Wednesday, November 30, 2011

முல்லைப் பெரியார் அணை


தமிழகத்தில் தற்போது சூடாக இருக்கும் விஷயங்கள் இரண்டு. ஒன்று கூடங்குளம்; மற்றொன்று முல்லைப் பெரியார் அணை. 

கூடங்குளம் விஷயத்தில், பல்வேறு அமைப்புகளின் நிலைப்பாடும், நிலைபாட்டின் காரணங்களும் தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டன.  

இம்மாதிரியான எல்லா விஷயங்களிலும் ஒரு மறைவான நிரல் (Hidden Agenda) அரசாங்கங்களுக்கு  இருந்தே தீரும். மீடியாக்களின் நிலை, தூண்டிவிடப் படும் போராட்டம் யாவும் இந்த மறைவான நிரலை ஒட்டியோ, வெட்டியோ தான் இருக்கும். ரீடெயில் மார்க்கட்டில் 51% அன்னிய முதலீட்டை அனுமதி கொடுத்த்தில் கூட அரசுக்கு (மத்திய), ஒரு நிரலோ அல்லது நிர்பந்தமோ உண்டு.

ஆனால், முல்லைப் பெரியார் அணைக்கட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு ஏதும் மறைமுகத் திட்டம் இருக்க நியாயம் இல்லை. ஆனால் அம்மாதிரியான திட்டம் கேரள அரசுக்கு இருக்க வாய்ப்பு உண்டு.  கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

இந்த அணை 1895-ல், பிரிட்டிஷ் அரசாங்கத்தால், பெரியார் மற்றும் முல்லையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது.  கடல் மட்டத்திற்கு மேல் 2889 அடி உயரத்தில் இருக்கிறது. 176 அடி உயரம். கட்டி முடித்து நூறு ஆண்டு களுக்கு மேல் ஆகிறது.  

கேரள அரசியல் வாதிகள், இந்த அணை உடையப் போகிறது என எல்லாவகையில் மக்களைப் பயமுறுத்தி விட்டனர். தமிழகத்திற்கு எதிராக எல்லாவகையான பிரச்சாரங்களயும் முடுக்கி விட்டு, அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். இதில் கட்சி பேதம் ஏதும் இல்லை.


முல்லை பெரியார் அணைகுறித்த கேரளத்தின் எதிர்மறையான நிலை பாட்டிற்கு, கீழ்க்கண்ட மூன்று காரணங்கள்தான் மறைவு நிரலாக இருக்க முடியும்!

(1) அணையின் உறுதித்தன்மை குறித்து உண்மையிலேயே சந்தேகம்.

(2) கேரளத்தின் தண்ணீரை எதற்காக தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற ‘பரந்த மனப்பான்மை

(3) இந்த அணையினை உடைத்துவிட்டால், அதன் கீழே இருக்கும் இடுக்கி அணைக்கு இன்னும் அதிக தண்ணீர் கிடைக்கும்.




1. உறுதித்தண்மை: 

தமிழ், மலையாளம் போன்ற உணர்ச்சிகளைத் துறந்து, உணர்ச்சி வயப்படாமல் தீர்மாணிக்க வேண்டிய விஷயம் இது. அணைக்கட்டு உண்மையிலேயே, பலவீனமாதாக இருக்குமானால், அதனால் ஏற்படக்கூடிய துயரம் பெருத்த அளவில் இருக்கும்தான். ஆனால் அணை பலவீனமாய் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்பவர்கள் யாராக இருக்க வேண்டும்? நிச்சயம் அரசியல்வாதி களாக இருக்க முடியாது!

அரசியல்வாதிகள் யாவரும் பித்தலாட்டக்காரகளாக இருப்பதும், எல்லா விஷயத்திற்கும் நரம்பு புடைக்க, உணர்ச்கிகரமான உரை நிகழ்த்தி, மக்களை உசுப்பேற்றி விடுவதிலும் வல்லவர்களாக இருப் பதும் துரதிர்ஷ்டம். ஆனால் முடிவெடுக்கும் அதிகாரத்தில்அரசியல் வாதிகள்தானே  இருக்கிறார்கள்?

புதிய அணைகட்ட விடமாட்டோம் என தமிழகத்திலும், புதிய அணை கட்டாமல் விடமாட்டோம் என கேரளத்திலும், கம்யூனிஸ்ட்கட்சிகள், பாரதிய ஜனதா, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் சந்தேகத்திற் கிட மின்றி பேசுகிறார்கள். தேசீய கட்சிகளாக இருந்துகொண்டு, இவ்வாறு இடத்திற்கு ஒன்றாக, மாற்றி-மாற்றி பேசுவது குறித்து அவர்களுக்கு வெட்கமேதும் இல்லை. முரணாகக்கூட உணரவில்லை.

இதுவரை மத்திய, மநில அரசுகளால் அமைக்கப்பட்ட எந்த ஒரு கமிட்டியும் அணை பலவீனமாக இருக்கிறது என்று அறுதியிட்டு சொல்லவில்லை. அதுமாத்திரமல்ல,  நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம்என உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகவே தீர்ப்புக் கூறி விட்டது.  உச்ச நீதிமன்றம் தானாக எதுவும் கூறிவிட இயலாது. நிபுணர் குழுவின் சிபாரிசுகளை கணக்கில் கொண்டிருக்கும்.  இவை யாவும் கேரள அரசின் காதில் விழவே இல்லை. உறுதித் தண்மை குறித்து யாவரின் சந்தேகத்தைப் போக்க, இந்த அணையினைக் கட்டிக்கொடுத்த பிரிட்டனிடமோ அல்லது ஐ.நா சபையையோ அணுகி, நிபுணர் குழுவின் கருத்துக்களைக் கோரலாம். அக்கருத்தை இரு தரப்பும், அப்பீல் ஏதுமின்றி ஏற்றுக் கொள்ளவேண்டும். இதற்கான முன் முயற்சிகளை மத்திய அரசு செய்யவேண்டும்! செய்வார்களா?

2. எதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும்?

இந்த மனோபாவத்திற்கு எந்த மருந்தும் இல்லை.  உண்மையில் கேரளத்தில் ஓடும் ஆறுகளின் தண்ணீரில் பெரும்பகுதி, அரபிக் கடலில் தான கலக்கிறது. நீர் ஆதாரத்தில் கேரளா ஒரு உபரி மாநிலம். மக்களைத் தூண்டிவிடாமல், கேரளம் பல்வேறு பொருட்களுக்கு தமிழகத்தைத்தான் நம்பி இருக்கிறது என்பதை, புரியவைக்க வேண்டும். அரிசி, மாடு, காய்கறிகள் உட்பட பலவும் இங்கிருந்து தான் செல்லவேண்டும். எனவே தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் தவறொன்றுமில்லை என கேரள மக்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.  இக்காரியத்தை அங்குள்ள சில எழுத்தாளர்கள் செய்கிறார்கள். பேசித் தீர்த்துக் கொள்ளச் சொல்லுகிறார்கள்.  

ஆனால் விந்தையாக கம்யூனிஸ்ட்கட்சிகள் கூட மக்களை சிந்திக்க விடாமல், மக்களை "வெறியேற்றி விடுகின்றன" என்றால் என்ன சொல்வது? அனைத்து நதிகளையும் “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம். இது நடந்தால் காவிரி உட்பட அனைத்து பிரச்சி னைகளும் தீர்வடையும்.  நாடுகளுக்கிடையே ஒடும் நதித் தாவா வினை எல்லா நாடுகளும் தீர்த்துக் கொண்டுவிடுகின்றன; இந்தியா உட்பட.  

ஆனால் ஒரு நாட்டுக்குள்ளேயே ஓடும் நதித்தாவாவினை தீர்க்க முடியவில்லை என்பது பரிதாபம் மட்டுமல்ல, நமது அரசியல் சட்டத்தின் failure என்று கூட வர்ணிக்கலாம்.

3. இடுக்கி:

இந்த இடத்தில் தான் சூட்சமம் இருக்கிறது என சந்தேகமாய் உள்ளது. அணை பலவீனமாகி விட்டது என்ற கோஷம் உருவானது 1979ல். அதாவது இடுக்கி அணை கட்டப்பட்ட பின். அதற்கு மிக முக்கியக் காரணமும் இருக்கிறது. கேரள மாநிலத்தின் மின் உற்பத்தியை மனதில் கொண்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு 50 கிமீ தொலைவில் இடுக்கி அணை கட்டப்பட்டது. 1970ல் திட்டமிடப்பட்டு 1976ல் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட நீர் மின்திட்ட அணை இது. கட்டி முடிந்ததும், ‘இடுக்கி நீர் மின்திட்டம்அமல்படுத்தப்பட்டது. இதன் பலனாக, கேரள அரசின் மின் உற்பத்தி அளவு ஒரு மடங்கிற்கு மேல்  உயர்ந்தது.
முல்லைப்பெரியாறு அணையை விட, பன் மடங்கு பெரிதாக  இடுக்கி அணையை கட்டி முடித்தபின்தான் தெரிந்தது. அணையை நிரப்புகிற அளவுக்கு நீர்வரத்து இல்லை என்பது. எதிர்பார்த்த அளவில் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை அப்போதுதான், கேரள அரசியல்வாதிகளின் பார்வை முல்லைப்பெரியாறு அணை மீது திரும்பியது. அதை உடைத்து விட்டால், அங்கு சேரும் தண்ணீரை அப்படியே, இடுக்கி அணைக்கு திருப்பி விடலாம். எந்தக்காலத்திலும் தண்ணீர் பிரச்னை இருக்காது.

அதன் பிறகு ஆரம்பித்ததுதான் கேரள அரசின் நாடகங்கள். அணை பலவீனமாகி விட்டது; உடைந்து விழுந்தால் இடுக்கி மாவட்டத்தின் லட்சக்கணக்கான மக்கள் மாள்வார்கள் என பிரச்சாரம் செய்தனர். அதன் ஒரு பகுதிதான் டாம்999 சினிமா. (தமிழகத்திற்கும் கேரளத் திற்கும் இடையே ஏற்பட்ட அணை உடன்பாடு 999 வருடங்களுக் கானது! எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கள்)

மார்ஸிஸ்ட்கள், பா.ஜ.க, காங்கிரஸ் ஆகியோர், தேசிய ஒருமைப் பாடு என்பதை ஊறுகாய் என நினைத்துக் கொண்டிரு க்கிறார்கள் போலும்.  நினைத்தபோது தொட்டுக்கொள்ள!

கோர்ட்டின் மூலமோ, அல்லது கோர்ட்டுக்கு வெளியிலோ அல்லது அரசியல் சமரசம் மூலமோ, குறிப்பிட்ட கால வரையரைக்குள் சரிசெய்து கொள்ள வேண்டிய பிரச்சினையை ஊதி,ஊதி பெரிதாக்குகிறார்கள். இதன் விளைவு என்னவாகும் என்பதைப்பற்றியோ, தேசீய ஒருமைப்பாடு என்பதைக் கேலிப் பொருளாக மாற்றுகிறோம் என்பதைப் பற்றியோ கவலையின்றி, கச்சேரி நடத்துகின்றனர். இந்த அணை இல்லையெனில் மதுரைப் பகுதி வறண்டுவிடும் என்பது எவருக்கு புரிகிறது?

நாடு விடுதலை அடைந்தபின், நாம் பல தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆசாத் காஷ்மீரை (POK) விட்டுக் கொடுத்தது, இந்தியக் குடியரசை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது, நதிகளை மத்திய அரசின் கட்டுப் பாட்டில் கொணராதது பல வகைப்படும். அதன் விளைவுகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!


இது சம்பதமான குறும்படம் (1)  Click Here
                 குறும்படம் (2)  Click Here

2 comments: