Sunday, November 27, 2011

அம்மா...நீ பாடாதே...!


புத்தியில்லாவிடினும் பரவாயில்லை! ஆனால் தனக்கு புத்தியில்லை என்கிற புத்தியாவது வேண்டும். கற்பகவல்லிக்கு, இந்த அளவு கடுமை யான வார்த்தைகள் தேவைப்படாவிட்டாலும், சற்றே மாற்றி, “பாடத் தெரியாவிடினும், தனக்கு பாட வராது”  என்கிற ஞானம் கூட இல்லாமற் போனது, மற்றவர்களின் துரதிர்ஷ்டம்.

ஒரு பாட்டின் அனைத்து வரிகளும் மனப்பாடமாகத் தெரிந்துவிட்டால் போதும்!  குரல், ராகம் பற்றி கவலையில்லை என எவரோ அவருக்கு தப்பாக போதித்து விட்டார்கள் போலும். கற்பகவல்லிக்கு அடங்காத சங்கீத தாகம். இவளது “சங்கீத பிரவாகம்  நவராத்திரி நாட்களில் உச்சத்தை எட்டும்.

அப்போது “கற்பகா பள்ளியில் பயின்று கொண்டிருந்தாள். தெருவில் மற்றவர்கள் அனைவரும், நவராத்திரியில் என்றென்றைக்கு என்ன சுண்டல் செய்யலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இவள் எந்தெந்த வீட்டில், என்னென்ன பாட்டுக்கள் பாடலாம் என அட்டவணை தயார் செய்து கொண்டிருப்பாள்.

இதில் என்ன தப்பு என்கிறீகளா? பிரச்சினை என்னவெனில், கற்பகாவுக்கு மேல் ஸ்தாயியும் வராது, கீழ்ஸ்தாயும் வராது. “பாட்டுபாடாமல் “அவள்பாட்டுக்கு பாடிக்கொண்டிருப்பாள். கீர்த்தனையின் இரண்டாவது வரியிலேயே கிறீச்சிடுவாள். எல்லோரும் பாடிப்பாடி நைந்து போன ‘அலைபாயுதே.. கூட உன்னைப்பிடி என்னைப்பிடியென்று குதித்து-குதித்து தான் வரும்.  சுறுக்கமாகச்  சொன்னால் தற்போது பஸ்களில் இருக்கும் ‘ஏர் ஹாரன் போல பாடுவாள்.

என் வீட்டிற்கும் கொலுவிற்கு வந்தாள். எச்சரிக்கையாக, அவளை யாரும் பாடச்சொல்வதில்லை என, ஏக மனதாக தீர்மாணம் நிறை வேற்றியிருந்தோம். ஆனால் கற்பகாவின் ஆர்வம், அனுமதி யையோ, வேண்டு கோளையோ எதிர்பார்ப்பதில்லை!  ‘குழலூதி மனமெல்லாம்... என ஆரம்பித்தாள். “கற்பகாவுக்கு சுண்டல் கொடுக்கலை? ரொம்ப நேரமா பாடரது பார்என்று அப்பா குறுக்கிட்டார்!   பாவம் கற்பகாவுக்கு புரியவில்லை. ‘இன்னொரு நாள் வந்து பாடுகிறேன்.. என அச்சுறுத்தி விட்டு சுண்டலுடன் விலகினாள்.  அவளுக்கு திருமணமாகும் வரை நவராத்திரியின் மாலை நேரங்களை ‘திகில் நேரங்களாக மாற்றிக் கொண்டிருந்தாள்.  சில பொழுது போகாத விஷமக்கார மாமிகள் இவள் வாயைக் கிளறி ‘பாட்டுப் பாடச் சொல்லி ரசிப்பார்கள். வாழ்க்கையில் ‘நகைச் சுவையும் வேண்டும் என்பது அவர்கள் வாதம்,

குரல்தான் கடூரமாயிருக்குமே தவிர, அழகாய் இருப்பாள்.  இருபத்தி இரண்டு வயதில் கல்யாணம் நிச்சயமாயிற்று. மாப்பிள்ளை சென்னையில் இருக்கிறார்.

திருமணத்தில், நலங்கின்போது ‘பாடியே அப்பளத்தை நொறுங்க்ச் செய்த வரலாறு இவளுக்கு உண்டு. ‘போதும்.. போதும், என்ன சின்ன குழந்தை மாதிரி தேங்காய் உருட்டிக்கொண்டு, பாடிக்கொண்டு...?  இதெல்லாம் சின்ன குழந்தைகள் செய்தால் பார்க்கலாம், ரசிக்கலாம்! இந்த வயதில் இதெல்லாம் தேவையே இல்லை என, கற்பகாவின் மாமியாரே, நலங்கினை சீக்கிரமாக முடித்து வைத்ததில் வருத்தம் கற்பகாவுக்கு! இன்னும் இரண்டு பாட்டு பாடும் சான்ஸை கெடுத்து விட்டாளே?

கற்பகாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது!

நவராத்திரியின் பொழுது, பாட்டு பாடுவதற்கென்றே, ஆபீஸ் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவாள்.

ஒரு நாள், பக்கத்து பிளாக்கில் ஒரு வீட்டிற்கு, கொலுவிற்கு கூப்பிட் டார்கள் என, தனது இரண்டு வயது குழந்தையையும் தூக்கிக் கொண்டு சென்றாள்.  அவள் குழந்தைக்கு ஒரு பழக்கம். சதா முன்று விரல்களையும் வாய்க்குள் போட்டுக் கொள்வாள். அதை எடுத்துவிட்டால் போச்சு, பெருங் குரல் எடுத்து ஓலமிட ஆரம்பித்து விடும். அம்மாவின் பாட்டு அளவுக்கு மோசமில்லை எனினும், அந்த ஏரியாவே நடுங்குமளவுக்கு அலறுவாள்.

குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு, சாங்கோ பாங்கமாக அமர்ந்து கொண்டு, ‘கண்டேன் கமலாலயம்... ‘என்று பாட ஆரம்பிதாள். உடனே அந்த வீட்டுக்கார மாமா தனக்கு வெளியில் அவசர வேலையிருப் பதாக சட்டையை மாட்டிக்கொண்டு எஸ்கேப் ஆனார். கொலுவிற்கு கூப்பிட்ட மாமி பரிதவித்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது, மூன்று விரல்களை வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்த குழந்தை, நிதானமாக விரல்களை வெளியிலெடுத்து அம்மாவிடம் சொல்லியது:  “அம்மா..... நீ பாடாதே...!   கற்பகா இதைக் கண்டு கொள்ளாமல், எடுத்த விரல்களை மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிட்டு, ‘கமலாலயத்தைத் தொடர்ந்தாள். இம்முறை குழந்தை வேகமாக ‘அம்மா..நீ பாடாதே.. என கத்தியது. இந்த விளையாட்டு நான்கு முறை தொடர்ந்த்து.

“அட.. சட்.. இந்த சனியனை வைத்துக் கொண்டு, நிம்மதியா ஒரு பாட்டு பாடமுடியாது. எப்ப பாத்தாலும் பாடாதே..பாடாதேன்னு பிலாக்கனம் பாடிக்கொண்டிருக்கும். நான் போய் இதை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்”   என கலவரப்படுத்திவிட்டு, கிளம்பினாள் கற்பகா.  சாட்சாத் ‘அம்பிகையே குழந்தை உருவில் வந்து, தன்னைக் காப்பாற்றியதாக கசிந்து கண்ணீர் விட்டாள் கொலுவிற்கு அழைத்தவள்.


ஒரு நாள் இரவு.  என்ன காரணம் எனத் தெரியவில்லை! கற்பகாவின் குழந்தை, தூங்காமல் விடாமல் அழுது கொண்டிருந்தது.  சமாதனப்படுத்த முயன்று கொண்டிருந்தனர் அவளது மாமனாரும், மாமியாரும். குழந்தைக்கு அழுகையை நிறுத்தும் உத்தேசம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சமையலறையில், வேலை செய்து கொண்டிருந்த கற்பகா, ‘விஸ்கென வெளியே வந்தாள்.

“உங்களுக்கெல்லாம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளவே தெரியவில்லை, வயதாகி என்ன பிரயோஜனம்? நான் அழுகையை நிறுத்துகிறேன் பாருங்கள் என அவர்களை காய்ந்தாள். வெடுக்கென குழந்தையை பிடுங்கிக் கொண்டாள். பெட் ரூமினுள் நுழைந்தாள். கதவைச் சாத்திக் கொண்டாள். ஃபேனைப் போட்டாள். லைட்டை ஆஃப் செய்தாள். குழந்தையை படுக்க வைத்தாள். தானும் அதன் அருகில் படுத்துக் கொண்டாள். அக்கால லீலா, பி.சுசீலா வில் ஆரம்பித்து இக்கால நித்யஸ்ரீ வரை அனைத்து வகையான பழைய-புதிய பாடல்களை பாட ஆரம்பித்தாள். அரை மணி நேரமாக ‘கானப் பிரவாகம் நடந்து கொண்டிருந்த்து. அழுகை நின்றுவிட்டாலும்,
தூங்குவதாகக் காணோம்.

திடீரென குழந்தை திருவாய் மலர்ந்தருளியது.  ‘அம்மா.. நீ பாடுவதை நிறுத்தினால், நானாகவே தூங்கிடுவேன்... என்றது.

இந்த கணத்திற்காகவே, பெட் ரூமின் வாசலில் காத்துக் கொண்டிருந்த, அவளது கணவன், மாமனார், மாமியார் ஆகிய மூவரும், படாரெனறு கதவைத் திறந்து கொண்டு உள்ளே பாய்ந்தனர்.  அந்த பிஞ்சுக் குழந்தை யின் கால்களைப் பிடித்துக் கொண்டனர். ‘நீ குழந்தையே இல்லை..! தெய்வம்!  எங்களைக் காப்பாற்றிய தெய்வமே! இப்ப நீ சொன்னியே அதைத்தான் நாங்கள் சொல்ல வேண்டும் என அரை மணி நேரமா தவித்துக் கொண்டிருந்தோம்.  நீயே சொல்லிட்டே..” என சிசுவின் கால்களை நமஸ்கரித்தனர். தன்னை கிண்டல் செய்வதாக கோபித்துக் கொண்டாளே தவிர, தனக்கு பாட வரவில்லை எனத் தெரியவில்லை.

அவளது வீட்டிற்கு, இரண்டு நாட்களுக்கு முன்னால் செல்ல நேர்ந்தது.
‘அன்ணா! டிசம்பர் மாதம் வருகிறதே, சங்கீத சபாக்களில் நிறைய பேர் கச்சேரிகள் செய்கி றார்கள்!  நீ எனக்கு யாரிடமாவது சொல்லி, எனக்கு பாடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வாங்கித் தாயேன். அது மத்யான நேரமோ, காலையோ எதுவானலும் பரவா யில்லை என்றாள்.

என்ன சொல்லித் தப்பிப்பது எனத் தெரியவில்லை! எவரேனும் உதவி செய்தால், உங்களுக்கு மட்டும் ஜெயலலிதாவிடம் சொல்லி, பால் விலை குறைக்கச் சொல்லி ஏற்பாடு செய்யலாம்.

No comments:

Post a Comment