பாருங்கள்… டிக்கட் வாங்காமல் வண்டியில் ஏறமாட்டோம். நாங்கள் ஏறாமல் வண்டியை போகவிடவும் மாட்டோம்.” – அப்படிப் போடு.

மலையாள மனோரமா பத்திரிக்கை, அனைவருக்கும் தினசரி ஸ்லோகம்  . இலக்கிய புத்தகங்களும் நிறைய விற்கின்றனவாம்.

நகுலன் வாழ்ந்த இடத்தைப் பார்க்க ஆசை. வழிகாட்ட எவருமில்லை. அடுத்த முறை, திருவனந்தபுரம் தமிழர் அமைப்பு எதையாவது நாட உத்தேசம்.

1 comment: